அரங்கம்: பட்டு வீட்டில் குட்டித் தேர்தல்!

பட்டு நிற்கிறாளா? துணிச்சலான பெண்தான்! கிட்டுதான் இதற்கு முன் இரண்டுமுறை இருந்து விட்டானே! ஒருமுறை பதவியை அனுபவித்துவிட்டால்
அரங்கம்: பட்டு வீட்டில் குட்டித் தேர்தல்!
Updated on
4 min read

காட்சி-1

இடம்-பட்டுவின் வீட்டு வாயில்

மாந்தர்-பக்கத்து வீட்டுச் சிறுமி வேதா, சிறுவன் பாலு.

பாலு: வேதா! பட்டு வீட்டில் ஒட்டியிருக்கும் இந்த சுவரொட்டியைப் பார்த்தாயா?

வேதா: பட்டுவின் கையெழுத்து! பட்டையாக எழுதியிருக்கிறாள்!

பாலு: (படிக்கிறான்) தேர்தல்! வீட்டு நிர்வாகத்தை நடத்தத் தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல்!

வேதா: யார் வேட்பாளர்?

பாலு: கிட்டு..., அவன் தங்கை பட்டு!

வேதா: பட்டு நிற்கிறாளா? துணிச்சலான பெண்தான்! கிட்டுதான் இதற்கு முன் இரண்டுமுறை இருந்து விட்டானே! ஒருமுறை பதவியை அனுபவித்துவிட்டால்

ஆசை எப்படி விடும்? அதனால் மீண்டும் நிற்கிறான்! நல்ல நிர்வாகம் வேண்டுமென்று பட்டு நிற்கிறாள்!

பாலு: வெற்றி பெற்றால் என்ன செய்ய வேண்டும்?

வேதா: இது புதுமையான வீடு! வருங்காலம் பிள்ளைகள் கையில் என்பதால் அவர்களுக்கு இப்போதே பயிற்சி! அப்பா மாதம் ஒரு தொகை தருவார்! நிர்வாகி அதை முறையாகச் செலவு செய்ய வேண்டும்! எதற்கு....? மளிகை, காய்கறி, பால் போன்றவற்றை வாங்க வேண்டும். மின்கட்டணம், நீர்வரி, வீட்டுவரி, போன்றவற்றைச் செலுத்த வேண்டும்.

பள்ளிக் கட்டணம் கட்டவேண்டும். விருந்தினர் வந்தால் உபசரிக்க வேண்டும். வீட்டுத் தூய்மையைப் பராமரிக்க வேண்டும். இப்படி!

(அதைக் கேட்ட பாலுவிற்கு வியப்பு!)

வேதா: தோட்டச் செடிகள், வாடியிருந்தாலும் நிர்வாகி பொறுப்பு ஏற்க வேண்டும். தோட்டக்காரரை முறையாக வேலை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் நீர் ஊற்ற வேண்டும்!

பாலு: நல்ல திட்டம்தான்! இதற்கு ஏன் தேர்தல்? வீட்டில் ஒரு பிள்ளையிடம் பொறுப்பைக் கொடுத்தால் செய்ய மாட்டார்களா?

வேதா: ஆர்வமில்லாமல் செய்யும் எந்த வேலையும் பயன்படாது; பயன் தராது. அதனால் பட்டுவின் அப்பா முரளியும், அம்மா பாமாவும் தேர்தல் நடத்துகிறார்கள்.

ஆர்வம் உடையவரைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகு அவருக்குப் பயிற்சி கொடுத்துத் திறமையை, ஆற்றலை வளர்க்கலாம் என்பது அவர்கள் எண்ணம்! திட்டம்!

பாலு: நிர்வாகி வேறு என்ன செய்ய வேண்டும்?

வேதா: நிர்வாகி, ஊழியர்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்க்கக்கூடாது. காக்காய் பிடிக்கும் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது. ஊதியம் தருவதால் அதற்குரிய வேலையை வாங்கவேண்டும். அதே நேரத்தில் அவர்களுடைய நலனிலும் அக்கறை காட்ட வேண்டும். செடியை வாடாமல் பார்த்துக் கொள்பவர் தோட்டக்காரர்! அவருடைய முகம் வாடாமல் பார்த்துக் கொள்வது நிர்வாகியின் பொறுப்பு!  இதைப் பட்டுவின் அம்மா அடிக்கடி சொல்வாராம்!

