பைபிள் கதைகள் 7: எரிகோவின் மதில்கள்!

எகிப்து நாட்டில் இஸ்ரவேலர் எனப்படும் இனத்தவர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். கொடுமைகளுக்கும் இம்சைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். அவர்களை எகிப்து மன்னனின் பிடியிலிருந்து விடுவித்து மீட்ட மகான், மோசே.  மோசே,
பைபிள் கதைகள் 7: எரிகோவின் மதில்கள்!
Updated on
4 min read

எகிப்து நாட்டில் இஸ்ரவேலர் எனப்படும் இனத்தவர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். கொடுமைகளுக்கும் இம்சைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர். அவர்களை எகிப்து மன்னனின் பிடியிலிருந்து விடுவித்து மீட்ட மகான், மோசே.

 மோசே, இஸ்ரவேலரின் ஒப்பற்ற தலைவர். ஆண்டவராகிய யகோவாவை விசுவசித்த ஞானி. அவரை நேருக்கு நேர் தரிசித்து, அவரிடமிருந்து பத்து அறநெறிக் கட்டளைகளைப் பெற்ற மாபெரும் தீர்க்கதரிசி.

 மோசே தலைமையில் எகிப்திலிருந்து புலம்பெயர்ந்த இஸ்ரவேலர், தங்களுக்கென்று ஒரு சொந்த நாடு இல்லாமல், 40 ஆண்டுகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் சுற்றித் திரிந்தனர்.

 இறைவனின் பத்துக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களும் எகிப்திலிருந்து புறப்பட்ட மூத்த தலைமுறையினரும் காலப்போக்கில் மடிந்து போனார்கள்.

 மோசே, ஒருநாள், ஆண்டவரின் அழைப்பின் பேரில் ஒரு மலை உச்சிக்குப் போனார். அவருக்கு ஆண்டவர், அடிவானம்வரை தெரிந்த செழிப்பான தேசங்களைக் காண்பித்துவிட்டு அவருடன் பேசினார்.

 ""உன் முன்னே தெரியும் அந்த தேசங்களைத்தான் உன் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்தேன். அந்தத் தேசங்களை நாடோடிகளாகச் சுற்றித் திரியும் உன் இளைய தலைமுறையினருக்கு நான் சொந்தமாக்குவேன். நீ அங்கே செல்ல முடியாது என்பதால், கண்ணால் அந்தத் தேசங்களை நீ பார்க்கும்படி செய்துவிட்டேன்'' என்றார் ஆண்டவர்.

 ஆண்டவர் சொன்னபடியே மோசேயால் அந்தத் தேசங்களுக்குச் செல்ல முடியவில்லை. தமது 120-ஆவது வயதில் அவர் காலமானார்.

 சாகும்தறுவாயில் மோசே, தம் உதவியாளராகப் பணியாற்றிய யோசுவா என்பவரை ஆசீர்வதித்து, தன் வாரிசாக இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம் காட்டினார். அப்போது யோசுவாவுக்கு வயது 85.

 யோசுவா சிறந்த போர்வீரர். மோசேயின் உளவுப்படையில் இருந்த 12 அதிகாரிகளில் அவரும் ஒருவர். மோசே மூலமாக ஆண்டவர் பிரகடனம் செய்த பத்துக் கட்டளைகளின்படி தம் போர் வீரர்களை நல்வழிப்படுத்தியவர். ஒழுக்கத்தை நிலைநாட்டியவர். ஆண்டவரை விசுவசித்து அவரிடம் எப்போதும் பிரார்த்தனை செய்யும் பக்திமான்.

 மோசேயின் மறைவுக்குப் பிறகு இஸ்ரவேல் மக்கள் யோசுவாவை தங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அவர் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தனர்.

 ஒருநாள் ஆண்டவரிடமிருந்து யோசுவாவுக்கு ஓர் உத்தரவு வந்தது.

 ""நீயும் உன் இஸ்ரவேல் மக்களும் யோர்தான் நதியைக் கடந்து, கானான் தேசம் சென்று அங்கு குடியேறிவிடுங்கள். என்னுடைய தாசன் மோசேவுக்கு நான் வாக்களித்தபடி, பாலும் தேனும் பாயும் செழிப்பான கானான் தேசம் இனி உனக்கும் உன் இஸ்ரவேல் மக்களுக்கும் சொந்தமான தேசமாக இருக்கும். நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் உன்னை எதிர்த்து எவனும் நிற்க மாட்டான். நீ துணிந்து உன் மக்களை அழைத்துச் செல். நான் உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன். கலங்காதே, திகையாதே. உறுதியான உள்ளத்தோடு போ'' என்பதுதான் ஆண்டவரின் அந்த உத்தரவு.

 பரபரப்படைந்தார் யோசுவா.

 கானான் தேசம் செல்ல ஆண்டவர் உத்தரவிட்டதில் யோசுவாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அங்கே செல்வது எளிதான காரியம் அல்ல என்பது அவருக்குத் தெரியும்.

