ஜெபமாலை!

ஜெபமாலை!

ஊட்டி மலைச்சரிவு! பச்சைப் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்கள்! ஆங்காங்கே வீடுகள் புது வண்ணப் பூச்சுகளுடன் ஜொலித்துக் கொண்டிருந்தன.

ஊட்டி மலைச்சரிவு! பச்சைப் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்கள்! ஆங்காங்கே வீடுகள் புது வண்ணப் பூச்சுகளுடன் ஜொலித்துக் கொண்டிருந்தன. முட்டைக்கோஸ், காரட், உருளைக்கிழங்கு, முதலியவை பயிரிடப்பட்டிருந்தன. வீடுகளின் பின்புறங்களில் வாழை, பாக்கு மரங்கள், மற்றும் மரவகைகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தன.

மலை உச்சியில் புனித வியாகுல அன்னை ஆலயம்! வெள்ளை அடிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சி அளித்தது! இரவு நேரத்தில் கோபுர உச்சியில் எரியும் நியான் விளக்கின் ஒளி அழகாக வெகுதூரம் பரவியிருக்கும். கிறிஸ்துமஸ் விழா நெருங்கிக் கொண்டிருந்தது!

ஆலயத்தை ஒட்டிய மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

வீடுகளில் குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் காட்சிகளை வடிமைத்திருந்தனர்! கேரல் ரவுண்ட் நடந்துகொண்டிருந்தது! கிறிஸ்துமஸ் தாத்தா வீடுவீடாகச் சென்று சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்தார்.

சிறுவன் ஜான், மற்றும் அவன் தங்கை கேத்தரின் இருவரும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா ஜானின் வீட்டுக்குள் வந்து விட்டார்! இருவருக்கும் ஒரே ஆனந்தம்! உள்ளே நுழைந்த சான்டாகிளாஸ் தாத்தா இருவருக்கும் ஆளுக்கொன்றாக இரு ஜெபமாலையைப் பரிசாகத் தந்து விட்டு ஆசீர்வதித்துச் சென்றுவிட்டார்! பொன்னிற மணிகளுடன் ஜெபமாலை பார்க்க அழகாக இருந்தது! "இந்தப் பரிசு கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்' என்று பெரியவர்களும் சொன்னார்கள்! இருவருக்கும் சந்தோஷம்தான்!

காத்தரீனுக்கு ஜெபம் செய்யத் தெரியாது. ஜானுக்குத் தெரியும். சென்றமுறை அவனுக்கு அவனுடைய மாமா சொல்லித்தந்துவிட்டுப் போயிருந்தார்.

மார்கழி மாதக் குளிர்! பனிப்பொழிவு! குளிர் தாங்காமல் மக்கள் கம்பளி உடைகளுடனும், தொப்பிகள் மற்றும் ஷால்களுடனும் நடமாடிக்கொண்டிருந்தனர்.

ஜான் மற்றும் கேத்தரினின் பெற்றோர்கள் கோத்தகிரியில் இருக்கும் தாத்தா,பாட்டியை அழைத்துவரச் சென்று விட்டனர். சிறுவர்கள் வீட்டில் தனியாக இருந்தனர். மறுநாளே வந்துவிடுவதாகவும், அதுவரை வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் இரண்டு வேளைக்கு இருவருக்கும் சாப்பாடு வைத்திருப்பதாகவும் மேலும் பசித்தால் ரொட்டியும் ஜாமும் வைத்திருப்பதாகவும் சொல்லிவிட்டுச் சென்றிருந்தனர். இருவரும் வெளியில் செல்வதை மரத்தின் பின்னால் ஒளிந்திருந்த ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்!

மாலை கதிரவன் மறைந்து இருட்ட ஆரம்பித்தது. காத்தரீன் ஜெபம் செய்யும் முறையை ஜானிடம் ஆர்வமாகக் கேட்டாள். ஜான், காத்தரீனுக்கு ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்தான். இருவரும் திருக்குடும்பப் படத்தின் முன்பு மண்டியிட்டு ஜெபமாலையை உருட்டிக் கொண்டு ஜெபம் செய்தனர். பிறகு கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டனர். பசித்தது. உணவருந்திவிட்டு படுக்கச் சென்றனர். உறங்கிக் கொண்டிருந்த சிறுவர்களின் கழுத்தில் ஜெபமாலை அழகாக.

""டொக்!...டொக்!''

இந்த இரவு நேரத்தில் கதவைத் தட்டுவது யார்? ஜானுக்கும், காத்தரீனுக்கும் பயமாக இருந்தது! அப்பாவும், அம்மாவும் காலையில்தானே வருவதாகச் சொன்னார்கள்? யாராயிருக்கும்? ஜான் பயந்துகொண்டே மெதுவாகக் கதவைத் திறந்தான். ஒரு முரட்டு மனிதன் அவர்களைத் தள்ளிவிட்டான்! அவன் கைகளில் கத்தி! படாரென்று கதவைச் சார்த்தித் தாழ்ப்பாள் போட்டான்! ""உங்க அப்பாவும் அம்மாவும் வெளியூர் போறதைப் பாத்துட்டுத்தான் திருட வந்திருக்கேன்...! கத்திக் கூச்சல் போடாதீங்க...

கொன்னுடுவேன்...''என்றான் அந்தத் திருடன்.

