

உலகின் பாதியளவிற்கு மகா அலெக்சாண்டர், தன் போர் வீரர்களுடன் பயணம் செய்தார். அவர் எகிப்தில், நைல் ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றின் அருகே ஒரு நகரத்தை உருவாக்கும்படிக் கட்டளையிட்டார். அந்த இடத்தில் பல வாணிக வழிகள் சந்தித்தன. அந்த நகரம் "அலெக்சாந்திரியா' என்று அழைக்கப்பட்டது. ஆண்டுகள் சென்றன. மக்கள் அந்த இடத்தை விரும்பத் தொடங்கினார்கள். எப்போதுமே அந்த நகரத்தில் மக்கள் நிறைந்திருந்தார்கள். மேலும் மேலும் அந்த நகரம் வளர்ந்தது. புதிதாக அந்த நகரத்திற்கு வந்தவர்கள், அதன் அகலமான தெருக்களையும், சுடாத செங்கற்களால் கட்டப்பட்ட மாடி வீடுகளையும் கண்டு வியந்தார்கள்.
ஆனால், அந்த அலெக்சாந்திரியா நகரத்தில் உண்மையான அதிசயங்களாக இருந்தது என்ன? அங்கிருந்த அருங்காட்சியகமும் (மியூசியம்), நூலகமும்தான். "மியூசஸ்' எனப்படும் கலைத் தேவதைகளின் (அறிவியல், கவிதை மற்றும் கலைக்கான பெண் கடவுள்கள்) இல்லம்தான் அந்த அருங்காட்சியகம். இதுதான் உலகின் முதலாவது பல்கலைக்கழகமாகும். உலகின் முதல் விஞ்ஞானப் பேரவையும் இதுதான்.
உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், கவிஞர்களும் அங்கே வாழ்ந்தார்கள். தங்களின் கருத்தைக் கேட்க விரும்பியவர்களுக்காக உரை நிகழ்த்தினார்கள். ஆய்வுகள் செய்தார்கள்.
பயணங்கள் மேற்கொண்டார்கள். நூல்கள் எழுதினார்கள். (இப்போதுள்ள புத்தக வடிவத்தில் இருக்காது இந்த நூல்கள். மிகவும் நீளமான ஏட்டில் எழுதி, அதைச் சுருட்டி வைப்பார்கள்) இந்த நூல்களை நீண்ட சுருள்களாகச் சேர்த்து கனத்த தோல் பெட்டிகளுக்குள் வைத்தார்கள். அதுபோன்ற தோல் பெட்டிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த இடம்தான் நூலகம் என்று அழைக்கப்பட்டது. அங்கே ஆயிரக் கணக்கான கையெழுத்துப் பிரதிகள் சேர்ந்தன.
கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், "எராடொஸ்தேனஸ்' என்னும் விஞ்ஞானி, அந்த அருங்காட்சியகத்தில் வாழ்ந்தார். இவர், புவியியலாளரும் வானவியல் அறிஞருமாவார். அலெக்சாந்திரியா நூலகத்தின் முதலாவது இயக்குனர்களில் இவரும் ஒருவர். இரண்டு விஷயங்களுக்காக அவர் மிகவும் புகழ் பெற்றார். ஒன்று, அவரது காலத்தில் தெரிந்த எல்லா நாடுகளைப் பற்றியும் அவர் புவியியல் விளக்கங்களை அளித்தார்.
இன்னொன்று, பூமியின் அளவை அவர் கணக்கிட்டார். எப்படி அவர் பூமியின் அளவைக் கணக்கிட்டார்?
"சியேன்' (பழங்கால எகிப்திய நகரமான சூனின் கிரேக்கப் பெயர். தற்போது அஸ்வான் என்று வழங்கப்படுகிறது) நகரிலிருந்து வியாபாரிகள் வந்தார்கள். அவர்கள், "கோடைக் கால அயணத்தின் (ஒரு ஆண்டின் மிக நீண்ட பொழுதை உடைய நாள்தான் அயணம்) நடுப்பகல் நேரத்தில், சியேன் நகரத்தின் ஆழமான கிணறு ஒன்றின் அடிப் பரப்பில் உள்ள நீரில் சூரிய ஒளிக் கதிர்கள் பிரதிபலித்தன' என்று கூறினார்கள்.
