

திருப்பெரும்புதூருக்குள் நுழையும்போதே அந்தக் காட்சி கண்ணில் பட்டது. பள்ளிச் சிறுவர்கள் சிலர் புகைபிடித்துக் கொண்டு தெனாவெட்டாக ஊதிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பேச்சில் கெட்டவார்த்தைகள் தெறித்தன.
""இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தான் சார். ரொம்ப மோசம். நாளை நாடு என்ன ஆகப் போகுதோ?'' என்றார் கவிஞர் ரவிவாணன். அவர்தான் ஓட்டுநராகவும் இருந்தார். கீழப்புதூர் நாராயணனுக்கு அந்தக் காட்சியைக் காண மனம் வலித்தது.
"இந்தப் பசங்க மத்தியிலதான் நாம் "தேசத்தின் ஆன்மா' பற்றி சிறப்புரை ஆற்ற வேண்டுமா?' என்ற எண்ணம் மின்னி மறைந்தது. அவர் எப்போதுமே எதிர்மறையாக எண்ணிப் புலம்புபவர் அல்ல. அவரது சொற்பொழிவில் தன்னம்பிக்கை பிரதி
பலிக்கும்.
கீழப்புதூர் நாராயணன் வானொலி, தொலைக்காட்சிகளில் எல்லாம் பிரபலமானவர். "மலைமகள்' இதழின் ஆசிரியர். ஆன்மிகம், அரசியல், கலை, இலக்கியம் என்று புதிய கோணத்தில் அலசும் கட்டுரைகள் பல எழுதியவர்.
இன்று திருப்பெரும்புதூர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா. இலக்கியப் பேச்சுப் போட்டி, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல் என்று பள்ளி விழா கோலாகலமாகக் காட்சியளித்தது.
மாவட்ட கலெக்டர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பரிசுகள் வழங்கப்பட்டன. இலக்கியப் பேச்சுப்போட்டி தொடங்கியது. மாணவ, மாணவிகள் மேடை ஏறி ஒரு வழியாகப் பேசி முடித்தனர்.
முடிவில் கீழப்புதூர் நாராயணன் பேச வேண்டிய நேரம் வந்தது.
அதுவரை பேசிய மாணவர்களின் நிறைகுறைகளை அலசினார். மாணவர்கள், தயாரிக்கப்பட்ட உரையை மனப்பாடம் செய்து பேசுவதிலிருந்து மாறி சுயமாகப் பேசும் திறனை வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான குறிப்புகளை அள்ளிக் கொடுத்தார். பரிசுக்குரிய பேச்சாளர்களை சுவாரஸ்யமாக, பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார். தொடர்ந்து தானும் ஒரு மாணவனுக்குப் பரிசு தர விரும்புவதாக அறிவித்தார்.
""இங்கே எத்தனை மாணவர்களுக்கு தேசிய கீதம் பாடத் தெரியும்? கையைத் தூக்குங்கள்'' என்றார்.
சில மாணவர்கள் கைகளை உயர்த்தினர்.
""இங்கே மேடையில் வந்து தெளிவாகப் பிழையில்லாமல் தேசிய கீதத்தைப் பாட வேண்டும். அப்படிப் பாடுபவர்களுக்கு நான் நூறு ரூபாய் பரிசாகத் தருகிறேன்'' என்றதும் ஒரு மாணவனைத் தவிர எல்லோரும் அமர்ந்து விட்டனர்.
அந்த மாணவன் மிகத் தெளிவாகத் தேசிய கீதத்தைப் பாடி முடித்தான். அவன் பாடும்போது அவையோர் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அவன் பாடி முடித்ததும் கரவொலி விண்ணைப் பிளந்தது.
அவனை அழைத்து, ""தம்பி... உன் பெயர் என்ன?'' என்றார் நாராயணன்.
""பாலமுருகன்'' என்று பதில் வந்தது.
அந்த முருகக் கடவுளே முன்னே வந்து நிற்பதைப் போலிருந்தது. பரிசுப்பணம் ரூபாய் நூறை எடுத்து வழங்கினார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.
விழா நிறைவு பெற்றதும், உணவுக்கூடத்தை நோக்கி அனைவரும் சென்றனர். தொழிலதிபர் ராஜரத்தினம் அனைவருக்குமான உணவு ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
உணவு முடிந்து வெளியில் வரும்போது தேசிய கீதம் பாடி, பரிசுபெற்ற மாணவன் பாலமுருகன், அவர் முன்னே வந்தான்.
""ஐயா... உங்களிடம் ஒரு நிமிடம் பேசவேண்டும்'' என்றான்.
""நீ தேசியகீதத்தைச் சிறப்பாகப் பாடினாய். பரிசுத் தொகையைத்தான் தந்து விட்டேனே? அப்புறம் என்ன? வேறு ஏதாவது வேண்டுமா?'' என்றார்.
""இல்லை ஐயா... வந்து...'' என்றான்.
""என்ன வந்து?''
""ஐயா அந்தப் பரிசுப் பணத்தை நீங்க திரும்ப வாங்கிக்கணும்'' என்றான்.
கீழப்புதூர் நாராயணனுக்கு சட்டென ஓர் ஏமாற்றம் முகத்தில் மின்னி மறைந்தது.
""ஏன் பணம் வேணாம்ங்கறே... ரொம்பக் குறைச்சலா இருக்கோ?''
""அதில்லை. இந்த ஸ்கூல்லேயே நான் மட்டும்தான் தேசிய கீதத்தை நல்லாப் பாடினேன். பெருமையாத்தான் இருக்கு. ஆனா பணம் வேணாய்யா...'' என்று இழுத்தான் பாலமுருகன்.
""அதான் ஏன் என்கிறேன்?''
""தேசத்தை விற்கக்கூடாது ஐயா. இந்தப் பணத்தை நான் வாங்கிட்டா, தேசிய கீதத்தை விற்ற மாதிரி ஆகாது?'' என்றான்.
அவருக்குள் சட்டென ஒரு நம்பிக்கை உருவெடுத்து, மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. இன்றைய இளைஞர்கள் பொறுப்பு மிக்கவர்கள். இந்த நாடு அவர்களால் பீடுநடை போடும். இது உறுதி என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.
இப்பொழுது கார் திருப்பெரும்புதூரை விட்டுச் சலனமின்றிச் சாலையில் சறுக்கிச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.