

கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாட்டை ஆண்ட களப்பிர விக்ராந்தன், மிகப் பெரிய கொடுங்கோலன். சமயங்களை அழிப்பதே அவன் வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது.
விக்ராந்தனின் காட்டாட்சியில் பைந்தமிழ் பாண்டிய மண்டலமே நடுநடுங்கியது.
பாண்டிய நாட்டில் உள்ள கோயில்களில் பூஜையே நிகழக்கூடாது என்று ஆணை பிறப்பித்தான். கோயில்கள் அனைத்தையும் இழுத்துப் பூட்டினான்.
அவனுடைய தீய செயல்களால் சனாதன தர்மத்தை தம் கண்ணென நேசித்த பாண்டிய நாட்டுத் தமிழ் மக்கள் தாங்க முடியாத துயரத்தில் வாடினர்.
அந்த காலகட்டத்தில், கடுங்கோன் என்ற பாண்டிய நாட்டு இளைஞன் விடுதலை வேட்கையோடு களப்பிரர்களை விரட்டுவதற்காக தமிழ் இளைஞர்களைத் திரட்டினான்.
இதை உளவுப்படையினர் மூலமாகத் தெரிந்துகொண்ட விக்ராந்தன், கடுங்கோனை கண்ட இடத்தில் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்ய உத்தரவிட்டான். கொலை செய்பவனுக்குப் பரிசாகப் பெரும் பணமுடிப்பையும் தரப்போவதாக அறிவித்தான்.
கடுங்கோனைக் கண்டுபிடித்துக் கொல்ல, தேடுதல் வேட்டை ஆரம்பமாயிற்று.
இதைத் தெரிந்து கொண்ட கடுங்கோனின் சகாக்கள் அவனை நாட்டைவிட்டு வெளியேறி விடும்படி வற்புறுத்தினர். ஆனால் -
கடுங்கோன், மதுரை மண்ணிலிருந்து வெளியேற மறுத்துவிட்டான்.
""களப்பிரர்களிடமிருந்து தமிழ்மண் விடுதலை பெறும்வரை, இங்கிருந்து நகரமாட்டேன்; எனக்கு வாழ்வானாலும் சாவானாலும் இதே மண்ணில்தான்'' என்று வீரத்துடன் பதில் சொன்னான். தன் வீரதீர சாகசங்களால் அவ்வப்போது களப்பிரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தப்பித்து, தலைமறைவாக வாழ்ந்து விடுதலைப் படையைத் திரட்டினான்.
மதுரைக்குள்ளேயே உலவிக் கொண்டிருக்கும் கடுங்கோனைப் பிடிக்க முடியாத, கையாலாகாத களப்பிர வீரர்கள், விக்ராந்தனின் கடுங்கோபத்துக்கு ஆளானார்கள். எனவே -
மன்னனை சமாதானப்படுத்த, சந்தோஷப்படுத்த களப்பிரப் படையினர், பொய்யான தகவல் ஒன்றை அவனிடம் தெரிவித்தனர் - கடுங்கோன் வேறு நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டதாக. அதை நம்பிய, விக்ராந்தன், நிம்மதியும் திருப்தியும் அடைந்தான்.
ஒருநாள் இரவு, இரண்டாம் ஜாமம் முடிவடையும் நேரம் - மதுரை ஆழ்ந்த உறக்கத்தில்.
எண்ணற்ற வைரச் சுடர்கள் கண்சிமிட்டிய, நீலவான விதானத்தின் கீழ், அழகிய ஓவியமென நீண்டு படர்ந்திருந்தது, பழமுதிர்ச்சோலை.
அந்த மலையின் அடிவாரத்தில் பாறைகளுக்கு இடையே ஒரு குகை இருந்தது. அந்தக் குகையின் வாயில் இரண்டு பேர் மட்டுமே நுழையும் அளவுக்கு குறுகலானதாக இருந்தது. ஆனால் உட்புறமோ மிகவும் விசாலம்.
