ஜீவநாதம்

ஆவடிக் காங்கிரஸýக்குத் தெற்கே இருந்து ஏராளமான பேர் வந்த வண்ணம் இருந்தார்கள்.
ஜீவநாதம்

மறைந்த எழுத்தாளர் விக்கிரமன் நினைவாக அவர் 1955 ஆண்டில் எழுதிய சிறுகதை

ஆவடிக் காங்கிரஸýக்குத் தெற்கே இருந்து ஏராளமான பேர் வந்த வண்ணம் இருந்தார்கள். இதுபோன்ற திருவிழாச் சமயங்களில்தான் வெகு நாள்களாகச் சந்திக்க முடியாத நண்பர்களை நான் சந்திப்பது வழக்கம். செல்வராஜு முதலியார், காயாரோகண சர்மா, கேசவரங்க நாயுடு முதலியோரை எப்படியாவது பார்க்கலாம் என்ற குதூகலம் ஒருபுறம் எனக்கு.

காங்கிரஸ் கட்சியின் நேர்த் தொடர்பு எனக்கில்லையாதலால் விசேஷக் கூட்டங்களுக்குப் போவதாக முடிவு செய்யவில்லை.

அன்று காலையிலிருந்தே மழை விடாது பெய்து கொண்டிருந்தது. ஊரில் அறுவடையைப் பாழாக்கிவிடுமே என்ற வருத்தத்துடன் (எனக்கு நிலம், புலம் ஒன்றுமில்லை. நிலம் வைத்திருப்பவர் கஷ்டப்படுவாரே என்ற வருத்தம்தான்!) கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

யாரோ வெளியில் "ஸார் ஸார்' என்று கூப்பிடும் குரல், மழை தாரை தாரையாகக் கொட்டும் ஒலியையும் மிஞ்சிக் கேட்டது.

""யாரது?'' என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தேன். மழையில் நன்றாக நனைந்துபோய் கேசவரங்க நாயுடு நின்று கொண்டிருந்தார்.

""அடடா... கே.ஆர்.நாயுடுவா? சௌக்கியமா? எப்பொழுது வந்தீர்கள்? ஊரிலே எல்லாரும் நலமா? நம்ம பெரியண்ணக் கவுண்டர் வரவில்லையா?'' என்று வாசற்படியருகிலேயே நின்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தேன்.

கேசவரங்க நாயுடு, கோயில் மாடு மாதிரி ஓர் இடி இடித்துத் தள்ளிக் கொண்டே உள்ளே வந்தார். ""என்னய்யா நீங்க குசலம் விசாரிக்கிற அழகு? மழையிலே அப்பப் பிடிச்சு நனைஞ்சு நனைஞ்சு உடம்பு வெடவெடன்னு நடுங்குது. உங்க வீடு இருக்கிற ஆர்.ஜி.பிளாக்கைத் தேடித் தேடி அலுத்துப் போச்சு. ஊர்லே ஒரு ஹோட்டலிலாவது இடம் இல்லைன்னுட்டான். பிளாக் மார்க்கெட் எங்கோ ஓடி ஒழிஞ்சு போச்சுன்னு பார்த்தேன். இப்ப வந்து சேர்ந்துடுத்து. பீச் ஸ்டேஷன் பிளாட்பாரத்திலே தூங்கலாம்னா போலீஸ்காரங்க பாவம் களைப்பால் தூங்கறாங்க'' என்று ஷர்ட்டைக் கழற்றிக்கொண்டே பேசினார்.

""அது சரி சாமி! நான் செய்த தவறை நீங்களே செய்யறீங்க... மறுபடியும் மழையிலே நின்று பேசறீங்களே'' என்றேன். ஒரு துள்ளுத் துள்ளிக் குதிச்சார் பாருங்க, நிஜமா மழையில்லை; மேலேயிருந்து சொட்டு சொட்டுன்னு மழைத்தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

நாயுடுவை மெல்ல ஆசுவாசப்படுத்தி காப்பி சூடாக ஒரு கப் கொடுத்து ஊர் விவகாரம் பேச ஆரம்பித்தேன். பெரியண்ணக் கவுண்டரைப் பற்றிய பேச்சு வந்தது. ""அவர் எங்கே ஆவடிக்கு வரப் போகிறார். ஆளே மாறிவிட்டார்... தெரியுமா உங்களுக்கு?'' என்றார் நாயுடு.

""எனக்கு எங்கே தெரியும்? நான்தான் கிணற்றுத் தவளையாகி விட்டேனே? நீங்கதான் சொல்லுங்களேன்'' என்றேன்.

நாயுடு அவர்கள் உடையை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார்.

""என்ன அதற்குள்ளா?'' என்று நான் வினவினேன். ""ஆமாம் ஆமாம். ஏகப்பட்ட வேலை இருக்குது. இராத்திரி தங்கறதுக்கு மட்டும் வந்துடறேன். அதுசரி, உங்களுக்கு ஒன்று தரப் போகிறேன் தெரியுமா?'' என்று பூச்சாண்டி காட்டிப் பீடிகை போட்டார்.

""பேஷாகத் தாருங்கள்'' என்று இரண்டு கையையும் நீட்டினேன். பிள்ளைத்தாச்சிபோல் பருத்திருந்த அந்தத் தோல் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார்.

