பொட்டல் காடு

அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும் பருக்கள் போல காணிக் கற்கள் எங்கு பார்த்தாலும் நடப்பட்டிருந்தன. அ
பொட்டல் காடு
Published on
Updated on
3 min read

அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும் பருக்கள் போல காணிக் கற்கள் எங்கு பார்த்தாலும் நடப்பட்டிருந்தன. அந்தக் காணிக்கற்களே அங்கு வருவோருக்கு வரவேற்பாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்தன.

 அந்தத் திறந்தவெளியில் இரண்டே இரண்டு மரங்கள் மட்டும் இருந்தன. ஒன்று அரச மரம், இன்னொன்று அப்போதுதான் வளர்ந்து வரும் வேப்பமரம்.

 ஒருநாள் அந்த இடத்தைப் பார்க்க இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் அந்த மரங்களைச் சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டு ஏதேதோ பேசினார்கள். சிறிது நேரம் கழித்துச் சென்று விட்டார்கள்.

 அவர்கள் போனபிறகு, இளமையாக இருந்த வேப்பமரம் அரசமரத்தைப் பார்த்துக் கேட்டது, "அரச மரமே, நீ இந்த இடத்தில் ரொம்ப நாளாய் இருக்கிறாய்... எவ்வளவோ பேர்களைப் பார்த்திருப்பாய்... இப்போ வந்தாங்களே, இந்த இரண்டு மனிதர்களும் ஏதோ காடு, காடுன்னு பேசிக்கிட்டாங்களே, காடுன்னு ஏதாவது இந்த இடத்திலே இருந்திச்சா, காடுன்னா என்ன? அது எப்படியிருக்கும்?' என்று கேட்டது.

 இதைக் கேட்ட அரசமரத்துக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

 தன் துன்பம் அந்த வளரும் வேப்பமரத்திற்கும் வரக் கூடாதுன்னு தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு சொன்னது-

 "ஆமாம், இங்கே பச்சைப் பசேல்னு ஓர் அடர்ந்த காடு இருந்தது. காடு என்றால் எங்கு பார்த்தாலும் நிறைய மரங்கள், செடிகொடிகள், மணம் வீசும் பூக்கள் எல்லாம் இருக்கும். இயற்கைச் செல்வங்கள் எழில் தோற்றமாய் காண்போரைக் கவரும் வண்ணமயமாய் இருக்கும்.

 பூமித்தாய் பச்சைப் பட்டாடை உடுத்தியது போல அழகாக ஜொலிப்பாள். அதனுள் வன விலங்குகள், பறவையினங்கள், ஊர்வன என எண்ணற்ற உயிரினங்கள் வசித்துக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்து வந்தன. அவர்கள் நீர் பருக பக்கத்தில் ஒரு சுனையும் இருந்ததது' என்றது.

 "இப்போ, நாம இரண்டு பேருதானே இங்கே இருக்கோம்! அவங்களையெல்லாம் காண முடியவில்லையே... எங்கே போனாங்க?' என்றது வேப்ப மரம் அப்பாவியாக.

 'சொல்றேன்... கேளு...' என்று அரச மரம் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தது.

 "நிறைய மரங்கள் இருக்கும்னு சொன்னேன் இல்லையா? இந்தக் காட்டிலே சந்தனமரம், புளிய மரம், சவுக்கு மரம், மூங்கில் மரம், புன்னை மரம், ஆலமரம் இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பல மரங்கள் இருந்தன. அந்த மரங்களின் மீது பறவைகள் எல்லாம் கூடு கட்டி தங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தன.

 நாங்கள் தரும் காய்களையும் பழங்களையும் அந்தப் பறவைகள் கொத்திக் கொத்தித் தின்னு பசியாறும். தாயும் சேயும் எங்கள் பாதுகாப்பிலே இருப்பாங்க. அந்தப் பறவைகள் தங்கள் குஞ்சுகளை எல்லாம் எங்கக் கிட்டதான் பாதுகாப்பா விட்டு விட்டு காலையிலே இரை தேடப் போவாங்க. இரை எல்லாம் தேடி எடுத்துக் கொண்டு வந்து அந்தப் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு ஊட்டும்.