நடுங்கிய இருவரும் கடவுளை ஜெபித்தபடி அமைதியாக இருந்தனர். பீரோவைத் திறந்து பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டான். புறப்படும்போது சிறுவர்கள் கழுத்தில் இருந்த

ஜெபமாலைகளைப் பார்த்துவிட்டான்! அவர்களை மிரட்டி அதனைக் கழற்றச் சொன்னான். ""இது எங்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா அன்பளிப்பா குடுத்தது...ரொம்ப புனிதமானது...!'' என்றாள் காத்தரீன்!

""ம்...,கழற்று''

பயந்து கொண்டே ஜெபமாலையை இருவரும் கழற்றினார்கள்! வெடுக்கென்று காத்தரீன் கையிலிருந்து அதைப் பிடுங்கியவுடன் அது திருடனின் கையிலிருந்து பரணையின் மேல் எதன்மீதோ தொத்திக்கொண்டு ஆடியது! மின்னிய அதன் ஒளியினால் கவரப்பட்டு அதை மூர்க்கமாக இழுத்தான் திருடன்! இழுத்த வேகத்தில் அது தேங்காய்த் திருவியுடன் கூடிய அரிவாள்மணையும் இழுத்துக் கொண்டு வந்தது! வேகமாக திருடனின் வலதுகாலை வெட்டியபடி விழுந்தது! திருடன் துடித்துப் போய்விட்டான்! ரத்தம் கொட்ட ஆரம்பித்தது! ஜெபமாலை ரத்தத்தின் நடுவே தோய்ந்திருந்தது! திருடன் லுங்கியெல்லாம் ரத்தம்! அவன் பயந்து போய்விட்டான்! சிறுவர்களும் பயந்துவிட்டனர்.

ஏனோ காத்தரீனுக்கும் ஜானுக்கும் அவன் மேல் இரக்கம் ஏற்பட்டது.

""வலிக்குதா அங்கிள்?''என்றாள் காத்தரீன்!

ஜான் ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக் கொண்டுவந்து காயத்தைத் துடைத்து விட்டான். மருந்து டப்பாவை எடுத்துக் கொண்டு வந்து காயத்திற்கு மருந்திட்டான். குடிக்க சற்று தண்ணீரும் கொடுத்தான்.

""ரொம்ப வலிக்குதா அங்கிள்?'' என்றாள் காத்தரீன்! திருடன் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தான்! கண்களில் நீர் பெருக்கெடுத்தது! அந்தப் பிஞ்சு மனங்கள் அவனது மனதிலுள்ள நஞ்சை முற்றிலும் அகற்றிவிட்டது!

""நான் ஒரு திருடன்! எத்தனையோபேரைக் கத்தியைக் காட்டி மிரட்டி என் காரியத்தைச் சாதித்திருக்கிறேன்! பொருளைப் பறிகுடுத்தவங்க என்னை, ""உருப்படமாட்டே...,நாசமா போயிடுவே''ன்னு திட்டுவாங்க....எனக்குக் கோபம் வரும். மறுபடி மறுபடி திருடத்தான் தோணும்....ஆனா நீங்க...,இந்தப் மகாபாவிக்குக் கருணை காட்டறீங்க...., நீங்க என்னை மன்னிச்சுடுங்க...இந்த நொடியிலிருந்து இந்தத் திருட்டுத் தொழிலை நான் விட்டுடறேன். அவர்கள் கால்களில் விழுந்து எடுத்த பணத்தையும் நகைகளையும் திருப்பி அளித்துவிட்டான்.

""என்ன அங்கிள் இது! நீங்க மனசு மாறினதே போதும்..நாங்க உங்களை மன்னிச்சுட்டோம்...கவலைப் படாதீங்க..''

""நீங்க என்னை மன்னிச்சுடலாம்....ஆனா கடவுள் என்னை மன்னிப்பாரா?''

""நிச்சயமா....பாவிகளை இரட்சிக்கத்தானே அவர் பாலகனாக மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்? நீங்க மனம் திருந்திட்டீங்க இல்லே? யோசிச்சுப் பாருங்க...,திருந்தின மனசை உங்களுக்குக் குடுத்துட்டார் இல்லியா? அப்ப அவர் உங்கள மன்னிச்சுட்டார்னுதானே அர்த்தம்?''

""இங்கிருந்து நான் பணத்தையும், நகைகளையும் கவர்ந்து போக வந்தேன். ஆனால் அன்பையும், சத்தியத்தையும் எடுத்துக் கொண்டு போகிறேன்....,என் ரத்தத்தையும், அந்தத் தங்க ஜெபமாலையையும் கழுவிச் சுத்தம் செய்து தரட்டுமா?''

""வேண்டாம்...,அது தங்க ஜெபமாலை இல்லே...,சும்மா தங்கநிறப் பூச்சு! அவ்வளவுதான்! ஆனால் ரொம்பப் புனிதமானது!எல்லோர் மனதையும் தங்கமாக மாற்ற வல்லது! நீங்க அதை எடுத்துக் கொண்டு போகலாம்...நானே சுத்தம் செய்து தருகிறேன்!''என்றாள் காத்தரீன்!

இப்போது மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் வியர்வை சிந்த உழைத்துச் சம்பாதிக்கிறான். அவன் கழுத்தில் காத்தரீன் அளித்த ஜெபமாலை மின்னுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com