""என்னமோ உங்க பத்திரிகையிலே கதை போடுறீங்களே கதை. இதையும்தான் படித்துப் பாருங்களேன். நான் சொல்லி என் மகள் எழுதியது. ரொம்ப ஜோரா இருக்கும்'' என்று கூறிவிட்டுக் காதோடு காதாக ""பெரியண்ணக் கவுண்டரைப் பத்தி விசாரித்தீங்களே, இதோ அவருடைய கதையே இது. இது மாதிரிக் கதையெல்லாம் போட்டுத் தானய்யா வாசகர்களிடையே புது ருசியை உண்டு பண்ண வேண்டும். படித்து வையுங்கள், இராத்திரி வந்து அபிப்பிராயம் விசாரிக்கிறேன்'' என்று கூறிவிட்டு நகர ஆரம்பித்தார்.

முதலிலேயே கதை கொடுக்கப் போகிறார் எனத் தெரிந்திருந்தால் கதவையே திறந்திருக்க மாட்டேன். நன்றாக மழையில் நனையட்டுமென்று விட்டிருப்பேன்!

அவர் இராத்திரி வந்து, எங்கே கதையைப் படித்து விட்டீர்களா என்று கேட்கப் போகிறார் என்ற பயத்தில், உடனே கம்போசுக்குக் கொடுத்துவிட்டேன். அவர் வந்து கேட்டால் உங்களைக் கேட்குமாறு சொல்லிவிடப் போகிறேன்; படியுங்கள் படியுங்கள்...

""முடிவாகக் கேட்கிறேன் மாமா, நான் ஜீவமாலாவை மறந்துவிட வேண்டியதுதானா?'' என்று நெஞ்சு தழுதழுக்கக் கேட்டான் ரங்கநாதம். எழுந்திருக்கப் போகும் நிலையில் அவன் கரங்கள், நாற்காலியின் பிடியைப் பிடித்திருந்தன.

முகத்தை மூடிக்கொண்டிருந்த நியூஸ் பேப்பரை விலக்கி, மூக்குக் கண்ணாடியைச் சற்றுத் தூக்கிப் பெரியண்ணக் கவுண்டர் பார்த்தார்.

""முடிவாக முடிவாக முடிவாக என்று முப்பதாயிரம் முறை சொல்லியாகிவிட்டது. ஜீவமாலாவுடன் பேசினாலும் சரி, உன்னோடு பேசத் துடித்து அவளை ஓடிவரச் செய்தாலும் சரி, கண்டிப்பாகச் சொல்கிறேன், உன்னுடைய இன்னொரு காலையும் முறித்து விடுவேன் தெரியுமா?'' என்று கர்ஜித்தார்.

போலீஸ் உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆனவராதலால் அவர் குரலில் ஓர் அலட்சியமும், அழுத்தமும், கண்டிப்பும், கம்பீரமும் நிறைந்திருந்தன. அவரைக் கேட்காமலேயே அவருடைய பாதி "வெள்ளியான' மீசை துடித்தது.

"இன்னொரு காலை முறித்து விடுவேன்' என்று ஸ்ரீமான் கவுண்டர் சொன்னது கேட்கப் பலருக்கு "ரங்கநாதத்தின் மற்றொரு காலை அவர் முன்பே உடைத்துவிட்டார் போலிருக்கிறது; இந்தா! ரங்கநாதத்துக்கு வெட்கம் என்பதே கிடையாதா? காதல் என்றால் சுயமரியாதையைக்கூட இழக்க வேண்டுமா? சேச்சே...!' என்ற எண்ணம் தோன்றும்.

ஹூம்... கவுண்டர் அப்படியொன்றும் பெரிய "வஸ்தாது' இல்லை, ரங்கநாதத்தின் கிட்ட நெருங்க. போலீஸ் இலாகாவில் அந்தக் காலத்தில் சிபாரிசின் பேரில் சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வந்தவர் கவுண்டர். தயை, தாட்சண்யம் என்பது எள்ளளவுகூட அவரிடம் இல்லை. லஞ்சமா - அத்தகைய பெயரின் வாசனைகூட அவரருகே வரக் கூடாது. எப்படியோ காலந்தள்ளி ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் பதவியைப் பெற்ற சமயத்தில்தான் இந்த ஆகஸ்ட் போராட்டம் உச்ச நிலையை அடைந்தது.

ஓரிடத்திலே தொண்டர்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனையே கொளுத்திவிட்டார்கள். அந்த இடத்துக் கலவரத்தை ஸ்ரீமான் கவுண்டர் சரியான முறையில் அடக்கவில்லை என்பதற்காகக் கவுண்டரைக் "காரணம்' கேட்டு மேலே இருந்து தாக்கீது வந்தது. கடமையைச் சரிவரச் செய்யும்போதே தனக்கு இப்படித் தாக்கீதா? என்று வெகுண்ட ஸ்ரீமான் கவுண்டர், மறு தபாலிலேயே தன் ராஜிநாமாவை அனுப்பிவிட்டார். காந்திமகானின் உபதேசங்களையும் தேசரத்னம் நேருவின் உலக வரலாற்றையும் படிக்க ஆரம்பித்தார்.

செக்கிழுத்த சிதம்பரத்தின் கதையும், முதல் முழக்கம் செய்த கட்டபொம்மன் வீர வரலாறும் படித்தார். இவை அவரது அகக் கண்களைத் திறந்தன. "ஆகா; இத்தனைக் காலமாகச் சொந்த நாட்டு உப்பைத் தின்று அன்னியன் கையாளாக இருந்து தேசியப் போராட்டத்தை நசுக்கினோமே' என்று வருந்தினார்.

