

மக்கள் எந்தளவு பயணம் செய்தார்களோ அந்தளவு அவர்கள் அடிக்கடி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டது இதுதான்: ""நம் பூமி எதைப்போல இருக்கிறது? அதன் வடிவம் என்ன?''
இந்தக் கேள்வியை முதன் முதலாகக் கேட்டவர்கள் "தீயன் - ஸ்யா' என்னும் நாட்டைச் சேர்ந்த ஞானிகள்தான் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்த நாடு "பரமண்டலப் பேரரசு' என்று மொழிபெயர்க்கப்பட்டது. எந்த நாடு அது? சீனாதான்! சீனா, பழமையான பேரரசுகளில் ஒன்று. அது ஒரு பேரரசரால் ஆளப்பட்டு வந்தது. அவருக்கு, அவ்வப்போது சீனப்பேரரசின் எல்லைகளை மிகத் துல்லியமாக விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த அரசுப் பணிக்காக, அரசாங்கத்தின் உயர் நிலைப் பணியாளர்கள் தலைநகரிலிருந்து எல்லாத் திசைகளிலும் அனுப்பப்பட்டார்கள்.
சீனாவில் முக்கியமான நபர்கள் வசதியான வண்டிகளில் பயணம் செய்தார்கள். ஒவ்வொரு வண்டியிலும் ஒரு ரகசியக் கருவி இருந்தது. அது எப்போதுமே ஒரே திசையையே காட்டிக்கொண்டிருந்தது. வழி தவறிப்போய்விடாமல் இருக்க இது உதவியது. சீனர்கள் இதைப் பாதுகாத்து "தென் திசை காட்டி' என்று பெயரிட்டு அழைத்தனர்.
இந்தப் பண்டைய ரகசியக் கருவி நமது காலம் வரை நிலைத்து வந்திருக்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவார்கள். அதைத்தான் நாம் இப்போது திசைகாட்டி என்று அழைக்கிறோம். இது சிக்கலான அமைப்புக் கொண்டது அல்ல. இது, காந்த ஊசிகொண்ட சிறிய பெட்டிதான். இதன் நீல நிறமுள்ள முனை தெற்கையும், சிவப்பு நிற முனை வடக்கையும் காட்டுகிறது.
இந்தச் சீன ஆட்சி அதிகாரிகளின் வண்டிகள் ஸ்தெப்பி நிலங்களிலும், பாலைவனங்களிலும் நீண்ட நேரம் பயணம் செய்தன. ஆனால் பேரரசரின் தூதுவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் ஒன்றைக் கண்டனர். என்ன அது? மாலை நேர வானத்தின் நட்சத்திரங்கள் எப்போதுமே கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதைக் கவனித்தார்கள். ""இது ஏன் இப்படி?'' என்று அவர்கள் வியந்தார்கள். விடைகாண முயன்றார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை.
வேறு சில அலுவலர்கள் மலைகளுக்குச் சென்றனர். அவர்களுடைய வண்டிகள் குறுகிய பாதைகளில் செல்ல முடியவில்லை. ஆகவே அவர்கள் பல்லக்குகளிலே சுமந்து செல்லப்பட்டார்கள். தங்களுடைய சிரமமான இருக்கைகளில் அமர்ந்து வழி நெடுக குலுங்கியபடி சென்ற அதிகாரிகள் வியந்தார்கள்: ""சீனப் பேரரசின் ஒரு பகுதி விண்ணைத் தொடுவதுபோல உயரமாகவும், மற்ற பகுதி தாழ்வாகவும் இருக்கிறது. இது ஏன்?'' ஆனால், அவர்களாலும் விடைகாண முடியவில்லை.
மேலும் சில அதிகாரிகள் படகுகளில் பயணம் செய்தார்கள். ""பேரரசரின் நிலப் பகுதியில் உள்ள எல்லா ஆறுகளும் ஏன் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன?'' என்று அதிகாரிகள் தங்களுக்குள்ளாகக் கேட்டுக்கொண்டனர். அது பற்றி நீண்ட நேரம் யோசித்தார்கள். ஆனால், அவர்களால் விளக்கம் காண முடியவில்லை.
