

நதிப் பள்ளத்தாக்குகளில்தான் ஆரம்ப கால நாகரிகங்கள் ஏற்பட்டன என்று வரலாற்றாசிரியர்கள் நமக்குக் கூறுகின்றனர். முதன் முதலில் எங்கே தொடங்கின என்று சரியாகச் சொல்ல முடியாது. ஆனாலும் அது ஒரு வேளை, தெற்கு மெசபடோமியாவில் - யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் நதிச் சமவெளியில் முதலாவது நாகரிகம் தொடங்கியிருக்கலாம். அல்லது மிகப் பெரிய இந்திய நதிகளாகிய சிந்து மற்றும் கங்கை ஆற்றின் கரைகளில் ஏற்பட்டிருக்கலாம். அல்லது நைல் பள்ளத்தாக்கில் ஏற்பட்டிருக்கக்கூடும்.
மற்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களைவிட முன்பாகவே, இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் உழவும் விதைக்கவும், நீர் பாய்ச்சிப் பயிர் வளர்க்கவும், கால்வாய்கள் வெட்டவும் கற்றிருந்தார்கள். முன்னதாகவே இவர்கள், உலோகத்தை எப்படி உருக்குவது என்றும், உயரமான வீடுகளைக் கட்டுவது எப்படி என்றும் அறிந்திருந்தார்கள்.
இயற்கை வளம், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரு பகுதியில் ஏராளமான கனிச் செல்வம் இருக்கக் கூடும். ஆனால் உப்பே இருக்காது. மற்றொரு பகுதியில் இதற்கு மாறாக இருக்கலாம். ஒரு நகரம் அல்லது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அழகான துணி நெய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், மற்ற பகுதியைச் சேர்ந்த மக்கள் பீங்கான் பாத்திரங்கள் செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே தங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கிற பொருட்களைக் கொடுத்து, தேவைப்படும் பொருட்களை வாங்கினார்கள். இதுதான் பண்டமாற்று.
அதாவது ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளை வாங்குவது. (பணம், காசு நடைமுறைக்கு வராத காலத்தில் மக்கள் இப்படித்தான் வரவுசெலவு செய்தார்கள்) மக்கள், தங்களுடைய பொருட்களை மற்றவர்களுக்காக கொண்டு வந்தார்கள். இப்படித்தான் முதலாவது வியாபாரிகள் தோன்றினார்கள்.
புத்திசாலிகளாக இருந்தார்கள் இந்த வியாபாரிகள். வழக்கமாகச் செல்லும் இடத்தை விட்டு வேறு இடம் நோக்கி துணிச்சலாகச் செல்பவர்கள், அதிகமான லாபத்தோடு திரும்புவதை மற்றவர்கள் அறிந்தார்கள். ஆகவே வியாபாரம் செய்வதற்காகப் பயணங்கள் செல்லத் தொடங்கினார்கள்.
வேறு இடங்களில் வாழும் மக்களைப் பற்றியும், அவர்களிடம் அவர்களின் தேவைக்கும் அதிகமான பொருள் என்ன இருக்கிறது, அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பவற்றைப் பற்றியெல்லாம் விரைவில் அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. அறிந்துகொண்டால்தானே அங்கு சென்று வியாபாரம் செய்ய முடியும்.
உலகில் மக்கள் வாழ்ந்த மிகவும் பழைய இடங்களில் ஒன்று மத்தியதரைக் கடலின் ஓரப் பகுதி.
வெகுகாலத்திற்கு முன்பிருந்தே பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியதரைக் கடலின் கரையோரங்களில் வாழ்ந்திருக்கின்றனர். உலகில் தோன்றிய மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான கிரேக்கக் கலாச்சாரம் மத்தியதரைக் கடலின் ஓரத்தில்தான் ஓங்கி வளர்ந்தது.
பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் மிகப் பெரிய மரபுச் செல்வத்தை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். முதன் முதலாக உலகப் படத்தை வரைந்தவர்களில் அவர்களும் உண்டு. பூமியை ஒரு மிகப் பெரியத் தீவாகவும், இடையில் ஒரு கடல் இருப்பதுபோலவும் அவர்கள் பூமியின் படத்தை வரைந்தார்கள்.
இந்தத் தீவை, பண்டைய கிரேக்கர்கள் "ஒக்குமினஸ்' என்று அழைத்தார்கள். "மனிதர்கள் குடியேறிய நாடு' என்பதுதான் இதன் பொருள். ஆசியாவின் சில பகுதிகளும், இந்தியா, சீனா மற்றும் பிரிட்டன்போன்ற நாடுகளும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளமுள்ள நிலப்பரப்புகளும், மலைத் தொடர்களும், பாலைவனங்களும் அவற்றை மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து பிரித்து நின்றன.
மிகச் சிலர்தான், ஒட்டகங்களிலும், கப்பல்களிலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு வெகு தொலைவில் இருக்கும் நாடுகளுக்குச் செல்ல முன்வந்தனர்.
இவ்வாறு சென்று திரும்பிய மக்கள், தாங்கள் பார்த்த அதிசயமான நாடுகளையும், மக்களையும் பற்றிச் சொன்னார்கள். "தங்கமும் ஆபரணங்களும் நிறைந்த' வளமிகு இந்தியாவைப் பற்றிய கதைகளைப் பயணிகள் கொண்டு வந்தார்கள். கணக்கற்ற குதிரை மந்தைகளையும், மனிதனைவிட உயரமான புற்களையும் கொண்ட ஸ்டெப்பி நிலங்களைப் பற்றிச் சொன்னார்கள். மத்திய ஆசியாவின் கைவினைஞர்கள் அரிய உலோகங்களால் செய்த ஆயுதங்களைப் பற்றிக் கூறினார்கள்.
வெண்கலம் தயாரிப்பதற்கு வெள்ளீயப் பாறை தேவைப்பட்டது. அது தொலை தூரத்துப் பிரிட்டனில் மிக நிறையக் கிடைத்ததைப் பற்றிக் கூறினார்கள்.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு கடற் பயணமும், ஒவ்வொரு தரை வழிப் பயணமும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே இருந்தது. அந்தப் பயணங்கள் பற்றிய கதைகள் வாய் மொழியாகவே பல ஆண்டுகளுக்குச் சொல்லப்பட்டன. அந்தக் கதைகளில் மிகச் சில கதைகள்தான் ஆர்வமூட்டக்கூடியனவாக இருந்தன.
அயல் நாடுகளைப் பற்றியும், அந்த நாட்டு மக்களைப் பற்றியுமான கதைகள்தான் அவை. இவைபோன்ற கதைகள் சொல்லப்படும்போது, கதை சொன்னவர்களும் கேட்டவர்களும் ஒரு விஷயத்தைப் பற்றி அறிய ஆவல் கொண்டனர். எதை அறிய ஆர்வம் கொண்டனர்?
"நமது பூமி எதைப்போல இருக்கிறது? அதற்கு ஒரு முடிவு உண்டா?'
(தொடரும் )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.