கருவூலம்: நமது தேசியக் கொடி

சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் நாடு சிறு சமஸ்தானங்களாக இருந்தது. இதனால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு கொடி பயன்பட்டு வந்தது.
கருவூலம்: நமது தேசியக் கொடி
Updated on
4 min read

சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் நாடு சிறு சமஸ்தானங்களாக இருந்தது. இதனால் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு கொடி பயன்பட்டு வந்தது. 1857ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கமே ஒரு கொடியை வடிவமைத்தது!

முழுவதும் சிவப்பு நிறத்தில் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் மையத்தில் நட்சத்திர வடிவமும் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதுவே இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட முதல் கொடியாகும். ஆனால் சுந்திரப் போராட்ட வீரர்களும் பொதுமக்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை!

"வில்லியம் கோல்ட்ஸ்ட்ரீம்' (WILLIAM GOLDSTREAM) என்ற ஆங்கிலேய அதிகாரி இந்தியாவின் தனித்துவத்தைப் பறை சாற்றும் விதமாக வேறு ஒரு கொடியை வடிவமைக்க அரசை வலுயுறுத்தினார். கர்ஸன் பிரபு இத்திட்டத்தை நிராகரித்தார்! இருந்தபோதும் அந்நாளைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொரும் ஒரு விதமாகக் கொடியை வடிவமைக்க வலியுறுத்தினர்!

1905ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கப் பிரிவினைக்குப் பிறகு "பிகாஜி காமா' என்பவரால் ஒரு கொடி வடிவமைக்கப்பட்டது. அது மேல் பாகத்தில் பச்சை நிறமும், மையத்தில் மஞ்சள் நிறமும், கீழ் பாகத்தில் சிவப்பு நிறமும் கொண்டிருந்தது. இந்தியாவின் எட்டுத் திசைகளைக் குறிக்கும் வண்ணம் எட்டு வெள்ளை நிறத் தாமரை மலர்கள் பச்சை நிறப் பட்டையில் பொறிக்கப்பட்டிருந்தன. நடுவில் இருந்த மஞ்சள் நிறப் பட்டையில் "வந்தே மாதரம்' என்ற சொல் இந்தியில் பொறிக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிறப் பட்டையின் இடது ஓரம் பிறைச் சந்திர வடிவமும், வலது ஓரம் சூரிய வடிவமும் பொறிக்கப்பட்டிருந்தன!

இந்தக் கொடியும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை!

சுவாமி விவேகானந்தரின் சீடராகிய சகோதரி நிவேதிதா ஒரு கொடியை வடிவமைத்து 1906ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பித்தார். அதுவும் பல காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப் படவில்லை!

1921ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் நடத்தி வந்த "யங் இந்தியா' பத்திரிகையில் இந்தியாவுக்கெனத் தனி தேசியக் கொடி வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்! அந்நாளைய சுதந்திரப் போராட்ட வீரர், "பிங்காலி வெங்கையா' என்பவர் பல்வேறு கொடி மாதிரிகளை வடிவமைத்து இருந்தார்! அவற்றுள் ஒன்றாக தற்போதைய தேசியக் கொடியின் மையத்தில் கைராட்டை வடிவம் பதித்த கொடியை வடிவமைத்தார்!

"ஜாலியன் வாலாபாக்' படுகொலையை எதிர்த்து 1923ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் இந்தக் கொடி பயன்படுத்தப்பட்டது! இந்தக் கொடி "சுவராஜ் கொடி' என்று அழைக்கப்பட்டது! இப்பேரணியில் போலீஸôர் தடியடி நடத்தினர்! இதன் காரணமாக சுதந்திர உணர்வு தீவரமாகியது! தேசியக் கொடிக்கான அகிம்சைப் பேரணிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டன! இக்கொடியே பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சுதந்திரம் பெறும் வரை இந்தக் கொடியே தேசியக் கொடியாகப் பயன்படுத்தப்பட்டது!

