

பலவிதமான ரோபோக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ரோபோக்கள், மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளையும் எளிதாகச் செய்யும். அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக பல புதிய ரோபோக்கள், மக்களின் பயன்பாட்டிற்காக வந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சில ரோபோக்களைப் பற்றிய தகவல்கள் இங்கே.
நடனமாடும் ரோபோ:
மகிழ்ச்சியான நேரத்தில் ஒருவர் நடனமாட நினைக்கிறார். அவருடன் சேர்ந்து நடனமாட இன்னொருவர் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அப்படி ஒரு துணை அந்த நேரத்தில் அவருக்குக் கிடைக்கவில்லை. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இனி கவலைப்படத் தேவை இல்லை. வந்துவிட்டது டான்சர் ரோபோ. இந்த இயந்திர பொம்மையின் கைகளிலும் தோளிலும் பிடித்துக்கொண்டு நாம் நடனக் காலடிகள் வைத்தோமானால், அந்தத் தாள கதிக்கேற்ப இது நடனமாடும். இந்த பொம்மை ஒரு மனிதரின் உயரமும், நூறு கிலோ எடையும் கொண்டது.
எம்யூ
இதன் பெயர் எம்யூ. இதன் கைகள் மனிதர்களின் கைகளைப்போலவே அங்கும் இங்கும் அசையக்கூடியவை. அறிமுகமானவர்களைப் பார்க்கும்போது இது தன் கைகளைத் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். கால்களுக்குப் பதிலாக இதற்கு இரண்டு சக்கரங்கள் இருக்கின்றன. தன் சக்கரங்களைப் பயன்படுத்தி இந்த பொம்மையால் ஒரு மணி நேரத்திற்கு ஆறு கிலோ மீட்டர்வரை பயணம் செய்ய முடியும்.
சுத்தம் செய்யும் ரோபோ
வீட்டில் உள்ள தூசையும், அழுக்கையும் சுத்தம் செய்யப் பல வீடுகளில் துடைப்பத்தைப் பயன்படுத்துவார்கள். சில வீடுகளில் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்துவார்கள். இப்போது இந்த ரோபோவும் வந்துவிட்டது. பத்து சதுர மீட்டர் அளவுள்ள இடத்தை இது பத்து நிமிடத்திற்குள் சுத்தம் செய்துவிடும். அறைகளின் மூலை முடுக்குகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து சுத்தம் செய்த பிறகு, தூசியையெல்லாம் வெளியே கொட்டிவிடும். அது மட்டும் அல்ல, வேலை முடிந்த பிறகு தானாகவே சென்று தன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும். பார்வைக்கு ஒரு டிபன் பாக்ஸ்போன்றிருக்கும் இது நான்கு கிலோ எடையுள்ளது.
இயந்திர மீன்
கண்ணாடி டேங்கிற்குள் நீந்துகிற இந்த மீன் உண்மையான மீன் அல்ல. இதுவும் இயந்திரம்தான். இந்த மீனின் ஒவ்வொரு அசைவும் உயிருள்ள மீனின் அசைவைப்போன்றே இருக்கும். ஜப்பானில் உள்ள இந்த மீனை அங்குள்ள குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள்.
ஸôயா
இதன் பெயர் ஸôயா. டோக்கியோ பல்கலைக் கழகத்தின் வரவேற்பறையில் இருக்கும் இந்த அழகான பெண் பொம்மையால் சிரிக்கவும், வருத்தத்தை வெளிப்படுத்தவும், வியப்பை வெளிப்படுத்தவும் முடியும். முகத்தின் நடுப்பகுதியை மட்டும்தான் இந்தப் பொம்மையால் அசைக்க முடியும். இதற்கு லேசாகத் தலையாட்டவும் தெரியும். வருபவர்களை வரவேற்பதும். அவர்களுக்குத் தேவையான விவரங்களைத் தருவதும்தான் இந்த இயந்திர வரவேற்பாளரின் பணி.
ரோபோரியர்
திருடர்களைப் பிடிப்பதற்காக இனி வீடுகளில் நாய்களை வளர்க்க வேண்டாம். "ரோபோரியர்' என்னும் பெயருடைய இந்த பந்துபோன்ற ரோபோ வீட்டிலிருந்தால் போதும். வீட்டில் யாராவது நுழைய முயற்சித்தால் இந்த இயந்திரக் கண் உடனே வீட்டில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும். வீட்டுக்குள் நடக்கின்ற சம்பவங்களைப் படம் எடுத்து, வீட்டு உரிமையாளரின் மொபைல் போனுக்கு அனுப்பவும் செய்யும். ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு இதை அனுப்ப வேண்டும் என்றால், மொபைல் போனில் சில பட்டன்களை அழுத்தினால் போதும். வீட்டு உரிமையாளர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை. இந்த இயந்திரம் வீட்டிற்குள் சுற்றித் திரிந்து காவல்காக்கும். இது, கூடைப் பந்தாட்டத்தில் பயன்படுத்துகிற பந்து அளவுதான் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.