
ஈரான், மத்தியக் கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது பண்டைய காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழும் மக்கள் ஈரானியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஈரானின் பரப்பளவு 1,648,195 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 77, 891, 220 பேர். தலை நகரம் டெஹ்ரான். முக்கிய மதம் இஸ்லாம். இங்கு ஈரான் ரியால் என்னும் நாணயம் பயன்படுத்தப்படுகிறது. பாரசீக மொழிதான் இங்கே முதன்மை மொழியாக உள்ளது.
ஈரான் நாட்டின் முக்கிய நகரங்கள் மஷாத், இஸ்பஹான், அஹ்வாஸ், கொம் ஆகியவையாகும்.
இங்கு பாயும் முக்கிய நதிகள் ஆரஸ், செஃபித்ருத், சாலுஸ், ஹராஸ், ஸ்ஹெஸôர், பபோல் ஆகியன.
1979 - ஆம் ஆண்டு ஏப்ரல் 1 - ஆம் நாள், இஸ்லாமியக் குடியரசு நாடாக மலர்ந்தது ஈரான். ஈரானின் பேரதிபராக அயத்தொல்லாஹ் அலி கமெய்னி அவர்களும், குடியரசுத் தலைவராக மொஹமது அஹமது நெஜாக் அவர்களும் பதவி வகிக்கின்றனர்.
தமாவந்த் உள்ளிட்ட உயர்ந்த மலைகள் இங்கே உள்ளன.
ஈரான் நாட்டின் முக்கியப் பண்டிகைகள் தெüருஷ் (ஈரானிய நாட்காட்டியின் முதல் நாள் மற்றும் வசந்த காலத்தின் முதல் நாள்), மெஹரகன் என்கிற மெகர் திருநாள் (நன்றி அறிவிப்பு நாள்), செபாந்திர மஸகன் (அன்பிற்குரிய நாள்), சிதாஹ் பெதர் (மகிழ்ச்சிக்கும் உறுதிக்கும் உரிய வசந்த காலத்தின் பதின் மூன்றாம் நாள்) ஆகியனவாகும்.
கோதுமை, பார்லி, சூரியகாந்தி, பேரீச்சை, ஓட்ஸ், அரிசி ஆகியவை ஈரானின் முக்கிய விளை பொருட்களாகும்.
கால்நடை வளர்ப்பு, பின்னல் ஆடை நெசவு, அழகிய வண்ண விரிப்பு தயாரித்தல் ஆகியன இந்த நாட்டு மக்களின் முக்கியத் தொழில்களாக உள்ளன.
கால்பந்து மற்றும் தடகள விளையாட்டுக்கள் முக்கிய விளையாட்டுக்களாகும்.
இமான் ரெஸô மசூதி, பசார்கடே என்னும் இடத்தில் உள்ள சைரஸ் மன்னனின் கல்லறை, எலிமேட் வம்சத்தின் நாப்ரிசா மன்னனால் கட்டப்பட்ட ஜோகா ஸôன்பில் என்னும் தொகுப்புக் கட்டடம், ஹஸ்த் பெஹெஸ்த் என்னும் அரண்மனை (எட்டு சொர்க்கங்களின் அரண்மனை) ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் ஈரானில் உள்ளன.
கவிஞரும், கணிதவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமான உமர்கயாம், புகழ் பெற்ற பெண் கவிஞரான ஷீமாகல்பாஷி, அபாஸ் கியரோஸ்மி, மஜித் மஜித்போன்ற உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர்கள் ஆகியோர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஜொராஸ்ட்ரிய இசை, சூஃபி இசை, தசீக் இசைபோன்ற தொன்மையான இசை மரபுகள் ஈரான் நாட்டில் தோன்றின.
ஈரான் நாட்டுப் பெண்கள் கழுத்து முதல் கால்வரை மூடி இருக்கும், நீண்ட கைகளை உடைய ஆடைகளை அணிகின்றனர். இவர்கள் கோடை காலத்தில் பருத்தியால் ஆன இதே வகை ஆடைகளையும், குளிர் காலத்தில் கம்பளியினால் ஆன இவ்வகை ஆடைகளையும் பயன்படுத்துகின்றனர். அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய சதுரவடிவான தலைத் துணியையும் அணிகின்றனர்.
ஆண்கள், குர்த்தா மற்றும் தலைப்பாகையையும் அணிகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.