

பழங்கால மனிதர்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் ஐரோப்பாக் கண்டங்களின் சில பகுதிகளிலும் வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அங்குதான் பண்டைய மனிதனுடைய எலும்புகளின் எஞ்சிய மிச்சங்களும், கரடுமுரடான கருவிகளும் கிடைத்துள்ளன. இதுபோன்ற கண்டுபிடிப்புகள் அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ கிடைக்கவில்லை. பிற்காலத்தில் மக்கள் அங்கு இடம் பெயர்ந்து சென்றார்கள் என்று கருதலாமா? அப்படியென்றால் ஏன் அவர்கள் இடம் பெயர்ந்தார்கள்? எதற்காக? பெருங்கடல்களை எப்படி அவர்கள் தாண்டிச் சென்றார்கள்?
அதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. முக்கியமாக, உணவைத் தேடித்தான் அவர்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள்.
பண்டைய வேட்டைக்காரர்கள் மந்தைகளைப் பின்தொடர்ந்தார்கள். விலங்குகள் சென்ற இடங்களுக்கு அவர்களும் சென்றார்கள். சில குடும்பங்கள், வலியச் சண்டைக்கு வந்த அண்டை அயலாரிடமிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்தன. சில சமயங்களில் பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றார்கள். அவர்களுடன் விலங்குகளும் சென்றன.
நமது கோளத்தில் வெப்பமாக இருந்த தட்பவெப்ப நிலையானது குளிராகவும், பின்னர் திரும்பவும் வெப்பமாகவும் மாறிய காலங்கள் பல இருந்தன. இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இது எதனால் ஏற்பட்டது என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. பெரும்பாலும் பூமிக்குள்ளாக இருந்த வலிமை மிக்க சக்திகள்தான் முக்கியக் காரணமாக இருந்திருக்கும். பயங்கரமான நிலநடுக்கம் பூமியைக் குலுக்கியது. அதனால் பூமியின் மேற்பரப்பு மடிப்புகள் ஏற்பட்டன. புதிய மலைகள் எழுந்தன. புகை கக்கும் எரிமலைகள் வெடித்தன. ஆழமான வெடிப்புகளாலும் நிலத் துண்டுகளாலும் பூமி பிளவுண்டது.
எரிமலைகள் ஏராளமான சாம்பலை காற்று மண்டலத்தில் சேர்த்தன. இதனால் காற்று தன் தெளிந்த தன்மையை இழந்தது. கனமான கருத்த மேகங்கள் சூரியனை மிக நீண்ட காலத்திற்கு மறைத்து நின்றன. இதனால் பூமி மேலும் மேலும் குளிரானது...
எனினும் சூரியன் அவ்வப்போது லேசாகப் பிரகாசித்தபோதுகூட குறைவான வெப்பத்தையே தந்தது என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ உயரமான பகுதிகளில் பனிக்கட்டிக் குவியல்கள் ஏற்பட்டன. பெருங்கடல்களிலிருந்து ஆவியாகிய நீர் பனிக்கட்டியாக மாறியது, பசுமையான சமவெளிகளைப் பனிக்கட்டிகளால் மறைத்தது. மலைகளில் இருந்த பனிக்கட்டிகள் மேலும்மேலும் கனத்தன. ஆகவே பெருங்கடல்களில் நீர் சிறுகச் சிறுகக் குறைந்தது. பெருங்கடலின் ஆழமற்ற இடங்கள் வறண்ட நிலங்களாயின. அந்த நிலப் பாலங்கள் கண்டங்களை இணைத்தன.
புற்களை மேயும் மந்தைகளைப் பனி துரத்தியது. அவற்றைக் கொல்லும் விலங்குகள் பின்தொடர்ந்தன. அவற்றோடு சேர்ந்து மனிதனும் சென்றான்.
மந்தைகளும், வேட்டைக்காரர்களும் ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வறண்ட நிலப் பாலங்களின் வழியாகக் கடந்து செல்ல முடிந்தது. அதுபோலவே, வற்றிப்போன தென் சீனக் கடல் பகுதிகள், மற்றும் தீவுகளின் மீதான பாதை வழியாக மக்கள் ஆஸ்திரேலியாவிற்கும் இடம் பெயர்ந்து சென்றிருக்கக் கூடும்.
பனியுகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்தன. ஆனால் அது நிரந்தரமாக அப்படியே இருக்கவில்லை. படிப்படியாக, கனத்த மேகங்கள் மறைந்து சூரியனுக்கு வழிவிட்டன. சூரியனின் வெப்பக் கதிர்கள் பனிக்கட்டியை உருகி ஓடச் செய்தன, பனிக்கட்டிக் குவியலைப் பின்வாங்கச் செய்தன.
மீண்டும் நிலம் பச்சைப் பசும் புற்களால் நிறைந்தது. புதிய காடுகள் வளர்ந்து ஓங்கின. வளமான மேய்ச்சல் நிலங்களை நாடி பெரிய விலங்குகள் வரத் தொடங்கின. கம்பளியானைகள், ரோமம் உள்ள காண்டாமிருகங்கள், பெரிய கொம்புகளைக் கொண்ட மான்கள், குதிரைகள் மற்றும் காட்டெருதுகள் ஆகியவை வரத் தொடங்கின. அவற்றைப் பின்தொடர்ந்து வேட்டைக்காரர்கள் திரும்பவும் தங்களின் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டார்கள்.
சூரியனின் கதிர்கள் மேலும் வெப்பமானதாக மாறின. விரைந்து ஓடும் நதிகள் பெருங்கடல்களை நோக்கிப் பாய்ந்தன. நீர் மட்டம் உயர்ந்து நிலப் பாலங்களை மூடியது. இது, ஏற்கனவே இருந்த மக்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.
வெப்பமான காலத்தை அடுத்து வந்த பனியுகமானது ஒன்றிற்கும் மேற்பட்ட முறை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் விலங்குகளும் மனிதர்களும், வட கோளார்த்தத்தில் தெற்காகவும், தென் கோளார்த்தத்தில் வடக்காகவும் குளிராலும் பசியாலும் இடம் பெயர்ந்தனர். மனிதர்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். விலங்குகளும் பறவைகளும் நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் நகர்ந்து கொண்டிருந்தன. எல்லாமே புதிய இடங்களுக்கு நகரவேண்டியதாயிற்று. வழியில் பலர் மாண்டனர். எனினும் பலர் தப்பிப் பிழைத்தனர். ஒவ்வொரு இடப் பெயர்ச்சியும் மனிதனின் வாழ்க்கைக்குப் புதியதாக ஏதாவது ஒன்றைக் கொண்டுவந்தது.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.