
குட்டிப் பையன் ஆன்ட்ரியினுடைய வீட்டில் இரண்டு தலைக்கவசங்கள் இருந்தன. அவை இரண்டும் ஓர் அலமாரியில் அருகருகே அழகாக வைக்கப்பட்டிருந்தன. ஒன்று இராணுவ வீரர் அணிந்திருந்த போர்க்காலக் கவசம். அவனுடைய தாத்தா ஓர் இராணுவ வீரர். அவர் போர்க்களத்திலிருந்து அந்தக் கவசத்தைக் கொண்டுவந்திருந்தார். போர்க்களத்தில் தாய்நாட்டுக்காக அவர் போரிட்ட காலத்தில் அந்தத் தலைக்கவசம்தான் தாத்தாவின் உயிரைக் காப்பாற்றியது. போர்க்களத்தில் இருந்தபோது அவர் வயது முதிர்ந்த தாத்தாவாக இருக்கவில்லை; நல்ல இளைஞனாக, போர்வீரனாக இருந்தார். ஒருமுறை, திடீரென்று இராணுவ மருந்துக் கிடங்கு வெடித்துச் சிதறியது. நாலா திசைகளிலும் வெடித்துச் சிதறிய சிதறல்களில் ஒன்று தாத்தாவின் தலையை நோக்கி வேகமாய் வந்து அவர் அணிந்திருந்த தலைக் கவசத்தின் மீது இடித்தது. அந்த வேகத்தில் தாத்தா கீழே விழுந்துவிட்டார். நல்லவேளை, தலைக்கவசம் மிகவும் உறுதியாக இருந்ததால் தாத்தா தப்பிப் பிழைத்துக் கொண்டார்.
அந்த இரண்டாவது தலைக் கவசம் இருக்கிறதே, அது, குட்டிப் பையன் ஆன்ட்ரியினுடைய அப்பா அணிந்திருந்த தலைக் கவசம். இந்தக் கவசம் சமாதான காலத்துக் கவசம். போர் முடிவடைந்து, இப்போது தாய்நாட்டின் முன்னேற்றத்துக்கான பல்துறை ஆக்கப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆன்ட்ரியின் அப்பா கட்டடப் பணியில் உயர்நிலைக் கண்காணிப்பாளராகப் பணி செய்தார். அப்பாவும் அவருடன் பணியாற்றிய குழுவினரும் பல்வேறு கட்டடங்களையும் அடுக்குமாடி வீடுகளையும் கட்டி முடித்திருந்தனர். இப்போது ஆன்ட்ரி வசிக்கிற ஒன்பது மாடிக் கட்டட வீடும் கூட அப்பாவும் அவர் குழுவினரும் கட்டி முடித்ததுதான். ஒருமுறை ஆன்ட்ரியும் அவனுடைய அப்பாவும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவனுடைய அப்பா, ""ஆன்ட்ரி, அதோ பார், அது நான் படித்த பள்ளிக்கூடம்; அதோ பார், அது நான் கட்டிமுடித்த சமுதாய நலக் கட்டடம்; அதோ தெரிகிறதே, குழந்தைகளுக்கான ஆடல், பாடல் கல்வி நிலையக் கட்டடம், அங்கேதானே நீ படித்தாய், அந்தக் கட்டடம் கூட நாங்கள் கட்டியதுதான்...'' என்று பெருமையுடன் சுட்டிக் காட்டிக் கொண்டே வந்தார். அப்பாவினுடைய தலைக் கவசம் ஒரு மறக்கமுடியாத நினைவுச் சின்னம் போன்றது. அதை ஒரு ""பொற்கவசம்'' என்றே சொல்லலாம். அதுபோன்ற கவசத்தை எல்லோரும் பெற்றுவிட முடியாது. கட்டட உருவாக்கப் பணிகளில் மிகச் சிறந்த சேவையை யார் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும்.
தாத்தாவுடைய கவசமும் அப்பாவுடைய கவசமும் இப்படித்தான் வீட்டில் பக்கத்துக்குப் பக்கமாக அருகருகே வைக்கப்பட்டிருந்தன. தாத்தாவுடைய கவசம் கறுப்பு நிறத்தில் இருந்தது; அதன் மீது துப்பாக்கி ரவைகளும், தெறிப்புகளும் உண்டாக்கியிருந்த வடுக்களும் கீறல்களும் நிரம்பிக் காணப்பட்டன. அப்பாவுடைய கவசம் பளபளக்கும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.
இவற்றையெல்லாம் இவ்வாறாக நினைத்து நினைத்துப் பார்த்துக் கொண்டான் ஆன்ட்ரி.
""நானும் பெரியவனாக வளரும்போது எனக்கும் ஒரு கவசம் இருக்கும்; நானும் கவசம் அணிவேன்...'' என்று ஆன்ட்ரி கனவு காணத் தொடங்கினான். ஆன்ட்ரியினுடைய கவசம் போர்க்காலக் கவசமாக இருக்காது; தாய்நாட்டு ஆக்கப்பணிகளுக்கான கட்டடங்களை உருவாக்கும் சமாதான காலக் கவசமாகக் கூட இருக்காது; நிச்சயமாக, ஆன்ட்ரியின் கவசம் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி அணியும் விஞ்ஞானக் கவசமாகத்தான் இருக்கும். காலப்போக்கில் ஆன்ட்ரி தன் வீட்டிலிருக்கும் தாத்தா, அப்பா இருவருடைய கவசங்களுக்கு அருகில், அந்த வரிசையில், தன்னுடைய விண்வெளி விஞ்ஞானக் கவசத்தை வைத்து மகிழுவான்.
அப்போது அந்த வீட்டில் மூன்று கவசங்கள் அருகருகே, வரிசையாய்க் காட்சி தந்து கொண்டிருக்கும்.
ரஷ்ய மூலம்:
வாசில் கோம்சென்கோ
ஆங்கில வழித் தமிழாக்கம்:
மு.பழனி இராகுலதாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.