இந்தப் புதிர்கள் குறித்து அரண்மனை ஞானிகள் தங்கள் மூளையைக் குழப்பிக்கொண்டார்கள். அவர்கள் எல்லாவற்றிற்கும் விடை அளிக்க வேண்டும் என்று பேரரசர் வற்புறுத்தினார். எனவே அவர்கள் பேரரசரிடம் கீழ்கண்ட விடையைச் சொன்னார்கள்:
""உடைந்த விளிம்புகளோடுகூடிய ஓர் அரிசிப் பணியாரத்தைப்போல பூமி தட்டையானது என்று நாம் கருதலாம். உயரமான தூண்கள் ஆகாயத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தாங்கி நிற்கின்றன. ஒரு தூண் தெற்குப் பகுதியைத் தாங்கி நிற்கிறது. மற்றொன்று மேற்குப் பகுதியைத் தாங்கி நிற்கிறது. இன்னுமொன்று வடக்குப் பகுதியைத் தாங்கி நிற்கிறது. கடைசித் தூண் கிழக்குப் பகுதியைத் தாங்கி நிற்கிறது. இப்படி உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தூண் இருக்கிறது...ஒரு காலத்தில் கொடுமைக்காரப் பறவை நாகம் ஒன்று தூண்களில் ஒன்றை வளைத்துவிட்டது. அதன் விளைவாக பூமியும் வானமும் எதிர் திசைகளில் வளைந்துவிட்டன.
மேற்குப் பிராந்தியங்கள் மலைகள்போல வானத்தை நோக்கி உயர்ந்துவிட்டன. கிழக்குப் பிராந்தியங்கள் கடல்வரை தாழ்ந்துவிட்டன. ஆகவேதான் பேரரசில் உள்ள நதிகள் எல்லாம் கிழக்கு நோக்கி ஓடுகின்றன. அதே வேளை நட்சத்திரங்கள் எல்லாம் மேற்கு நோக்கி நகரவும் தொடங்கிவிட்டன...''
இந்த விளக்கம் நிறைவானதாக இருந்தது. அனைவரும் திருப்தியடைந்தனர். ஆனால் ஒரு சமயம் பெரிய போர் மூண்டது. சீனத்தின் ஆட்சிப் பொறுப்பை இன்னொரு பேரரசர் ஏற்றார். அவர், பறவை நாகம்போலக் கெட்டவராக இருந்தார். அவர் முட்டாள் என்பதுதான் இன்னும் மோசமான விஷயம். இந்த முட்டாள்தனம்தான் அவரை மேலும் கொடுமைக்காரராக்கியது.
தனது பேரரசின் எல்லைகளுக்கு அப்பால் வாழ்ந்த மக்கள், சீனர்களைவிட எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதாக அவர் புத்தகங்களில் படித்தார். இதை அனுமதிக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தார். எனவே அவர் இவ்வாறு கட்டளையிட்டார்:
""அயல் நாடுகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும். தங்கள் நாட்டு எல்லைகளுக்கு அப்பால் வியப்பிற்குரியதாக ஒன்றுமே இல்லை என்பதாகவே சீனர்கள் படிக்க வேண்டும்!''
அந்தப் பேரரசர் சீனாவின் பெயரைக்கூட "நறுமணம் கமழும் மத்திய நாடு' என்று மாற்றினார். அப்போதிருந்து தங்கள் நாட்டைச் சீனர்கள் இப்படித்தான் அழைத்தார்கள். நறுமணத்திற்கோ, பூக்களுக்கோ அப்பாற்பட்ட பல விஷயங்கள் அங்கே இருந்தன என்பது வேறு விஷயம்.
அங்கே உழைப்பாளர்கள் வறுமையிலும், துன்ப துயரங்களிலும் வாழ்ந்தார்கள். அதிகாரிகளும், பணக்காரர்களும் கவலையற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இதுதான் உலகத்தில் அடிக்கடி நடைபெற்றது.
பேரரசில் உள்ள மக்கள் எல்லையைத் தாண்டி அப்பால் உள்ள விஷயங்களில் அக்கறை காட்டாமல் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி பேரரசர் கட்டளையிட்டார். பேரரசரின் பணியில் இருந்த அலுவலர்கள் (இந்த அலுவலர்கள் பேரரசரை "வானத்தின் புதல்வர்' என்று அழைத்தார்கள்), சீனாவுக்கு வேறொரு பெயரைச் சூட்டினார்கள்: "நான்கு கடல்கள்'. சீனாதான் முழு உலகம் என்று அவர்கள் கூறினார்கள்.
அனைத்து உலகமுமான சீனா நாற்புறமும், மிகப் பெரிய மீன்களும், பறவை நாகங்களும் நிறைந்த சீறும் கடல்களால் சூழப்பட்டு இருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். மக்களும் இதை நம்பி வீட்டிலேயே தங்கிவிட்டார்கள்.
அதிகமான மக்கள் இப்படி நம்பினார்கள். ஆனால், எல்லோருமே அல்ல. பண்டைய சீனர்கள் தொலைதூரத்து நாடுகளுக்குச் சென்ற பயணக் கதைகளும், விளக்கங்களும் நமது காலம் வரையிலும்கூட நிலைத்துவிட்டன.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.