அவருக்கிருந்த உணர்ச்சி ஆவேசத்தில், ""வெள்ளையனே வெளியே போ'' என்று கத்திவிட்டுப் போராட்டத் தீயில் குதித்திருப்பார். இரண்டு தந்திக் கம்பத்தையாவது சாய்த்து

வீழ்த்தியிருப்பார். ஆனால் தாயில்லாத அந்தக் குழந்தைக்காகப் பார்க்க வேண்டி வந்தது. ஜீவமாலா - அவரது செல்வத் திருமகள். இரண்டாவது வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோதே அவளைப் பெற்றவள் மலேரியா ஜுரத்தினால் மண்ணுலகைத் துச்சமாக மதித்து விண்ணுலகடைந்து விட்டாள். இந்த உலகத்தில் அரசாங்க உத்தியோகத்துக்கு அடுத்தபடியாகத் தன் பிரிய மனைவியிடந்தான் பெரும் அன்பு கொண்டிருந்தார் ஸ்ரீமான் கவுண்டர். அவள் போன பிறகு இரட்டிப்பு அன்பைத் தன் மகள்மீது ஸ்ரீமான் கவுண்டர் செலுத்த நேரிட்டது.

ஆனைமலை அடிவாரத்து ஊரைவிட்டு அவருக்கு மாற்றல் நேரிட்டபோது ஜீவமாலாவுக்கு ஐந்து வயது. தான் போகும் ஊருக்கெல்லாம் மகளையும் அழைத்துப்போய் படிப்புக்கும், வளர்ச்சிக்கும் இடையூறு உண்டாக்க அவர் விரும்பாததால், பொள்ளாச்சிப் பெண்கள் கான்வென்ட் ஹாஸ்டலிலே மகளைச் சேர்த்தார்.

விடுமுறை நாள்களில் ஜீவமாலா தந்தையைக் காண வருவாள். ஸ்ரீமான் கவுண்டரின் சகோதரிதான் வீட்டிலே எல்லா வேலைகளையும் கவனித்து வந்தாள். அவளுக்கும் வேறு போக்கிடமில்லை. ஒரே மகனான ரங்கநாதம் வளர்ந்து பெரியவனாகி நான்கு காசு தனக்கென்று சம்பாதிக்கும் வரையில் அவளுக்கு நிம்மதி ஏது? தன் மகனும் பெரிய மனுஷனாகிச் சம்பாதித்து, ஜீவமாலாவைக் கல்யாணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தினால் அதைவிட அவளுக்குச் சொர்க்கம் வேறேது?

மனிதன் நினைக்கிறபடி எல்லாம் இந்த உலகத்தில் நடந்துவிட்டால் பிறகு வாழ்க்கையில் சுவை என்பதேது? மேள வாத்யம் இல்லாத கல்யாணம் போலும், சர்க்கரை இல்லாத காப்பி போலும், கதை போடாத பத்திரிகை போலும் சோபை இழந்து தோன்றும்!

அதன்படியோ என்னவோ ஸ்ரீமான் கவுண்டர் போலீஸ் உத்தியோகத்தில் பிரமோஷன் அடைந்து அடைந்து மேலே ஏற ஏற, ரங்கநாதத்தின் மீது அவருக்கு ஏதோ ஒருவிதக் கோபம் வளர்ந்துகொண்டே வந்தது.

ரங்கநாதம் சிறு வயதிலிருந்தே சுறுசுறுப்பு மிகுந்தவனாகக் காணப்பட்டான். பள்ளிக்

கூடத்துத் தமிழ் ஆசிரியர் ஒருவர் தேசபக்தி மிக்கவர். பாரதியார் பாடலென்றால் அவருக்கு உயிர்.

""இதந்தரு மனையி னீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும்

பதந்திரு விரண்டு மாறிப்

பழிமிகுந் திழிவுற்றாலும்

விதந்தரு கோடி யின்னல்

விளைத்தெனை யழித்திட்டாலும்

சுதந்திர தேவி! நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே!''

என்று அவர் குரலெடுத்துக் கம்பீரமாகப் பாடும்பொழுது அவர் கண்கள் ஜ்வலிக்கும். மாணவர்களின் உள்ளங்களிலே தேசிய உணர்ச்சிக் கனல் கொழுந்துவிட்டெரியும்.

ரங்கநாதம், பாரதியின் பாடலுக்கு அடிமையானான். குரல் சாதகமாக அமைந்ததால் நல்ல ராகம் போட்டுப் பாரதியார் பாடல்களைப் பாடலானான். 1955 கதையை நான் சொல்லவில்லை. இப்பொழுது அவ்வளவு பிரமாதமாகப் பாடினால் பேஷான தங்கப் பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் கிடைக்கும். அப்பொழுது அவன் பாடும்போது, "சரிதான் இவனும் கதர்க் குல்லாக் கட்சியில் சேர்ந்துவிட்டான்' என்று கூறினார்கள். ரங்கநாதத்தின் தாயாரோ, ""ரங்கநாதா! இந்த வம்புக்கெல்லாம் ஏன்டா போகிறாய்? நீ பாட்டுக்குப் பொன்போல் படித்துப் பாஸ் செய்யடா. மாமாவுக்குத் தெரிந்தால் ரொம்பவும் கோபிப்பார்'' என்றாள்.