அப்படியென்றால் அந்தக் கிணற்றில் சூரிய ஒளிக் கதிர்கள் நேர் செங்குத்தாகத்தான் விழுந்திருக்க வேண்டும் என்று தெளிவானது. சியேனுக்கும், அலெக்சாந்திரியாவுக்கும் இடையில் தெற்கு வடக்காக ஐயாயிரம் "ஸ்டாடியா' (ஒரு ஸ்டாடியா என்பது 185.25 மீட்டர் நீட்டலளவைக் குறிக்கும் கிரேக்க அலகு) தொலைவு உள்ளது என்று எராடொஸ்தேனசுக்குத் தெரியும். இந்தத் தொலைவை, வியாபாரக் கூட்டமைப்பின் தலைவர்கள் அளந்தார்கள்.
அதே நாளில் அலெக்சாந்திரியாவில் சூரியக் கதிரின் பூமிச் சாய்வுக் கோணம், ஒரு வட்டத்தின் ஐம்பதாவது பாகையாகும். ஆகவே இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான தொலைவு பூமிச் சுற்றளவின் ஐம்பதாவது பாகை என்று எராடொஸ்தேனஸ் அறிந்தார். எனவே அவர் ஐயாயிரம் ஸ்டாடியாவை ஐம்பதால் பெருக்கினார். பெருக்கி வரும் தொகை இரண்டரை லட்சம் ஸ்டாடியாவாகும். இரண்டரை லட்சம் ஸ்டாடியா என்பது 42,000 - 43,000 கிலோ மீட்டர்களாகும்.
இப்போது நம் காலத்தில், பூமியைச் சுற்றி வட, தென் துருவங்களின் வழி செல்லும் கோட்டை அளந்ததன் நீளம் 39, 940 கிலோமீட்டர்களாகும். எராடொஸ்தேனஸ் அளந்ததில் ஏற்பட்ட சிறிய பிழை பொருட்படுத்தக்கூடியதல்ல.
எராடொஸ்தேனசின் பல நூல்கள் அழிந்துவிட்டன. "ஜியோக்ராஃபிகா' என்னும் மிகச் சிறந்த நூலை அவர் எழுதினார். ஜியோக்ராஃபிகா என்றால் "பூமி பற்றிய வருணனை' என்று பொருள். எராடொஸ்தேனஸ் தனது நூல்களை மூன்று பாகங்களாகப் பிரித்தார். முதலாவது பாகம் புவியியலின் வரலாறாகும். இரண்டாவது பாகத்தில் கணிதப் புவியியலின் அடிப்படையை அவர் தந்தார். மூன்றாவது பாகத்தில் மிக அண்மையில் கிடைத்த சான்றுகளைக்கொண்டு நாட்டை வருணித்திருந்தார்.
எல்லா கிரேக்கத் தத்துவ ஞானிகளையும்போலவே, எராடொஸ்தேனசும் மத்தியதரைக் கடல் பகுதியில் பெரிதும் அக்கறை காட்டினார். அந்தப் பகுதி ஒரு பெரிய தீவு என்றும், வட கோளார்த்தத்தின் மித வெப்ப மண்டலத்தில் பெருங்கடல்களால் சூழப்பட்டிருக்கிறது என்றும் கிரேக்கர்கள் நம்பினார்கள். வெப்ப மண்டலத்தில் மனிதக் குடியிருப்புகள் இல்லை என்று நம்பப்பட்டது. ஏனெனில், அது மிகுந்த வெப்பமாக இருந்ததே காரணமாகும். தென் கோளார்த்தத்தில் மித வெப்ப மண்டலத்தைப் பொறுத்தவரை, அங்கே தெரியாத நாடுகள் இருந்திருக்க வேண்டும் என்று பழங்கால விஞ்ஞானிகள் நம்பினார்கள்.
