லட்சுமிதேவி, கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவள். அப்பா கோபாலராஜ் திருச்சி மலைக்கோட்டையில் அதிகாரி.
லட்சுமிதேவி நாள் தவறாமல் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்வாள். ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்து வணங்கி, மனமுருக நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுவாள்.
திருவரங்கன் மீது அவள் வைத்திருந்த தீவிர பக்தியும் அசைக்க முடியாத நம்பிக்கையும் அவளை மகாராணியாக்கியது.
மைசூர் மன்னர் லட்சுமியை மணக்கத் தீர்மானித்தபோது அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. அதேசமயம் கலக்கமும் வேதனையும் அவளை ஆக்கிரமித்தன.
ஸ்ரீரங்கத்துப் பெருமாளைத் தரிசிக்காமல் தன்னால் ஒருநாள்கூட உயிர்வாழ முடியாதே, அவரை எப்படிப் பிரிந்து செல்வேன் என்று எண்ணிக் குழம்பினாள்.
மாதவன் மேல் பாரத்தைப் போட்டு, மன்னரின் கரம் பிடித்தாள். மைசூர் சென்றாள். மன்னருடன் ஒருநாள் மைசூருக்கு ஏறத்தாழ 19 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஸ்ரீரங்கப் பட்டணத்துக்குச் சென்றபோது அவளுக்கு இனிய அதிர்ச்சி!
அங்கே இருந்த ஆலயத்தில், திருவரங்கத்தில் காட்சியளித்த அதே அனந்தசயனன் பள்ளிகொண்ட வடிவிலேயே காட்சி தந்தது அவளைப் பரவசப்படுத்தியது.
மகிழ்ச்சியடைந்த மகாராணி லட்சுமி அம்மணி தேவியார், ஸ்ரீரங்கப்பட்டணம் ஆலயத்தில் மூன்று வேளையும் திருவரங்கனைத் தரிசித்து மகிழ்ந்தாள். அரண்மனை வாழ்க்கையும் குதூகலமாகவே கழிந்தது.
மன்னர் இறந்தபிறகுதான் அவளுக்கு சோதனைகள் ஆரம்பமாயிற்று.
மன்னரிடம் தளவாயாக இருந்தவன் ஆட்சியைக் கைப்பற்றி ராணியையும் அரச குடும்பத்தாரையும் வீட்டுக் காவலில் வைத்தான்.
அரச குடும்பத்தார் வீட்டைவிட்டு வெளியேறாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒரு ஒற்றைக்கண்ணனிடம் அந்தத் தளவாய் ஒப்படைத்தான்.
ஒற்றைக் கண்ணன் ஈவிரக்கமற்றவன். அரசியாரை கோயிலுக்கு செல்லக்கூட அனுமதிக்கவில்லை.
லட்சுமிதேவியால் ஆகாரம் இல்லாமல்கூட வாழ முடியும். ஆலயம் சென்று அரங்கனைத் தரிசிக்காமல் அவளால் ஒருநாள்கூட உயிர்வாழ முடியாது. எனவே, அவள், இரவும் பகலும் கண்காணித்த ஒற்றைக் கண்ணனிடம் கண்ணீர்விட்டுக் கெஞ்சிக் கதறி அழுது, ஆலயம் செல்ல அனுமதி கேட்டாள்.
அவன் மனம் சற்று அசைந்து கொடுத்தது. நாளொன்றுக்கு ஒரே ஒருமுறை மட்டும் ஆலயம் செல்ல அவன் அனுமதி அளித்தான்.
கணவனை இழந்து, ஆட்சியையும் பறிகொடுத்த விதவை லட்சுமிதேவி நாள் தவறாமல் திருவரங்கனிடம் தன் மன வேதனைகளைக் கொட்டித் தீர்த்தாள்.
ஒருநாள் ஆறுதலுக்காக சிருங்கேரி சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றாள். திரும்பி வந்த லட்சுமிதேவிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி. அவளுடைய வாரிசுகள் இருவரும் ஒற்றைக் கண்ணனால் குரூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
லட்சுமிதேவி திருவரங்கனிடம் சென்று அவன் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி முறையிட்டாள். ஆனால் -
அந்த திருவரங்கனோ, அவளை மேலும் மேலும் சோதிக்க ஆரம்பித்தான் - ஒற்றைக் கண்ணன் மூலமாக.
