பைபிள் கதைகள்

நாமானும் எஜாவும்... சிரியா நாட்டின் ராணுவத்தில், நாமான் என்பவன் அசாத்திய துணிச்சல் கொண்ட ஒப்பற்ற மாவீரனாகத் திகழ்ந்தான். யுத்த களங்களில் நாமான் வீரதீர சாகசங்கள் செய்து, எதிரிகளை முறியடித்து, வெற்றிகளை
பைபிள் கதைகள்
Updated on
2 min read

நாமானும்

எஜாவும்
...

சிரியா நாட்டின் ராணுவத்தில், நாமான் என்பவன் அசாத்திய துணிச்சல் கொண்ட ஒப்பற்ற மாவீரனாகத் திகழ்ந்தான்.

யுத்த களங்களில் நாமான் வீரதீர சாகசங்கள் செய்து, எதிரிகளை முறியடித்து, வெற்றிகளைக் குவித்து மன்னரின் காலடியில் குவித்தான்.

நாமானின் போர்த் திறமையை மெச்சிப் பாராட்டிய மன்னர் அவனைத் தம்முடைய மரியாதைக்குரிய உயர்நிலைத் தளபதிகளுள் ஒருவனாக நியமித்துக் கெüரவித்தார்.

நாமானுக்கு அரண்மனையில் ராஜ மரியாதை. அவனுடைய அழகிய மாளிகையில் அவன்மீது அன்பைப் பொழியும் மனைவி. இருந்தும் அவன் மனதில் மகிழ்ச்சி இல்லை. காரணம், அவனைத் தாக்கியிருந்த கொடிய தொழுநோய்!

தொழுநோய் என்பது மிகவும் பயங்கரமான, குணப்படுத்த முடியாத உயிர்க்கொல்லி நோயாகக் கருதப்பட்ட காலம் அது.

நாமான், ஒவ்வொரு முறை போருக்குப் புறப்படும்போதும் அவனுடைய மனைவி மிகுந்த மனவருத்தத்துடனும் கண்ணீருடனும் விடை கொடுப்பாள்.

ஒருமுறை அவன் இஸ்ரவேலருடன் போரிடக் கிளம்பியபோது, கவலையுடன் காணப்பட்ட தன் மனைவியைச் சந்தோஷப்படுத்தும் பொருட்டு, ""இஸ்ரவேலரை வென்று நான் நாடு திரும்பும்போது உனக்கு அந்த நாட்டிலிருந்து ஒரு அழகிய பரிசு கொண்டு வருவேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மனைவிக்கு வாக்களித்தபடியே போரில் வெற்றி பெற்று, நாடு திரும்பிய நாமான் ஓர் அழகிய உயிர்த்துடிப்புள்ள பரிசைக் கொண்டு வந்து மனைவியிடம் ஒப்படைக்க, அவளுடைய விழிகள் வியப்பால் விரிந்தன.

நாமான் பரிசளித்தது, அவன் சிறைப்படுத்தி அடிமையாக்கிக் கொண்டு வந்தது இஸ்ரேல் நாட்டின் அழகிய சிறுமி ஒருத்தியை!

அச்சிறுமியின் கருகரு விழிகளும் இருண்ட கூந்தலும் சிவந்த முகமும் நாமானின் மனைவியை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அச்சிறுமியை அவள் முழு மனதோடு தன் பணிப்பெண்ணாக ஏற்றுக் கொண்டாள்.

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்ட அந்த அடிமைச் சிறுமி மீது நாமானின் மனைவிக்கு அளவற்ற அனுதாபம். ஆகவே, பெற்றோர் இல்லாத குறையே அவளுக்குத் தெரியாதபடி நாமானும் அவன் மனைவியும் அவள் மீது அன்பைப் பொழிந்தனர்.

அவளும் தன் எஜமானிக்கு உற்சாகமாக சகல பணிவிடைகளையும் செய்தாள். அவ்வப்போது, அந்தச் சிறுமிக்குத் தன் நாடு, தன் மக்கள், தன் குடும்பம் பற்றிய நினைவுகளை எஜமானியுடன் பகிர்ந்து கொள்ளுவதில் ஒருவித ஆறுதல் கிடைத்தது.

ஒருநாள், அந்தச் சிறுமி தன் எஜமானி மிகுந்த துயரத்துடன் இருப்பதைப் பார்த்துவிட்டு அவளுடைய கண்ணீருக்குக் காரணம் கேட்டாள்.