 இரவிலே ஏதோ, ஏதோ கதைகளை எல்லாம் சொல்லித் தூங்க வைக்கும். நாங்களும் அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வோம். அப்போ, நாங்கள் எங்க இலையை அசைச்சு, அசைச்சுக் காத்து வர வெச்சுத் தாலாட்டி, அந்தக் குஞ்சுகளை எல்லாம் தூங்க வைப்போம்.

 காலையிலே சூரிய ஒளிபட்டவுடன் கீச் கீச்சுன்னு கத்திக் கொண்டு இரையைத் தேடி புறப்படும். எங்களுக்கெல்லாம் அற்புத ரீங்காரமான அந்த ஒலி, சுப்ரபாதமாக இருக்கும்.' "காட்டிலே நிறைய நடமாடும் வனவிலங்குகள் எல்லாம் இருந்ததுன்னு சொன்னீங்களே, அவுங்களுக்கு எந்த ஒத்தாசையும் செய்ய மாட்டீங்களா?' என்று கேட்டது வேப்பமரம். "நாங்கள் என்ன மனுசங்களா? அபயம் என்று வந்தவர்களுக்கு அடைக்கலம் தராமல் இருப்பதற்கு?' என்று கோபமாய் கேட்டது அரச மரம்.

 "அந்த விலங்குகள் எல்லாம் என்ன பண்ணும்' என்றது வேப்பமரம்.

 "அந்த விலங்குகள் எல்லாம் எங்களைச் சுற்றிச் சுற்றி விளையாடும். இரையைத் தேடி அங்குமிங்கும் அலைஞ்சிட்டு, எங்கள் நிழல்லே வந்து இளைப்பாறும். அப்போது நாங்கள் எங்கள் இலையை அசைச்சுக் காற்றை வரவைச்சு அவைகளை ஓய்வெடுக்க வைப்போம். அது மட்டுமா, எங்கள் இலைகளையும் காய்களையும் பழங்களையும் அவைகளுக்கு உணவாகக் கொடுப்போம்' என்றது அரச மரம்.

 "இப்போ உங்களைத் தவிர, இங்கே யாருமே இல்லையே! அந்த மரங்களும் பறவையினங்களும் விலங்குகளும் காணவில்லையே? எங்கே போனாங்க?' என்றது வேப்பமரம்.

 "அதை ஏன் கேக்கிறே?' என்று மூக்கைச் சிந்தி அழுதவாறே, அரசமரம் மேலே சொல்ல ஆரம்பித்தது.

 "ஒருநாள் இந்தக் காட்டை சுற்றிப் பார்க்க மனுசன்கள் எல்லாம் வந்தாங்க... அவங்களுக்குள்ளே ஏதோ பேசிக்கிட்டாங்க. நம்மைப் பார்த்து ஏதோ சந்தோசமா பேசிக்கிறாங்க என்றுதான் நாங்கள் இருந்தோம். ஆனால், கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பத்து இருபது பேர் கையிலே வாள், கத்தி, கோடாரி, கடப்பாரை போன்ற பயங்கரமான ஆயுதங்களை எல்லாம் கொண்டு வந்தாங்க... நாங்கள் பயந்து போனோம். ஐயோ, நான் எப்படிச் சொல்வேன்? ஈவிரக்கம் இல்லாமல் அந்த மனுசன்கள் இங்கிருந்த மரங்களையெல்லாம் வெட்ட ஆரம்பிச்சாங்க. யாரும் ஒண்ணும் பேசிக்கல. பாவம், அந்தப் பறவையினங்கள்தான் கீச் கீச்சுன்னு கத்தி, அங்குமிங்கும் பறந்தாங்க. விலங்கினங்கள் பயந்து அலறியபடி, போக இடம் தெரியாமல் ஓடின. அவங்களால அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

 மற்ற தரைவாழ் உயிரினங்கள் அவைகளின் காலடியில் சிக்கி மாண்டன. எங்கும் மரண ஓலம்! காலையில் பசுமையா இருந்த மரங்கள் எல்லாம் மாலையிலே வாடி வதங்கிப் போய், கட்டாந்தரையிலே படுக்க வச்சிருந்தாங்க.