கடைசி வாரிசாக வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சுமி தேவியையும் கொன்றுவிட்டால் மைசூர் அரச வம்சம் அஸ்தமித்துவிடும் என்று கணக்குப் போட்ட ஒற்றைக் கண்ணன், உலகத்துக்குத் தெரியாத வகையில் லட்சுமியைத் தீர்த்துக் கட்ட திட்டம் வகுத்தான். அதன்படி-
ஆலயத்தின் பரம்பரை அர்ச்சகர் மீது பழி போட்டு, அவரை விரட்டியடித்தான். அவருக்குப் பதிலாக தன் சொல்லைக் கேட்கக்கூடிய பேராசை பிடித்த புதிய அர்ச்சகர் ஒருவரை நியமித்தான்.
அந்தப் புதிய அர்ச்சகரை, ரகசியமாகத் தன் இருப்பிடத்துக்கு வரவழைத்த ஒற்றைக் கண்ணன் அவரிடம் ஒரு கொழுத்த பணமுடிப்பைக் கொடுத்தான். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அர்ச்சகரிடம், ""நான் சொல்வதை, ஒழுங்காக, ரகசியமாகச் செய்ய வேண்டும்'' என்றான்.
""கட்டாயம் செய்கிறேன். என்ன செய்ய வேண்டும்?'' என்று அர்ச்சகர் கேட்டார்.
""லட்சுமி தேவியைக் கொல்ல வேண்டும்!''
""ஐயையோ... கொலையா! அதெல்லாம் எனக்குத் தெரியாதே சுவாமி! என்னை விட்டுவிடுங்க...'' என்று பதறினார் அர்ச்சகர்.
""என் திட்டத்தைத் தெரிந்து கொண்ட உம்மை எப்படி சும்மா வெளியே விடுவது? நான் சொன்னதைச் செய்ய மறுத்தால் உம் பிணம்தான் இங்கிருந்து வெளியேறும்'' என்றான் அவன்.
மிரண்டு போன அர்ச்சகர், ""நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று நடுங்கிய குரலில் கேட்டார்.
""நீர் அந்த அம்மணியை வெட்டிக் கொல்லவும் வேண்டாம், சுட்டுக் கொல்லவும் வேண்டாம்...''
""வேறு எப்படி?''
""ராணிக்கு நீர் கொடுக்கும் தீர்த்தத்தில் இந்த விஷத்தைக் கலந்துவிடும். அவள் கும்பிடுகிற சாமி மீதுதான் கொலைப் பழி விழும்'' என்றவன் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய புட்டியை எடுத்து, அவரிடம் கொடுத்தான்.
அதை வாங்கிய அர்ச்சகருக்கு உடம்பெல்லாம் உதறல்.
இரவில் அர்ச்சகருக்கு உறக்கம் வரவில்லை. குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார்.
""ஏன் தூங்காமல் சுற்றுகிறீர்? பணமுடிப்பு வீட்டுக்கு வந்ததால் தூக்கம் போய்விட்டதா?'' என்று அர்ச்சகரின் மனைவி கேட்டாள்.
""பணத்தாசையால் ராஜத்துரோகம் செய்யத் துணிந்துவிட்டேன்'' என்று ஆரம்பித்த அர்ச்சகர் எல்லாவற்றையும் அவளிடம் விவரித்தார்.
ஆவேசமடைந்த மனைவி, ""முதலில் இந்தப் பணமுடிப்பை அந்த ஒற்றைக் கண்ணனின் மிச்சமிருக்கும் கண்ணின் மீது வீசியடித்துவிட்டு வாரும். ஊரைவிட்டு ஓடிப்போய் எங்காவது கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம்'' என்றாள்.
""உயிர் இருந்தாத்தானடீ உன்னால் ஓட முடியும்?'' என்றார் அர்ச்சகர்.