குகையின் நடுவே பீடம் போன்று உயர்ந்து நின்ற பாறையின் மீது சிறிய எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
அந்த விளக்கின் மங்கிய வெளிச்சம், குகை முழுவதும் பரவாததால் குகையின் மூலைகள் இருளடைந்து காணப்பட்டன.
உள்ளே பலவித வடிவங்களில் காணப்பட்ட பாறைகளின் மீது அமர்ந்திருந்த இளைஞர்கள் யாருக்காகவோ காத்திருந்தனர். அதே சமயம் -
குகையை அடுத்திருந்த வனப்பகுதியில் துஷ்ட மிருகங்களின் உறுமல்கள். ராக்காலப் பறவைகளின் அச்சுறுத்தும் அலறல்கள்.
புதர்களுக்கிடையே புகுந்து, நகர்ந்து, தவழ்ந்து குகை இருந்த திசையில் வந்து கொண்டிருந்தான் கடுங்கோன். அவன் இடுப்பில் இருந்த கட்டாரி நழுவியதை அவன் கவனிக்கவில்லை.
சிறிது தூரம் அவன் நகர்ந்த பிறகு, இரு குதிரைகளின் குளம்பொலிச் சத்தம் வெகு அருகில் கேட்கவே, மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரு புதருக்குள்ளே அசைவின்றி அமர்ந்திருந்தான், கடுங்கோன்.
அவன் இருந்த பக்கமாக, குதிரைகள் வந்தபோது, குதிரையிலிருந்து குதித்த ஒற்றன் ஒருவன், கீழே பளபளத்த கட்டாரியை எடுத்துப் பார்த்தான். அதன் கைப்பிடியில் மீன் சின்னம். உடனே, அவன் மற்றவனிடம், ""குமரா, இது சந்தேகமில்லாமல் கடுங்கோனின் ஆயுதம்தான்! இந்தப் பகுதியில்தான் அவன் பதுங்கியிருக்க வேண்டும். நாம் சீக்கிரமாக அரண்மனைக்குப் போய் படையுடன் வந்து மலையடிவாரத்தை முற்றுகையிட்டு, கடுங்கோனைப் பிடிப்போம்'' என்று அவசரமாகக் குதிரை மீது தாவினான்.
அதற்குள் மற்றவன், ""கடுங்கோனின் தலையைக் கொண்டு போனால், மன்னர் பணமுடிப்பு கொடுப்பார். அதில் எனக்கு எவ்வளவு தருவாய்?'' என்று கேட்டான்.
மறுநொடி, அந்தக் குதிரைகள் அங்கிருந்து நாலுகால் பாய்ச்சலில் இருளைக் கிழித்துக் கொண்டு ஓடின.
குகைக்குள்ளே திடீரென்று கடுங்கோன் தோன்றவே, இளைஞர்கள் அனைவரும் பயபக்தியுடன் எழுந்து நின்று அவனை வரவேற்றனர். அப்போது கடுங்கோன், ""எல்லோரும் உடனடியாகக் கலைந்து செல்லுங்கள். என்னைப் பிடிக்க ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. நாம் வேறொரு நாள், வேறொரு இடத்தில் சந்திக்கலாம். தாமதித்தால் உங்களுக்கு ஆபத்து!'' என்று பரபரப்புடன் பேசினான்.
அந்த விசுவாசமான இளைஞர்கள் அங்கிருந்து நகர மறுத்தனர். ""உங்களை மட்டும் தனியாக விட்டுவிட்டு, நாங்கள் செல்ல மாட்டோம்'' என்றனர், பிடிவாதமாக.
""என்னைப் பற்றிக் கவலைப்படாமல் அவரவர் வீடு செல்லுங்கள். சொக்கநாதராக வந்து திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் என்னைக் காப்பாற்றுவார்'' என்றான் கடுங்கோன். போக மறுத்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு விளக்கை ஊதி அணைத்தான். சிவபெருமானைத் தியானிக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, வெகுதொலைவில் குதிரைகள் வரும் சப்தம் கேட்டது.
