

ஐக்கிய நாடுகள் சபை என்பது பன்னாட்டு அமைப்பாகும். உலகின் அமைதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்த சபை நிறுவப்படுவதற்கு முக்கிய காரணம் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நடந்த இரண்டு உலகப் போர்களே ஆகும்.
முதல் உலகப்போர் (கி.பி.1914 - கி.பி.1918)
ஆதிக்க வெறி, வணிகப் போட்டி, பொறாமை, பழி வாங்கும் எண்ணம், பகை போன்ற பல காரணங்களால் உலகின் பெரும்பான்மையான நாடுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போரில் ஈடுபட்டன.
இந்தப் போர் ஜுலை 28, 1914-ஆம் ஆண்டு ஆஸ்திரியா, செர்பியா மீது போர் அறிவிப்பு செய்தவுடன் தொடங்கியது. பல நாடுகளும் தங்களுடைய நீண்ட நாள் பிரச்னைகளுக்காகவும் மற்றும் உடனடி காரணங்களினாலும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும், எதிர்த்தும் இந்த போரில் ஈடுபட்டது. ஆரம்பத்தில் இந்த போரில் ஜெர்மன் பெரும் சக்தியாக விளங்கியது.
இந்த போரினால் மிகப் பெரிய அளவில் உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது. 1918-ஆம் ஆண்டு போரைச் சமாளிக்க முடியாமல் ஜெர்மன் நவம்பர் 11-ஆம் நாள் அமைதிக்கு ஒத்துக் கொண்டது.
உலக வரலாற்றில் முதன்முறையாக போரில் பல நாடுகள் பங்கேற்றதாலும், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாலும் இந்த போர் "முதல் உலகப் போர்' என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
அமைதி மாநாடு (1919)
1919-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த 42 நாடுகள் கலந்துகொண்ட அமைதி மாநாட்டில் ஜெர்மன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. போரில் தோல்வியுற்ற நாடுகள் பல்வேறு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. மேலும் பல உடன்படிக்கைகளும் நாடுகளுக்கு இடையே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சர்வதேச சங்கமும் நோக்கங்களும்:
அமைதி மாநாடு உடன்படிக்கையின்படி 1920-ஆம் ஆண்டு சர்வதேச சங்கம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவது. அண்டை நாடுகளின் எல்லைகளை மதித்து நடப்பது, ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பது போன்ற நோக்கங்களுடன் இந்த அமைப்பு உருவானது.
இரண்டாம் உலகப் போர்: (1939 - 1945)
சிறிது காலம் உலகில் மேலோட்டமாக அமைதி நிலவியது. சர்வதேச சங்கமும் பல பிரச்னைகளை தீர்த்து வைத்தது. ஆனால் முதல் உலகப்போருக்குப் பின் செய்யப்பட்ட சில உடன்படிக்கைகள் பழி வாங்கும் நோக்கத்துடன் அமைந்து பல நாடுகளுக்கு அதிருப்தியைத் தந்தது. ஒருசாராருக்கு சாதகமாக இருப்பதாகக் கருதப்பட்டது.
இந்த ஒப்பந்தங்களின்படி ஜெர்மனுக்கு பல இழப்புகள் ஏற்பட்டது. மேலும் இவற்றில் ஜெர்மனை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் அடங்கியிருப்பதாக ஜெர்மன் கருதியது. இது போரைத் தூண்டுவதாக அமைந்தது. சங்கத்தின் உறுப்பு நாடுகள் சங்க கொள்கைகளுக்கு எதிராக கட்டுப்பாடுகளை மீறி பல செயல்களைச் செய்தனர். இதுபோன்ற காரணங்களால் உலகப் போருக்கான சூழ்நிலை மீண்டும் தோன்றியது.
இந்நிலையில் 1939 செப்டம்பர் 1ஆம் தேதி அன்று ஜெர்மன் போலந்து மீது தாக்குதல் நடத்தியது. அன்றே இரண்டாம் உலகப்போர் தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வல்லரசுகள் நேசநாடுகள் மற்றும் அச்சு நாடுகள் என இரு எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன. அதிக அளவிலான நாடுகள் போரில் பங்கேற்றது. அனைத்து நாடுகளும் எதிரி நாட்டின் குடிமக்கள், உடைமைகள், ராணுவ வளங்களை அழிப்பதற்காக தங்கள் பொருளாதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்தின.
