முத்துச் சிப்பி

விலைமதிப்பில்லாத நவரத்தினக்கற்களில் ஒன்றான முத்தை உருவாக்குவதால்
முத்துச் சிப்பி
Updated on
1 min read

விலைமதிப்பில்லாத நவரத்தினக்கற்களில் ஒன்றான முத்தை உருவாக்குவதால் பூமியில் தோன்றிய உயிரினங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக முத்துச்சிப்பி கருதப்படுகிறது.

முத்துச்சிப்பி கடலில் வாழக்கூடிய முதுகெலும்பற்ற, இரு மூடிகளைக் கொண்ட மெல்லுடலிகளின் தொகுதியைச் சார்ந்த விலங்கினமாகும்.

தாவர நுண்ணுயிரிகளை உண்டு வாழும் இவைகள், பெர்சியன் வளைகுடா, செங்கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி போன்ற கடற் பகுதிகளில் உள்ள உயிரற்ற பவளப்பாறைகளில் (முத்தங்கரைகள்) ஒட்டி வாழ்கின்றன.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் வரை பவளப்பாறைகள் அல்லது முத்தங்கரைகள் எனப்படும் முத்து வங்கிகளைக் காணலாம். கடலுக்கு அடியில் வாழும் முத்துச்சிப்பிகளே விலை

மதிப்பற்ற முத்துக்களை உருவாக்குகின்றன. 

குறிப்பாக மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 10-20 கி.மீ தூரத்தில், 15-25 கி.மீ ஆழம் வரைச் சென்று முத்துச்சிப்பிகள் சேகரிக்கப்படுகின்றன.

கடலுக்கு அடியில் சென்று முத்துச்சிப்பிகளை சேகரிப்பதையே முத்துக்குளித்தல் என்கின்றோம். தமிழ்நாட்டில் தூத்துக்குடி (முத்துநகர்) முக்கிய முத்துக்குளிப்பு மையமாகும். பண்டைய காலத்திலேயே முத்துக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், தமிழகத்தில் பாண்டியநாடு முத்துக்குப் பெயர் பெற்றது. 

முத்துச்சிப்பியின் உறுதியான ஓடு இருபடலங்களைக் கொண்டது. அதனுள் அதிமென்மையான உடற்பகுதி ஓடுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. உடற்பகுதியை மூடுகின்ற வெளிப்புறத்தில் உள்ள சவ்வை மாண்டில் என்று குறிப்பிடுகிறார்கள்.

மாண்டிலுக்கும் மேலோட்டிற்கும் இடையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது மணல் துகளோ, நுண்ணுயிரிகளோ புகுந்துவிட்டால், முத்துச்சிப்பிக்கு ஒருவித உறுத்தல் ஏற்படும். அப்பொருளினால் முத்துச்சிப்பிக்கு ஏற்படும் உறுத்தலைத் தவிர்க்க மாண்டில் படல செல்கள் கால்சியம் கார்பனேட் எனும் நீர்மப்பொருளை சுரக்கும். பசைபோன்ற இந்த திரவம் உள்ளே நுழைந்த பொருளைச் சுற்றி மூடிக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் உருவாகும் இத்திரவம் உள்ளே நுழைந்த பொருளின் மீது படிந்தபடியே இருக்கும். இந்தப் பசை கொஞ்சநாட்களில் இறுகி, கெட்டியாகி,முத்தாக மாறுகிறது. முத்துச்சிப்பியின் வயிற்றுக்குள் இருக்கும் நாட்களைப் பொறுத்து, முத்தின் மதிப்பு அதிகரிக்கும்.  

முத்து அணிவதால் உடல் சூடு தணியும் என்றும் நெஞ்செரிச்சல்,மூலநோய்,கண்எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு  நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் மருத்துவ நூல்கள்  குறிப்பிடுகின்றன.

இந்தியாவின் நுழைவாயில் என்படும் மும்பையில்தான் முத்து நகைகள் விற்பனை அதிகம். ராஜஸ்தான் மக்களும் முத்து நகைகளை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

வெளியிலிருந்து உள்ளே நுழைந்த உறுத்துதலை, கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒன்றையும் தாங்கிக்கொண்டு, அதனை தனதாக்கிக்கொண்டால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதே முத்துச்சிப்பி நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com