கவலை போனது!
அந்தக் குஞ்சுக் காகம் இப்போதுதான் பறக்கக் கற்றிருந்தது. உற்சாகமாகப் பறந்து கொண்டிருந்த


அந்தக் குஞ்சுக் காகம் இப்போதுதான் பறக்கக் கற்றிருந்தது. உற்சாகமாகப் பறந்து கொண்டிருந்த அந்தக் காகம் இன்று மரக்கிளையில் சோர்ந்துபோய் அமர்ந்திருந்ததைப் பார்த்தது அந்த மரத்தடிப் பொந்தில் வசித்த முயல்!
""என்ன காக்கையே! அப்படி என்ன உனக்கு மனக்கவலை? இன்று வெகுநேரம் உன்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...உன் முகம் வாடிப்போய் இருக்கிறது!'' எனக்கேட்டது முயல்.
""என்னவென்று சொல்வது முயலாரே! நான் கறுப்பாக அழகின்றி இருக்கிறேன். இதுவரை என் அம்மா என்னை அழகே! முத்தே! என்று கொஞ்சுவாள். அதைக் கேட்டு நான் அழகி என்று நினைத்திருந்தேன்! இன்றுதான் முதன் முதலாக சற்று தூரம் பறந்து சென்றபோது வழியில் ஒரு குளத்து நீரில் என் உருவத்தைப் பார்த்தேன்! நான் எவ்வளவு கறுப்பாக இருக்கிறேன்...'' என்று கவலையோடு சொன்னது குஞ்சுக் காகம்.
அதைக் கேட்டு முயல், ""தோழியே! இதற்காகவா கவலைப்படுகிறாய். இயற்கை ஒவ்வொரு பறவையையும் ஒவ்வொரு நிறத்தில் படைத்திருக்கிறது. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?'' என்று ஆறுதல் கூறியது.
""இல்லை முயலாரே! எத்தனையோ பறவைகள் அழகாக இருக்கின்றன. நான் மட்டும் கறுப்பாக இருப்பது எனக்கு கவலையைத் தருகிறது!'' என்று சொன்னது அந்தக் குஞ்சுக் காகம்.
""சரி..., நீ என்னோடு வா..., நான் உன்னையும் அழகாக மாற்றிக் காட்டுகிறேன்!''என்று அழைத்தது முயல்.
"சரி..., எப்படியோ நான் அழகாக மாறினால் போதும்' என்று நினைத்த காகம் முயலோடு புறப்பட்டுச் சென்றது.
இரண்டும் முதலில் ஒரு ஏரிக்கரையை அடைந்தன. ஏரியில் வெள்ளை நிற அன்னம் ஒன்று நீந்திக் கொண்டிருந்தது.
அந்த அன்னத்திடம் முயல், ""அன்னமே! நீ எவ்வளவு வெண்மையாக இருக்கிறாய்? அதனால் நீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய். என்று எண்ணுகிறேன்...., அப்படித்தானே?'' என்று கேட்டது.
அதைக் கேட்ட அன்னம், ""முயலாரே! இதுவரை நானும் என்னை அழகு என்று நினைத்திருந்தேன். ஆனால் சில நாள் முன்பு ஒரு கிளியைப் பார்த்தேன். நான் வெறும் வெண்மையாக இருக்கிறேன். ஆனால் கிளியோ உடல் முழுவதும் பச்சை நிறமாகவும் அலகு சிவப்பு நிறமாகவும் இரண்டு வண்ணங்களில் இருக்கிறது! அன்றிலிருந்து எனக்கும் உடலில் இரண்டு நிறங்கள் இல்லையே என்ற கவலை வந்துவிட்டது!'' என்று சொன்னது.
அன்னம் சொன்னதைக் குஞ்சுக் காகம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது.
""ஓ.., அப்படியா? சரி.., நாங்கள் வருகிறோம்!''
என்று அன்னத்திடம் சொன்ன முயல், காகத்தை அழைத்துக் கொண்டு நேராக ஓர் ஆலமரத்தின் அருகில் வந்தது.
ஆலமரத்தில் ஒரு கிளி தங்கியிருந்தது. அது அழகாக சத்தமிட்டுக் கொண்டிருந்தது.
முயல் அந்தக் கிளியிடம், ""என்ன கிளியக்கா! ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறாய் போலிருக்கிறது. உனக்கென்ன உன் உடல் பச்சை நிறத்தில் பளபளக்கிறது. உன் அலகோ பவளம்போல் சிவந்திருக்கிறது. அழகான தோற்றத்தைப் பெற்றிருந்தால் யாருக்குத்தான் மகிழ்ச்சி தோன்றாது?'' என்று ஜாடையாப் பேசியது.
