அன்பு இருந்தால்...

சில தினங்களாக கண்ணனின் மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. அதற்குக் காரணம் அவனுக்காக வீட்டில் ஒரு தனி அறையைக் கட்டித்தரப் போவதாக அவனுடைய அப்பா சொல்லியிருந்தார்.
அன்பு இருந்தால்...
Updated on
3 min read

சில தினங்களாக கண்ணனின் மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. அதற்குக் காரணம் அவனுக்காக வீட்டில் ஒரு தனி அறையைக் கட்டித்தரப் போவதாக அவனுடைய அப்பா சொல்லியிருந்தார்.

கண்ணனின் வீடு சிறிய ஒட்டுவீடுதான். அடுக்களையைத் தவிர ஒரேயொரு அறைதான் இருந்தது. ஆனாலும் வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம் இருந்தது. தோட்டத்தில் ஒரு வேப்பமரம், ஒரு மாமரம் மற்றும் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. கூடவே கண்ணனின் அம்மா தோட்டத்தில் சின்னஞ்சிறிய பூச்செடிகளும் நட்டு வளர்த்திருந்தனர். நிழல் படர்ந்து இருக்கும் அத்தோட்டத்தில் எப்போதும் குருவிகளும் வேறு சில பறவைகளும் கூடு கட்டி வசித்தன. அவை காலை வேளையில் இனிமையாக சத்தமிட்டுக் கொண்டிருக்கும்.

ஏழாம் வகுப்பு படிக்கும் கண்ணனும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனுடைய அக்கா வித்யாவும் ஒரே அறையில் அமர்ந்து படிப்பார்கள். வித்யா சாதுதான். ஆனால் கண்ணன் எப்போதும் தன் அக்காவுடன் வம்பு செய்வான். அக்காவைக் கேட்காமல் அவளுடைய பேனாவை எடுத்துக்கொள்வான். பென்சிலை எடுத்து ஒளித்து வைப்பான். தம்பியின் மீது பாசம் இருந்தாலும் சிலநேரம் கண்ணனின் குறும்பு எல்லை மீறும்போது அவனைக் கண்டிப்பான். கண்ணனும் அக்கா வித்யாவுடன் சரிசமமாக சண்டை பிடிப்பான்.

சில தினங்களுக்கு முன்பு கண்ணன் வித்யாவின் கணக்கு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கிறுக்கி வைத்துவிட அவள் கண்ணனை லேசாக அடித்து விட்டாள். கண்ணன் பதிலுக்கு அவளை அடிக்கப்போக அவன் அப்பாதான் வந்து தடுத்தார்.

கூடவே அவர்களிடம் ""நீங்கள் ஒரே அறையில் அமர்ந்து படித்தால் இப்படித்தான் சண்டை போட்டுக்கொண்டிருப்பீர்கள். இனி நம் தோட்டத்திலிருக்கும் சிறிய இடத்தில் நம் வீட்டோடு சேர்த்து ஓர் அறை கட்டிவிடலாம். கண்ணன் இனி அங்கே இருந்து படிக்கட்டும்!'' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அப்பா சொன்னதைக் கேட்டதும் கண்ணனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது! ""கூடிய சீக்கிரம் எனக்கே எனக்கென்று ஒரு தனி அறை கிடைக்கப்போகிறது. என் அறையில் என் புத்தகங்கள், உடைகள் உட்பட எல்லாவற்றையும் வைத்துக் கொள்வேன். அறைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கமாட்டேன்.'' என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான் அவன்.

புதிதாக அறை கட்டப்போவதாகச் சொன்ன இடத்தில்தான் வேப்பமரம் இருந்தது. வேப்பமரத்தை வெட்டிவிட்டு அந்த இடத்தில்தான் அறை கட்டவேண்டும். ஆனால் கண்ணன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எப்படியோ தனக்கென்று ஒரு அறை கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சி மட்டுமே அவனுக்குள் இருந்தது.

அன்று விடுமுறை நாள் என்பதால் கண்ணன் தன் நண்பன் வீட்டிற்குப் புறப்பட்டான்.

ஐந்து ஆண்டுகள் பிரசாத்துடன் நட்பு இருந்தது. பிரசாத்தின் வீட்டருகில் கண்ணனின் வயதையொத்த பல சிறுவர்கள் உண்டு. அவர்களின் வீடுகளுக்கும் பிரசாத் கண்ணனை அழைத்துச் செல்வான். அவர்கள் அனைவரும் அருகிலிருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவார்கள். அவர்களில் பலர் வீட்டில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் உண்டு. பிரசாத் வீட்டிற்குச் சென்றால் போதும். பிறகு நேரம் போவதே தெரியாமல் கண்ணன் விளையாடிக் கொண்டிருப்பான்.

பிரசாத்தின் வீட்டை நோக்கி நடந்து செல்லும்போதே தனக்காக வீட்டில் தனி அறை ஒன்று கட்டப்படவிருப்பதை பிரசாத்திடம் சொல்ல வேண்டும். கூடவே அவன் வீட்டின் அருகிலுள்ள நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதான பல எண்ணங்கள். கண்ணனின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தன.

சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்த பிரசாத்தின் வீட்டிற்குச் சென்று பார்த்தான் கண்ணன். வீடு பூட்டியிருந்தது.

""பிரசாத் எங்கே போயிருப்பான்? ஒரு வேளை ஊருக்கு எங்கேயாவது போயிருப்பானோ? அப்படி ஏதேனும் இருந்தால் என்னிடம் சொல்லியிருப்பானே?'' என்று நினைத்த கண்ணன், பக்கத்தில் இருந்த வீட்டில் போய் விசாரித்தான்.

""நீ, யாரப்பா? பிரசாத்தோட நண்பனா? பிரசாத்தோட குடும்பம் நேற்றே வீடு மாறி போயிட்டாங்களே...,உங்ககிட்டே சொல்லலியா?'' என்றாள் பக்கத்துவீட்டு அம்மா.

""தெரியாதே ஆன்ட்டி! சரி..., இப்போ அவங்க வீடு எங்கே இருக்குது?''என்று கேட்டான் கண்ணன்.

""முகவரி கொடுத்துட்டு போயிருக்காங்க! இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும். பக்கத்துல வேற வீடு எதுவும் கிடைக்கலியாம். அதனாலதான் அங்கே மாறிப் போயிட்டாங்களாம். இரு..., அட்ரஸ் எழுதித் தரேன்.''என்ற பக்கத்துவீட்டு அம்மா ஒரு துண்டு காகிதத்தில் பிரசாத்தின் புதிய வீட்டு முகவரியை எழுதி கண்ணனிடம் கொடுத்தார்.

பிரசாத்தின் முகவரி கிடைத்துவிட்டாலும் கண்ணனால் உடனேயே பிரசாத்தைப் போய்ப் பார்க்க முடியவில்லை ஐந்து கிலோமீட்டர் அவனால் எப்படி நடந்து செல்ல முடியும்? அவன் பேசாமல் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனாலும் வழியெங்கும் அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடின.

""பிரசாத் வீடு மாறிச் சென்றுவிட்டான். இனி எப்படி அடிக்கடி பிரசாத் வீட்டிற்குச் செல்ல முடியும்? பிரசாத்தோடும் அவனுடைய நண்பர்களோடும் எப்படி விளையாடமுடியும்?'' என்றெல்லாம் யோசித்துக் கொண்டே வந்த கண்ணனுக்குள் திடீரென்று அந்தச் சிந்தனை வந்தது.

"பிரசாத் வீடு மாறிச் சென்றதால் எனக்கு இவ்வளவு வருத்தம் தோன்றுகிறதே..., அதுபோலத்தான் என் வீட்டிலுள்ள வேப்பமரமும் இருக்கிறது. அந்த வேப்ப மரத்தில் எத்தனை குருவிகள், அணில்கள், காகங்கள் வசிக்கின்றன. விளையாடுகின்றன. அந்தப் பறவைகளுக்கு வேப்பமரம் ஒரு நல்ல நண்பன்தானே? நாளை எனக்காக அறை கட்ட வேண்டும் என்று அந்த வேப்பமரத்தை வெட்டிவிட்டால் அந்தப் பறவைகள் எங்கே போகும்? அவையும் தன் நண்பனைக் காணாமல் என்னைப்போல் துன்பப்படும் அல்லவா?

ஒரு வேப்ப மரத்தில் விதவிதமான பறவைகள் வசிக்கும்போது ஓர் அறையில் நானும் அக்காவும் ஏன் ஒன்றாக அமர்ந்து படிக்கக்கூடாது? நான் அக்காவுடன் அடிக்கடி சண்டை போடுவதால்தானே அப்பா அந்த வேப்பமரத்தை வெட்டிவிட்டு எனக்காக அறை கட்ட வேண்டும் என்று தீர்மானித்தார்?' -

என்று சிந்தித்துக்கொண்டே வந்த கண்ணனுக்கு தன் தவறு புரிந்தது. அவன் மனதில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

அவன் தன் வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம், ""அப்பா! நான் இனி அக்காவுடன் சண்டை போட மாட்டேன். அவளுடன் எந்த வம்புக்கும் செல்ல மாட்டேன். நாங்கள் இருவரும் ஒர் அறையிலேயே அமைதியாக படிப்போம்! எனக்கான அறை கட்டுவதற்காக வேப்பமரத்தை வெட்ட வேண்டாம்!'' என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

காரணத்தை அறிந்து கொண்ட அவனுடைய அப்பா,""வேப்பமரத்தை வெட்ட வேண்டாம்..., நீயும் அக்காவும் ஒரே அறையில் படியுங்கள். உன் நண்பன் பிரசாத்துக்கு இப்பகுதியிலேயே ஒரு நல்ல வீடாகப் பார்த்துக் கொடுப்போம்!'' என்றார்.

கண்ணனின் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தோன்றின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com