பல இடங்களிலும் போர் நடந்தது. பெரிய அளவில் உயிர் சேதமும் பொருட்சேதமும் அழிவும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நேச நாடுகளின் படைகள் ஜெர்மெனிக்குள் நுழைந்துவிட்டது. அதனால் வேறு வழியின்றி ஜெர்மெனி சரண் அடைந்தது.
அதன்பின் அமெரிக்கா 1945, ஆகஸ்ட் 6 மற்றும் 9ஆம் நாளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களின்மீது அணுகுண்டு வீசி அழித்தது. அதனால் ஜப்பான் சரண் அடைந்தது. இத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
இந்த போரினால் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அனைத்து நாடுகளும் பலவிதங்களிலும் சேதமடைந்தது. மேலும் பொருளாதார பலத்தை இழந்தது. இந்த இழப்புகளினால் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பல நாடுகளின் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. உலகில் அமைதி நிலவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபை!!
1941ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசு தலைவரும், இங்கிலாந்து பரதமரும், அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு போர்க்கப்பலில் சந்தித்து உலக அமைதிக்காக சில முடிவுகளை எடுத்து ஒரு சாசனத்தில் கையெழுத்திட்டனர். இது "அட்லாண்டிக் சாசனம்' எனப்படுகிறது.
பின்னர் அதன் க்ஷரத்துகள் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு இறுதியில் 1945ஆம் ஆண்டில் சான்பிரான்ஸிஸ்கோவில் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டது.
இதன்படி அக்டோபர் 24, 1945இல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது! இதில் தற்சமயம் 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இதன் தலைமையகம் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
ஐ.நா. சபையின் நோக்கங்கள்
1. உலக அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுதல்.
2. நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல்.
3. உறுப்பு நாடுகளுக்கு இடையேயான சிக்கல்களை அமைதியான முறையில் தீர்த்தல்.
4. உலகப் பொருளாதாரம், சமூகப் பண்பாடு, மற்றும் மனித இனம் சார்பான பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஒத்துழைத்தல்.
ஐ.நா. சபையின் சின்னம், கொடி, மொழிகள்
ஐந்து உள் வட்டங்களும், அதன்மீது வடதுருவத்திலிருந்து பார்த்தால் தெரியும் உலகப்படத் தோற்றமும், அதனை சுற்றி ஆலிவ் இலைக்கொத்துகளும் கொண்ட படமே ஐ.நா. வின் சின்னமாகும்.
வெளிர்நீல நிறக்கொடியின் நடுவில் வெள்ளை நிறத்தில் ஐ.நா. சபையின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். இதுவே ஐ.நா. சபையின் கொடியின் அமைப்பாகும்.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், சீனமொழி மற்றும் அராபிக் ஆகியவை ஐ.நா. சபையின் அலுவல் மொழிகளாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள்
ஐ.நா. சபை சிறப்பான செயல்பாடு மற்றும் நிர்வாகத்திற்காக ஆறு முக்கிய அமைப்புகளை கொண்டுள்ளது.
1. பொதுப்பேரவை
ஐ.நா. சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் கலந்தாய்வு செய்து தனது பரிந்துரைகளை வழங்கும் அதிகாரம் கொண்டது. ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் பொதுப்பேரவையின் உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு நாடும் பொதுப்பேரவைக்கு ஐந்து பிரதிநிதிகளை அனுப்பலாம். ஆனாலும் ஒரு நாட்டிற்கு ஒரு வாக்குதான் உண்டு. ஆண்டுக்கு ஒரு முறைதான் பொதுக்குழுக் கூட்டம் கூடும். தேவைப்பட்டால் அவசர சிறப்புக் கூட்டமும் நடைபெறும்!
2. பாதுகாப்புப் பேரவை
உலக அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவது உறுப்பு நாடுகளுக்கிடையே பிரச்னை ஏற்படும்பொழுது அமைதியான வழியில் தீர்த்து வைப்பது, ஆகியவை இதன் முக்கிய செயல்பாடாகும். இந்தப் பேரவையின் 5 நிரந்தர உறுப்பினர்கள், 10 தற்காலிக உறுப்பினர்கள், என மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகும். 10 தற்காலிக உறுப்பினர்கள் பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும்.