""முயலாரே! நானும் என் அழகைப்பற்றி பெருமையாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மயிலைப் பார்த்தேன். மயிலின் உடலில்தான் எத்தனை எத்தனை நிறங்கள்! அதன் கருநீல வண்ணத்தில் ஜொலிக்கிறது! தோகையோ பச்சையும் நீலமும் இளநீலமுமாய் மின்னுகிறது! கண்களோ அழகாக சிவந்து காணப்படுகிறது. மயிலின் அழகிற்குமுன் நான் என்ன அழகு?'' என்று சலிப்பாய்ச் சொன்னது கிளி.
""ஓ...அப்படியா? சரி..., உன் வேலையை கவனி. நாங்கள் வருகிறோம்!'' என்று சொன்ன முயல் காகத்தையும் அழைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றது.
அவை இரண்டும் காட்டைவிட்டு வெளியேறி நகரப் பகுதிக்கு வந்துவிட்டது! நகரத்தில் அழகான பறவைகள் காட்சிச் சாலை இருந்தது.
முயல் காகத்தை பறவைக் காட்சி சாலைக்குள் அழைத்துச் சென்றது. அங்கே பெரியதொரு கூண்டில் மயில் ஒன்று அடைபட்டிருந்தது. முயல் காகத்துடன் நேராக அந்தக் கூண்டின் அருகில் சென்றது.
""என்ன மயிலே! மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறாய் போல! உன் உடலில்தான் எத்தனை எத்தனை நிறங்கள்! பறவைகளின் ராணி என்று உன்னை அழைக்கிறார்கள்!பாவம்...,என்னுடன் வந்திருக்கும் காகத்தைப் பாரேன்..., கன்னங்கரேல் என்று இருப்பதால் கவலையோடு இருக்கிறது!'' என்று மெதுவாக ஆரம்பித்தது.
அவ்வளவுதான்! மயில் இதுவரை தன் மனதிலிருந்த வருத்தத்தையெல்லாம் கூறத்தொடங்கியது. முயலோடு சேர்ந்து காகமும் அதைக் கேட்கத் தொடங்கியது.
""காகமே! நீ என்னைப்போல பல நிறங்களோடு இல்லை என்று வருத்தப் படுகிறாய்..., ஆனால் உனக்கு ஓர் உண்மை தெரியுமா? என் உடலின் நிறங்களே எனக்கு எதிரியாக அமைந்துவிட்டது! என் அழகைப் பிறர் பார்த்துச் செல்லவேண்டும் என்பதற்காகவே என்னை இந்தக் கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள்! என்னால் சுதந்திரமாக எங்குமே செல்ல இயலவில்லை. ஆனால் உன்னைப் பார்...! எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறாய்!! பறவை இனங்களிலேயே காகங்களை மட்டும்தான் எந்த மனிதரும் கூண்டில் அடைத்து வைப்பதில்லை! உண்மையிலேயே நீ கறுப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும். உன்னைப்போல் சுதந்திரமாகப் பறக்க முடியவில்லையே என்று நாங்கள் எல்லோரும் தவிக்கிறோம்!'' என்று சொல்லி முடித்தது மயில்.
மயில் சொன்னதையெல்லாம் குஞ்சுக் காகம் கேட்டது.
""மயில் சொல்வதும் உண்மைதானே! காக்கை இனத்தை மட்டும்தான் மனிதர்கள் கூண்டில் அடைத்து வைப்பதில்லை! நம் கறுப்பு நிறம்தான் நம்மை சுதந்திரமாக வைத்திருக்கிறது!'' என்று உணர்ந்தது.
""என்ன...? காகமே..., இனிமேலும் உன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் சொல்..., என் நண்பன் ஒருவனிடம் கூட்டிச் சென்று உன் மீது வண்ணம் பூசிவிடச் சொல்கிறேன்'' என்று குறும்பாகக் கேட்டது முயல்.
அதைக் கேட்ட காகம், ""ஐயோ..., வேண்டாம் நண்பரே! எனக்கு நல்ல பாடம் புகட்டினீர்கள்! இனி நான் என் கறுப்பு நிறம் குறித்து ஒருபோதும் கவலைப்படமாட்டேன். நான் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து வெகுநேரம் ஆகிவிட்டது! என் அம்மா தேடுவாள். வாருங்கள் நம் இடத்திற்குச் செல்லலாம்!''
என்று உற்சாகமாக அழைக்க...., முயலும் மகிழ்ச்சியாக காகத்தை அழைத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...