நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 3

தம்பி தங்கைகளே! கிராம ஊராட்சி அமைப்புகள் அந்தந்த கிராமத்தில் என்னென்ன மாதிரியான    திட்டங்களைச் செயற்படுத்துகின்றன என்பதை நாம் பார்க்கலாம். கிராமத்தில் புதிய சாலைகளை அமைப்பது, முன்பு இருந்த பழைய சாலைக
நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 3
Updated on
3 min read

தம்பி தங்கைகளே!

கிராம ஊராட்சி அமைப்புகள் அந்தந்த கிராமத்தில் என்னென்ன மாதிரியான    திட்டங்களைச் செயற்படுத்துகின்றன என்பதை நாம் பார்க்கலாம்.

கிராமத்தில் புதிய சாலைகளை அமைப்பது, முன்பு இருந்த பழைய சாலைகளைப் பழுதுபார்ப்பது, அதைப் பராமரித்து ஒழுங்கு செய்வது,சிறு சிறு பாலங்கள் கட்டுவது, பொது இடங்கள் மற்றும் கிராமத்தின் தெருக்களில் மின் விளக்குகள் அமைப்பது, தெருக்களை குப்பைகூளமில்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்வது, தெருவோரமாக    இருக்கின்ற முட்செடிகளை வெட்டி அகற்றுவது,சுகாதாரம் தொடர்பான வேலைகளைச் செய்வது,பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவது, ஊருக்கு வெளிப்புறத்தில் இடுகாடு மற்றும் சுடுகாடுகளை ஏற்படுத்துவது, பழைய சுடுகாட்டைப் பராமரிப்பது, சாலையோரங்களில் மரங்களை நடுவது, ஏற்கனவே வைத்த மரம் செடிகளைப் பராமரிப்பது, கிராமச்   சந்தைகளை ஏற்படுத்துவது, விழாக்களை முறைப்படுத்துவது, வண்டிப்பேட்டைகள் மற்றும் பொது மாட்டுத் தொழுவங்களை உருவாக்குவது, குடி நீர் வசதிகளைச் செய்வது, மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள் கட்டுவது, விளையாட்டுத் திடல்களும் பூங்காக்களும் அமைப்பது, நூலகம்  உருவாக்குவது ஆகியவை கிராம ஊராட்சி செய்யும் பணிகளாகும்.

தெருக் குழாயில் கொஞ்சமாகத் தண்ணீர் வந்தால் நாம் ஊராட்சி மன்றத் தலைவரைக் குறைகூறி முணுமுணுப்போம்.

சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது, கரடுமுரடான சாலையில் சைக்கிள் எம்பிக் குதித்து தாறுமாறாகச் சென்றால் அப்போதும் நாம் ஊர்த் தலைவர் மீது அதிருப்தி அடைவோம். மின்சாரம் தடைபட்டாலும் நாம் அரசாங்கத்தை விமர்சிப்போம். குறித்த நேரத்திற்கு பேருந்து வரவில்லையென்றாலும் நாம் அரசாங்கத்தைத்தான் கண்டித்துப் பேசுவோம்.

இதுபோன்று ஒரு பிரச்னை, நம்மைப் பாதித்தால் மட்டுமேதான் நாம் ஊரையோ, நாட்டையோ பற்றி நினைக்கிறோம். மற்ற நேரங்களில் ஊரும் நாடும் நம் கவனத்தில் இருப்பதே இல்லை. இது எதுபோன்று இருக்கிறது தெரியுமா? நமக்குச் சிறிதாக காயமோ, சிராய்ப்போ ஏற்படும்போது மட்டும்தான் நாம் நம் உடலைப் பற்றி நினைத்துப் பார்ப்போமே அதுபோன்றிருக்கிறது. இது சரிதானா?

நம் உடலைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அப்படியிருந்தால்தான் உடலுக்குப் பெரிய பிரச்னை எதுவும் வராமல் நாம் தொடக்கத்திலேயே தடுத்திட முடியும். அறிவுடையவர்களுக்கு அதுதானே அழகு! இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நம் உடல் மாதிரிதான் நம் ஊரும் நாடும்.

ஒரு கிராமத்து மனிதர் வெளி நாட்டிற்குச் சென்று ஐந்தாறு வருடம் வேலை செய்தார்.   பிறகு தன் கிராமத்திற்குத் திரும்பி வந்தார். தான் பிறந்த கிராமத்திலேயே நல்ல அழகான வீடு ஒன்றைக் கட்ட விரும்பினார் அவர். முதல் வேலையாக வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைத்தார்.

விரைவில் வீட்டின் நான்கு புறச் சுவர்களையும் எழுப்பினார். சில தினங்களில் கூரைக்கும் காங்கிரீட் போட்டாயிற்று. பிறகு, சுவர், தரை, கூரையெல்லாம் மேல் பூச்சாக சிமென்ட் பூசினார்கள். வெள்ளையடித்துவிட்டால் புதுமனை புகுவிழா நடத்திவிடலாம்  என்ற நிலைக்கு வந்துவிட்டது வீடு. அப்போது ஊர்த் தலையாரி அங்கே வந்து கேட்டார்:

""யாரைக் கேட்டு வீடு கட்டறீங்க?''