நிரந்தரமான உறுப்பு நாடுகளுக்கு அவையின் முடிவுகளை ரத்து செய்யும் "வீடோ பவர்' (ஸ்ங்ற்ர் ல்ர்ஜ்ங்ழ்) உண்டு. இதனைப் பயன்படுத்தி ஒரு நிரந்தர உறுப்பு நாடு எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்த முடியும்.
3. பொருளாதார மற்றும் சமூகப் பேரவை
இந்தப் பேரவையில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 9ஆண்டுகள். இந்தப் பேரவை ஐ.நா. மற்றும் அதன் சிறப்பு நிறுவனங்களின் மூலம் உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
4.அறக்காவலர் பேரவை
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட காலத்தில் தன்னாட்சி அதிகாரம் பெறாத 11நாடுகளை நிர்வகிக்க 7 உறுப்பினர்களைக் கொண்ட அறக்காவலர் பேரவை அமைக்கப்பட்டது. இந்தப் பேரவையின் உதவியினால் 1994ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்து தன்னாட்சி பெற்றன. அதனால் தற்சமயம் வரும்காலத்தில் தேவைப்பட்டால் செயல்படும் வகையில் இப்பேரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
5. பன்னாட்டு நீதிமன்றம்
இந்த நீதிமன்றம் ஹாலந்து நாட்டின் "தி ஹேக்' நகரில் அமைந்துள்ளது. இதில் 15நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர். உறுப்பு நாடுகளுக்கு இடையே எழும் பிரச்னைகளை இந்த நீதிமன்றம் தீர்த்து வைக்கும். மேலும் ஐ.நா. சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் சிறப்பு நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
6. செயலகம்
ஐ.நா. சபையின் நிர்வாகப் பணிகள் அனைத்தையும் தலைமைச் செயலகம் நிறைவேற்றுகிறது. இதன் தலைமை நிர்வாகி "பொதுச் செயலாளர்' ஆவார். இவருடைய பதவிக் காலம் 5ஆண்டுகள் ஆகும். தற்போதைய பொதுச் செயலாளர் தென் கொரியாவை சேர்ந்த "பான் கீ மூன்' ஆவார். இச்செயலகத்தில் அலுவலர்கள் ஊழியர்கள் என 7500 பேர் பணி புரிகிறார்கள்.
ஐ.நா. சபையின் சிறப்பு நிறுவனங்கள்
ஐ.நா. சபை தன் லட்சியத்தை முழுமையாக அடைவதற்காக மேலும் 30சிறப்பு நிறுவனங்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் சில.
1. உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் -
2. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
3. உலக நிதி நிறுவனம்
4. ஐ.நா. உலக நாடுகள் குழந்தைகள் அவசரகால நிதி
5. உலக சுகாதார நிறுவனம்
6. ஐ.நா.கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
7. அகதிகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு
நிதி ஆதாரம்
ஐ.நா.வின் செயல்பாட்டிற்குத் தேவையான நிதியின் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்தும், மேலும் பிற உறுப்பு நாடுகளிலிருந்தும் பெறப்படுகிறது.
ஐ.நா.வின் சாதனைகள்
பல்வேறு பன்னாட்டு பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு கண்டு உலக அமைதியை பாதுகாக்கிறது.
அணு ஆயுதங்களுக்கு எதிரான பல நிலைப்பாடுகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும்படி செய்துள்ளது.
சுற்றுச் சூழல் மேம்பாட்டு மாநாடு மூல் அனைத்து நாடுகளும் இயற்கைச் சூழலை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட பல முயற்சிகளினால் இன்று பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்விற்காக சிறப்பாகச் செயல்பட்டு 1954 மற்றும் 1981இல் நோபல் பரிசு பெற்றுள்ளது.
ஐ.நா.வின் ரஏஞ அமைப்பு பெரியம்மை நோயினை முற்றிலும் போக்கியுள்ளது. மேலும் போலியோ காசநோய் போன்ற நோய்களை முற்றிலும் போக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை வருங்கால தலைமுறையினருக்கு இந்த அமைதியான உலகை பாதுகாத்து வழங்க பெரும் முயற்சி செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.