பாலு: அவ்வளவுதானே வேலை?

வேதா: வரவு செலவுக் கணக்கை அதற்கான பேரேட்டில் ஒழுங்காக எழுதி, குடும்பத் தலைவர் முரளி ஐயாவிடம் தரவேண்டும். அவரும் பாமா அம்மாவும் சேர்ந்து ரசீதுகளோடு சரி பார்ப்பார்கள்.

பாலு: கணக்கு என்றாலே கஷ்டம்தான்! அதிலும் கிட்டு விஷயத்தில் சொல்ல வேண்டியதில்லை! பல நண்பர்கள்! செலவு செய்ய "தனியாக'ப் பணம் வேண்டும்.

வேதா: வா..., நம் வீட்டுக்குப்போய் மற்றவற்றைப் பேசலாம்.

காட்சி:2

இடம்: பட்டுவின் வீடு

மாந்தர்: முரளி, பாமா, பட்டு, மாலா, கிட்டு, கடைக்குட்டி அனுராதா.

-முரளியும் பாமாவும் வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு ஆகியவற்றைத் தயாரிக்கிறார்கள். பட்டு, அட்டைகளை வெட்டி உதவி செய்கிறாள்! மாலா ஒட்டிக் கொடுக்கிறாள். அனுராதா கீழே விழும் துண்டுத்தாள்களை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறாள். முரளியிடம் "அது என்ன? இது என்ன?' எனப் பல கேள்விகளைக் கேட்கிறாள்.

கிட்டு: அப்பா! நான் தேர்தல் அன்று வீடு தோரணம் எல்லாம் தோரணம் கட்டுகிறேன்.

முரளி: உன் ஆசையைக் கெடுப்பானேன்....,செய்! ஆனால் அதிகச் செலவும் ஆடம்பரமும் கூடாது! எந்தப் பணத்திலிருந்து இதற்கான செலவு என்ற விவரம் வேண்டும்!

(கிட்டு அதைக் கேட்டு விழிக்கிறான்)

காட்சி:3

இடம்: வேதாவின் வீடு

மாந்தர்: வேதா, பாலு

வேதா: பாலு! வீட்டு நிர்வாகியின் வேலை பற்றி இன்னும் சொல்கிறேன் கேள். பகலில் பள்ளிக்குப் போகுமுன் பணியாளர்களிடம் அன்று இன்ன வேலை என்பதைச் சொல்ல வேண்டும். மாலை வந்ததும் மறுபடி நிர்வாகம் தொடரும்!

சனி, ஞாயிறு அன்று படிப்பு, வீட்டுப்பயிற்சி, விளையாட்டு இவற்றோடு வீட்டு நிர்வாகமும் பார்க்க வேண்டும். வீட்டில் என்ன பொருள் இல்லை என்று அம்மாவிடம் கேட்டு பட்டியல் போட வேண்டும். சென்ற வாரம் வேலையில் குறை ஏற்பட்டதா என அறிய வேண்டும்.

பாலு: கேட்கவே வேடிக்கையாய் இருக்கிறதே..., ஒரு குட்டி அரசாங்கமே நடக்கிறது என்று சொல்.

வேதா: விடுமுறை நாளில், மில்லில் மாவு அரைப்பது போன்ற வேலைகளை ஊழியர்கள் துணையுடன் முடிக்க வேண்டும். மாடியில் அம்மாவும் பட்டுவும் போட்டுவிட்டு வந்த துணிகளை மாலையில் எடுத்துவர வேண்டும்.

பாலு: கேட்கவே எனக்கு அயர்வாக உள்ளது. எனக்கு தொலைக்காட்சி, கிரிக்கெட்தான் உயிர். இதுபோல வீட்டில் தேர்தல் வைத்தால் நான் பெரியம்மா வீட்டுக்குப் போய்விடுவேன்! தேர்தல் என்றாலே எனக்கு அலர்ஜி!

வேதா: எல்லோரும் ஒதுங்கினால் வீட்டுக்கு எப்படி நல்ல நிர்வாகம் கிடைக்கும்? "வீட்டிலிருந்துதானே நாடும் உருவாகிறது. நல்ல தலைவர்கள் வீட்டில் உருவானால் நாளை நாட்டுக்கும் நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்.' என்று நம் தமிழாசிரியர் சண்முக சுந்தரம் சொன்னாரே..., அதைப் பட்டு வீட்டில் செயல்படுத்துகிறார்கள். சரி..., தேர்தலுக்கு வருவோம்.

