

ஆபிரகாம் என்று ஒரு முதியவர் இருந்தார். அவருடைய மனைவி சாராள். அவர்களுக்குக் குழந்தை கிடையாது.
ஆபிரகாம் ஆண்டவரை நம்பி, விசுவாசித்து நாள் தவறாமல் வணங்குபவர்.
ஆண்டவர் ஆபிரகாமுடன் ஒரு நண்பனிடம் பேசுவதைப் போல அவ்வப்போது பேசுவார்.
ஒருநாள் ஆண்டவர் ஆபிரகாமிடம், ""ஆபிரகாமே, நான் உனக்குக் கேடயமும் மாபெரும் சக்தியுமாக இருப்பதால் நீ எதற்கும் பயப்படாதே!'' என்றார்.
அப்போது ஆபிரகாம், ""தேவரீர், நீர் எனக்கு எல்லாவற்றையுமே கொடுத்திருக்கிறீர். ஆனால் எனக்கும் சாராளுக்கும் இதுவரை ஒரு குழந்தை இல்லாமல் செய்துவிட்டீரே?'' என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
உடனே, ஆண்டவர் ஆபிரகாமைக் கூடாரத்துக்கு வெளியே வரும்படிக் கூப்பிட்டார்.
ஆபிரகாம் உடனே அந்த இரவு வேளையில், வெட்டவெளிக்கு வந்தார்.
வானத்தை அண்ணாந்து பார்க்கச் சொன்னார் ஆண்டவர்.
ஆபிரகாம் பார்த்தார். வானத்தில் கோடி கோடியாக நட்சத்திரங்கள்!
""வானத்தில் மொத்தம் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றன?'' என்று ஆண்டவர் கேட்க,
""அதை என்னால் எண்ணிச் சொல்ல முடியாது...'' என்றார் ஆபிரகாம்.
உடனே ஆண்டவர், ""உன் சந்ததியினரையும் எவனாலும் எண்ணிச் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு உன் சந்ததியினரை பூமியிலே பெருகப் பண்ணுவேன். உன் மனைவி சாராளை நான் ஆசீர்வதிப்பேன். அவள் உனக்கு ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவாள். உலகின் சகல நாட்டவர்க்கும் சாராள் தாய் ஆவாள். எல்லா அரசர்களும் அவள் வம்சத்தில் தோன்றுவார்கள்!'' என்றார்.
ஆபிரகாமின் மனதினுள் சிரிப்பு.
"எனக்கு வயது 100. சாராளுக்கு வயது 90. இனி எப்படி எங்களுக்குக் குழந்தை பிறக்கும்?' என்று எண்ணினார் அவர்.
அவர் உள்ளத்தில் உள்ளதைத் தெரிந்து கொண்ட ஆண்டவர், ""சர்வ வல்லமை பொருந்திய இறைவனால் கூடாத காரியம் எதுவும் கிடையாது. மறுபடியும் சொல்லுகிறேன்... ஒரு வருடத்துக்குள் சாராள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பாள். அந்தக் குழந்தைக்கு நீ ஈசாக்கு என்று பெயரிட வேண்டும். நான் ஈசாக்கையும் ஆசீர்வதிப்பேன். அவன் 12 பிரபுக்களைப் பெற்றெடுப்பான். அவன் சந்ததியினர் பூமியெங்கும் பெருகுவார்கள்...'' என்றார்.
ஆண்டவர் சொன்னதை ஆபிரகாம் சாராளிடம் சொன்னபோது, முதுமையால் தோல் வற்றிச் சுருங்கிப் போயிருந்த அவள் முகத்தில் அவநம்பிக்கையுடன் கூடிய நாணம்... 'இந்தத் தள்ளாத வயதில் இதெல்லாம் நடக்குமா?' என்று அவளும் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
ஆனால் ஆண்டவர் வாக்களித்தபடியே சாராள் கர்ப்பவதியானாள். ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
ஆண்டவரின் கட்டளைப்படி அந்தக் குழந்தைக்கு 'ஈசாக்கு' என்று பெயர் சூட்டி, செல்லமாக வளர்த்து வந்தனர்.
