
எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. ஆனால் அந்தக் குயில் எப்போதும் ஒற்றையாகத்தான் வரும். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேதியில் அது தவறாமல் வந்துவிடும். குயிலின் குரல் கேட்டபின்புதான் வசந்தம் வந்துவிட்டதையே சிறுவன் கோகுல் உணர்ந்துகொள்வான். கோகுலின் வீட்டுப் பின்புறம் சிறுகொல்லை ஒன்று உண்டு. அதில் ஒரு மாமரம். அதுதான் அந்தக் குயிலின் தற்காலிக வசிப்பிடம். குயிலின் முதல் குரல் கேட்டவுடன் கோகுல் எழுந்து பின்பக்கம் ஓடுவான். குயில் இவனைப் பார்த்தவுடன் படபடவென்று சிறகுகளை அடித்துக்கொள்ளும். கிளைவிட்டு கிளைமாறி அமரும். நீண்டநாள் கழித்து நண்பனைச் சந்தித்த உற்சாகம் அந்தப் படபடப்பில் இருக்கும். இவனும் குயிலைப் பார்த்து ""எப்படி இருக்கிறாய் நண்பா?'' - என்பது போன்று புன்னகை பூப்பான். பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் பெயர்களை வாசிக்கும்போது மாணவர்கள் எழுந்து "உள்ளேன் அய்யா!'- என்பார்களே? அதுபோன்று குயிலும் தான் வந்துவிட்டதைத் தெரிவிக்கும் விதமாக கோகுலைப் பார்த்து ஒருமுறை
"அக்காவ்!' - எனக் கூவும். பின் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடும். கோகுல்தான் குயிலைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கிவிடுவான்.
குயில்கள் பொதுவாக அத்தனை எளிதில் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. மாமரத்தின் கிளைகள் ஊடாக அது அவ்வப்போது மின்னல்கீற்றைப் போன்று தோன்றி மறையும். தொடர்ந்து அவதானித்துதான் கோகுல் தங்கள் வீட்டிற்கு வந்துசெல்லும் குயில் கருமைநிறக்குயில் என்று கண்டு கொண்டான். "அது நாட்டுக்குயில்!' என்றார் கோகுலின் பாட்டி; தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன் குரலை மட்டும் வெளிப்படுத்தும் குயிலின் செய்கை மிகவும் விந்தையாக இருந்தது. அவ்வப்போது உடலை வருடிச்செல்லும் காலைத்தென்றல் இந்த ஆண்டும் வசந்தம் வந்துவிட்டதைச் சொன்னது. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக வந்துசென்ற குயில்தான் இந்த வருடம் வரவில்லை. ஒரு நாள்... இரண்டு நாள்... பத்து நாள்... ம்கூம்...! குயில் வரவில்லை. எதனால் வரவில்லை? அப்பாவிடம் கேட்டான். ""குயில் இதைவிட பசுமையான இடத்துக்கு இடம் மாறிப் போயிருக்கலாம்!'' - என்றார் அப்பா. பொதுவாக பறவையோ, மிருகமோ ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் தொடர்ந்து அதையே செய்யும் அத்தனை எளிதில் அதை மாற்றிக்கொள்ளாது எனச் சொல்வார்கள். அவனால் அப்பாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி என்றால் குயிலுக்கு என்ன ஆகியிருக்கும்? மற்ற பறவைகளாலோ, மிருகங்களாலோ அதற்கு ஆபத்து நேரிட்டிருக்கலாம். குயில் இங்கே இருக்கும்போது அதை அடிக்கடி காகங்கள் துரத்துவதை கோகுல் பார்த்திருக்கிறான்; ஏன் மனிதர்களால்கூட குயிலுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கலாம்! மனிதர்கள் குயிலைப் பிடித்துக்கொண்டுபோய் என்ன செய்வார்கள்? கூண்டில் அடைப்பார்களா? இப்படி கோகுலுக்கு பல்வேறு விதமாக யோசனைகள் ஓடின.
