கதைப்பாடல்: தேடி வந்த தகுதி!

வித்தை காட்டும் குரங்கொன்றை வீரன் கையில் பிடித்தபடிசொத்தோ சுகமோ வேறின்றிச் சுற்றிப் பல ஊர் திரிபவனாம்!
கதைப்பாடல்: தேடி வந்த தகுதி!
Updated on
1 min read

வித்தை காட்டும் குரங்கொன்றை

வீரன் கையில் பிடித்தபடி

சொத்தோ சுகமோ வேறின்றிச்

சுற்றிப் பல ஊர் திரிபவனாம்!

வீரனின் தந்தை கண்ணப்பன்

மிகவும் முதுமை அடைந்ததனால்

பாரம் குடும்பப் பொறுப்பாகிப்

படிப்பும் போனது! வழியில்லை!

ஆறிரண்டாண்டு வயதெனினும்

ஆடும் குரங்கின் வித்தைகளைத்

தேறித் தெளிந்து திறமையுடன்

தினமும் பலரை மகிழ்வித்தான்!

"குட்டிக் கரணம் போ''டென்றால்

"கோட்டை மேலே ஏ'றென்றால்

"பணத்தை எண்ணு' என்றெல்லாம்

"பலப்பல' பார்க்கப் பரவசம்தான்!

குக்கிரா மத்தில் வருவாயும்

குறைந்து போன நிலைமையில்

மக்கள் நிறைந்த பேரூர்க்குள்

வந்தான் வீரன் முதன்முதலாய்!

கூட்டத்துக்குக் குறைவில்லை!

கொட்டிய துட்டுக் களவில்லை!

ஆட்டம் முடிந்த ஒரு நாளில்

அனைவரும் கலைந்தனர் ஆனாலும்

பத்தே வயது பால்ராஜும்

பாசத்துடனே வீரனிடம்

தத்தி நடக்கும் தாத்தாவைச்

சார்ந்த படியே நெருங்கியபின்

"பள்ளிக்கூடம் போகலையா?...

படிக்க விருப்பம் கிடையாதா?...

துள்ளித் திரியும் குரங்குக்குத் ...

துன்பம் தருவது பிழைதானே?''

இப்படிப் பால்ராஜ் கேட்டவுடன்

இரக்கம் மிகுந்த தாத்தாவும்

ஒப்பாய் வீரன் கதை அறிந்தார்!

உதவி செய்யவும் முன் வந்தார்!

குரங்கு இனிமேல் காட்டுக்குள்..

குதிக்கும் தாவும் சுதந்திரமாய்!

தரமாய்க் கல்வி பெறுகின்ற

தகுதியும் வந்தது வீரனுக்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com