விடுமுறைக்கு வரும் ஜீவமாலாவுக்கு, அத்தான் ரங்கநாதம் பாடும் பாரதியார் பாடல்களைக் கேட்டு மிக வியப்பாயிருக்கும். பதின்மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவள், "கான்வென்ட் ஹாஸ்ட'லிலேயே அடைபட்டிருந்தபடியால் இந்த உலகமே அவளுக்கு வியப்பாய் இருந்தது.

""ஆண்ட்டி! டமிள்லேகூட நல்ல நல்ல பாட்டிருக்குதா?'' என்று நடனமாடுவதுபோல் தமிழைப் பேசி, கடைக்கண்ணால் கதர்ச் சொக்கா ரங்கநாதத்தையும் ஒருமுறை பார்த்து ஆச்சரியப்படுவாள்.

ஸ்ரீமான் கவுண்டர் ஒருநாள் மிக ஆத்திரத்துடன் வந்து சேர்ந்தார். சகோதரியைக் கூப்பிட்டார். ""இதப் பாரு, உம்மவன் செய்றது நன்றாயில்லை. காந்திக் கட்சி அப்படி இப்படின்னு சொல்றதுனாலே எனக்கு டிபார்ட்மெண்டுலே பெயர் ரொம்பக் கெடுது. ஒண்ணு உம் மவன் அதெல்லாம் விட்டுடணும். அல்லது வீட்டை விட்டுப் போயிடணும்'' என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

ரங்கநாதத்தின் தாய், தன் மகனை எவ்வளவோ கேட்டுக் கொண்டாள். ""நீ படித்துப் பட்டம் பெற்றுக் கலெக்டராய் வருவாய் என்று கனவு

காணுகிறேனடா; சிறிது காலமாவது பிறர் சாப்பாடு சாப்பிடாமல் நான் நானாக வாழ முடியும் என்று கனவு காண்கிறேனடா; மாமா சொல்வதைக் கேளடா; நம்மால் அவருக்கு நல்லது வரவில்லை என்றாலும் கெட்டது வரக்கூடாதடா'' என்று தாயார் கண்கலங்க மகனைக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

ரங்கநாதம் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான். இதயமோ நிமிர்ந்தபடியே இருந்தது. அவன் போக்கு சரியானது என்று திடமாகக் கூறியது. தாயார் அவன் மௌனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ""அப்பா! மாமாவின் நல்லன்பு நமக்கு ரொம்பவும் வேண்டுமப்பா. உனக்காகத்தானப்பா ஜீவமாலா வளர்கிறாள். நீ கெட்டிக்காரனாக இருந்தால் அவளை உனக்குக் கொடுப்பதில் மாமாவுக்கு முழுச் சம்மதமிருக்குமப்பா!'' என்றாள்.

விஸ்வாமித்திரரின் தவத்தையே ஆடலணங்கின் மோகாஸ்திரம் கலைத்துவிட்டதே. மாமன் மகள் ஜீவமாலா... ரங்கநாதம் ஒரு கணம் கலங்கினான். அவன் உடலில் ரோமாஞ்சலி எழுந்தது. ஜீவமாலாவை அகக்கண்ணால் மட்டும் கண்டுகொண்டிருந்த ரங்கநாதம் புறக்கண்ணாலும் காணத் தொடங்கிவிட்டான். தேசபக்தியுடன் இதயத்தில் மற்றொரு பொருளுக்கும் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறதென்பதை அவன் உணர்ந்தான். ஆனால், அவன் அதற்காகக் கலங்கிவிடவில்லை. திடமான ஓர் எண்ணம் அவன் உள்ளத்தே எழுந்து விட்டது. தாய்மீதுள்ள பாசம் குமுறி வர நெஞ்சு தழுதழுக்க, ""அம்மா! என்மீது வருத்தப்படாதே. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் வான உலகத்தைவிட மிகச் சிறந்தது என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். உங்களுக்கு நிச்சயம் என் போக்கில் வெறுப்பில்லை. சமய சந்தர்ப்பத்திற்காக அப்படியெல்லாம் சொல்கிறீர்கள். தாயின் ஆசி இருக்கையில் பொன்னாட்டிற்குத் தொண்டு செய்வதை நிறுத்த முடியாதம்மா'' என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டான்.

பிறகு ஓரிரு முறை தாம் அவன் தாயை, மாமா இல்லாத வேளைகளில் வந்து பார்த்தான். பிறகு அவனைப் பற்றிய தகவலே இல்லை. பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டதாக எல்லாரும் ஒருமுகமாகக் கூறினார்கள். பிறகு செய்தி விதவிதமாக இருந்தது.

ஆறு மாதங்கள் கழித்து ஒருநாள் ஸ்ரீமான் கவுண்டர் போலீஸ் உடுப்புடனேயே வீட்டிற்குள் தடதடவென்று நுழைந்தார்.

""அக்கா, அக்கா! ரங்கநாதம் சமீபத்தில் உங்களை வந்து பார்த்தானா?'' என்று படபடப்புடன் கேட்டார்.

""இல்லையே, தம்பி எங்கிட்டு போச்சோ? என்ன ஆச்சோ? தெரியலையே; உனக்குத் தகவல் தெரியுமா?'' என்று கேட்டாள்.

""தகவலா? அதைத் தேடும் பொறுப்பைத்தானே என்மீது சுமத்தியிருக்கிறார்கள். ராஜத் துவேஷப் பிரசங்கத்திற்காக அவனைக் கைது செய்ய உத்தரவு. தெரியுமா?'' என்று கூறிவிட்டுப் பூட்ஸ் "சரக் சரக்' என்று திடத்தையும் ஆத்திரத்தையும் மாறி மாறி ஒலிக்கப் போய்விட்டார்.

