
விலங்குகளில் அதிவேகமாக ஓடக்கூடியது வேட்டை நாய்தான் என்று நீண்ட காலமாக மக்கள் நினைத்து வந்தார்கள். ஆனால் பிறகுதான் தெரிய வந்தது. சிறுத்தையே அதிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்று.
சிறுத்தையின் வேகம் மணிக்கு 100 கி.மீட்டர். ஆனால் அதேவேகத்தில் அதனால் நீண்ட தூரம் ஓட முடியாது.
சிறுத்தை, பூனையினத்தைச் சேர்ந்தது. புலி, சிங்கம் போன்ற விலங்குகளில் இருந்து சிறுத்தை வேறுபட்டு வேட்டையாடும்.
சிறுத்தை தன்னைவிட பெரிய வலிமையான விலங்குகளை வேட்டையாடுவதைத் தவிர்த்துவிடும். அதனால் ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளை இது நெருங்குவதே இல்லை. அதேநேரம், தன்னைவிட மிகச்சிறிய விலங்குகளான குழி முயல், குட்டிக் குரங்குகளையும் இது வேட்டையாடுவதைத் தவிர்த்து விடுகிறது.
தனக்கு வேண்டிய இரையைத் தேர்ந்தெடுப்பதில் சிறுத்தை மிகக் கவனமாக எப்போதும் இருக்கும். தனது உழைப்பையும் அதிக ஆற்றலையும் ஒருபோதும் சின்னஞ்சிறிய விலங்குகளை வேட்டையாடுவதில் வீணாக்குவது இல்லை.
தனக்கு நிகரான எடையுள்ள விலங்குகளையே எப்போதும் அது வேட்டையாட விரும்புகிறது. அதனால்தான் சிறுத்தை பெரும்பாலும் மான்களையே விரும்பி குறிவைத்து வேட்டையாடுகிறது.
சில விலங்குகளைப்போல, பிற விலங்குகள் அடித்துப் போட்ட இறைச்சியை சிறுத்தை ஒருபோதும் தின்னாது.
தானே முயன்று வேட்டையாடிய இரையை மட்டுமே தின்னுகின்ற சிறப்பான பண்பு சிறுத்தையிடம் இருக்கிறது.
சிறுத்தை ஒரே பிரசவத்தில் மூன்று குட்டிகளைப் போடும். குட்டிகளின் தலையில் வெள்ளி நிறத்தில் பிடரி மயிர் இருக்கும். இந்த வெள்ளிமுடி இரண்டு மாதம் வரைதான் இருக்கும். பின் உதிர்ந்து பிறகு தாயைப்போல அழகான புள்ளிகள் தோன்றிவிடும்.
சிறுத்தைக் குட்டிகள் மூன்று மாதம் வரைதான் தாயிடம் பால் குடிக்கும். உடலில் சிறிது வலிமை வந்ததும் வேட்டையாடத் தொடங்கிவிடும். தனித்து அல்ல, தாயுடன்தான்.
ஆதாரம்: விலங்குகளைப் பற்றிய விநோதச் செய்திகள்
தொகுப்பு: சரஸ்வதி பஞ்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.