

இளைஞர்கள் வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்று விடாமல், சமூகத் தொண்டாற்றவும் வேண்டும் என்பதற்காக நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது.
1969-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ஆம் நாள் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) முதன்முதலாக கல்லூரிகளில் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டுக்கு மற்றுமொரு சிறப்பு என்னவெனில், தன் வாழ்நாள் முழுவதையும் தேச சேவைக்காகவே அர்ப்பணித்த நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் அவதரித்த நூற்றாண்டு விழா ஆண்டு என்பதாகும். ஆக, மிகப் பொருத்தமான தொடக்கம்.
அதன்பின்னர், இந்த அமைப்பின் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக, 1980-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுத் தற்சமயம் 2 மில்லியனுக்கும் அதிகமான மாணவத் தொண்டர்களைக் கொண்ட, மாபெரும் இயக்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஒரிசாவிலுள்ள கோனார்க் சூரியனார் கோயிலிலுள்ள தேர்ச்சக்கரத்தைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டுள்ள என்.எஸ்.எஸ்.சின் தாரக மந்திரம் ""எனக்கல்ல உனக்காக'' என்பதாகும்.
சக்கரத்திலுள்ள 8 ஆரங்கள் 8 நாழிகைக்கான அதாவது 24 மணி நேரமும் சமூகப் பணியாற்றத் தயார் நிலையில் இருப்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது.
சக்கரம் சின்னமாக அமைக்கப் பெற்றதற்கான காரணம், இடைவிடாத தொடர் செயல்பாடுகள் மூலம் சமூக முன்னேற்றத்துக்கும் நலிவுற்றோர் மேம்பாட்டுக்கும் பாடுபடவேண்டும் என்பதாகும்.
தன்னலமின்றி பொதுநோக்கத்துக்காக பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெறவேண்டும் என்பதனை வலியுறுத்துவதற்காகவே ""எனக்கல்ல உனக்காக'' என்கிற குறிக்கோள் நிறுவப்பட்டுள்ளது.
சமுதாய சேவை மூலம் மாணவர்களது ஆளுமைத்திறனை வளர்ப்பதே என்.எஸ்.எஸ்.சின் நோக்கமாகும்.
என்.எஸ்.எஸ்.சின் சின்னம் சிவப்பு மற்றும் வான்வெளி நீலம் ஆகிய வர்ணங்களை உள்ளடக்கியது.
சிவப்பு வர்ணம் அமையக் காரணம், என்.எஸ்.எஸ்.-சில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள், துடிப்புமிக்கவர்கள், எவ்விதப் பணியையும் சவாலாக ஏற்றுச் சுறுசுறுப்புடன் திறம்படச் செய்து முடிப்பவர்கள் என்பதற்காக.
வான்வெளி நீலத்துக்குக் காரணம் பேரண்டம் என்கிற பெருவெளியில் என்.எஸ்.எஸ். என்பது ஒரு சிறு துளி என்பதற்காக. இருப்பினும் சிறுதுளியாக இருந்தாலும் அளவிடற்கரிய செயல்பாடுகளினால், எண்ணிலடங்கா சாதனைகளை, சமூக மாற்றத்தினை ஏற்படுத்திட முடியும் என்பதைக் குறிப்பிடுவதற்காக நீலநிறம் அமையப் பெற்றுள்ளது.
என்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகளைத் தொடர் பணிகள் எனவும், 7 நாட்கள் சிறப்பு முகாம் எனவும் இருவகைப்படுத்தலாம்.
பள்ளி, கல்லூரி வளாகங்கள், வளாகங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஆற்றிடும் பணிகள் தொடர்பணிகள் எனப்படும்.
ஆண்டுக்கொரு முறை 7 நாட்களுக்கு ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அந்த கிராமத்திலேயே தங்கியிருந்து, அனைத்து நலப்பணிகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதை 7 நாள் சிறப்பு முகாம் என்கிறோம்.
இந்தியாவிலேயே நாட்டுநலப் பணித் திட்டச் செயல்பாடுகளில் தமிழகம்தான் தொடர்ந்து முன்னிலையிலும் முதன்மையாகவும் இருந்து வருகிறது என்பது நாமெல்லாம் பெருமைப்படத்தக்க ஒரு தகவலாகும்.
குருதிக் கொடை வழங்குகின்றவர்களின் எண்ணிக்கையில் 90 சதவிகிதத்தினர் என்.எஸ்.எஸ். மாணவர்கள் என்பது இவ்வமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை.
சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை இடர்களாகட்டும், மகாமகம், கோவில் திருவிழா, பண்டிகை
கால செயற்கை நெருக்கடிகளாகட்டும், நேரம் காலம் தவறாமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், பலன் எதிர்பாராது கடமையாற்றும் வேட்கை கொண்டவர்கள் என்.எஸ்.எஸ். மாணவர்கள்.
மரம் வளர்ப்பு, சாலை சீரமைப்பு, சமுதாயத் தூய்மை, எழுத்தறிவுத் திட்டங்கள், வழிபாட்டுத் தல உழவாரப் பணிகள், விழிப்புணர்வுப் பணிகள், இலவச மருத்துவ முகாம்கள், புத்தக வங்கித் திட்டம், பழைய ஆடைகள் சேகரித்தல், சிறுசேமிப்புத் திட்டம் என என்.எஸ்.எஸ். மாணவர்கள் பல்வேறு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பிறருக்கு உதவும் மனப்பாங்கு, மனிதநேயம், குழு மனப்பான்மை, மதநல்லிணக்கம், சமூக அக்கறை, விரைந்து செயலாற்றுகின்ற திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற பல்வேறு நற்பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நாளும் வளர்த்து நற்குடிமகன்களாக்கும் நல்லதொரு பயிற்சிப் பாசறைதான் இந்த என்.எஸ்.எஸ். என்றால் அது மிகையாகாது.
தொண்டாற்றிய மாணவர்களுக்கு வழங்கப்படும் "ஏ' சான்றிதழ்கள் மாணவர்களது மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவுகின்றது.
எனவே புனிதப் பணியாம் இந்த சேவைப் பணியில் இன்னும் இன்னும் பல மாணவ, மாணவிகள் இணைந்து சமூகத் தொண்டாற்ற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.