

துன்பம் நெருங்கி வந்தபோதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வமுண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக் கெடுதி பாப்பா-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா:
தேம்பியழும் குழந்தை நொண்டி,-நீ
திடம் கொண்டு போராடு பாப்பா
தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே,-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடைக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
வேதமுடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு!
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி-அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!
உயிர்களிடத்தில் அன்பு வேணும்,-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!
மகாகவி பாரதியார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.