கோகுலுக்கு முழுஆண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரீட்சைக்குத் தயார்செய்து கொண்டிருந்ததால் அவனால் குயிலைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியவில்லை. இருந்தாலும் மனத்தின் ஓர் ஓரத்தில் குயிலைப் பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் பள்ளிவிட்டு வந்ததும் முதல் வேலையாக அவன் மாமரத்தில் குயிலைத் தேடினான். அது எப்படி தன் உடலைக் குறுக்கிக்கொண்டு கிளைகளின் ஊடாகத் தன்னை மறைத்துக்கொள்ளும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் குயில் வரவில்லை. அப்படியென்றால் இந்த முறை குயிலின் குரலைக் கேட்க முடியாதா? அதென்ன குயிலின் குரல் மற்ற பறவைகளின் குரல்போன்று இல்லாமல் வேறுவிதமாய் இருக்கிறது? கோகுல் அப்பாவிடம் கேட்டான். ""ஆமா! குயிலோடகுரல் மத்த பறவைங்க குரல்மாதிரி இல்ல! அதுல ஒரு சோகம் இழையோடுது!'' - என்றார் அப்பா. கோகுல் புரியாமல் பார்க்க ""குயிலின் குரல்ல ஒரு கவலை ஒரு வருத்தம் தெரியுது!'' - என்றார் அவர்;
குயிலுக்குக் கவலையா? என்ன கவலை? வீட்டுப்பாடங்களைச் செய்ய முடியவில்லை என்ற கவலையா? அதுபோன்ற கவலைகள் ஏதும் குயிலுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியென்றால் உணவு கிடைக்கவில்லை என்றா? இணையோ நட்போ இல்லை என்றா? குயிலின் குரலுக்கு கோகுலின்பாட்டி நாட்டுப்புற வழக்கத்தில் இருந்து வந்த கதை ஒன்றைச் சொன்னார். ""ஒரு ஊர்ல ஒரு அக்கா குயிலும் தங்கச்சி குயிலும் ஒத்துமையா சந்தோசமா இருந்தாங்களாம்! அந்த ஊர்ல இருந்த சூன்யகாரக் கிழவிக்கு இப்படி அக்காவும் தங்கச்சியும் ஒத்துமையா இருந்தது பிடிக்கலயாம்! அவ சதி பண்ணி அக்காகாரிய மட்டும் தனியாக் கூட்டிட்டுபோயி ஆத்துக்குள்ள தள்ளி கொன்னுட்டாளாம்! இது தெரியாத தங்கச்சி குயிலு ஆத்துக்குக் குளிக்கப்போன அக்கா எப்பத் திரும்ப வருவான்னு தெரியாமக் காத்துக்கிட்டே இருந்துச்சாம்! அக்காகாரி பிரிஞ்சு போனது ஒரு வசந்த பருவத்துவங்குறதுனால ஒவ்வொரு வசந்தகாலத்துலயும் மரத்துக்கு மரம் கிளைக்குக் கிளை உக்காந்து அக்காவை நினைச்சு "அக்காவ் அக்காவ்'ன்னு கூவிக்கிட்டே இருக்குதாம் இந்த முட்டாள் தங்கச்சிகுயிலு!'' - என்றார் பாட்டி. மனத்தைப் பிசையும் குயிலின் குரலுக்கு பாட்டி சொன்ன இந்தப் புனைக்கதை மிகவும் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது கோகுலுக்கு;
கோகுலுக்கு இன்னும் நாலைந்து நாள்களில் கோடை விடுமுறை ஆரம்பித்துவிடும். அவன் ஊருக்குச் சென்றுவிடுவான். அடுத்து ஒருமாதம் கழித்துதான் அவன் திரும்ப வருவான். அப்போது அநேகமாக வசந்தகாலம் முடிவிற்கு வந்திருக்கும். ஒரு குயிலின் குரலின்றி வசந்தகாலம் முழுமையடையாதது போலிருந்தது கோகுலுக்கு. அதைக்காட்டிலும் குயிலுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என்ற எண்ணம்தான் அவனை அதிகம் சஞ்சலப்படுத்தியது. அவன் அப்பாவிடம் ""ஏம்ப்பா குயில் இந்த சீஸனுக்கு இங்க வரல?'' - என்று கேட்டான். அதற்கு அவர் ""எனக்கு என்ன தெரியும்! நானும் உன்னை மாதிரித்தான்!'' - என்றார்.
""குயில் என்கூட ரொம்ப சிநேகமா இருந்துச்
சுப்பா!'' - என்றான் கோகுல்.