தாயார் ஒன்றும் புரியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். மனோவியாகூலம் அவர்களைச் சூழ்ந்து பிரமை தட்டச் செய்தது.

பதினேழு - பதினெட்டு வயதடைந்த ஜீவமாலாவுக்கு மேலே என்ன படிப்பதென்றே புரியவில்லை. ஸ்ரீமான் கவுண்டர் அவள் கல்யாணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதைப்பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருந்த அவர் சகோதரியும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லையே... வாய் திறந்து என்ன செய்வது? அதற்கு உரியவன் சமாச்சாரமேதான் தெரியவில்லையே.

ஜீவமாலா, வானிலை ஆராய்ச்சிப் படிப்புக்காகப் பம்பாய் போவது என்று ஏற்பாடாகியது. இந்தியாவிலேயே அந்தக் காலத்து அரசாங்கத்தாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் ஜீவமாலாதான்.

பம்பாய்க்கு அருகில் உள்ள குன்றில் விடுமுறை நாள் ஒன்றில் இயற்கை வனப்பை அனுபவிக்க வந்தபோதுதான் ஜீவமாலா யாரையோ பார்த்துத் திடுக்குற்று நின்றாள். பாரதியின் புதுமைப் பெண்ணுக்குள்ள "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி'களும் கொண்டு திகழும் ஜீவமாலா இதுவரை இந்தச் சமயம் திகைப்பும், அச்சமும் கொண்டு நின்றதுபோல் வேறெப்போதும் இருந்ததில்லை.

அங்கிருந்த பெஞ்சின் மீது ரங்கநாதம் அமர்ந்து வானையும் கடலையும் நோக்கி இருந்தான். யாரோ வரும் அரவம் கேட்டுச் சட்டெனத் திரும்பிய அவனும் ஜீவமாலாவைக் கண்டு திகைத்து விட்டான். ஒரு கணம் இருவரும் தாம் காண்பது உண்மைதானா என்பதைக் குறித்து ஆராய்ந்தனர். இந்த இடத்தில் திருவள்ளுவரின் திருக்குறளில் காமத்துப்பால் 110 ஆம் அதிகாரத்தை 1100 ஆம் பாடலை நினைவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

""யார் ரங்கநாத அத்தானா?''

""யார் ஜீவாவா?''

இருவரும் பேசத் தொடங்கினர். பேசிக்கொண்டே இருந்தனர். ஜீவமாலா கையில் கட்டியிருந்த சிறு கடிகாரத்தின் பெரிய முள், மூன்று முறை சுற்றி வந்துவிட்டது.

ரங்கநாதம், தான் ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து எல்லாவற்றையும் கூறினான். தன்மீது வாரண்ட் இருப்பது தெரியுமென்றும், தன் மாமாவின் கையில் அகப்படக்கூடாது என்றே அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாகவும் கூறினான்.

ஜீவமாலா, தன் படிப்பைப் பற்றிப் பேசினாள். தொலைவில் மெல்ல சந்திரோதயம் ஆகியது. அபூர்வமான அந்தச் சந்திரோதயத்தைப் பார்த்து மெய்மறந்திருந்து இருவரும் புறப்பட்டனர்.

பிறகு நான்கைந்து முறை இருவரும் சந்தித்தனர். மௌன மொழியில் இருவரும் பல மணி நேரம் பேசினர். கண் இமைகள் படபடவெனத் துடிப்பதன் மூலம் இருவர் இதயமும் தந்தி மூலம் செய்தி அனுப்பிக் கொண்டன.

ஜீவமாலா, தன் படிப்பைப் பற்றியும், தன் சௌக்கியத்தைப் பற்றியும் ஊரில் தன் தந்தைக்குக் கடிதம் எழுதினாள். அத்துடன், தான் ரங்கநாத அத்தானைச் சந்தித்ததாகவும், அவரும் சௌக்கியம் என்றும் எழுதியிருந்தாள்.

நடுவே ஒரு வாரம் வரை அந்தக் குன்றுக்கு வந்து ஜீவமாலாவைச் சந்திக்க ரங்கநாதத்தால் முடியவில்லை. ஜீவமாலா எதிர்பாராதவிதமாக அன்று ரங்கநாதம் வந்து சேர்ந்தான். அவர்கள் பேச ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள்கூட ஆகியிருக்காது.

நான்கைந்து பேர் மாஞ்செடி, கொடிகளின் இடுக்குகளிலிருந்து வெளியே தோன்றினர். ரங்கநாதத்தை நோக்கி நடந்தனர். அவர்களில் ஸ்ரீமான் கவுண்டரும் ஒருவர். தந்தையைக் கண்ட ஜீவமாலா திடுக்கிட்டாள் என்று சாதாரண மொழியில் கூறினால் போதாது. அந்தப் பம்பாய்க் குன்றிலிருந்து கீழே தலைகீழாகப் பிடித்துத் தள்ளப்பட்டவள் போலானாள்.

