

திமிங்கலத்தின் வயிற்றில்
யோப்பா' எனப்படும் துறைமுக நகரத்தில் இருந்து ஒரு கப்பல் புறப்பட்டது. "தர்ஷீஸ்' என்ற நகரை நோக்கி அது கடலில் சென்று கொண்டிருந்தது.
நடுக்கடலில் கப்பல் போய்க் கொண்டிருந்தபோது, திடீரென்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சுழல்காற்று புறப்பட்டது.
கலக்கம் அடைந்த மாலுமி, கரையை நோக்கி கப்பலைச் செலுத்துவதற்காக, வேகமாக துடுப்புகளை இயக்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால் புயலின் மையத்தில் சிக்கிக் கொண்ட கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் தத்தளித்தது. அலைக்கழிக்கப்பட்டது. உடைந்து நொறுங்கி நீருக்குள் சிதறி மூழ்கிவிடும் அபாயம் நெருங்கிக் கொண்டிருந்தது.
பயங்கரமான ஊளைச் சத்தத்துடன், நிமிடத்துக்கு நிமிடம் சுழல் காற்றின் வேகம் அதிகமாகி, பெருங்காற்றாய் சூறாவளியாய் மாறியபோது, சமுத்திரம் வானத்துக்கும் பூமிக்குமாக கொந்தளித்தது.
"இனி உயிரோடு கரைசேர வழி இல்லை' என்பது கப்பலில் இருந்தவர்களுக்கு உறுதியாய்த் தெரிந்த போது, ஒவ்வொருவரும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர்.
ஆர்ப்பரித்த ஆழிப் பேரலைகளால் கடல் நீர் கப்பலுக்குள் பாய்ந்தோடியது. அதிகப் பளுவினால் கப்பல் மூழ்கி விடுமோ என்ற பயத்தில், தேவையற்ற சரக்குகளைத் தூக்கி கடலுக்குள் வீச ஆரம்பித்தனர்.
கப்பலில் இருந்த அனைவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், ஒரே ஒரு மனிதன் மட்டும், தாடியும் மீசையுமாக கப்பலின் கீழ்த் தளத்தில் நிம்மதியாக எந்தக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த கப்பலின் மாலுமியும் சக பயணிகளும் அவரை எழுப்பினர்.
""யாருய்யா நீர்? உம் பேர் என்ன?' என்று கேட்டனர்.
அந்த மனிதர் தூக்கக் கலக்கத்துடன் "யோனா' என்றவர், தொடர்ந்து, ""என்ன விஷயம்... பயணச் சீட்டு எல்லாம் வாங்கிட்டேனே...'' என்றார்.
""எந்த ஊருக்கு?''
""தர்ஷீஸ்'' என்றார் யோனா.
""கப்பல் தர்ஷீஸ் போகாது. தண்ணிக்குள்ளே போகப் போகுது. நீங்க பாட்டுக்கு தூங்கிக்கிட்டிருந்தா எப்படி? நாங்கள்ளாம் எங்க கடவுள்கள்கிட்டே பிரார்த்தனை பண்ணிட்டோம். புயல் வேகம் அதிகமாகிட்டுதான் போகுதே தவிர, குறையற மாதிரித் தெரியல. நீங்களும் உங்க பங்குக்கு உங்க தேவனை வேண்டிக்கோங்க. ஒருவேளை உங்க தேவன் நம்ம மேல இரக்கப்பட்டு நம்மை அழிவிலேர்ந்து காப்பாத்தினாலும் காப்பத்தலாம்...'' என்றார் ஒருவர்.
அதற்கு யோனா பதில் சொல்லுவதற்குள் குறுக்கிட்ட சிலர், ""வேண்டாதவன் எவனோ கப்பலுக்குள்ளே வந்திட்டான். நமக்கு ஏற்பட்டிருக்கிற இந்த ஆபத்துக்கு அவன்தான் காரணம். அவன் யாருன்னு சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கண்டுபிடிக்கணும்...'' என்றனர்.
உடனே மாலுமி கப்பலின் பணியாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரின் பெயர்களையும் சீட்டுகளில் எழுதி, குலுக்கிப் போட்டு, ஒன்றை எடுத்து பிரித்துப் பார்த்தனர்.
அந்தச் சீட்டில் இருந்த பெயர், "யோனா'.
உடனே மாலுமி யோனாவிடம், ""நீங்கள் எந்த தேசத்தில் இருந்து வருகிறீர்கள்? உங்கள் தொழில் என்ன?''
போன்ற விவரங்களைக் கேட்டார்.