வரும் தேர்தலில் என்னைத் தேர்ந்தெடுத்தால்...என்று பட்டு ஒரு செய்தியை ஒட்டியிருக்கிறாள்.

பாலு: அதில் என்ன உள்ளது?

வேதா: (தாளைக் காட்டுகிறாள்)

என்னைத் தேர்ந்தெடுத்தால்....,

* பள்ளிக்கு மட்டம் போட மாட்டேன்.

* நல்ல நட்பை வைத்துக் கொள்வேன்.

* ரேஷன் கடைக்கு நானே போவேன்.

* அப்பா சொல்லும் கடையிலேயே பொருட்கள் வாங்குவேன். எடையைச் சோதிக்க வீட்டிலுள்ள எடைபார்க்கும் கருவியை உபயோகப் படுத்துவேன். பொருட்களுக்கு உரிய ரசீதுகளை கொண்டு வருவேன்!

* கடைக்குச் செல்வது, சிறு வேலைகள் செய்வது போன்றவற்றில் மாலாவுக்கும் பயிற்சி தருவேன்.

* அளவுக்கு மீறி தொலைக்காட்சி, திரைப்படம், விளையாட்டு போன்றவற்றில் காலம் கழிக்க மாட்டேன்.

* உடலின் சக்தி, காலம், பணம் முதலியவற்றை விரயம் செய்யமாட்டேன். எனது ஆசைகளுக்காக பொதுப் பணத்தைச் செலவு செய்ய மாட்டேன்!

* வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தலில் அப்பாவுக்கு உதவுவேன்.

* பொறுப்புடன் செயல் படுவேன்.

காட்சி-4

இடம்- பட்டுவின் வீடு

மாந்தர்-கிட்டு, பாட்டி, பட்டு, மாலா.

(கிட்டு வீட்டின் முன்பகுதியில், தோட்டத்தில் வண்ணத் தோரணம் கட்டுகிறான். ஓர் ஓவியரிடம் தன் உருவத்தை வரையச் சொல்லி கீழே, "நிர்வாக அனுபவம் உள்ள எனக்கு வாக்களியுங்கள்' என்ற வாசகத்தோடு ஒரு தாளை ஒட்டுகிறான். பதிலாக, பட்டுவின் தங்கை மாலா "இந்த முறை பெண்குலத்திற்கு வாய்ப்பளியுங்கள்' என்று ஒரு தாளை ஒட்டுகிறாள்.)

(பட்டு பொதுவாக எல்லோரிடமும் வாக்கு சேகரித்தாள். கிட்டு, வேலைக்காரர், சமையற்காரர், தோட்டக்காரர் ஆகியோரைத் தனிதனியே சந்தித்து வாக்கு சேகரிக்கிறான். பாட்டிக்கு வெற்றிலை சீவல் ஸ்பெஷலாக வாங்கிக் கொடுக்கிறான்.)

காட்சி-5

இடம்- பட்டு வீட்டுத் தோட்டம்

மாந்தர்-முரளி, பாமா, பட்டு, கிட்டு, பாட்டி, மாலா, அனுராதா, சமையற்காரர், தோட்டக்காரர், ஆகிய பணியாளர்.

(அன்று தேர்தல். தோட்டக்காரர் கிட்டுவிடம், "உடம்பு சரியில்லை ஐயாவிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகிறேன்' என்றார். அவன் உடனே அவரைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல் கையில் எதையோ கொடுத்தான். அவருக்கு உடம்பு சரியாகி விட்டது.)

வாக்குப் பெட்டியை, வேலைக்காரர் முருகன் எடுத்துவந்து தோட்டத்தின் நடைபாதையில் வைக்கிறார். வாக்களிக்க எல்லோரும் தயார்.

பட்டு: (வாக்காளரிடம்) வாக்களிக்க வரும்போது, புல்லையோ செடிகளையோ யாரும் மிதிக்காதீர்கள். நடைபாதையில் வந்து வாக்களியுங்கள்!

(கிட்டு அவளை ஏளனமாகப் பார்க்கிறான்)

கிட்டு: (தனக்குள்) இப்போதே அறிவிப்பு இப்படி! (பணியாளரைப் பார்த்து மெதுவாக) பட்டு நிர்வாகத்தினால் உங்கள் நிலைமை என்னாகும்...? பார்த்துக் கொள்ளுங்கள்!