தமக்கு ஓர் அழகான ஆண் மகனைக் கொடுத்ததற்காக ஆபிரகாம் பக்கத்திலிருந்து தோப்பு ஒன்றில் ஆண்டவரை நாள் தவறாமல் நன்றியுடன் தொழுது வந்தார். வளர்ந்து கொண்டிருந்த ஈசாக்குக்கு வில்வித்தை போன்ற வீர விளையாட்டுகளையும் அதே தோப்பில் கற்றுக் கொடுத்து வந்தார். சாராளும் ஆபிரகாமும் அன்பு மகனின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்து வந்தனர்.
ஒருநாள், ஆண்டவர் ஆபிரகாமிடம் பேசினார்-
""ஆபிரகாமே, நீ உன்னுடைய அன்பு மகனும் ஒரே வாரிசுமான ஈசாக்கை, மோரியா தேசத்துக்கு அழைத்துச் செல். அங்கே நான் உனக்குக் காண்பிக்கும் மலை உச்சிக்கு அவனை அழைத்துச் சென்று அவனை வெட்டி எனக்குத் தகன பலி கொடு!'' என்றார்.
ஆபிரகாமுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி!
"பெற்று வளர்த்து, என் கையாலேயே உமக்குப் பலியிடவா ஒரு மகனை எனக்குப் பரிசாகக் கொடுத்தீர்? ஆண்டவரே, நான் என்ன பாவம் செய்தேன்? இந்தப் பிஞ்சுப் பாலகன் செய்த தவறுதான் என்ன? இவனை ஆசீர்வதிப்பேன், இவன் 12 பிரபுக்களைப் பெறுவான், இவன் சந்ததி உலகின் மூலைமுடுக்கெல்லாம் பெருகும் என்றெல்லாம் வாக்களித்துவிட்டு, வெட்டித் தகனம் செய்து பலியிடச் சொல்கிறீரே! உமது நோக்கம்தான் என்ன?' என்றெல்லாம் ஆபிரகாமின் உள்ளம் கதறி அழுதது.
இருந்தாலும், ஆண்டவருக்குக் கீழ்ப்படிவது ஆபிரகாமின் இயற்கையான குணமாக இருந்ததால், தனது வருத்தத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ஆண்டவர் கேட்டுக் கொண்டபடி தனது மகனைப் பலியிடத் தீர்மானித்தார்.
மறுநாள்... அதிகாலையிலேயே எழுந்தார். தகன பலிக்குத் தேவையான கத்தி, கயிறு மற்றும் நெருப்புக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொண்டார். மரத்தைப் பிளந்து விறகுக் கட்டைகளாக்கிச் சேர்த்துக் கட்டினார். ஒரு கோவேறு கழுதையின் முதுகில் சேணம் கட்டி சுமைகளை ஏற்றிக் கொண்டு, ஈசாக்கையும் இரு வேலையாட்களையும் அழைத்துக் கொண்டு, கர்த்தர் சொன்ன தேசத்துக்குப் பயணமானார்.
பிரயாணம் மூன்று நாட்கள் நீடித்தது. வழியெல்லாம் ஆண்டவருடன் பேசிக் கொண்டே போனார் ஆபிரகாம்-
""ஆண்டவரே, ஈசாக்கு நீர் எனக்குத் தந்த பரிசு. இந்தப் பரிசை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்தப் பரிசை எனக்குத் தந்தவராகிய உம்மை இதைவிட அதிகமாக நேசிக்கிறேன். விலைமதிப்பில்லாத உயர்ந்த ஒன்றை உமக்குத் தருபவனுக்கு நீரும் விலைமதிக்க முடியாத வரத்தைத் தருவீர் என்பது எனக்குத் தெரியும். இதுவரை என்னை வழிநடத்தி வந்திருக்கிற நீர் இனிமேலும் என்ன நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றால் நான் உமக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஈசாக்கு மட்டுமல்ல, இந்த உலகிலுள்ள எல்லாமே உமக்குச் சொந்தமானதுதான்... உமக்குச் சொந்தமானதை நீர் கேட்கும்போது நான் எப்படி மறுக்க முடியும்?''
ஆபிரகாமின் கன்னங்களில் கண்ணீர்! அப்பாவின் கண்ணீருக்குக் காரணம் கேட்டான் மகன் ஈசாக்கு.
அதற்கு ஆபிரகாம், ''அதோ தெரிகிறதே அந்த மலைக்குத்தான் போகிறோம்...'' என்று பேச்சை மாற்றினார்.
மலையடிவாரத்தை அடைந்தவுடன், ஆபிரகாம் வேலையாட்களிடம், ""நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள்... நானும் ஈசாக்கும் மலையுச்சிக்குப் போய் ஆண்டவரைத் தொழுதுவிட்டு வருகிறோம்'' என்றார்.