ரங்கநாதத்தைப் பம்பாயிலிருந்து லாரியில் எங்கோ பெயர் சொல்லாத இடத்துக்குக் கொண்டு சென்றனர். அவனைப் பாதுகாக்கப் பத்து போலீஸ் வீரர்கள்! குண்டுங் குழியுமாய் இருந்த அந்தப் பாதையில் அந்த லாரி போகும்பொழுது பாதி உயிர் போய்விடும் போலாகிவிட்டது. அளவுக்கு மீறிய வேகத்தில் போய்க்கொண்டிருந்த அந்த லாரி, இரவு ஒரு மணிக்கு ஒரு பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

÷எல்லாருக்கும் படுகாயம்; ரங்கநாதத்திற்கு இடக் காலில் பலத்த அடி. அருகே இருந்த மருந்தில்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இன்னும் நோயை வளர்த்து, ஜில்லா ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தங்கள் தொழில் பழகுவதற்குக் கொஞ்ச நாள் வைத்து, பிறகு "படே' ஆஸ்பத்திரியில் கடைசியாகச் சேர்க்கப்பட்டான் ரங்கநாதம்.

÷தான் எழுதிய கடிதம்தான் ரங்கநாதம் கைதாவதற்குக் காரணம் என்பதை ஜீவமாலா அறிந்தபோது தூண்டிற் புழுவினைப்போல், சுடர்விளக்கினைப்போல் துடித்தாள். ஆராய்ச்சிப் படிப்பை மூட்டை கட்டி விட்டு ஊருக்கு விரைந்தாள். இதனால் தந்தைக்குப் பதவி உயர்வு கிடைத்தது அறிய அவள் மனம் பதறியது. ஸ்ரீமான் கவுண்டருக்கு ஜீவமாலாவையும், தன் சகோதரியையும் சமாதானப்படுத்துவதே பெரிய பிரச்னையாகிவிட்டது. ரங்கநாதத்தின் தாயாருக்கு உடல்நிலை மோசமாகி ஒருநாள் திடீரென உயிரும் பிரிந்தது. தன் தாயாரின் சடலத்தைக்கூடப் பார்க்க முடியாத துரதிர்ஷ்டவசமாக ரங்கநாதம் தேசவிடுதலைக்குச் சிறையில் தவம் செய்து வந்தான். ரங்கநாதத்தை அடைய யாருடனும் பேசாது, எல்லாவற்றிலும் வெறுப்புற்று வீட்டினுள் ஜீவமாலா தவம் செய்து வந்தாள். இவ்வளவு குழப்பத்துக்கிடையில் 1942-ஆம் ஆண்டு வந்து சேர்ந்தது. ஸர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பதவி வகித்த ஸ்ரீமான் கவுண்டருக்குப் பெரும் பெரும் தொல்லைகள் காத்திருந்தன. வீட்டிலேயே அமைதியைக் காண முடியாத ஸ்ரீமான் கவுண்டர் வெளியே சென்றால், "வெள்ளையனே வெளியேறு; வெள்ளையனுக்கு அடி வருடும் போலீஸ் உத்தியோகஸ்தரே ராஜிநாமா செய்' என்ற கோஷம் இன்னும் குழப்பத்தைக் கொடுத்தது. ஸ்ரீமான் கவுண்டர்மேல் புகார் அதிகமாகியது. ஓரிடத்தில் போலீஸ் ஸ்டேஷன் எரிக்கப்பட்டது. அதைக் காக்கத் தவறியதாக ஸ்ரீமான் கவுண்டர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்குக் காரணங்கேட்டு வந்த மேலிடத்துக் கடிதம் ஸ்ரீமான் கவுண்டரை ஆத்திரமடையச் செய்தது. கால் கடுதாசியை நீட்டிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ஸ்ரீமான் கவுண்டர்.

÷ஜீவமாலாவின உடல்நிலை சரியாகவே இல்லை. ஒருமுறை ரங்கநாதத்திடமிருந்து "...........' சிறை விலாசமிட்டுக் கடிதம் வந்திருந்தது. உள்ளத்தை உடைத்துக் கொட்டியிருந்தான் நாதம்! பதில் திரும்ப எங்கே போடுவது? ஜீவமாலாவுக்கு அந்தக் கடிதம் "ஓயாஸிஸ்'ஸாகக் காட்சியளித்தது.

÷லாரி விபத்திற்குப் பிறகு ரங்கநாதத்தின் இடக் கால் சரிவர நடக்க முடியாது போய்விட்டது. சிறைவாச பலவீனமும் நொண்டும் நிலைமையும் சேர்ந்து ரங்கநாதத்தை அடியோடு மாற்றியிருந்தன. வெளியே காங்கிரஸ் தலைவர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. நல்ல முடிவு ஏற்படும்போல் தோன்றியது. சிறையிலிருந்த காவல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

÷உளச்சோர்வும், உடல் சோர்வும் கொண்டு ரங்கநாதம் ஊர் வந்து சேர்ந்தான். தன் மகள் உடல்நிலை சரியாவதற்காகத் தன் மகளை வந்து சந்தித்துப் போக அனுமதித்தார் ஸ்ரீமான் கவுண்டர். ஆனால், நொண்டி நொண்டி நடக்கும் ரங்கநாதத்தைக் கண்டால் அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஜெயிலிலிருந்து திரும்பி வந்த ரங்கநாதத்திற்கு வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரி சபை அமைந்தும் பயனில்லாது போய்விட்டது.