பழங்கால கிரேக்கர்களின் கூற்றுப்படி, அவர்களின் நிலத் தீவானது, கிரேக்கரின் மாறுபட்ட சில வண்ணச் செவ்வகங்களால் ஆன ஆடை போன்றது. தத்துவ ஞானிகள் நாட்டை ஐரோப்பா, ஆசியா, லிபியா என்று மூன்று பகுதிகளாகப் பிரித்தார்கள். வெகு காலத்திற்குப் பின்னரே ரோமானியர்கள் (கிரேக்கர்கள் அல்ல) லிபியாவிற்கு ஆப்பிரிக்கா என்ற புதிய பெயரை இட்டார்கள். அங்கு வாழ்ந்த "ஆப்பிரிகிரியர்கள்' என்னும் வலிமை மிக்க இனத்தின் பெயராலேயே இப்பெயர் சூட்டப்பட்டது.
மாலுமிகள் தங்களுடைய திசை நிலையை எப்படி அறிந்துகொண்டனர்? ஸ்டாடியா கணக்கிலோ, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்பதை வைத்தோ மக்கள், தொலைவுகளை அறிந்திருக்க வேண்டும். வழித் தடத்தைச் சுலபமாக்குவதற்காக, கிரேக்கப் புவியியலாளர்கள் பயணிகளுக்குத் தெரிந்திருக்கக்கூடிய இடங்களின் வழியாக அடிப்படைக் கோடுகளை வரைந்தனர். இந்தக் கோடுகள் தேசப்படம் வரைவதில் பெரிதும் உதவியாக இருந்தன.
பிறகு முக்கிய இடங்கள் வழியாக வரையப்பட்ட வேறு இணைகோடுகள் சேர்க்கப்பட்டன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் "தாலமி' (புகழ்பெற்ற கணிதவியலாளர், வானவியல் அறிஞர், புவியியல் ஆராய்ச்சியாளர்) நில நடுக்கோட்டிற்கு இணையான அட்சக்கோடுகளையும், வட துருவத்திலிருந்து செல்லக்கூடிய தீர்க்கக்கோடுகளையும் உலகப்படத்தில் வரைந்தார்.
"பூமி என்பது ஒரு தீவு' என்று தனது காலத்தில் வாழ்ந்த மேதைகள் சொன்னதை தாலமி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர், "வடக்கிலும், தெற்கிலும் நாடே இருக்க முடியாது' என்று பினீசியர்கள் சொன்னதை சந்தேகித்தார். ஆகவே, தாலமி தனது உலகப்படத்தை வரைந்தபோது, ஓரங்களில் "தெரியாத நாடுகள்' என்று எழுதினார்.
ஆக, யார் சொன்னது சரி?
கடலோடிகள் மிகவும் தொலைவான நாடுகளைக்கூட கடல் வழியாக அடைந்திருக்க முடியும் என்றார் எராடொஸ்தேனஸ். கடலோடிகளின் கப்பல்கள் உள் கடல்களில் பயணம் செய்தன என்றார் தாலமி. உண்மையில் நீண்ட பயணங்களைத் தரை வழியாகவேதான் செய்திருக்க வேண்டும்.
பண்டைய காலத்தில் உண்மையான, மிகப் பெரிய மேதைகள் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்களில் கடைசியாக வாழ்ந்திருந்தவர் தாலமிதான். கிரேக்கக் கலாச்சாரம் ஏற்கனவே அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவர் வாழ்ந்தார். புறசமய நம்பிக்கைகள் தளர்ந்து, புதிய சமயங்களுக்கு வழியமைத்துக்கொண்டிருந்தன. பூமி தட்டையானது என்ற கொள்கை திரும்பவும் ஐரோப்பியாவில் பரவிக்கொண்டிருந்தது.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.