ஒரு பணியாளர்: (பட்டுவின் பார்வையில் படாதபடி) "வெற்றி உனக்குத்தான்' என்பதற்கு அடையாளமாகக் கையை உயர்த்துகிறார்.)

 -கிட்டுவிற்கு மகிழ்ச்சி-

பட்டு: (தனக்குள்) அம்மா, அப்பா, மாலா, அனுராதா வாக்குகளும் என் வாக்கும் சேர்ந்து ஐந்து! இந்த ஐந்தும் எனக்கு உறுதி! பாட்டி, பாவம்! கிட்டு, அவளுக்குச் செல்லப்பிள்ளை! லேசாக விந்தி விந்தி நடப்பவன்! அதனால் அனுதாபம் கொண்டு வாக்கை அவனுக்குப் போடவாள்!

மாலா: (பட்டுவிடம் வருகிறாள்) அக்கா, என்ன யோசனை? வெற்றி உனக்குத்தான்! பெண் குலம் தலைமை ஏற்க வேண்டும். நிர்வாகத்தில் நீ முன்மாதிரியாக இருப்பாய்! கிட்டு பணியாளர்களை சரியாக வழி நடத்தவில்லை! நீ வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்! ஆனால் இன்று அவர்களுடைய வாக்கு எத்தனை நமக்கு விழும் என்று தெரியவில்லை!

(கிட்டுவுக்கு ஐந்து. தனக்கு ஐந்து. வெற்றிக்கு இன்னும் ஒரு வாக்கு வேண்டுமே..., என்ன செய்வது? என்று பட்டு சிந்திக்கிறாள். அப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வர முகம் மலர்கிறது)

-வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். முரளி, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய கைப்பையிலிருந்து கவனமாக, தன் கையெழுத்துடன் வாக்குகளைக் கொடுக்கிறார். வாக்கை வாங்கிய அவர்கள், அருகில் அட்டை மறைப்பு உள்ள மேசைமீது, விரும்பும் பெயருக்கு  * குறி இடுகிறார்கள். பக்கத்து வீட்டு வேதாவும் பாலுவும் தேர்தல் பார்வையாளர்கள்!

முரளி: எல்லோரும் போட்டாயிற்றா?

கிட்டு: (முந்திக்கொண்டு) போட்டுவிட்டார்கள்!

பட்டு: (முரளியிடம் சென்று ஏதோ சொல்கிறாள்)

முரளி: ஆமாம்...மறந்தே போய்விட்டேனே...உன் அண்ணன் ராமன் ஒருமாத விளையாட்டுப் பயிற்சிக்காக பஞ்சாப் போனானே...தபாலில் அவனுடைய வாக்கை அனுப்பச் சொன்னேனே...தபால் வந்ததா? யார் வாங்கியது?

("நாங்கள் வாங்கவில்லை' எனப் பதில் வருகிறது. கிட்டு அமைதியாக நிற்கிறான். அனுராதா ஓடிச்சென்று ஒரு தபாலை எடுத்துவந்து முரளியிடம் தருகிறாள்)

முரளி: இதோ, ராமன் அனுப்பியிருக்கிறானே..., செல்லக்குட்டி அனுராதா எங்கிருந்தோ கொண்டுவந்து விட்டாளே!

அனுராதா: இது, அண்ணன் கிட்டுவின் மேசை இழுப்பறையில் இருந்தது. நான் கண்டுபிடித்துக் கொண்டு வந்தேன்!

(முரளி அவளுடைய முதுகில் பாசத்தோடு தட்டிக் கொடுக்கிறார். கிட்டுவை அவர் பார்த்த பார்வை "நீ எப்போதுதான் மாறுவாய்? என்று கேட்பது போல இருந்தது.)

-முரளி தபாலைப் பிரிக்கிறார். ராமனுடைய வாக்கு பட்டுவுக்கு ஆதரவாக இருந்தது!-

முரளி: (முடிவை அறிவிக்கிறார்) வாக்குகளை உங்கள் முன்பாக எண்ணியதைப் பார்த்தீர்கள்! கிட்டுவுக்கு ஆதரவாக ஐந்து, பட்டுவுக்கு ஆதரவாக தபால் வாக்கு சேர்த்து ஆறு! எனவே, பட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கிறேன்.

மாலாவும் அனுராதாவும்: பட்டுவுக்கு வெற்றி! பட்டு வாழ்க, வாழ்க!         

(திரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com