
திருந்திய சோம்பேறி
ஒரு தந்தைக்கு ஒரு சோம்பேறி மகன் இருந்தான். அவனை எவ்வளவோ முயற்சி செய்தும் கொஞ்சம்கூடத் திருத்த முடியவில்லை.
அவனுக்குத் தனியாக ஒரு செக்கும் இரண்டு மாடுகளும் வாங்கிக் கொடுத்து, எண்ணெய் தயாரித்துப் பிழைத்துக் கொள் என்று அவனுடைய தந்தை சொன்னார்.
அந்த சோம்பேறி மகன், அதிலேயும் திருந்தவில்லை.
மாடுகளை செக்கில் பூட்டியவுடன், அவற்றின் கொம்புகளில் சலங்கையைக் கட்டி வைத்தான். மாடுகள் சுற்றி வரும்போதெல்லாம் அந்த சலங்கை சத்தம் கேட்கும். மாடுகள் நின்றுவிட்டால் சலங்கை சத்தமும் நின்றுவிடும். அப்போது மட்டும் கவனித்து மாடுகளை ஓட்டினால் போதும். அதுவரை நிம்மதியாக ஓரிடத்தில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி, அதைச் செய்து முடித்தான். பிறகு அங்கேயே படுத்து தூங்கிப் போனான். இப்படியே சில நாட்கள் சென்றன.
ஒருநாள், திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தவன் செக்கை கவனித்தான். செக்கில் எண்ணெய் ஆட்டப்படவே இல்லை. போட்ட எள் அப்படியே இருந்தது. அருகில் சென்று பார்த்தான். உடனே மாடுகள் நகர ஆரம்பித்தன.
"இவ்வளவு நேரம் சலங்கை சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததே எப்படி? அப்படியானால் மாடுகள் ஓடிக்கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? எப்படி செக்கில் எண்ணெய் ஆட்டப்படாமலேயே இருக்கிறது' என்று யோசித்தவன், மறைவாக ஓரிடத்தில் போய் நின்று கொண்டு செக்கையும் மாடுகளையும் கவனித்தான்.
சலங்கை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் மாடுகள் நகரவே இல்லை. தங்கள் தலைகளை மட்டும் ஆட்டி சலங்கையை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தன.
சோம்பேறியிடம் பழகிய மாடுகள் அல்லவா அவை? அவைகளும் அவனைப் போலவே மாறிப் போயிருந்தன.
அன்றுதான் அவனுக்குப் புத்தி வந்தது. மனம் திருந்திய அவன் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.
-தேனி முருகேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.