வீட்டுக்காரருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அவர் பெரிதாகச் சத்தம்போட ஆரம்பித்தார்:

""அதைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நான் ஒன்றும் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டவில்லை. எங்கள் தாத்தா காலத்திலிருந்தே எங்களுக்குச் சொந்தமாக இருக்கிற நிலத்தில்தானே கட்டிக்கொண்டிருக்கிறேன்?''

ஊர்த் தலையாரி சாந்தமாக மீண்டும் கேட்டார்: ""இது உங்களுடைய நிலம்தான். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் யாரைக் கேட்டு நீங்கள் வீடு கட்டுகிறீர்கள்?''

தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் வீட்டுக்காரர். அவர் சொன்னார்: ""நான் வெளி நாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்த பணத்தில் வீடு   கட்டுகிறேன். மாடிமேல் மாடி வைத்து அதன் மேல் இன்னொரு மாடி வைத்துக்கூட நான் வீடு கட்டுவேன். அதைத் தடுக்க யாரால் முடியும்?'

"ஊர்த் தலைவரை வந்து பாருங்க. மதியம் அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில்தான் இருப்பார்'' என்று சொல்லிவிட்டு ஊர்த் தலையாரி சென்றுவிட்டார். வீட்டுக்காரர், "என்னதான் நடக்கும் என்று பார்த்துவிடுவோம்!' என்று நினைத்தபடி பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றார்.

ஊர்த் தலைவர், அவரை வரவேற்று அமரவைத்து விஷயத்தைச் சொன்னார்:

""நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்றால் முறைப்படி மனு எழுதி பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கட்டப்போகும் வீட்டின் வரைபடத்தையும், நிலத்தின் சர்வே எண் பற்றிய தகவல்களையும் அதனுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பிறகு ஊர்த் தலைவராகிய நான் அனுமதி தர வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் வீடு கட்டவே தொடங்க வேண்டும்.''

இதைக் கேள்விப்பட்டதும், அந்தக் கிராமத்தில் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருந்த இன்னும் பலருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் கோபங்கொண்டார்கள்.

""என்ன இது? இந்த ஊர்த் தலைவர் எந்த ஊரிலும் இல்லாத புதுச் சட்டத்தைச்   சொல்கிறாரே!'' என்று அவர்கள் பலவாறாகப் பேசிக்கொண்டார்கள். ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து வட்டாட்சியரையும் ( தாசில்தார்), மாவட்ட ஆட்சியரையும் ( கலெக்டர்) சந்தித்தார்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது.

கிராமத்தில் வீடு கட்டுவதாக இருந்தாலும் முறையாக "அப்ரூவல்' வாங்க வேண்டும். அதை வழங்குவதற்கான அதிகாரம் அந்தக் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு   உள்ளது.

இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன். அப்போதுதான் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.

ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் பிறந்த ஒருவர், மிகப் பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவர். அவர், தான் பிறந்த கிராமத்தில் ஒரு ரசாயனத் தொழிற்சாலை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அவர் அந்தக் கிராமத்தில் ரசாயனத் தொழிற்சாலை தொடங்கினால் சுற்றுச் சூழல் பெரிதும் மாசுபடும். ஏரி, குளங்கள் கெட்டுப்போகும். விவசாய நிலங்கள்     வீணாகிவிடும்.

எனவே ஊராட்சித் தலைவர் ஊர் மக்களைக் கூட்டி, இது தொடர்பாக அவர்களது கருத்தைக் கேட்டார். அந்த கிராமத்தில் ரசாயனத் தொழிற்சாலை வருவது மக்களுக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் பிடிக்கவில்லை. எனவே தலைவர், அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.

இதுபோன்று இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிறைய கிராமங்கள் இருக்கின்றன.

வெளி நாட்டுக்காரர்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்து சில கிராமங்களில் தங்கியிருக்கிறார்கள். மற்ற பகுதிகளைச் சேர்ந்த பணக்காரர்கள் பலரும் அங்கே வந்து விவசாய நிலத்தை வாங்கத் தொடங்கினார்கள். பணத்திற்கு ஆசைப்பட்ட பலர், குடியிருந்த நிலத்தைக்கூட விற்க முன்வந்தார்கள்.

நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்பவர்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது. உடனே விழித்துக்கொண்ட   ஒருசில கிராம ஊராட்சிகள் தங்கள் கிராம எல்லைகளில் ஒரு எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைத்திருந்தார்கள். அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

""இந்தக் கிராமத்தின் விதியை மீறி இங்கே யாராவது நிலம் வாங்கினால் அதில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க மாட்டோம். மின்சாரம் மற்றும் குடி நீர் வசதிக்கான அனுமதி வழங்கமாட்டோம்.''

கிராம விவசாய நிலங்கள், வெளியாட்கள் கைகளுக்கு மாறுவதைத் தடுப்பதற்கு இப்படி ஒரு ஏற்பாடு. கிராம ஊராட்சி அமைப்பிற்கு எந்தளவு அதிகாரம் இருக்கிறது என்பதை நாம் இதுபோன்ற சம்பவங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.



(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com