"காகிதப் பூக்கள்'

அது ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அங்கு எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுள் கபிலன் என்ற மாணவன் முரடனாக இருந்தான். பிற மாணவர்களை அடித்துத் துன்புறுத்திக்கொண்டும்,
"காகிதப் பூக்கள்'
Updated on
3 min read

அது ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. அங்கு எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுள் கபிலன் என்ற மாணவன் முரடனாக இருந்தான். பிற மாணவர்களை அடித்துத் துன்புறுத்திக்கொண்டும், கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டும், படிப்பில் ஆர்வம் இல்லாமலும் இருந்தான்.
 அவனைத் திருத்தி அறிவுரை கூறும் ஆசிரியர்களின் சொல்லைக் கேட்க மாட்டான். அவன் அந்தப் பள்ளிக்கே ஒரு கரும்புள்ளியாக இருந்தான். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் சமயத்தில் வேண்டும் என்றே விடுப்பு எடுப்பான் அல்லது சீருடை அணியாமல் வருவான்.
 அவன் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் அவனைக் கடுமையாகத் தண்டிக்காமல் அறிவுரை கூறித் திருத்த முற்பட்டனர். ஆனால், பலன் ஏதும் இல்லை.
 இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு வேறு ஒரு ஊரில் இருந்து அன்பரசன் என்ற ஆசிரியர் மாற்றலாகி வந்தார். பணிக்கு வந்த சில நாள்களிலேயே கபிலனைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டார்.
 "நாம் இவனிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார். ஒருநாள் அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் கபிலன் மேசைக்கடியில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவன் பாடத்தைக் கவனிக்காமல் குனிந்து காகிதப் பூ ஒன்றைச் செய்து கொண்டிருந்தான்.
 அவனருகே சென்று அந்தக் காகிதப் பூவை எடுத்து வகுப்பு முழுவதும் காட்டி, "எல்லா மாணவர்களும் எழுந்து நின்று கை தட்டுங்கள்! நம் நண்பன் கபிலனுக்கு உள்ள திறமையே திறமை! என்ன ஓர் அற்புதமான படைப்பு!' என்று பாராட்டினார்.
 இதுவே பிற ஆசிரியராக இருந்தால் கபிலன் திட்டோ, அடியோ வாங்கியிருப்பான். ஆனால், ஆசிரியர் அன்பரசனின் அணுகுமுறை அவனுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. கபிலனின் தந்தை ஒரு குடிகாரர். தாய் காசநோயால் அவதிப்படுபவர், குடும்ப வறுமையால் பல நாள்கள் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் என கபிலனின் பின்புலம் பற்றிப் பிற மாணவர்களிடம் கேட்டறிந்தார் அன்பரசன்.
 குடும்பச் சூழ்நிலையும், பாராட்டி ஆதரிக்க யாருமற்ற தனிமை ஆகிய எல்லாம் சேர்ந்து கபிலனின் மனதில் வெறுப்பைத் தோற்றுவித்து ஒரு முரடனாக மாற்றியுள்ளன என்பதைப் புரிந்துகொண்டார்.
 அவனுக்கு உளவியல் ஆலோசனை மிக மிக அவசியம் என்பதை உணர்ந்துகொண்ட அவர் அவனிடம் நட்புடன் பழகத் தொடங்கினார்.
 ஒருநாள் அவனிடம் "கபிலா, திடீரென்று கடவுள் உன் முன் தோன்றி உனக்கு வரமளிக்க விரும்பினால் நீ என்ன கேட்பாய்?' என்றார்.
 "என் தாயின் உடல்நிலை தேறினால் போதும்! அவர் ஒருவர் மட்டுமே என் மீது உண்மையான அன்பு செலுத்துபவர்' என்றான் கபிலன்.
 "நீ மனது வைத்தால் உன் தாயின் உடல் நிலை மாறும்! ஆனால் அதற்கு உன் முழு ஒத்துழைப்பும் தேவை!'
 "என்ன செய்யணும்? சார்! சொல்லுங்க நிச்சயம் செய்றேன்!'
 கபிலனின் கையில் ஒரு சிறிய புத்தர் சிலையைக் கொடுத்து "இந்த புத்தர் சிலையை உன் வீட்டில் கொண்டு போய் வைத்து அதற்கு முன் ஒரு சிறிய அட்டைப் பெட்டியை வைக்க வேண்டும்! தினம் ஒரு காகிதப் பூவை செய்து அந்த அட்டைப் பெட்டியில் வைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இப்படி 50 நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருநாள் கூடத் தவறக் கூடாது. இதில் முக்கியமான விஷயம், உன்னிடம் உள்ள தீய பழக்கங்களை எல்லாம் நீ விட்டு விட வேண்டும். பிறரைத் துன்புறுத்தக்கூடாது. யாரையும் அவமரியாதையாகப் பேசக்கூடாது. பெரியோர்களை மதிக்க வேண்டும். உன்னிடம் உள்ள ஒழுங்கீனமான செயல்களை நீ மறந்துவிட வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்து, நம்பிக்கையோடு புத்தர்பிரானிடம் நீ பிரார்த்தித்து வந்தால் பத்து நாள்களுக்குள் உன் தாயின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வர ஆரம்பிக்கும்.
 தீய பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் உன்னுடைய பிரார்த்தனை பலிக்காது. உன் தாய் உனக்கு வேண்டும் என்றால் நீ இதைச் செய்யலாம்!'' என்றார்.
 "நிச்சயமாக செய்கிறேன். சார்!' என்றான்
 கபிலன்.
 "நினைவு வைத்துக்கொள் கபிலா! உன் சுயக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிக மிக முக்கியம்! புத்தர்
 பிரான் உன்னிடம் எதிர்பார்ப்பது அவை இரண்டும்தான்! உன் காகிதப் பூக்களை அல்ல!' என்றார்
 அன்பரசன்.
 