÷காட்டுப் பக்கம் 5 ஏக்கர் நிலம் கொடுப்பதாகக் கேள்விப்பட்டு அதற்கு விண்ணப்பம் அனுப்பி, கலெக்டர் ஆபீஸýக்கு நடந்து நடந்து அவன் கால் தேயத் தொடங்கிவிட்டது. இதற்கிடையில் ஜீவமாலாவைப் புலிக்காரன்பட்டி மில் சொந்தக்காரர் மகனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க ஸ்ரீமான் கவுண்டர் திட்டமிட்டபோதுதான் ஜீவமாலாவும் ரங்கநாதமும் திடுக்கிட்டனர். காரியம் மிஞ்சிவிடும் கட்டத்தை நெருங்கி விட்டதோ என எண்ணினர். அப்பொழுதுதான் ரங்கநாதம், ஸ்ரீமான் கவுண்டரை அணுகி, ""முடிவாகக் கேட்கிறேன் மாமா! நான் ஜீவமாலாவை மறந்துவிட வேண்டியதுதானா?'' என்று நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு கேட்டான்.

÷ஸ்ரீமான் கவுண்டர் மிகவும் அலட்சியமாக பதில் கூறியபிறகு ரங்கநாதம் அங்கே நிற்கவில்லை. ஜீவமாலாவையும் சந்திக்கவில்லை. ஊருக்கு இரண்டு மைல் மேற்கே காத்தவராயன் மலை அருகே ரங்கநாதம் ஆனந்தமாகப் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகப் பலர் கூறினர்.

÷ஜீவமாலா துணிந்து செயல்பட்டாள். தன்னை மணக்கவிருக்கும் புலிக்காரன்பட்டி மில் சொந்தக்காரரின் பிள்ளைக்கு "பிரைவேட்' என்று போட்டு ஒரு கடிதம் எழுதினாள். தான் தன் அத்தானையே மணக்க விரும்புவதாகவும், இப்படித் துணிந்து கடிதம் எழுதியதற்கு மன்னிக்கும்படியும் எழுதிப் போட்டுவிட்டாள். கல்யாணம் நின்றுவிட்டது. ஸ்ரீமான் கவுண்டருக்குப் பலத்த ஏமாற்றம். ரங்கநாதம் தான் ஏதோ கூறிக் கல்யாணத்தைக் கலைத்துவிட்டான் என்ற ஆத்திரம்.

÷அந்தப் பக்கங்களில் ஒரு பெரிய சிறுத்தைப் புலி அட்டகாசம் செய்து வந்தது. இரவோடிரவாக ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிப் போனது. ஓரிருவரை ருசியும் பார்த்துவிட்டது. போலீஸ் அதிகாரிகள் முகாம் போடத் தொடங்கினர்.

÷காத்தவராயன் மலையருகேதான் அது ஒளிந்திருப்பதாகக் கேள்விப்பட்ட போலீஸ் கோஷ்டி, ஸ்ரீமான் கவுண்டரையும் அழைத்துக் கொண்டு கிளம்பியது. குறி தவறாமல் சுடவல்லவர் ஸ்ரீமான் கவுண்டர்.

÷சிறுத்தையைத் தேடி வந்தவர்களுக்கு இனிய குழலோசை கேட்டது. பெரிய மரத்தடியிலுள்ள பாறை ஒன்றில் ரங்கநாதம் அமர்ந்து ஆனந்தமாகக் குழல் ஊதிக் கொண்டிருந்தான். சிறையிலிருக்கும்போது அவன் கற்ற கலை அது.

÷அந்தப் பாறைக்கு அருகே கிடுகிடு பள்ளம். எல்லாரும் துப்பாக்கியில் தோட்டாவைப் போட்டுத் தயார் செய்துகொண்டனர். சிறுத்தை இருக்குமிடம் அங்குதான் என்று ஒருவன் குறிப்பிட்டான். இவர்கள் கூடிப் பேசிக்கொண்டிருப்பதற்குள் சிறுத்தையே நேரிடையாகப் பேட்டி காண வந்துவிட்டது.

÷""ஷூட்... ஷூட்'' என்று கூக்குரல். "டப், டிப், டுப்' என்று தோட்டாக்கள் பறந்தன. சிறுத்தை துடித்து விழுவதற்கும், "ஆ; ஐயோ' என்று குரல் எழுவதற்கும் சரியாக இருந்தது. ரங்கநாதத்தின் தொடையில் குண்டு பாய்ந்திருந்தது. அவன் கீழே பள்ளத்தில் வீழ்ந்து கிடந்தான். கவுண்டர் சுட்ட குண்டுதான் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமையே இல்லை.

÷ஐயோ கஷ்டமே; கடைசி காலத்தில் ஸ்ரீமான் கவுண்டர் மீது கொலை செய்ய முயன்ற குற்றம்கூட வரவேண்டுமா?

÷(இந்த நாயுடு மிகப் பொல்லாதவராக இருக்க வேண்டும். அல்லது யாராவது தொடர்கதை எழுதுபவரிடம் யோசனை கேட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் இதற்குமேல் ஒன்றும் எழுதாமல் என்னிடம் கதையைக் கொடுத்திருப்பாரா? பின்னர் அந்த ரங்கநாதம் என்ன ஆனான்? ஜீவமாலாவின் கதை என்ன? ஸ்ரீமான் கவுண்டருக்கு எவ்வளவு தண்டனை கிடைத்தது என்றெல்லாம் அறிய நீங்கள் ஆவலாக இருக்க மாட்டீர்களா?)

÷இரவு இரண்டு மணிக்கு நாயுடு கதவை இடித்தார். நான் அவரைக் கேட்கும்முன்னமே, ""மகாநாடாம் மகாநாடு. ஒரு கப் காப்பி சாப்பிட வழியில்லை. இந்த ரயிலோ அழகோ அழகு!

