வைரத்தின் வரலாறு

இந்தப் பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.
வைரத்தின் வரலாறு
Published on
Updated on
2 min read

இந்தப் பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன்முதலில் இந்தியாவில்தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில்தான் வைரங்கள் கிடைத்தன.

இங்கிருந்துதான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒடிசா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள்தான் முதன்முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்துதான் ""வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 - 200 கிலோமீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும்போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-இல் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்தத் தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால்தான் இதனை அடம்பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட் (Carat) முறையில் எடை போடுகிறார்கள்?

இந்தியாவிற்குப் பிறகு 1870-லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்படுகிறது. இங்கு எடை அளவுகள் நிர்ணயிக்கப்படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாகப் பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை. இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகிவிட்டது.

ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையைக் குறிக்கும்?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். உம்: 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர் (Blue Jager) வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால்தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்தச் சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன்?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியைத் தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும்போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும்போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைரச் சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கின்றன. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன?

முதன்முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு Round Brilliant Cut என்று பெயர். இதுதான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை ஏஹழ்க்ய்ங்ள்ள் என்கிறோம்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர் பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கின்றன. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம்தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது. இதன் எடை: 545.67 காரட்டுகள். தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.

-ஆர்.பெரியாண்டவர்,

தேவிபட்டணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com