""குயிலை நீ வளர்க்கல! அது உன்கூட சிநேகமா இருந்துச்சுன்னு சொல்லாத! நீ அதுமேல பிரியமா இருந்தேன்னு சொல்லு! அதுதான் சரியா இருக்கும்!'' - என்றார் அவர்.
""இல்லப்பா! குயில் என்னைப் பார்த்தா படபடக்கும்! கிளைவிட்டு கிளை தாவும்! உற்சாகமா குரல் கொடுக்கும்! அது என்கூட பேசுற மாதிரியே
இருக்கும்!'' - என்றான் கோகுல்.
""நீ ஒவ்வொரு முறை கொல்லைப்பக்கம் போகும்போதும் புதுசா ஒரு நடமாட்டம் தெரியுதே. இதுனால நமக்கு ஆபத்தா இல்லையான்னு தன்னோட பாதுகாப்பை உறுதி செஞ்சுக்குறதுக்காகத்தான் குயில் படபடக்குது! இது பறவைகள் மிருகங்களுக்கு எல்லாத்துக்கும் இயல்பாகவே இருக்குற எச்சரிக்கை உணர்வு! குயில் என்கூட பேசுறமாதிரி இருக்கு. குயில் எனக்காகக் கூவுதுங்குறதுலாம். அதைப்பாக்குற உன்னோட மனசுல உண்டாகுற எண்ணங்கள்தான்!'' - என்றார் அப்பா. அவரே தொடர்ந்து ""போன சீஸன் வரைக்கும் நம்ம கொல்லைல குயில்வந்து தங்குச்சு! இந்த சீஸனுக்கு அது வரல! அவ்வளவுதான்! அதுக்குமேல இதுல முக்கியத்துவம் ஏதும் இல்ல! இந்த மாதிரி விஷயங்கள்ல்ல மனசைச் செலுத்துறத விட்டுட்டு படிக்குற வேலையப் பாரு!'' - என்றார் அவர். கோகுலும் "சரி' என்று தலை ஆட்டினான்.
இரவு தூங்கி காலையில் கண்விழித்தபோது கொல்லைப்பக்கம் "அக்காவ்' குரல்; கோகுல் படுக்கையைவிட்டு எழுந்து ஓடினான். அங்கே மாமரத்தில் குயில் ஒன்று இருந்தது. பார்த்தமாத்திரத்தில் தெரிந்துவிட்டது இது பழைய குயில் இல்லை வேறு குயில் என்று; இது பழைய குயிலைக்காட்டிலும் உருவத்தில் சிறியதாய் இருந்தது. கோகுலைப் பார்த்தவுடன் இதுவும் படபடத்தது. கிளைக்குக் கிளை தாவியது. அவனால் தனக்கு ஆபத்தில்லை என்பது தெரிந்தவுடன் ஆசுவாசமாகி சீரான இடைவெளியில் "அக்காவ் அக்காவ்' எனக் கூவ ஆரம்பித்தது. கோகுல் யோசித்தான். இதுவும் பழைய குயில் வந்த அதே காட்டில் இருந்துதான் வந்திருக்குமோ? அதன் சகோதரக் குயிலாக இருக்குமோ? என்னால் இந்த முறை போக முடியவில்லை. கோகுல் என்னைத் தேடுவான். நீ ஒரு எட்டு போய்விட்டு வந்துவிடு என்று அதுதான் அனுப்பி வைத்திருக்குமோ? குயிலுக்கு இதுபோன்ற சிந்தனைகள் ஏதும் கிடையாது. அதைப் பார்க்கும்போது உன் மனத்தில் எழும் எண்ணங்கள்தான் இவையனைத்தும் என்றாரே அப்பா! அதுதான் உண்மையாக இருக்குமோ? அப்படித்தான் தோன்றியது. ஆனால் ஒரு வசந்தகாலத்தில் என் வீட்டுக் கொல்லையில் அமர்ந்து கூவும் குயிலின் குரல் எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறதே! அது பொய்யில்லையே? கோகுல் தனது புது விருந்தினனை வரவேற்கத் தயாராகிவிட்டான். "வருக எனது நண்பனே!' என்றான். ஏதோ கோகுலின் குரல் புரிந்த மாதிரி குயிலும் ஒருமுறை அவனைப் பார்த்து "அக்காவ்' என்றது.
மா. பிரபாகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.