 நாள்கள் நகர்ந்தன. பத்து நாள்களில் கபிலனின் அணுகுமுறையில் நல்ல மாற்றம் தெரிந்தது. ஒருவரிடமும் பேசாமல் இருந்த கபிலன் எல்லோரிடமும் பழக ஆரம்பித்தான். அவனைக் கண்டு பயந்து ஓடிய பிற மாணவர்கள் அவனிடம் பேச ஆரம்பித்தனர். உற்சாகமாக விளையாடினான். தன் தாயின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருவதாகக் கூறினான். அவன் உற்சாகத்தைக் கண்டு பிற ஆசிரியர்கள் "எப்படி சார் அவனை மாத்தினீங்க?' என்று அன்பரசனிடம்
 கேட்டனர்.
 "ஒரு காட்டுக் கொடி படரக் கொம்பில்லாமல் பாதையில் படர்ந்து இருந்ததாம். அது விலங்குகளாலும் மனிதர்களாலும் நசுக்கப்பட்டு சிதைந்து கிடந்ததாம். அதன் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட வழிப்போக்கன் ஒருவன் ஒரு கொம்பை நட்டு அதைப் படர விட்டானாம். அதுபோலத்தான் கபிலனின் நிலையும். அவனிடம் மனம் விட்டுப் பேசியது மட்டுமே நான் செய்த உதவி. மற்றதெல்லாம் அவன் முயற்சியாலேயே நடந்தன. எந்த ஒரு விஷயத்தையும் முப்பது நாள்கள் ஒருவன் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாகவே அவன் ஆழ்மனதில் பதிந்துவிடும். அதுபோலவே கபிலனிடம் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் விதைக்க நான் செய்த ஒரு சிறு முயற்சியே இது! என் வெற்றி 50 நாள்களுக்குப் பிறகே தெரியும்' என்றார் அன்பரசன்.
 
 இரு மாதங்களுக்குப் பிறகு கபிலனின் தாய் உடல் நலம் பெற்று பள்ளிக்கு வந்து ஆசிரியர் அன்பரசனுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார். கபிலனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
 புத்தர்பிரானுக்குப் படைத்த காகிதப்பூக்களை மாலையாகக் கோர்த்து தன் அன்புப் பரிசாக ஆசிரியர் அன்பரசனுக்கு அளித்தான் கபிலன். அவர் அதைப் பள்ளியில் இருந்த புத்தர் படத்திற்கு அணிவித்தார். பிற மாணவர்களின் கரகோஷம் அந்தப் பள்ளி முழுவதும் எதிரொலித்தது.
 ஆசிரியர் அன்பரசன் இரு மாதங்களுக்கு முன் தன் மனைவியுடன் கபிலனின் தாயைச் சந்தித்தார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்வதாகவும், கபிலனின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புவதாகவும் கூறினார்.
 அதன்படி அவருக்கு மருந்து மாத்திரைகள் யாவும் ஆசிரியர் அன்பரசனின் சொந்தச் செலவிலேயே வழங்கப்பட்டன. ஆனால் இந்த விஷயம் எதுவும் கபிலனுக்குத் தெரியாது.
 தன் நடத்தை மாற்றமும் பிரார்த்தனையும் உதவியதால்தான் தன் தாயின் உடல்நிலை சுகம் பெற்றுவிட்டதாகத் தன் நண்பர்களிடம் கூறினான்.
 "அவன் நம்பிக்கையை நாம் முறியடிக்க வேண்டாம்! நாம் இருவரும் சந்தித்தது அவனுக்குத் தெரிய வேண்டாம்!' என அன்பரசன், கபிலனின் தாயிடம் கூறினார்.
 அவன் தாயும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தார்.
 
ந.லெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com