குகையின் வாயிலருகே சென்ற கடுங்கோன் ஜாக்கிரதையாக வெளியே எட்டிப் பார்த்தான்.
தீவட்டிகளை ஏந்திய களப்பிரர்கள் குதிரைகளில் வந்து கொண்டிருந்தனர்.
நடப்பது நடக்கட்டும் என்று தீர்மானித்த, கடுங்கோன் இருண்ட குகைக்குள்ளே, ஏந்திய வாளுடன், இறைவனைத் தியானித்தபடி அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
படைவீரர்கள், மலையடிவாரம் நோக்கி வந்தபோது, திடீரென்று குகை வாசலின் அருகே இருந்த மரக்கிளையில் ஒரு சிலந்தி தோன்றியது. அதனிடமிருந்து நூல் போல இலையில் தொங்கியவண்ணமாக குகை வாயிலின் முன் ஊசலாடியவாறு, அழகிய வலையைப் பின்ன ஆரம்பித்தது.
அடிவாரத்தை அடைந்த களப்பிரர்கள், குகையைத் தேடுவதில் ஈடுபட்டனர்.
கடுங்கோன் மறைந்திருந்த குகையின் வாயில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பாறைகளுக்கு இடையே மறைந்திருந்தது.
நீண்ட நேரம் தேடிய பிறகு, கடுங்கோனின் கட்டாரியைக் கண்டெடுத்து, படையினரை அங்கே அழைத்து வந்தவன், குகையின் வாயிலைக் கண்டுபிடித்துவிட்டான். அவன், ""எல்லோரும் இங்கே வாருங்கள்.... கடுங்கோன் இந்தக் குகைக்குள்ளேதான் பதுங்கியிருக்கிறான். சீக்கிரம் வாங்க!'' என்றான், உற்சாகமாக.
படைத் தளபதியின் தலைமையில் எல்லா வீரர்களும் அந்தக் குகையின் வாயிலை முற்றுகையிட்டனர்.
தீவட்டிகளை சிலர் தூக்கிப் பிடித்தனர்.
உள்ளே மாட்டிக் கொண்ட கடுங்கோனின் கரம், வாளின் கைப்பிடியை இறுகப் பற்றியது. நாட்டுப்பற்றும் தெய்வபக்தியும் நிரம்பிய அவன் மனம் ஈசனைத் தியானிக்க ஆரம்பித்தது.
வெளிப்பக்கம், படைத்தளபதி வாய்விட்டு, பயங்கரமாகச் சிரித்ததை, உள்ளேயிருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த கடுங்கோனுக்குக் குழப்பமாக இருந்தது. அவன் எதற்கு அப்படிச் சிரித்தான் என்பதற்கு விரைவிலேயே பதில் கிடைத்தது.
சிரித்து முடித்த தளபதி, குகை வாயிலைத் திரையிட்டு மறைத்திருந்த சிலந்தி வலைகளைத் தீவட்டி வெளிச்சத்தில் காண்பித்து, ""அறிவு கெட்டவனே, இந்தக் குகைக்குள் வருடக் கணக்கில் எவனுமே நுழைந்திருக்க முடியாது. சிலந்தி வலைகளைப் பார்த்தால் தெரியவில்லையா, உனக்கு? எங்கள் தூக்கத்தையும் கெடுத்துவிட்டாயே! உன் தலையைத்தான் மன்னனிடம் கொண்டுபோய் கொடுக்க வேண்டும். வாருங்கள், எல்லோரும் நாட்டுக்குத் திரும்பலாம்'' என்றான். குகை வாசல் வரை வந்தவர்கள் உள்ளே நுழையாமலேயே திரும்பிச் சென்று விட்டனர்.
அன்று உயிர்தப்பிய மாவீரன் கடுங்கோன், பாண்டிய மண்டலத்தை களப்பிரரின் அடிமைத் தளையிலிருந்து மீட்டு, பாண்டியர் பூமியில் மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிறுவினான்.
இறைவனிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தால், சிலந்திவலை கூடக் கேடயமாகி நம்மைக் காப்பாற்றும் என்பதில் சந்தேகமில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.