தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரோஜா - சரோஜா!

சரோஜாவுக்கு ரோஜாப்பூ என்றால் அவ்வளவு ஆசை. சின்ன வயதிலிருந்தே அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து வாசலில் காலை நேரத்தில் விற்கும் வண்ண ரோஜாப் பூக்களை தினந்தோறும் வாங்கி விடுவாள்.

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 9:51 am

நா. கிருஷ்ணமூர்த்தி

சரோஜாவுக்கு ரோஜாப்பூ என்றால் அவ்வளவு ஆசை. சின்ன வயதிலிருந்தே அம்மாவிடம் பிடிவாதம் பிடித்து வாசலில் காலை நேரத்தில் விற்கும் வண்ண ரோஜாப் பூக்களை தினந்தோறும் வாங்கி விடுவாள். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ண ரோஜாவைத் தேர்ந்தெடுத்து, தலையில் சூடி பள்ளிக்கூடம் செல்வாள். நான்காம் வகுப்பு படிக்கும் சரோஜாவை வகுப்பாசிரியர் "ரோஜா மகளே!' என்றே அழைப்பார்.

 ரோஜாவின் மீது அவளுக்கிருந்த அளவற்ற ஆசையை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெரிய பூந்தொட்டிகளில் அவள் விரும்பிய வண்ண ரோஜாச் செடிகளை அவளுடைய அம்மா வாங்கித் தந்தார்.

 கொஞ்ச நாள்களிலேயே ரோஜாச் செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கின. சரோஜா ஆசையோடு ரோஜாப் பூவை தானே பறித்து அம்மாவிடம் தந்து தலையில் வைத்துக் கொண்டாள்.

 அவளது தோழிகளுக்கும், வகுப்பாசிரியருக்கும் அவ்வப்போது ரோஜாப் பூக்களைக் கொண்டுபோய் தருவாள்.

 சரோஜாவின் அம்மா அவ்வளவு வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு ரோஜாச் செடிகளுக்கும் மறக்காமல் நீர் ஊற்றி பராமரிப்பார்.

 அன்று ஞாயிற்றுக்கிழமை. சரோஜா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு தாமதமாக ரோஜாப் பூவைப் பறிக்க வந்தாள்.

 ரோஜாச் செடிகள் சரோஜாவிடம் பேச விழைந்தன!

 ""ரோஜா மலர் உனக்கு ரொம்பப் பிடிக்குமா?''

 செடிகளின் அருகில் நின்றிருந்த சரோஜா இதைக் கேட்டதும் அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்தாள்.

 எவரும் இல்லை!

"அப்படியானால் யார் பேசியது?' - யோசித்தாள்.

 ""நான்தான் உன்னிடம் பேசினேன்''

 ரோஜாச் செடிகளிலிருந்து பேச்சொலி கேட்டதும் சரோஜா ஆச்சரியப்பட்டாள்!

 ""ரோஜாச் செடியே! நீயா பேசுகிறாய்?''

 ""ஆம், நானேதான் பேசுகிறேன்... அது சரி, உனக்கு என்னைப் பிடிக்குமா?''

 ""ஆமாம், எனக்கு உங்களுடைய பூக்கள் ரொம்பப் பிடிக்கும்''

 ""மகிழ்ச்சி... நாங்கள் உனக்கு தினந்தோறும் பூக்கள் தருகிறோம்... நீ எங்களுக்கு என்ன தருகிறாய்?''

 சரோஜா பதில் சொல்லத் தெரியாது விழித்தாள்!

 ""உன்னுடைய அம்மா நாங்கள் தரும் பூக்களை ஒருநாள்கூட தலையில் சூடிக்கொள்வதே இல்லை. ஆனால் உனக்காகத்தான் எங்களை வளர்க்கிறார்''

 ""ஆமாம்... அம்மா ரொம்ப நல்ல அம்மா''

 ""அம்மாவுக்கு எத்தனையோ வேலை. இருந்தும் ஒருநாள் தவறாமல் எங்களுக்கு நீர் ஊற்றுகிறார். ஆனால் நீயோ பூவை மட்டும் பறித்துத் தலையில் வைத்துக்கொண்டு போகிறாய். அது நியாயமா?''

 ""நான் என்ன செய்ய வேண்டும்?''

 ""ஒரு பலனை ஒன்றிடமிருந்து பெறுபவர் அல்லது அனுபவிப்பவர் பிரதியுபகாரமாக அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?''

 ""ஆமாம்''

 ""அப்படியானால் நீ இன்றுமுதல் தினந்தோறும் எங்களுக்கு ஒவ்வொரு வாளி நீரை மறக்காமல் ஊற்ற வேண்டும். நீ அப்படிச் செய்தால் நீ எங்களையும் காப்பாற்றியதாகும். உன் அன்பு அம்மாவிற்கு உன்னால் முடிந்த சிறு உதவியைச் செய்ததாகவும் ஆகும், சரியா?''

 ""அப்படியே செய்கிறேன், என் பிரியமான ரோஜாச் செடிகளே!''

 சரோஜா பூவாளியை எடுத்துக்கொண்டு போய் நீர் நிரப்பி பூந்தொட்டிகளுக்கு மகிழ்ச்சியோடு நீர் ஊற்றினாள். அக்காட்சியைக் கண்ணுற்ற சரோஜாவின் அம்மாவிற்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது!

 "சரோஜாவிடம் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது. நம்பவே முடியவில்லையே!' என்று யோசித்துக்கொண்டே ரோஜாச் செடிகளின் அருகிலிருந்த சரோஜாவிடம் சென்றார்.

 ரோஜா மலர்கள் காற்றில் மெல்ல அசைந்தாடி இதமாக வரவேற்றன!

 சரோஜாவின் பூப்போன்ற முகம் ரோஜாப் பூக்களினிடையே மலர்ந்திருந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.