அரங்கம்: விபரீத விளையாட்டு!

டேய்! இன்னைக்கு தொலைக்காட்சியிலே ஏற்கெனவே போட்ட படத்தைதான் போடப்போறாங்க! நான் எல்லா சேனல்லேயும் என்ன படம் போடப்போறாங்கன்னு
அரங்கம்: விபரீத விளையாட்டு!

காட்சி-1

இடம்-எழிலன் வீடு

மாந்தர்-எழிலன், ரவி, சிவா.

(எழிலன் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன். மற்ற இருவரும் எழிலனின் வகுப்புத் தோழர்கள். -எழிலன் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, ரவியும் சிவாவும் உள்ளே வருகிறார்கள்.-)

எழிலன்: ரவி! சிவா! வாங்க...,வாங்க உட்காருங்க...

ரவி: எழில்! ஞாயிற்றுக் கிழமை ரொம்ப போரடிக்குதுடா...

சிவா: ஞாயிற்றுக் கிழமை மட்டுமில்லே இந்த விடுமுறையே படுபோர்!

ரவி: எழில்! இந்த நாளைப் பயனுள்ளதா மாத்தணும். அது உன்னோட கையிலதான் இருக்கு!

எழிலன்: என்ன புதிர் போடறீங்க? என் கையிலே என்ன இருக்கு?

(புரியாமல் விழிக்கிறான்)

சிவா: டேய்! இன்னைக்கு தொலைக்காட்சியிலே ஏற்கெனவே போட்ட படத்தைதான் போடப்போறாங்க! நான் எல்லா சேனல்லேயும் என்ன படம் போடப்போறாங்கன்னு செய்தித்தாளைப் பார்த்துட்டேன்!

எழிலன்: சரி! வேற என்ன செய்யலாம்...,கிரிக்கெட் விளையாடலாமா?

ரவி: அதுவும் சுத்த போரு! நாம இன்னைக்கு காத்தாடி விடலாம்.

எழிலன்: காத்தாடியா? சரி! நானும் காத்தாடி விட்டு ரொம்ப நாளாச்சு. இருங்க உள்ளே இருக்கு கொண்டு வரேன்.

(காத்தாடியை எடுத்துக்கொண்டு மூவரும் மாடிக்குச் செல்லுதல்)

காட்சி-2

இடம்- மொட்டைமாடி

மாந்தர்-எழிலன் அப்பா வெங்கட்ராமன், எழிலன் மற்றும் நண்பர்கள்.

(எழிலனின் அப்பா மாடியில் செடிகளுக்கு உரம் போட்டுக் கொண்டிருக்கிறார். யாரோ வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார்)

வெங்கட்ராமன்: அடடே! அப்பாவுக்கு உதவி செய்ய நீயும் உன்  ஃபிரெண்ட்ஸூம்  அவசரமா வர்றீங்களா?

எழிலன்: (அதிர்ச்சியுடன்)அதெல்லாம் இல்லேப்பா! நான் நண்பர்களோட காத்தாடி விடலாம்னு வந்தேன்.

வெங்கட்ராமன்: என்ன காத்தாடியா?

சிவா: என்ன அங்கிள்...? காத்தாடிதானே விடப்போறோம்..., அதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி அடையறீங்க?''

வெங்கட்ராமன்:(ஆவேசத்துடன்) என்னப்பா நீங்க? செய்தித்தாளை சரியா படிக்கறதில்லியா? இந்த காத்தாடியால எத்தனை பேர் உயிர் போயிருக்கு தெரியுமா? 

சிவா: என்ன அங்கிள்? காத்தாடி விட்டா உயிர் போகுமா? புரியும்படியா சொல்லுங்க...

வெங்கட்ராமன்: சரி, கீழ வாங்க. கையெல்லாம் சேறா இருக்கு. அப்படியே விட்டா காய்ஞ்சுடும். அலம்பிட்டு சொல்றேன்.

(அனைவரும் கீழே இறங்குதல்)

காட்சி-3

இடம்-எழிலன் வீட்டு வரவேற்பறை.