 கொஞ்ச நேரத்திலே அவைகளை எல்லாம் துண்டு துண்டா வெட்டி, பெரிய பெரிய வாகனங்களில் ஏத்தி, எங்கோ அனுப்பி வச்சுட்டாங்க. பறவைகள் கத்தி கத்திப் பார்த்துட்டு எங்கேயோ பறந்து போச்சுக.

 நான் கிழமா இருந்ததாலே, என்னை மட்டும் விட்டுட்டாங்க' என்றது அரசமரம்.

 "அந்த மனிதர்கள் மரங்களை வெட்டும் போது, காட்டுராஜா சிங்கம், புலி, சிறுத்தை, படையையே நடுங்க வைக்கும் பாம்பு இனங்கள் ஆகியவை சும்மாவா இருந்திச்சி' என்று கேட்டது வேப்பமரம்.

 "அவுங்க என்ன செய்வாங்க பாவம். உர்... உர்.. புஸ், புஸ்ன்னு கத்திக்கிட்டு, அந்த மனுசங்க பின்னாலே ஓடினாங்க. ஆனால், அந்த மனுஷங்க கையிலேதான் ஏதோ ஏதோ ஆயுதங்கள் இருந்திச்சே..! அதை வச்சு எல்லாரையும் சுட்டும், வெட்டியும் சாகடிச்சிப்புட்டாங்க. அவங்க தீடீரென நடத்திய தாக்குதலிலே என்ன பண்றதுன்னு தெரியாம விலங்கினங்கள் எல்லாம் மாண்டு போயின.

 அப்போது, இங்கிருந்த பூமித்தாயின் முகம் சிவப்பாயிடுச்சி. மற்ற விலங்குகளும், பறவைகளும் பயந்து கத்தியபடி கலைந்து ஓடின. அப்போ போனதுக, இன்னும் திரும்பி வரவேயில்லை. நான் இனி அவர்களை என்று காண்பேனோ? இந்தத் தாத்தவைக் காண அவர்களுக்கு ஆசை இல்லையா..?

 நான் சொன்ன இந்த அடர்ந்த காட்டில் நான் மட்டும் இப்போ தனியா இருக்கேன். நீ இப்போதுதான் வளர்ந்து வர. இருந்த காடுகளையும் வனச் செல்வங்களையும் வளர்ச்சி என்ற பெயரில் அழிச்சிட்டு இப்போ புவி வெப்பம்... புவி வெப்பம்... என்று இந்த மனுசன்கள் கூக்குரலிடுகிறார்கள். தன் வினை தன்னைச் சுடும் என்பார்களே அது இதுதான் போலிருக்கிறது.

 இப்போ பருவமழையும் முறை தவறிப் பெய்யுது. பூமித்தாயும் பாலைவனமாயிட்டாங்க. காடுகளை அழித்தால் சுற்றுச்சூழல், பறவையினங்கள், வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்ற கவலை மனிதனுக்கு இல்லை. அதனாலே நமக்கு ஆதரவாக, இப்போ இங்கு யாருமில்லை..." என்றது அரசமரம்.

 இதைக் கேட்ட வேப்பமரத்திற்கு அழுகை அழுகையா வந்தது.

 அப்போது, முன்னர் இந்த இரண்டு மரங்களையும் இடத்தையும் பார்த்துச் சென்ற இரண்டு பேர் அங்கு வந்தார்கள்.

 "பல டன் தேறும்' என்று பேசியபடி அந்த அரசமரத்தையும்,வளர்ந்து வரும் வேப்பமரத்தையும் வெட்ட ஆரம்பித்தார்கள்.

 அவைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க அங்கு எந்தப் பறவையினங்களும் இல்லை.

 உர் உர் என்று துரத்தியடிக்க விலங்கினங்களும் இல்லை. எல்லாம் வெட்டி முடித்து வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கிய பின் அவைகள் அனாதைப் பிணங்களாக வண்டியில் ஏற்றப்பட்டன.

 அந்த அடந்த காடு, இன்று பொட்டல்காடாகி விட்டது. அந்த இடத்தில். பூமித்தாயின் முகத்தில்., இரண்டு புதிய பருக்களாக, புதிய காணிக்கற்கள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com