சத்யமூர்த்தி நகரிலிருந்து கடற்கரைக்கு நம் நாட்டுத் தொழில் முன்னேற்றம் நகரும் வேகத்தில் அல்லவா வண்டி நகருகிறது? (சே... சே ஊர்கிறது)'' என்று கூறிவிட்டு உட்கார்ந்தார்.

மனிதன் பசியாயிருக்கிறான் என்று தெரியும். "ஸ்டவ்'வில் ஒரு கப் காப்பி தயாரித்துக் கொடுத்தேன். காப்பியைச் சாப்பிட்டுக் கொண்டே, ""என்ன ஆசிரியர்வாள்! கதை எப்படி?'' என்றார்.

÷""கதை எப்படியா? முடிவு எங்கே நாயுடுகாரு?'' என்று கேட்டேன்.

""முடிவு இல்லையா? அடாடா...'' என்று தன் தோல் பையை, தேடி, ""ச்சௌ இங்கேயிருக்கு ஸார்'' என்று ஒரு கத்தையைத் தூக்கிப் போட்டார்.

÷நான் நடுநடுங்கிப் போய்விட்டேன்.

÷""ஐயா... பத்திரிகாசிரியர்களைப் பயமுறுத்த எப்படியெல்லாம் கற்று வைத்திருக்கிறீர்கள்? நான் இதற்குச் சளைத்தவனல்லன். என்னால் படிக்க முடியாது. இத்தனைப் பக்கத்திலுள்ளதையும் சுருக்கிக் கூறுங்கள்'' என்றேன். அவர் சொன்னதாவது:

÷

÷ஸ்ரீமான் கவுண்டருக்கு ஒரு கணத்தில் விஷயம் புரிந்து விட்டது. சிறுத்தை மீதுதான் குறி வைத்தார். ரங்கநாதம் இருந்த இடம் சிறுத்தை போலவும், அது பாய்வது போலவும் தோன்றவே அவர் கை "குதிரை'யைத் தட்டிவிட்டது.

÷ரங்கநாதத்தின் காலில் குண்டு சரியாகப் பாய்ந்துவிட்டது. மற்றொரு காலையும் முறித்து விடுவதாகச் சொன்னோமே, அது பலித்துவிட்டதே என்று ஸ்ரீமான் கவுண்டர் துடியாய்த் துடித்துப் போனார். வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டார். ரங்கநாதத்துக்கு ஓர் ஆபத்தும் இல்லாமல் காப்பாற்றினால் வெள்ளிக் காலே வாங்கி வைத்துவிடுவதாகப் பழனி ஆண்டவனுக்கு வேண்டிக் கொண்டார். பழனிமலைத் தெய்வம் சாதாரண தெய்வமா?

÷ஸ்ரீமான் கவுண்டர் அல்லும் பகலும் ஆஸ்பத்திரியில் ரங்கநாதம் படுக்கையருகேயே இருந்தார். ரங்கநாதத்தைத் தான் வேண்டுமென்றே சுடவில்லை என்பதை நிரூபிக்க முயன்றார். போலீஸ் அதிகாரிகள் ரங்கநாதத்தின் வாக்குமூலம் கேட்டபோதுகூட, ""ஸ்ரீமான் கவுண்டருக்கும் எனக்கும் விரோதமே இல்லை. என்னை வளர்த்து ஆளாக்கியவர் அவர்'' என்று அவன் கூறவும், ஸ்ரீமான் கவுண்டருக்கு உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ""ஆகா; இவ்வளவு நாள் என்ன தவறு செய்துவிட்டோம்'' எனத் துடித்தார்.

ரங்கநாதம் பூர்ண குணமாகி எழுந்தான். எழுந்தபோது அவன் காலைச் சாய்த்துச் சாய்த்து நடக்கவில்லை. எந்தக் காலில் முன்பே ஊனம் ஏற்பட்டதோ அந்தக் காலிலே குண்டு பாய்ந்தது. ஆப்ரேஷன் செய்தபோது ஏதோ நரம்பையும் எலும்பையும் சரி செய்யவே முன்பு வடக்கத்திய டாக்டரால் முடியாத ஒரு காரியத்தைத் தெற்கத்திய டாக்டர்கள் முடித்தனர்.

ஆக, நொண்டியாக இல்லாத ரங்கநாதத்தைக் காணக் காண ஸ்ரீமான் கவுண்டருக்கு ஒரே பூரிப்பு. அத்துடன் பழைய தியாகிகளைத்தான் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்க வைக்கப் வோவதாகவும், புலிக்காரன் புதூர் தொகுதிக்கு ரங்கநாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வந்தது. ஸ்ரீமான் கவுண்டருக்கு எல்லாக் குறையும் நீங்கிவிட்டது. மருமகன் நொண்டியல்லர், எம்.எல்.ஏ. வேறென்ன வேண்டும்? ஜாம் ஜாம் என்று ஜீவமாலாவுக்கும் ரங்கநாதத்துக்கும் திருமணம் நடந்தது.

நீங்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது எனக்குத் தெரியும். இந்தக் கதைக்கு "ஜீவநாதம்' என ஏன் பெயர் கொடுத்தேன் என்றுதானே? பழையகால முறை மீண்டும் வரட்டுமே என்றுதான் கதாநாயகி ஜீவமாலாவையும், நாயகன் ரங்கநாதம் பெயரையும் சேர்த்துவிட்டேன். "ஜீவமாலா' அல்லது "தியாகியின் காதல் கதை' என்று இரட்டைப் பெயரும் வைத்திருக்கலாம்! எப்படி என் கற்பனை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com