மாந்தர்-எழிலன் அப்பா வெங்கட்ராமன்,

எழிலன் மற்றும் நண்பர்கள்.

(கை, கால், முகம் அலம்பி துண்டால் துடைத்தபடியே வந்து சோபாவில் அமர்கிறார் எழிலன் அப்பா)

வெங்கட்ராமன்: பசங்களா! நீங்க மகிழ்ச்சியா விளையாட வந்திருக்கீங்க. ஆனா நாம விளையாடுற விளையாட்டு மற்றவர்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடாது. அதனால இனிமே காத்தாடி விடறத மறந்துடுங்க.

எழிலன்: புரியும்படி சொல்லுங்கப்பா...

வெங்கட்ராமன்: சரி, புரியும்படியே சொல்றேன். காத்தாடியை செய்யறதுக்கு காகிதம், பசை, மூங்கில் குச்சி, கொஞ்சம் நூல் இருந்தா போதும். ஆனா அதை மேலே கொண்டு போகிற நூலோட வலிமை அதிகமாக இருக்கணும்..., சரிதானே?

எழிலன்: ஆமாம்ப்பா! அது சரிதான்...,அதுக்கென்ன?

வெங்கட்ராமன்: அதுலதான் தப்பு இருக்கு! நீங்க உங்க வெற்றிக்கு ஆசைப்பட்டு சாதாரண நூலை, கண்ணாடித் துகள்கள், வஞ்சிர கோந்து இன்னும் என்னென்னவோ போட்டு வலிமையா உருவாக்குற அந்த நூல் அதிக உறுதியா மாறி, மற்ற காத்தாடியோட போட்டி போட்டு அதை அறுக்குது!

சிவா: இது விளையாட்டுதானே அங்கிள்? இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க!

வெங்கட்ராமன்: இது விளையாட்டுதான்...,ஆனால் வினையா இல்லே முடியுது. அதாவது உங்களைப் போன்ற சிறுவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்னுட்டு காத்தாடி விடும்போது அதோட நூல் சாலையில வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு! அப்படி வர்ற  நூல் இரண்டு சக்கர வண்டியிலே போறவங்களோட கழுத்தை அறுத்து அவங்க உயிரையே போக்கிடுது! அது மட்டுமல்ல, மொட்டை மாடியிலே நின்னுக்கிட்டு காத்தாடியை டீல் செய்யும் கவனத்துல நிறைய சிறுவர்கள் கீழே விழுந்து இறந்திருக்காங்க...!

(மூவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொள்கிறார்கள்)

வெங்கட்ராமன்: அதனாலதான் இந்த விளையாட்டை காவல்துறை தடை பண்ணியிருக்காங்க...,அதனால நீங்க முடிஞ்ச அளவு கேரம், செஸ், போன்ற வீட்டுக்குள்ள விளையாடுற விளையாட்டை விளையாடுங்களேன்! அப்புறம் மாலையிலே வெய்யில் கொஞ்சம் தணிஞ்ச பிறகு கிரிக்கெட்டோ, புட்பாலோ மைதானத்துல போய் விளையாடுங்க...!

எழிலன்: அப்பா! நீங்க சொன்னது இப்பதான் எங்களுக்குப் புரிஞ்சுது. காத்தாடியிலே இவ்வளவு தீமை இருக்கும்னு நாங்க நினைச்சே பார்க்கலே...,இனிமே இவ்வளவு ஆபத்தை விளைவிக்கிற இந்த காத்தாடியை நாங்க தொடவே மாட்டோம்! பள்ளி திறந்ததும் எங்க நண்பர்களுக்கும் இதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இது உறுதி!

(நண்பர்களும் ""ஆமாம்! இது உறுதி!'' என்று கூறுகின்றனர்)

வெங்கட்ராமன்: சரி, சரி, அந்த கேரம்போர்டை கொண்டு வா! நாம நாலுபேரும் சேர்ந்து ஆடலாம்!

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com