""பணத்துக்காக நீர் அரசியைக் கொன்றால் மறுகணம் என் உடம்பிலும் உயிர் இருக்காது. இது நிச்சயம்!'' என்று அவள் எச்சரித்தாள்.
லட்சுமிதேவி ஆலயத்துக்கு வரும் நேரம் நெருங்க நெருங்க அர்ச்சகருக்கு நடுக்கம் அதிகரித்தது.
ஒற்றைக் கண்ணன் அனுப்பியிருந்த ஒற்றன் வேறு கூடவே இருந்து அர்ச்சகரின் நடவடிக்கையைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.
கடைசியில் வேறு வழியில்லாமல் அரங்கன் மீது பாரத்தைப் போட்டு, ஒற்றனின் முன்னிலையில் தீர்த்தத்தில் விஷத்தைக் கலந்தார் அர்ச்சகர். அதைப் பார்த்து திருப்தியடைந்தவிட்ட ஒற்றன், அந்த நல்ல செய்தியை ஒற்றைக் கண்ணனிடம் தெரிவிப்பதற்காக அங்கிருந்து அரண்மனைக்குக் கிளம்பினான். அரசியார் வரும்போது அவன் அங்கே இருக்கக்கூடாது என்பது ஒற்றைக் கண்ணனின் உத்தரவு.
பாதுகாப்பு வீரர்கள் பின்தொடர, ஆலயம் வந்த லட்சுமிதேவி திருவரங்கனைப் பார்த்துக் கசிந்துருகி, கண்ணீர் மல்க, அந்தாதி பாடினார்.
ராணியின் களங்கம்படியாத முகம் பக்திப் பரவசத்தால் பிரகாசமடைந்து கொண்டே போனதை அர்ச்சகர் கவனித்தார்.
நடுங்கும் கரத்தால் லட்சுமிதேவிக்கு தீர்த்த பிரசாதத்தை வழங்கினார் அர்ச்சகர்.
அதைப் பருகுவதற்காக தன் இதழ்களின் அருகே அவள் கொண்டுபோனபோது, மனச்சாட்சியின் உறுத்தலால் மிகவும் பாதிக்கப்பட்ட அர்ச்சகர், ""தேவியாரே! நிறுத்துங்கள்!'' என்று அவரையறியாமல் அலறிவிட்டார்.
""அதைப் பருகாதீர்கள்... அதில் கொடிய ஆலகால விஷத்தைக் கலந்திருக்கிறேன். பணத்தாசையாலும் ஒற்றைக் கண்ணனின் மிரட்டலாலும் இந்தப் பாவத்தைச் செய்துவிட்டேன். அதை அருந்தாதீர்கள். தயவுசெய்து என்னைக் கொலைகாரனாக்கி விடாதீர்கள்'' என்று கதறினார்.
சிறிதும் கலவரமடையாத லட்சுமிதேவி அமைதியாகப் புன்னகை பூத்தார்.
""இந்த தீர்த்தப் பிரசாதம் அரங்கன் எனக்கு அருளியது. மீரா அருந்திய நஞ்சைத் தானே ஏற்றுக் கொண்ட இந்த அற்புதனின் பிரசாதத்தை அருந்தியே தீருவேன்'' என்ற லட்சுமி, ""ஸ்ரீரங்கா...'' என்று அழைத்தபடி தீர்த்தத்தை அருந்திவிட்டாள்.
ஆலயத்தில் அவள் விஷத்தை அருந்திய அதே வினாடியில் அரண்மனையில் ஒற்றைக் கண்ணன் மயங்கிச் சாய்ந்தான்.
இந்த அற்புத நிகழ்ச்சியின் மூலம் லட்சுமிதேவியின் பக்தி உலகெங்கும் பிரபலமடைந்தது.
அவள் ஆங்கிலேயருடன் தொடர்பு கொண்டு, பகைவர்களை முறியடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினாள்.
ஆங்கிலேய அரசுக்கு அவள் எழுதிய கடிதங்களில் "ராணி லட்சுமி அம்மணிதேவி' என்று அவள் கையொப்பமிட்டதில்லை. "ஸ்ரீரங்கா' என்றே கையொப்பமிட்டாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.