அதற்கு, ""இனி என் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு ஒருபோதும் இடமில்லை...'' என்று கூறிவிட்டுத் தனது கணவனின் குணப்படுத்த முடியாத தொழுநோய் பற்றிச் சொன்னாள்.

உடனே அந்த அடிமைச் சிறுமி, தன்னுடை சமாரியா நாட்டிலுள்ள எலிஜா என்ற மகான் பற்றிச் சொன்னாள்.

""கடவுள் பக்தி நிறைந்த எலிஜா மிகவும் சக்திவாய்ந்த தீர்க்கதரிசி! அவரால் இந்த நோயை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும்!'' என்றாள்.

அதைக் கேட்ட நாமானின் மனைவி தன் கணவனிடம் இதைப் பற்றிக் கூறினாள்.

""இந்தச் சிறுமி கூறுவது மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இழந்துவிட்ட சந்தோஷத்தை நாம் திரும்பப் பெறும் வாய்ப்பு இருக்கிறது'' என்றாள்.

உடனே நாமான் சிரியாவின் அரசனிடம் சென்று அடிமைப் பெண் மூலமாகத் தான் கேள்விப்பட்டதைக் கூறினான். தளபதி சொன்னதைக் கேட்ட அரசன், அவனை சமாரியா மன்னனிடம் அனுப்பினான்.

சமாரியா அரசனுக்குத் தன் அரசன் கொடுத்த கடிதத்தோடு, பொன், வெள்ளிப் பரிசுகளோடும் பணியாட்களுடனும் சமாரியாவுக்குப் புறப்பட்டான் நாமான்.

சமாரியா வந்து சேர்ந்தவுடன், தனது மன்னர் கொடுத்த கடிதத்தை அரசனிடம் கொடுத்தான் நாமான்.

அதைப் படித்த மன்னன், ""தொழுநோயை என்னால் எப்படிக் குணமாக்க முடியும்? குணமாக்காவிட்டால் சிரியா மன்னர் படையெடுத்து வந்து என்னை அழித்துவிடுவாரே...'' என்று புலம்ப ஆரம்பித்தான்.

இதைக் கேள்விப்பட்ட எலிஜா, ""மன்னா, அஞ்ச வேண்டாம்! அந்தத் தொழுநோயாளியை என்னிடம் அனுப்புங்கள். அவனை நான் குணப்படுத்துகிறேன்'' என்று மன்னருக்குத் தகவல் அனுப்பினார்.

உடனே சமாரியா ராஜா, நாமானை, எலிஜா தீர்க்கதரிசியிடம் அனுப்பினார்.

எலிஜாவின் சிறிய வீட்டுக்கு முன்னால் நாமான் தனது படை பரிவாரங்களுடன் வந்து இறங்கினான்.

உள்ளே இருந்து வெளியே வந்த எலிஜா, நாமானை யோர்தான் நதிக்குப் போய் அதில் ஏழு முறை மூழ்கி எழுந்து வரும்படி சொன்னார்.

தனக்கு சிகிச்சை அளிக்காமல், யோர்தான் நதிக்குப் போய் குளித்து வா என்கிறாரே இந்த மனிதர், என்று நாமானுக்குக் கோபமாக வந்தது.

""என்னுடைய சிரியா நாட்டில் நதிகளா இல்லை? நீர் எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம்..'' என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அப்போது அவனுடன் இருந்தவர்கள் அவனைச் சமாதானப்படுத்தினர்.

சக்திவாய்ந்த ஒரு மகான் சொல்வதை நம்பிக்கையுடன் செய்துதான் பாருங்களேன்... என்று வற்புறுத்தினர்.

மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக, நாமான் யோர்தான் நதிக்குச் சென்றான். அந்த ஆற்றில் ஏழு முறை மூழ்கி எழுந்தான். அப்போது அவனுடைய தொழுநோய் முற்றிலுமாக நீங்கி, தூய்மையான மேனி கொண்டவனாக மாறினான்.

நாமான் அடிமைப்படுத்திக் கொண்டு வந்த சிறுமியால் அவனுடைய பயங்கரத் தொழுநோய் குணமானது. எலிஜாவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு நாடு திரும்பினான் நாமான்.

அன்பு, விசுவாசம், நம்பிக்கை, மகான்களை மன்னித்தல் போன்ற நற்பண்புகளின் அவசியத்தை பைபிளில் "2 ராஜாக்கள்' ஐந்தாம் அத்தியாயத்தில் இந்த நாமானின் சரித்திரம் விவரிக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com