பொய் சொல்லா மெய்யன் வ.உ.சி.!

முன்னொரு காலத்தில் துறவி ஒருவர் நகரத்தின் பரபரப்பும் சந்தடியும் இல்லாமல் அமைதியாக வாழ விரும்பினார். எனவே அருகிலுள்ள காட்டில் ஒரு குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தனையில
Updated on
3 min read

முன்னொரு காலத்தில் துறவி ஒருவர் நகரத்தின் பரபரப்பும் சந்தடியும் இல்லாமல் அமைதியாக வாழ விரும்பினார். எனவே அருகிலுள்ள காட்டில் ஒரு குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தனையில் சிவனை அமர்த்தி தியானம் செய்துவந்தார். அதில் அமைதியும் ஆனந்தமும் கண்டார்.

இப்படியிருக்க ஒருநாள் வியாபாரி ஒருவன் பதைபதைப்புடன் ஓடிவந்து, ""சாமி, காப்பாத்துங்க, என்னிடமுள்ள பணத்தைப் பறிக்க திருடர்கள் துரத்தி வருகிறார்கள்'' எனக் கதறினான். துறவியும் கண் ஜாடையிலேயே குடிசையுள் மறைந்து கொள்ள அனுமதித்தார்.

பிறகு சிறிது நேரம் கழித்து முரடர்கள் இருவர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, ""யோவ், இப்போ ஓர் ஆள் கையில் மூட்டையுடன் வந்ததைப் பார்த்தியா?''என்று அதட்டினார்கள்.

"கண்ணால் பார்க்க மட்டுமே முடியும். அதற்குப் பேசத் தெரியாது. வாயால் பேச மட்டுமே முடியும். அதற்குப் பார்க்கத் தெரியாது. கடவுளின் சிருஷ்டி விசித்திரத்தைப் பார்த்தாயா?' என்று கேட்டார்.

""என்ன கேட்டாலும், "தெரியாது' என்கிறார், "வாடா போவோம்' என்று வேறுபக்கம் போய்விட்டார்கள். "ஆம்' என்று சொன்னால், ஓர் அப்பாவியின் உயிரும் உடைமையும் பறிபோயிருக்கும். "இல்லை' என்று சொன்னால் பொய் சொன்ன பாபம் வந்து சேரும். இந்த இக்கட்டிலிருந்து தப்பித்தோம்'' என்று சமாதானம் அடைந்தார் துறவி.

இதேமாதிரி ஒரு தர்மசங்கடமான நிலைமை தேசபக்தர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

தூத்துக்குடியில் வ.உ.சி. வக்கீல் தொழில் நடத்திவந்தார். உரிமையியல் குற்றவியல் இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

அப்பொழுது பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழிப் போக்குவரத்து நடத்திக் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். நமது வணிகர்களும் நம் கூலித் தொழிலாளர்களும் சொல்லவொணாத் துயரம் அனுபவித்துவந்தார்கள்.

இந்த அவல நிலைமையைப் போக்குவதற்கு சுதேசி நாவாய்ச் சங்கம் ஆரம்பிப்பதுதான் ஒரேவழி எனக் கண்டார். சிறந்த தேச பக்தர்களையும் ஒரு சில தனவந்தர்களையும் நேரில் கண்டு பணம் திரட்டிக் கம்பெனியை ஆரம்பித்தார். பம்பாய் சென்று இரண்டு கப்பல்களை வாங்கிவந்து, ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாகக் கப்பலோட்டினார்.

இந்த சந்தர்ப்பத்தில், வெள்ளைக்கார முதலாளிகளுக்குச் சொந்தமான "கோரஸ் மில்ஸ்' தொழிலாளர்கள் பத்து மணிநேரம் வேலை செய்தும்கூட குறைவான ஊதியமே பெற்றுவந்தார்கள். விடுமுறை வசதியும் கிடையாது. இதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தார்கள். வ.உ.சி. தலைமையில் போராட்டம் வெற்றி பெற்றது. எட்டுமணி நேர வேலை, வார விடுமுறை, சம்பள உயர்வு இவ்வளவும் கிடைத்தது. இதன்மூலம் ஆங்கிலேயரின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்தார் சிதம்பரனார்.

""சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என்று மராட்டிய சிங்கம், பால கங்காதர திலகர் கர்ஜித்தார். அதன் எதிரொலி தென் தமிழ்நாட்டிலும் இடியோசையென முழங்கியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் நம் வ.உ.சி.தான். அவ்வப்பொழுது வீரத்துறவி சுப்பிரமணிய சிவாவும் வந்து சேர்ந்து கொள்வார். மேலும் பாரதியாரும் தனது பாட்டுத் திறத்தாலே கூட்டத்தைச் சேர்ப்பார். இவர்கள் பேச ஆரம்பித்தால் வங்கக் கடலோசை அடங்கிவிடும். வீராவேசமான வெண்கலக் குரலோசை விண்ணை முட்டும்.

