மேற்குத் தொடர்ச்சி மலை

பருவ மழையினால் எப்போதும் ஈரம் படிந்த கேரள மலபார் கரைக்கும் இந்திய தீபகற்பத்துக்கும் இடையே பெரும் மதில் போல இருப்பதுதான் மேற்குத் தொடர்ச்சி மலை.
மேற்குத் தொடர்ச்சி மலை
Published on
Updated on
2 min read

பருவ மழையினால் எப்போதும் ஈரம் படிந்த கேரள மலபார் கரைக்கும் இந்திய தீபகற்பத்துக்கும் இடையே பெரும் மதில் போல இருப்பதுதான் மேற்குத் தொடர்ச்சி மலை.
 1,600 கி.மீ. நீளமுள்ள இந்த மலைத் தொடர் இந்தியத் தென்கோடியான கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் வரை நீண்டு கிடக்கிறது. உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த 34 கேந்திரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும்.
 இதன் மேற்கு பகுதியில் ஆண்டுக்கு 6,000 முதல் 8,000 செ.மீ. அளவுக்கு மழை பொழிகிறது.
 இந்த மலைத் தொடரின் கிழக்குப் பகுதியிலோ ஆண்டுக்கு சராசரியாக 900 செ.மீ. மழை மட்டுமே பெய்கிறது.
 நிலயியல் அடிப்படையிலும் உயிரியல் அடிப்படையிலும் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்குப் பகுதி மற்றும் மடகாஸ்கர் பகுதியின் நெருங்கிய உறவினராக இருக்கிறது நமது மேற்குத் தொடர்ச்சி மலை.
 இதன் பரப்பளவு இந்தியாவின் மொத்த நிலப் பகுதியில் வெறும் ஆறு சதவீதம்தான். ஆனால் இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பங்கு எவ்வளவு தெரியுமா? முப்பது சதவீதம். இதிலிருந்தே இந்த மலைத்தொடரின் முக்கியத்துவம் புரியும்.
 மரம்-செடி வகைகள், மருத்துவ குணமுள்ள செடிகள், பழ வகைகள் சிலவற்றின் பிறப்பிடம் இந்த மலைத் தொடர்தான்.
 பழங்களில் மாம்பழம், வாழைப்பழம் - இவற்றின் மரபணுவின் மூல முகவரி மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் உள்ளது. மிளகு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றுக்கும் பிறப்பிடம் இந்த மலைகள்தான். சில அரிசி ரகங்கள், கேழ்வரகு இங்கு மட்டுமே விளைகின்றன.
 கணக்கில் அடங்காத மருத்துவ குணமுள்ள செடி வகைகளுக்கு இங்குதான் பிறப்பிடம். இந்த மலைத் தொடரிலிருக்கும் சில வனங்கள் இமயத்திலிருக்கும் வனங்களை விட மிகப் பழமையானவை.
 பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு முக்கிய அளவுகோல்- ஒரு குறிப்பிட்ட உயிரினம் ஒரு நிலப்பகுதியில் மட்டுமே காணப்படுவதாகும். இந்தப் பகுதிக்கு வெளியே சாதாரணமாக இந்த உயிரினங்களைக் காண முடியாது.
 மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணக் கிடைக்கக்கூடிய உயிரினங்கள் என்று ஏராளமாக சொல்லலாம். தெற்கு ஆசிய அளவில் மிக அதிக பல்லுயிர் பெருக்கமுள்ள இடங்களில் இந்தப் பகுதியும் அடங்கும். இமய மலைத் தொடருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் தனக்கே உரித்தான உயிரினங்களுக்குத் தாயகமாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலைதான்.
 கன்னியாகுமரிக்கு சற்று வடக்கே இந்த மலைத் தொடரில் உள்ள ஒரு பகுதிதான் மொத்த மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரிலேயே மிக அதிக அளவில் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டிருக்கிறது.
 இதற்கு இன்னும் சற்று வடக்கேதான் குற்றாலம் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிகளை வருடியபடி பொழியும் பருவ மழை கொண்டு வரும் நீரானது, பச்சைப் பசேலென்ற காடுகளின் வழி கிழக்கே பயணம் செய்து பற்பல வீழ்ச்சிகளாக சமவெளியை அடைகிறது. தாமிரபரணியுடன் திருநெல்வேலி பகுதி நிலங்களை வளமாக்கிப் பின்னர் மன்னார் வளைகுடாவை அடைகிறது.
 குற்றால அருவியில் குளித்தால் பல மருத்துவ பலன்களைப் பெறலாம் என்று பழைய காலம் முதலே நம்பிக்கை இருந்து வருகிறது. பல விதமான பசுமையான காடுகளின் செடி கொடிகள் வழியே தவழ்ந்து வந்து குற்றாலத்தை அடைந்து நீர் வீழ்ச்சியாகப் பாயும்போது அது பல மருத்துவ குணங்களை தன்னிடத்தே அடக்கியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
 மேற்குத் தொடர்ச்சி மலையென்பது பற்பல சிறு மலைத் தொடர்களை உள்ளடக்கியது. பழனி மலைத் தொடரும் ஆனைமலைத் தொடரும் சந்திக்கும் பகுதியில்தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான மலைகள் உள்ளன. 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடிதான் மேற்கு தொடர்ச்சியில் மிக உயரமான மலை.
 இதுவே தென்னிந்தியாவின் உயரமான மலை என்பதுடன், இமயத்துக்குத் தெற்கே இதுதான் மிக அதிக உயரமுள்ள மலையும் கூட!
 அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் இருப்பதுதான் இங்குள்ள வரையாடு. இது தவிர பல்வேறு வகை ஆடுகள், புள்ளிமான், காட்டெருமை போன்றவை இப்பகுதிக்கே உரித்தானவை. இவற்றை வேட்டையாட சிறுத்தைகளும் புலிகளும் ஒரு வகையான காட்டு நாயும் இங்கு உண்டு.
 இவை தவிர ஆசிய யானை இனத்தை சேர்ந்த யானைகளை மிக அதிக எண்ணிக்கையில் இந்தப் பகுதியில்தான் காண முடியும்.
 இதுபோன்ற காரணங்களாலேயே இந்த மலைத் தொடரை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்திருக்கிறது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com