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு டாக்டர். ராஜேந்திர பிரசாத், மெüலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, ராஜாஜி, கே.எம்.முன்ஷி, அம்பேத்கார் ஆகியோரைக்கொண்ட குழு தேசியக்கொடியில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டுவந்தது! அதன்படி கைராட்டைக்கு பதிலாக அசோகச் சக்கரம் பயன்படுத்தப்பட்டது!

இப்படி நாம் பயன்படுத்தும் தேசியக்கொடி இந்தியாவில் ஒரே இடத்தில் மட்டுமே தயாரிக்கப் படுகிறது என்பது ஆச்சரியமான விஷயம் அல்லவா? ஆம்!! கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள "காதி கிராமோத்யோக் சங்கம்' மட்டுமே இந்தியா முழுமைக்கும் தேவையான தேசியக் கொடிகளை உற்பத்தி செய்து தருகிறது!

தேசியக் கொடி காதியில் மட்டும் தயாரிக்கப்படுவது ஏன்?

அதைத் தயாரிக்க கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன! இந்தியா குடியரசான பின்பு 1951ஆம் ஆண்டு "இந்தியத் தர நிர்ணயக் கழகம்' (ஆமதஉஅம ஞஊ ஐசஈஐஅச நபஅசஈஅதஈ-ஆஐந) நிறுவப்பட்டது! அது, தேசியக் கொடியின் அளவு, பயன்படுத்தப்படும் வண்ணங்களின் பொலிவு, அசோகச் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை, போன்றவற்றிற்குச் சில வரையறைகளை நிறுவியுள்ளது! அதற்கு உட்பட்டு மட்டுமே தேசியக் கொடியைத் தயாரிக்க வேண்டும்! ஆகவே தனியார் நிறுவனங்களுக்கு தேசியக் கொடியைத் தயாரிக்கும் உரிமம் வழங்கப்படுவது இல்லை!

இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களின் போது தனியார் நிறுவனம் ஒன்று ஹூப்ளியில் உள்ள காதி பவனிடம் நாடு முழுவதும் விதியோகிக்க பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட மூன்று இலட்சம் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்து தருமாறு விண்ணப்பித்து இருந்தது! அப்போது அதன் தலைவராய் பணிபுரிந்த பி.எஸ்.பாட்டில் அவர்கள் இக்கோரிக்கையை நிராகரித்தார்! ஏனெனில் கதர், கதர்பட்டு, அல்லது கம்பளி இழைகள் செறிவூட்டப்பட்ட கதர்த்துணி, இவைகளால் மட்டுமே தேசியக் கொடிகள் உருவாக்கலாம்!

பிளாஸ்டிக், பாலிதீன், நைலான், பாலியெஸ்டர், ரெக்ஸின் போன்ற செயற்கை இழைகளைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கக் கூடாது என்பது சட்டமாகும்!

தேசியக் கொடியை உருவாக்கத் தேவையான கதர்த் துணிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள "பாகல் கோட்' என்ற இடத்தில் அதிக கவனத்துடன் நெய்யப்படுகின்றன! அதன் பிறகு அவை வண்ணம் ஏற்றப்படுகின்றன! அவ்வாறு வண்ணம் ஏற்றப்பட்ட துணிகள் இந்திய தர நிர்ணய சங்கத்திற்கு தரப் பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன! அங்கு சான்றி வழங்கப்படும்!

பிறகு ஹூப்ளியில் உள்ள காதி கிராமோத்யோக சங்கத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அவை இந்தியத் தர நிர்ணயக் கழகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவில் வெட்டப்பட்டு தைக்கப்படுகின்றன. பின்னர் தேசியக் கொடியின் மையத்தில் அசோகச் சக்கரம் தனியாகப் பொறிக்கப்படுகிறது! காஷ்மீர் முதல் கன்னியாகுமர் வரை இந்தியர்கள் பயன்படுத்தும் தேசியக் கொடியை இந்த ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது!

உங்களுக்குத் தெரியுமா?

1. சுதந்திர தினம், குடியரசு தினம் நீங்கலாகப் பிற நாட்களில் தேசியக் கொடியை ஆடையில் குத்திக் கொள்ளக் கூடாது.

2. தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் கயிற்றில் கட்டும்பொழுது தரையில் படாமல் கவனமாகக் கட்ட வேண்டும். மேலும் நீர் நிலைகள், சேறு படிந்த இடங்கள் போன்றவற்றில் படாமல் பார்த்த்க் கொள்ள வேண்டும்.

3. தேசியக் கொடியைத் தலைகீழாகப் பிடித்தம் அல்லது தலைகீழாகக் கட்டுதல் போன்றவை தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படும்.

4. எந்த விதமான எழுத்துக்களையோ, வடிவங்களையோ, மதச்சின்னங்களையோ தேசியக் கொடியின் மீது அச்சடிக்கக்கூடாது!

5 சூரிய உதயம் தொடங்கி சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே தேசியக் கொடியைப் பறக்கவிடவேண்டும்.

6. தேசியக் கொடியின் வடிவத்தைத் திரைச் சீலைகள், கைக்குட்டைகள், தலையணை உறைகள் போன்றவற்றில் அச்சிடக் கூடாது!

7. இடுப்புக்குக் கீழே எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை அணியக்கூடாது!

8. கையில் ஏந்திச் செல்லும்பொழுது தேசியக் கொடியை வலது புறமாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்!

9. இந்திய ஆட்சியாளர்கள் தவிர தனியார் வாகனங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது!

10. அயல் நாட்டு அதிபர்கள், தூதர்கள் போன்றோர் இந்தியாவிற்கு வருகை புரிந்தால் அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தின் வலது புறம் நம் நாட்டுக் கொடியும், இடது புறம் அவர்கள் நாட்டுக் கொடியும் இருக்கும்.

11. சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெறும் சமயத்தில் எல்லா நாட்டுக் கொடிகளையும் பறக்கவிட சர்வதேசச் சட்டம் ஒன்று உள்ளது. அதன்படி எல்லா நாட்டுக் கொடிகளையும் ஒரே அளவுள்ள கொடிக்கம்பத்தில் ஒரே அளவில் பறக்க விடவேண்டும்.

12. இந்தியாவில் இத்தகைய சர்வதேச மாநாடுகள் நடைபெற்றால், முதல் கொடி இந்தியக் கொடியாகவும், அதன் பின்னால், பங்குபெறும் நாடுகளின் கொடிகள் அகர வரிசை முறையிலும் (அகடஏஅஆஉபஐஇஅக ஞதஈஉத) அமைக்கப்படுகின்றன.

13. தேசியத் தலைவர்கள் மரணமடையும் சமயத்தில் தேசியக் கொடியானது அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. அப்படிப் பறக்கவிடும் முடிவையும், கால அளவையும் முடிவு செய்யும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

14. தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவதற்குமுன் அதை முழுமையாகக் கம்பத்தில் ஏற்றி, பின்னர் மெதுவாகக் கீழே இறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும். அப்படி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் கொடிகள் மனிதர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும்.

15. தேசியக் கொடிகள் நிரந்தரமாக ஒன்பது அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அதன் அகல நீளங்கள், 2:3 என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

16. இந்திய தரைப்படையில் முழுக்க முழுக்க கதரால் செய்யப்பட்ட தேசியக் கொடியையும், இந்திய விமானப் படையில் கதர்ப் பட்டால் செய்யப்பட்ட தேசியக் கொடியையும் பயன்படுத்துகிறார்கள். கடல் காற்றில் உள்ள உப்புத் தன்மை இவ்விரு வகைத் துணிகளையும் எளிதில் சேதப்படுத்திவிடும் என்பதால், இந்தியக் கடற்படையில் கம்பளி கொண்டு செறிவூட்டப்பட்ட கதர்த்துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள்.

17. வண்ணம் மங்கிய தேசியக் கொடிகள், பழுதடைந்த தேசியக் கொடிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் மேசை விரிப்பாகவோ, படுக்கை விரிப்பாகவோ தேசியக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது.

தேசியச் சின்னங்களை மதிப்போம்!

அவற்றைக் காப்போம்!

ஜெய்ஹிந்த்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com