இதனால் எரிச்சலடைந்த நெல்லை கலெக்டர் விஞ்சு துரை, இவ்விருவரும் தூத்துக்குடிக்குச் செல்லக்கூடாதெனவும் எங்குமே கூட்டம் போட்டுப் பேசக் கூடாதெனவும் தடை உத்தரவு பிறப்பித்தார்.

தடையை மீறி வ.உ.சி.யும் சிவாவும் தூத்துக்குடிக்குச் சென்று மக்களை ஒன்று திரட்டிக் கூட்டம் நடத்தினார்கள். இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார் விஞ்சுதுரை.

நீதிபதி பின்னி துரை வழக்கை விசாரித்து, தனது தீர்ப்பில் சிதம்பரனார் ராஜ துரோகி என்று 20 வருட தீவாந்திர சிட்சையும், சிவாவுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக மேலும் 20 வருட தீவாந்திர சிட்சையும் ஆக 40 வருடம் நாடு கடத்தும் தண்டனை விதித்தார். சிவாவுக்கு ராஜ நிந்தனைப் பேச்சுக்காக பத்து வருடம் தீவாந்திர சிட்சை விதித்தார்.

நாடே இந்த அநியாயத் தீர்ப்பைக் கண்டு கொதித்து எழுந்தது. கண்டனக் குரல் பத்திரிகைகளின் வாயிலாக வெளிவந்தது. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் கலவரம் வெடித்தது. அரண்டுபோன ஆங்கிலேய அதிகாரிகள் அவசர அவசரமாக இவர்களைக் கோயம்புத்தூர் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

கொலை, கொள்ளை, தீ வைப்பு முதலான கொடுஞ்செயல் புரிந்து கடுங்காவல் தண்டனை பெற்ற கைதிகள் நிறைந்த இடம் கோயம்புத்தூர் மத்திய சிறை. இவர்களில் சிவகாசிக் கலகத்தில் சிறைத் தண்டனை பெற்ற வடுகு ராமனும் ஆறுமுகம் பிள்ளையும் குறிப்பிடத்தக்கவர்கள்.

வடுகு ராமன் கட்டுமஸ்தான உடல் வாகும் பயங்கரமான தோற்றமும் உடையவன். அவனைக் கண்டாலே இதர கிரிமினல் கைதிகள் பயந்து நடுங்குவர். இக்காரணம் பற்றியே அவன் "கான்விக்ட் வார்டர்' ஆக நியமிக்கப்பட்டு ஜெயிலருக்கு உதவியாக கைதிகளை வேலை வாங்குவான். இதற்குப் பிரதிபலனாக வாரவிடுமுறையும் தண்டனை காலத்தில் வேறு சில சலுகைகளும் உண்டு.

கோவைச் சிறையில் சிதம்பரனார் தண்டனை என்ற பெயரால் சணல் கிழி இயந்திரம் சுற்றினார்; கல் உடைத்தார். கைத்தோல் உறிந்தது. ஆயினும் கண்கலங்கவில்லை. பாரதமாதாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி என ஏற்றுக் கொண்டார்.

கைத்தோல் உரிந்ததைக் கண்ட ஜெயிலர் எண்ணை ஆட்டும் செக்கினை இழுக்க அனுப்பினான். அவ்விதமே செக்கிழுத்தார் சிதம்பரனார். கால் துவண்டது; உடல் மெலிந்தது. ஆயினும் அவர் உள்ளம் தளரவில்லை.

""சுதந்திரத் தேரில் பாரதமாதா பவனி வருவதற்குப் பாதை அமைக்கப் பணித்தனன் ஜெயிலர். என்னே.. அவனது அன்பு..''எனப் புகழ்ந்தார்.

இதைக் கண்டு வடுகு ராமனும் ஏனைய கைதிகளும் நெஞ்சு பொறுக்குதில்லையை எனக் கண்ணீர் வடித்தனர். கல்லுக்குள் ஈரம் போல் இவர்களுக்கு இவ்வளவு கனிந்த உள்ளமா என்று வியந்தார் வ.உ.சி.

ஒரு நாள் சிதம்பரனார் "டவர் ஆபீஸ்' என்னும் சிறைக் காரியாலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் சந்தித்த "சீனியர் கான்விக்ட் வார்டர்' வடுகு ராமன், சிரமேல் கரம் குவித்து சிதம்பரனாரை வணங்கினான். கேட்டில் வந்து கொண்டிருந்த ஜெயிலர் இதைக் கண்டுவிட்டான். கடுங்கோபத்துடன் வடுகு ராமனை அழைத்து, ""யாரை நீ வணங்கினாய்?'' என்று கேட்டான்.

""யாரையும் நான் வணங்கவில்லை...'' என்று கூறி நழுவிக் கொண்டான் வார்டன்.

ஜெயிலர் வ.உ.சி.யை அழைத்து, ""இவன் உம்மை வணங்கியது வாஸ்தவமா?'' என்று கேட்டதற்கு, அய்யா அவர்கள் அளித்த சாதுர்யமான பதிலைப் பாருங்கள்.

""எல்லாரும் என்னை என்றும் வணங்குவர்; ஆனால் நானோ யார் யார் வணங்கினர் என்ற கணக்கு வைத்துக் கொள்வதில்லை...'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com