மலைச்சரிவில் ஈசாக்கை அழைத்துக் கொண்டு ஏறினார் ஆபிரகாம்.
""அப்பா, தகன பலியிட கத்தி, கயிறு, விறகு, நெருப்பு எல்லாமே நம்மிடம் இருக்கின்றன... ஆனால் பலிக்கான ஆட்டுக்குட்டி எதுவும் இல்லையே!'' என்று ஈசாக்கு கள்ளம்கபடமில்லாமல் கேட்டபோது, ஆபிரகாமுக்கு நெஞ்சைப் பிழிவதைப் போல வேதனை!
""ஆண்டவர் அதையெல்லாம் பார்த்துக் கொள்வார் மகனே...'' என்றார் ஆபிரகாம்.
இருவரும் மலைச் சிகரத்தை அடைந்தனர்.
ஆபிரகாம் கற்களைப் பொறுக்கியெடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒரு பலிபீடத்தை அமைத்து, அதன்மீது விறகுக் கட்டைகளைப் பரப்பினார். அவருக்குக் கற்களையும் விறகுகளையும் எடுத்துக் கொடுத்த உதவிய சிறுவன் ஈசாக்கு ஆபிரகாம் செய்வதையெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று ஆபிரகாம், ஈசாக்கைத் தூக்கி பலிபிடத்தின் மேல் கிடத்தி, அவன் கைகால்களைக் கட்டியபோது, ""என்னை என்ன பண்ணப் போறீங்கப்பா?'' என்று ஒன்றும் புரியாமல் கேட்டான். ஆபிரகாம் கத்தியை உருவியபோதுகூட அவருடைய நோக்கத்தை அந்தச் சிறுவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் உடம்பில் கத்தியைப் பாய்ச்சுவற்காக ஓங்கியபோதுதான் ஈசாக்கின் கண்களில் பயம் தோன்றியது.
மறுகணம் என்ன நடக்குமோ என்று சிறுவன் அஞ்சியபோது -
""ஆபிரகாமே நிறுத்து!'' என்ற குரல் கேட்டு ஆபிரகாம் ஸ்தம்பித்துப் போனார்.
""உன் அன்பு மகனின் உடம்பில் கத்தியைப் பாய்ச்சாதே! அவனை ஒன்றும் செய்யாதே. நீ ஆண்டவருக்குப் பயப்படுகிறவன் என்பதையும் கீழ்ப்படிகிறவன் என்பதையும் நம்பி விசுவாசிக்கிறவன் என்பதையும் மீண்டும் நிரூபித்துவிட்டாய்...'' என்று அந்தக் குரல் சொல்ல -
ஆபிரகாமுக்கு ஆச்சரியம்! அதே சமயம் ஆட்டின் சத்தம் கேட்கவே, ஆபிரகாம் திரும்பிப் பார்த்தார். ஒரு ஆடு, கொம்புகள் புதருக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் கத்திக் கொண்டிருந்தது.
சந்தோஷமும் பரபரப்பும் அடைந்த ஆபிரகாம் மகனின் கட்டுகளை அவிழ்த்துக் கீழே இறக்கிவிட்டார். மகனுக்குப் பதிலாக அந்த ஆட்டை ஆண்டவருக்குப் பலியிட்டு மகனைக் காப்பாற்றிய அவருக்கு நன்றி செலுத்தினார்.
ஆண்டவர் தன்னைச் சோதித்துப் பார்க்கவே, இதனைச் செய்தார் என்பது பிறகுதான் ஆபிரகாமுக்குப் புரிந்தது.
மறுபடியும் இரண்டாவது முறையாக வானத்தில் தோன்றிய ஆண்டவருடைய தூதர்,
""ஆபிரகாமே, நீ ஒரே மகன் என்றும் பாராமல், ஆண்டவருக்குப் பயந்து அவனை ஒப்புக் கொடுக்க முன்வந்தாய்! உந் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் ஆண்டவர் பெருகச் செய்வார். உன் பகைவர்களின் பூமியெல்லாம் உன் சந்ததியினரின் வசமாகும். நீ ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்ததால் உன் சந்ததியினரை ஆண்டவர் ஆசிர்வதிப்பார்!'' என்றார்.
ஆபிரகாம் மகிழ்ச்சியோடு ஈசாக்கைக் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.