உடனே யோனா தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
""நான் இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசி. கடவுள் என் முன்னால் தரிசனமாகி நினிவே மாநகருக்கு என்னைப் போகச் சொன்னார். "நினிவே நகரிலுள்ள மக்கள் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நீ சென்று உபதேசம் செய்து, அவர்களை நல்வழிப்படுத்து. இல்லையென்றால் அவர்கள் அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கை செய்துவிட்டு வா' என்று உத்தரவிட்டார். அந்த பயங்கரமான ஊருக்குப் போக எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே என்னை போகச் சொன்ன தேவன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது. எனவே நினிவே செல்லாமல், இந்தக் கப்பலில் ஏறிவிட்டேன்'' என்றார்.
உடனே மாலுமி, ""தீர்க்கத்தரிசியான நீங்கள், இந்தப் புயல் அடங்கி, கடல் அமைதி அடைய நாங்கள் என்ன செய்யவேண்டும்... சொல்லுங்கள்'' என்று கேட்டார்.
""என்னைத் தூக்கி கொந்தளிக்கும் கடலில் நீங்கள் வீசவேண்டும்...'' என்றார் யோனா.
எல்லோரும் அதிர்ச்சியுடன் யோனாவையே பார்த்தனர். அப்போது யோனா தொடர்ந்தார்.
""ஆம். கடவுளின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியவில்லை. ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் என் தேவனின் பார்வையிலிருந்து நான் தப்பித்து எங்கேயும் ஓடமுடியாது என்பதை இப்போது நான் உணர்கிறேன். இந்தப் புயலை அனுப்பியது அவர்தான். என்னைத் தண்டிக்கவே இதை அனுப்பியிருக்கிறார். என் ஒருவனால் நீங்கள் அனைவரும் அழியக் கூடாது. எனவே, நான் சொன்னதைச் செய்யுங்கள். ஆபத்து நீங்கும்...'' என்றார்.
உடனே அனைவரும் வேறு வழியின்றி யோனாவை கப்பலின் மேல் தளத்துக்குத் தூக்கிச் சென்றனர். அப்போது யோனாவின் மனம், ""என் தேவனே என்னை மன்னியும்'' என்று ஜெபித்த வண்ணமிருந்தது.
யோனாவை கடலுக்குள் வீசிய உடனேயே புயல் காற்றின் சீற்றம் தணிந்தது. ஆர்ப்பரித்த அலைகள் அடங்கின. சமுத்திரம் அமைதியடைந்தது. கப்பல் தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தது. கப்பலில் இருந்தவர்கள் யோனாவின் தேவனுக்கு அஞ்சி, பிரார்த்தனைகளை ஏறெடுத்தார்கள்.
கடலுக்குள் வீசப்பட்ட யோனா கடலின் ஆழத்துக்குச் சென்று கொண்டிருந்தார். சுறா மீன்கள் அவரைக் கொல்லப் பார்த்தன. கடல் பாசிகள் அவர் கழுத்தைச் சுற்றிக் கொண்டன.
கடவுளுக்கு கீழ்ப்படிந்து நினிவே பட்டணத்துக்குச் சென்றிருந்தால் தனக்கு இந்தக் கதி நேர்ந்திருக்குமா என்று எண்ணி யோனா கலங்கினார்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு திமிங்கலம் யோனாவை விழுங்கிவிட்டது. மூலையில் முழங்காலில் நின்ற யோனா தன் தேவனைத் தியானித்து பிரார்த்தனை பண்ணிய வண்ணமிருந்தார். தான் செய்த தவறை எண்ணி, வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். "என்னை மன்னித்து, என்னை இரட்சிக்க வேண்டியது உமது கரத்தில் இருக்கிறது' என்று உருக்கமாகச் ஜெபித்தார்.
யோனாவின் பிரார்த்தனையைக் கேட்ட கர்த்தர் திமிங்கலத்துக்கு உத்தரவிட்டார். திமிங்கலம் யோனாவை கடற்கரையில் பத்திரமாகக் கக்கிவிட்டுச் சென்றது. மூன்று பகல்களையும் மூன்று இரவுகளையும் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் கழித்த யோனா முதல் முறையாக சூரிய வெளிச்சத்தைக் கண்டார்.
உயிர் தப்பி எழுந்த யோனாவிடம், இறைவன், ""நினிவேக்குப் போ. நான் சொன்னதை நிறைவேற்று...'' என்று உத்தரவிட்டார்.
இப்போது யோனா கீழ்ப்படிந்தார். நினிவே சென்று பாவங்களில் உழன்ற மக்களை எச்சரித்து, தேவனைப் பற்றிப் பிரசங்கித்து, அவர்களை நல்வழிப்படுத்தினார்.
எவ்வளவு மோசமான இக்கட்டுகளில் சிக்கினாலும் கடவுளை மறவாதவன், செய்த தவறுகளுக்கு வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்பவன் நிச்சயமாக காப்பாற்றப்படுவான் என்பதை யோனாவின் கதை உணர்த்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.