 யோர்தான் நதி வெள்ளப் பெருக்குடன் கரைபுரண்டு ஓடும் அறுவடைக்காலம் அது. எனவே, மக்கள் அனைவரையும் மறுகரைக்குப் பத்திரமாக கூட்டிக் கொண்டு போக முடியாது.

 அதுமட்டுமல்ல, நதியைக் கடந்த பிறகு மற்றொரு ஆபத்தும் உண்டு.

 ஆறு மைல் தொலைவில் இருக்கும் எரிகோ என்ற ஊரில் இஸ்ரவேலரை வெறுக்கும் பலதரப்பட்ட ஜாதியினர் வசிக்கின்றனர். யகோவாவை விசுவாசிக்காத, எந்த அறநெறிக்கும் கட்டுப்படாத எரிகோவின் மக்கள் எந்தக் கொலைபாதகத்துக்கும் அஞ்சாதவர்கள். அந்த ஊர் அரசனும் அப்படியே!

 எரிகோவைக் கைப்பற்றி, அந்த ஊர் மக்களைப் பூண்டோடு அழித்தால் மட்டுமே இஸ்ரவேலர் கானான் தேசத்தில் நிம்மதியாக வாழமுடியும். இதெல்லாம் சாத்தியமா?

 தீவிரமாக யோசித்த யோசுவா, கடவுள் மேல் பாரத்தைப் போட்டுக் காரியத்தில் இறங்கினார்.

 முகாம்களின் அதிகாரிகளை அவசரமாக வரவழைத்து அவசர உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

 அந்த அதிகாரிகள், கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்களிடையே சென்று, மூன்றே நாட்களில் புலம்பெயர்வதற்குத் தேவையான உணவு வகைகளைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டனர்.

 கானான் தேசம் பற்றியும் முக்கியமாக எரிகோ நகரம் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பிய யோசுவா, உளவுப் படையில் இருந்து இரண்டு திறமையான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து கானான் தேசத்துக்கு அனுப்பி வைத்தார்.

 யோசுவாவின் ரகசிய உளவாளிகள் இருவரும் யோர்தானை நீந்திக் கடந்து எரிகோவை அடைந்தனர்.

 ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அந்த நகரைச் சுற்றி எரிகோ அரசன் கோட்டை அமைத்து மதில் எழுப்பியிருந்தான். அந்நியர்கள் உள்ளே நுழையாதபடி கோட்டைக் கதவு எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருந்தது.

 உளவாளிகள் சாமர்த்தியமாகக் கோட்டைக்குள் புகுந்து ஊரைச் சுற்றி வந்து உளவு பார்க்க ஆரம்பித்தனர்.

 இஸ்ரவேல் மக்களின் உளவாளிகள் உள்ளே புகுந்துவிட்ட செய்தி, அரசனின் காதுக்கு எட்டியது. உடனே, அரசன் உளவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கப் போர் வீரர்களை ஏவினான்.

 மன்னனின் போர்வீரர்கள் தங்களைத் தேடுவதைத் தெரிந்து கொண்ட உளவாளிகள் கோட்டையின் மதில் மேல் ஏறினர்.

 வீரர்கள் துரத்திக் கொண்டு வருவதை மேலே இருந்து பார்த்ததும் அங்கே கொத்தளத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டனர்.

 அந்த வீடு, ராகாப் என்ற அழகிக்குச் சொந்தமானது.

 ராகாப் வீட்டுக்குள் உளவாளிகள் இருப்பதைத் தெரிந்து கொண்ட எரிகோ வீரர்கள் வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைப் படபடவென்று தட்டினர்.

 'ராகாப் நிச்சயமாகத் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவாள், எரிகோ மன்னன் தங்களைக் கண்டதுண்டமாக வெட்டி எறியப் போகிறான்... இனி யோசுவாவிடம் திரும்பிப் போக முடியாது' என்றெல்லாம் உளவாளிகள் எண்ணிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் வந்த அழகி ராகாப் அவர்கள் ஒளிந்துகொள்வதற்கு ஒரு மறைவிடத்தைக் காண்பித்தாள்.

 வீரர்கள் பலமாகக் கதவைத் தட்டவே ஓடிப்போய் திறந்தாள். ஓங்கிய வாளுடன் வெளியே நின்ற வீரர்களிடம், ""இரண்டு பேர் இங்கே வந்தது உண்மைதான். அவர்கள் இஸ்ரவேலரின் உளவாளிகள் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. சற்று முன்தான் அவர்கள் இங்கிருந்து கிளம்பினார்கள். நீங்கள் சீக்கிரமாகப் போனால் கோட்டையைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் உளவாளிகளை மடக்கிப் பிடித்துவிடலாம்'' என்று சொன்னாள்.

 மறுகணம் அந்த வீரர்கள் அங்கே இல்லை. உளவாளிகளைப் பிடிக்கும் வெறியுடன் கோட்டை வாசலைத் தாண்டிச் செல்லும் பாதையில் விரைந்து கொண்டிருந்தனர்.

 ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த உளவாளிகள், மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு, ராகாப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

 அதற்கு ராகாப், ""எனக்கு இந்த ஊரிலுள்ள அக்கிரமக்காரர்களுடன் வாழப் பிடிக்கவில்லை. நான் உங்கள் இஸ்ரவேல் மக்கள் பற்றியும் நீங்கள் வணங்கும் யகோவா பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்தான் மெய்யான கடவுள். நீங்கள் இந்த எரிகோவின் மீது படையெடுத்து வந்து இந்த ஊர் மக்களை அழிக்கும்போது என்னையும் என் குடும்பத்தாரையும் காப்பாற்ற வேண்டும்'' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

 ராகாப்பின் உதவியோடு எரிகோவில் இருந்து தப்பித்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து நிகழ்ந்தவற்றை விவரித்தனர்.

 மறுநாள், விடியும் வேளை...

 ஆண்டவரின் பத்துக் கட்டளைகள் அடங்கிய உடன்படிக்கைப் பேழையைக் குருமார்கள் சுமந்து செல்ல, அவர்களுக்கு முன்னும் பின்னும் போர்வீரர்கள் செல்ல, யோசுவாவின் வழிகாட்டுதலுடன் இஸ்ரவேலரின் கானான் தேசப் பயணம் ஆரம்பமாயிற்று.

 பகல் முழுக்கப் பயணம் செய்து மாலையில் யோர்தான் நதிக்கரையை அடைந்தனர்.

 இரவைக் கழிக்க அங்கே முகாமிட்டுத் தங்கினர்.

 வெள்ளம் கரைபுரண்டு பேரிரைச்சலுடன் பாய்ந்து கொண்டிருந்த யோர்தான் நதியைக் கடந்து செல்ல என்ன வழி என்று தெரியாமல், இரவெல்லாம் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார் யோசுவா.

 மறுநாள் காலை, ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த குருமார்களின் கால்கள் நதி நீரில் பட்டதும் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

 தொலைவில் மண்சரிவு போல ஏற்பட்டு நதிநீர் வேறு திசையில் பிரிந்து சென்றது.

 யோசுவாவும் மக்களும் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நதி நீர் முற்றிலுமாக வற்றி, வறண்டு, கூழாங்கற்களும் மணலுமாக யோர்தான் காட்சியளித்தது.

 இஸ்ரவேல் மக்கள் அனைவரும் பத்திரமாக மறுகரையில் ஏறியதும் மறுபடியும் வெள்ளப் பெருக்குடன் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது யோர்தான்.

 யோசுவாவும் மக்களும் அந்த இடத்தில் ஆண்டவருக்கு நன்றி செலுத்திவிட்டு அங்கிருந்து எரிகோவுக்குப் புறப்பட்டனர்.

 இறைவனின் கட்டளைப்படி போர்வீரரும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் குருமார்களும் ஆட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட எக்காள வாத்தியங்களை ஊதிக் கொண்டு எரிகோவின் கோட்டை மதிலை ஒருமுறை சுற்றி வந்தனர்.

 இவ்வாறு நாள் ஒன்றுக்கு ஒருமுறை வீதம் ஆறு நாட்கள் மெüனமாக எக்காள வாத்திய ஒலியோடு பவனி வந்தனர்.

 ஏழாம் நாள், ஏழு குருமார்கள், ஏழு எக்காள வாத்தியங்களுடன் முன்னே செல்ல, விடியும் வேளையில் மீண்டும் பவனி புறப்பட்டது.

 ஏழுமுறை அவர்கள் எரிகோ கோட்டையைச் சுற்றி வந்தபிறகு ஏழு குருமார்களும் கொம்பை ஊதி ஒலி எழுப்பினர்.

 அப்போது யோசுவா, அதுவரை மெüனமாக வந்த மக்களைப் பார்த்து, ""எரிகோ நம் வசமாயிற்று! என்று பலத்த சத்தத்துடன் உற்சாகக் குரல் எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்தை உலகம் முழுக்க பரப்புங்கள்'' என்று உத்தரவிட மக்களின் ஆரவாரப் பேரொலி விண்ணைப் பிளந்தது. அதே சமயம், நிலநடுக்கம் போல அதிர்வுகள் ஏற்பட, எரிகோ கோட்டையின் மதில் இடிந்து விழுந்து தரைமட்டமாயிற்று.

 மறுகணம், இஸ்ரவேல் போர்வீரர்கள் திமுதிமுவென்று எரிகோவுக்குள் புகுந்து, அவ்வூர் அரசனையும் மக்களையும் வெட்டிச் சாய்த்து ஊரையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

 ராகாப்பின் குடும்பம் மட்டும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டது.

 ராகாப், இஸ்ரவேல் மக்களில் ஒருவனை மணந்தாள். அவளுடைய வம்சத்தில்தான் 1400 ஆண்டுகளுக்குப் பிறகு ஏசுபிரான் அவதரித்தார். அவர் ஞானஸ்நானம் பெற்றது யோசுவா யோர்தானைக் கடந்த இடத்தில்தான்.

 தெய்வநம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் அசைக்க முடியாத கோட்டை மதில்கூட தூள்தூளாகும் என்பதை எரிகோவின் வீழ்ச்சி உணர்த்துகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com