

சுற்றுலா என்பது சுறுசுறுப்பும் சுவையும் மிகுந்த ஓர் அனுபவமாகும். பல்வேறு வேலைகளுக்கிடையில் சிக்கித் தவிக்கும் மனிதன் சில நேரங்களில் தனிமையும் அதில் ஓர் இனிமையையும் காண விரும்புகிறான். அந்தத் தனிமைக்கும் இனிமைக்கும் தீனி தருவது சுற்றுலாதான்.
முற்காலத்தில் சுற்றுலாவை "யாத்திரை' என்ற பெயரில் மக்கள் மேற்கொண்டனர். சீன யாத்திரீகர்களான யுவான் சுவாங், பாஹியான் போன்ற வரலாற்றுப் பேரறிஞர்கள் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணமாக வந்தனர். அப்பயணத்தில் தாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் நூல்களாக எழுதி வைத்ததனால் அக்கால இந்தியாவைப் பற்றிய பல செய்திகளை நம்மால் அறிய முடிந்தது.
மேலும் ஐரோப்பாவைச் சேர்ந்த பீட்டர் என்ற மன்னர் பல நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்ததன் மூலம், தன் நாட்டைப் பெருமளவில்
சீர்படுத்தி அதன் வாயிலாக நாட்டின் நிதி ஆதாரங்களைப் பெருக்க முயற்சித்தார் என்று வரலாறு கூறுகிறது.
உலகில் முதன்முறையாக கடல்மார்க்கமாகச் சுற்றி வந்தவர்கள் மெகல்லன், கொலம்பஸ் ஆகியோர். அவர்கள் அப்படிச் சுற்றுப்பயணம் வந்தபோது கண்டறிந்த நாடுதான் அமெரிக்கா மற்றும் பல நாடுகள். இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமாவின் முயற்சியும் இத்தகையதுதான். இதுபோன்ற வரலாற்று நாயகர்கள் சுற்றுலாவுக்கு வழிகோலியவர்கள் என்று சொல்லலாம்.
பொதுவாக, சுற்றுலாக்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும்பயன் அளிக்கும் ஓர் விஷயமாகும். ஏட்டில் படிக்கும் கல்வியைவிட, பொது அறிவில், பார்வையில் கிடைப்பது மனதில் நன்கு பதியும். அதற்கு சுற்றுலா ஒரு நல்ல வழியாகும். இதனால் மாணவர்களுக்குக் கல்வியறிவு முழுமையாக அமைகின்றது. பலருடன் கலந்து பழகும் வாய்ப்பு கிடைப்பதால் தான் என்ற ஆணவம் அகன்று நாம் என்ற பொதுமை உணர்வு வளர்கின்றது. ஏழை பணக்காரர் என்ற வேறுபாடுகள் களையப்படுகின்றன. ஆகவே மாணவப் பருவத்திலேயே வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை உணர்வு உண்டாக சுற்றுலாக்கள் பெரிதும் துணை புரிகின்றன என்று உறுதியாகக் கூறலாம்.
சுற்றுலாவுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் முன்பு பெற்ற அறிவைவிட பன்மடங்கு பெருக்கக்கூடியவையாக இருக்க வேண்டும். இயற்கையழகு மிளிரும் அதே சமயத்தில் வரலாற்றுச் சின்னங்கள், கட்டடக்கலை சிறப்புகள் உள்ள இடங்களுக்குச் சென்று அவற்றைக் கண்டு ரசிப்பது சிந்தனைக்கு விருந்தாகவும் அறிவுக்கு ஆசானாகவும் அமையும்.
இதுபோன்ற சுற்றுலாக்களில் பங்குகொள்ளும்போதுதான் நம் ஊர், நம் நாடு என்றில்லாமல் உள்ளம் விரிவடைந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப மனப்பக்குவத்தைப் பெற முடிகிறது.
மத்திய மாநில அரசுகள் சுற்றுலாவின் சிறப்பை உணர்ந்து சுற்றுலாவுக்கென தனித் துறையை அமைத்து, பல கோடி ரூபாய்களை ஒதுக்கி, சுற்றுலா வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. நம் நாட்டின் பழம்பெரும் கலாசார மையங்களைப் பாதுகாக்கவும் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான இடங்களை ஆய்வு செய்யவும் பெரும் தொகை செலவிடப்படுகின்றது.
சுற்றுலாப் பயணம் மேற்கொண்டவர் பார்த்ததை, கேட்டதை மனதிலிருத்தி தங்கள் அனுபவங்களை நூல்களாக வெளியிடுவது சிறப்புடையதாகும். சுற்றுலா செல்ல வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள் அவற்றைப் படித்து பல இடங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. வருங்காலச் சந்ததியினருக்கும் இத்தகைய நூல்கள் பெரும் பொக்கிஷங்களாகத் திகழுகின்றன.
சுற்றுலா ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பெரும் பங்கு வகிப்பதுடன் தேசிய ஒருமைப்பாடு வளரவும் உதவுகின்றது என்பதில் ஐயமில்லை.
-நா.கிருஷ்ணவேலு,
புதுச்சேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.