கிளிப் பேச்சு: தவளைகள்

 நாம் மழைக் காலத்தில் தவளைகளை எங்கும் காணலாம். ஆனால் மற்ற பருவங்களில் அவை எங்கே செல்கின்றன?    தவளைகளுக்கு மிகவும் விருப்பமான காலம் மழைக் காலம்தான். ஆனால், குளிர் காலம் ஆரம்பமானவுடன் தவளைகள் கொஞ்சம் க
Updated on
2 min read

 நாம் மழைக் காலத்தில் தவளைகளை எங்கும் காணலாம். ஆனால் மற்ற பருவங்களில் அவை எங்கே செல்கின்றன?

   தவளைகளுக்கு மிகவும் விருப்பமான காலம் மழைக் காலம்தான். ஆனால், குளிர் காலம் ஆரம்பமானவுடன் தவளைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிடும். குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் அவை ஒளிந்துகொள்கின்றன. தவளைகள் குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுச்சூழலில் குளிர் அதிகரிக்கும்போது, அதன் உடலின் வெப்பநிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அதன் உடல் உறுப்புகள் செயல்படாமல்போய்விடும். இதிலிருந்து தப்புவதற்காகத்தான் தவளைகள் சென்றுவிடுகின்றன. எங்கே செல்கின்றன?

   குளங்களுக்கோ, கிணறுகளுக்கோதான் செல்கின்றன. குளத்தில் உள்ள மண்ணில் அறுபது சென்டி மீட்டர் வரை ஆழத்திற்கு நுழைந்து சென்று இவை பதுங்கியிருக்கும். தவளைகளின் இந்தச் செயலுக்கு "குளிர்கால உறக்கம்' என்று பெயர். இந்த சமயத்தில், ஈரமான தன் தோலின் மூலமாகத்தான் தவளை சுவாசிக்கும். தவளையின் உணவுத் தேவையை, அதன் உடலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் க்ளைக்கோஜனும், கொழுப்பும் ஈடு செய்கின்றன. ஆயினும் இந்தக் காலத்தில் தவளை மிகவும் களைப்புடன் இருக்கும்.

 வெளியே வெப்ப நிலை அதிகரிக்கும்போது, தவளை தன் உறக்கத்தை முடித்துக்கொண்டு வெளியே வரும். ஆனால், கோடை வெப்பத்தை சமாளிக்க முடியாதபோது, அதே ஈர மண்ணிற்கே தவளை திரும்பி வரும். இதற்கு "கோடைகால உறக்கம்' என்று பெயர். பிறகு மழைக் காலம் தொடங்கும்போது தவளைகள் மீண்டும் உற்சாகத்துடன் வெளியே வரும்.

சூயிங்கம்:

 இது 1870 - ஆம் ஆண்டு நடந்தது. "தாமஸ் ஆடம்ஸ்' என்பவரது வாயில் எப்படியோ ஒரு முறை மரப் பிசின் பட்டுவிட்டது. அவர் அதை சுவைத்துப் பார்த்தார். நன்றாக இருந்தது.  "டப்போடில்லா' என்னும் மரத்தின் பிசினான "சிக்கில்' தான் அவர் வாயில் பட்ட பொருள்.

   அந்தச் சிக்கிலில் கொஞ்சம் இனிப்பு சேர்த்து அவர் 1876 - ஆம் ஆண்டு முதலாவது சூயிங்கம்மைச் செய்தார். விரைவிலேயே சூயிங்கம் தயாரிக்கும் தொழிற்சாலையையும் தொடங்கினார்.

 "சூ(இஏஉர)' என்றால் மெல்வது என்று அர்த்தம். "கம்' என்றால் பசை என்று அர்த்தம். இரண்டும் சேர்ந்துதான் சூயிங்கம் என்றானது.   கற்பூரத்துளசி, லவங்கம் ஆகியவற்றின் சுவைகளுடன் முதலில் ஆடம்ஸ் செய்த சூயிங்கம்தான் இன்று நாம் சாப்பிடுகின்ற சூயிங்கம்மின் முன்னோடி.

 ஆடம்ஸ் இந்தச் சுவையான மிட்டாயைக் கண்டுபிடித்தார் என்றாலும், இதைப் பரவலாக்கியது "வில்லியம் ரிக்லி' என்பவர். இவர் சோப்புத் தூள் தயாரிப்பவர். இவர் தயாரித்த சோப்புத் தூளை தொடக்கத்தில் யாரும் வாங்கவில்லை. எனவே ரிக்லி தன் சோப்புத் தூளுடன் சூயிங்கம்மை இலவசமாகத் தரத்தொடங்கினார். சூயிங்கத்தின் சுவையை விரும்பத் தொடங்கிய மக்கள், சோப்புத் தூளுக்குப் பதில் சூயிங்கம்தான் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார்கள்.

   விரைவிலேயே ரிக்லி, "ஜூஸி ஃபுரூட்', "டபுள் மின்ட்' ஆகிய பெயர்களில் சூயிங்கம் தயாரிக்கத் தொடங்கினார்.

   சிக்கில், செயற்கைப் பிசின், சோளமாவு, சர்க்கரை, நிறங்கள், வாசனைப் பொருட்கள் ஆகியவற்றைச் சேர்த்து இப்போது சூயிங்கம் தயாரிக்கிறார்கள்.

   மென்ற பிறகு ஊதிப் பெரிதாக்குகிற "பபுள்கம்' மும் ஒரு வகையான சூயிங்கம்தான். 1928 - ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த "வால்ட்டர் டீமர்' என்பவர்தான் பபுள்கம்மைக் கண்டுபிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com