மக்கள் ஒன்று சேர்ந்து வாழ எப்படிக் கற்றனர்?

வேட்டையாடுதல் என்பது அந்தக் கால மக்களுக்கு அவசியமான தொழில்தான். ஆனால் அது நம்பத் தகுந்த தொழில் அல்ல.  பண்டைய மனிதன் ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக வேட்டையில் வெற்றி பெறலாம். மறு நாள் வேட்டையில் எதுவும் கிடைக்
மக்கள் ஒன்று சேர்ந்து வாழ எப்படிக் கற்றனர்?
Updated on
2 min read

வேட்டையாடுதல் என்பது அந்தக் கால மக்களுக்கு அவசியமான தொழில்தான். ஆனால் அது நம்பத் தகுந்த தொழில் அல்ல.  பண்டைய மனிதன் ஒரு நாள் அதிர்ஷ்டவசமாக வேட்டையில் வெற்றி பெறலாம். மறு நாள் வேட்டையில் எதுவும் கிடைக்காமல்போகலாம். ஆனால், ஒவ்வொரு நாளும்  அவசியம் ஏதாவது சாப்பிட்டாக வேண்டுமே. ஆகவே சுலபமாக வேட்டையாடி மிருகங்களைப் பிடிப்பதற்கு என்ன செய்யலாம்?

   இப்படிப்பட்ட நெருக்கடியான நேரங்களில் வேட்டைக்காரர்களில் யாரேனும் ஒரு நாயை வளர்ப்பார்கள். நிச்சயமாக ஒரு நாய், வேட்டைக்கு உதவி செய்யும். நாய், வேட்டையாடப்படும் விலங்கை மோப்பம் பிடித்து துரத்திச் செல்லும். பிறகு மனிதன் அதைக் கொல்வான். கொல்லப்பட்ட விலங்கின் மாமிசத்தையும், தோலையும் தனக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய கழிவுகளை தனது நாய்க்குக் கொடுப்பான். சிறுகச் சிறுக  மனிதனால் பிற விலங்குகளையும் பழக்க முடிந்தது. ஆனால், அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

   கிழங்குகளைச் சேகரிப்பது எப்போதுமே நிறைவாக இருக்கவில்லை. ஏனெனில் பக்கத்தில் உள்ள பகுதிகளில் கிழங்குகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஆனால், ஆற்றங்கரை நெடுகிலும் உள்ள ஈரமான வண்டல் படுகையில் விதைகள் நட்டால், அந்த விதைகளிலிருந்து முளைக்கும் தாவரங்கள் மற்ற இடங்களில் உள்ளதைக்காட்டிலும் பெரிதாகவும் வலுவுடனும் வளர்கின்றன என்று பண்டைக் காலப் பெண்கள்

கண்டுபிடித்தார்கள். ஒரே இடத்திலேயே விதைகள் ஊன்றி, அந்த இடத்திலேயே விளைச்சலை சேகரிப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. இப்படி, வண்டல் படுகைகளில் விதைகளை ஊன்றுவதற்கு மனிதர்கள் கற்றார்கள். தாவரங்கள் நன்றாக வளர்ந்தன. விதைகளைப் பறவைகள் தின்னவில்லை. இந்த வகையாகத்தான் முதன் முதலில் விவசாயம் தொடங்கியது.

   கால்நடை வளர்ப்பும், பயிரிடுதலும் மக்களை மிகவும் வளமிக்கவர்களாக மாற்றின. ஆனால் அவை, வாழ்க்கையை மிகவும் சிக்கலானதாகவும் ஆக்கின. மேலும் அந்தக் கால மனிதர்கள் பானைகளும், கருவிகளும், ஆயுதங்களும் தயாரித்தார்கள். இவை எல்லாவற்றையும் ஒரு குடும்பத்தால் மட்டுமே செய்துவிட முடியவில்லை. எனவே அருகில் உள்ள குடும்பங்களோடு சேர்ந்து தங்களது சக்தியைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

   இப்படி அவர்கள் குடும்பம் குடும்பமாக சேர்ந்து உழைத்தார்கள். நிறைய குடும்பங்கள் சேர்ந்த பெரிய குழுக்களாக வாழத் தொடங்கினார்கள். இந்தக் குழுக்களைத்தான் "இன மரபுக் குழுக்கள்' என்கிறோம். பெரிய குடும்பங்கள் எந்த வகையிலும் பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் இருந்தன. ஆனால் யார் எதைச் செய்வது? வேட்டைப் பொருளை, உற்பத்திப் பொருளை எப்படிப் பங்கு போட்டுக்கொள்வது? யாருக்கு அதிகமாகக் கிடைக்கும்? யாருக்குக் குறைவாகக் கிடைக்கும்?

   இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இன மரபுக் குழுவினரிடையே மிகவும் புத்திசாலிகளைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரதிநிதி இருந்தான். ஒரு பெரிய வேட்டைக்காகவோ, போருக்காகவோ பல இன மரபுக் குழுவினர் ஒன்று சேர்ந்திருக்கக்கூடும். ஆனால், விவசாயத்திற்கு முறையான ஒத்துழைப்பு தேவையாக இருந்தது. புதிய வயலுக்காக சதுப்பு நிலத்திலிருந்து நீரை வெளியேற்றவோ, ஒரு கால்வாய் அமைக்கவோ, வெள்ளத்தைத் தடுப்பதற்கான அணை கட்டவோ கூட்டு முயற்சி தேவைப்பட்டது. மக்கள் தங்களது எல்லைகளை எங்கெங்கே வகுத்துக்கொண்டார்கள் என்பதை ஆறுகளோ, ஏரிகளோ பொருட்படுத்தவில்லை. ஆற்றின் மேற்புறமாக இருந்த மக்கள் வறட்சியால் துன்புற்றார்கள். கீழ்ப்பகுதியில் இருந்தவர்கள் வெள்ளத்தால் சிரமப்பட்டார்கள்.

   இரண்டு பகுதி மக்களின் வாழ்க்கையைக் கூட்டுறவால் மட்டுமே வளப்படுத்த முடியும். இதைப் புரிந்துகொள்வதற்கு மக்களுக்கு வெகுகாலம் ஆயிற்று. மனிதன் பூமியில் தோன்றி எவ்வளவோ காலத்திற்குப் பிறகு  முதலாவது அரசுகள் தோன்றலாயின.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com