உழைப்பின் பலன்!

பண்ணையார் ரவிச்சந்திரன் சரியான கறார் பேர்வழி! தன்னிடம் வேலை செய்பவர்களின் சம்பளத்தை உயர்த்தவே மாட்டார்.
உழைப்பின் பலன்!

பண்ணையார் ரவிச்சந்திரன் சரியான கறார் பேர்வழி! தன்னிடம் வேலை செய்பவர்களின் சம்பளத்தை உயர்த்தவே மாட்டார். வேலைக்காரர்களின் கஷ்டத்தை உணர்ந்ததே இல்லை. தன்னுடைய காரியம் ஆனால் போதும்.

இவரிடம் வேலை செய்த கணக்கர் விஜயலிங்கம் மிகவும் கடுமையாக உழைப்பவர். தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். இருந்தும் பண்ணையார் சொற்ப சம்பளமே கொடுத்து வந்தார்.

விஜயலிங்கமும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார். பண்ணையார் நமக்குக் குறைவாகத்தானே கொடுக்கிறார். அதனால் நாமும் ஏனோதானோ என்று பண்ணைக் கணக்குகளைக் கவனித்தால் போதும் என்று ஒரு நாளும் அவர் நினைத்ததில்லை.

சில நாட்கள் கணக்குகளை முடிக்க இரவு நெடுநேரமாகிவிடும். இருப்பினும் சளைக்காமல் அன்றன்றைய அலுவல்களை சரியாக முடித்து விடுவார்.

கணக்கரின் மனைவி இதனைக் கண்டு கவலையடைந்தாள்.

""இதோ பாருங்கள்! நீங்கள் இதுநாள் வரையில் இந்தப் பண்ணையாருக்கு உழைத்துக் கொட்டியது போதும்...,வேறு ஏதாவது ஒரு இடத்தில் வேலை செய்தால் இதைவிட அதிக சம்பளம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பார்க்கின்ற வேலைக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். எனவே நான் சொல்வதைக் கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள்'' என்றாள்.

""இதோ பார்..., நீ சொல்வதெல்லாம் சரிதான். நானும் வேறு இடத்தில் வேலைக்கு முயற்சித்துப் பார்க்கிறேன். இருந்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் திடீரென்று பண்ணை வேலையை விட்டு நின்று விட முடியாது. பண்ணையாருக்கே இன்னும் பண்ணைக் கணக்கு வழக்குகள் எல்லாம் சரிவரத் தெரியாது. அத்தனை பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு நல்ல முறையில் விடை பெற வேண்டும்''

""ஆமாம்...,எப்போது பார்த்தாலும் நீங்கள் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்''

""இதோ பார்! என் பேச்சைக் கேட்டுச் சலிப்படையாதே. உண்மையான உழைப்பிற்குப் பலன் உண்டு. அந்தப் பலனை இறைவன் நிச்சயமாகக் கொடுப்பார். நாம் ஏன் மனிதர்களை நம்ப வேண்டும்....? இறைவனையே நம்புவோம். அதுவரையிலும் என் பேச்செல்லாம் உனக்கு பாதகமாகத்தான் தெரியும்'' என்றார் விஜயலிங்கம்.

அதன் பின் சலிப்பை வெளிக்காட்டவில்லை அவர் மனைவி.

அன்றைய தினம் பண்ணை வீட்டில் தனக்குக் கொடுக்கப்பட்ட கணக்கு வழக்குகளை எல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தார் விஜயலிங்கம். அந்த நேரத்தில் பண்ணையாரின் நண்பர் ஒருவர், வெளியூரிலிருந்து வந்திருந்தார். விஜயலிங்கத்தின் செயல்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

அன்றைய தினம் அந்த நண்பர் பண்ணையாரின் வீட்டிலேயே தங்க நேரிட்டது. நடு இரவில் மின் தடை ஏற்பட்டதால் மின்விசிறி சுழல்வது தடைப்பட்டது. காற்றுக்காக அந்த நண்பர் தன் படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தார்.

அப்போது வீட்டின் வெளித்திண்ணையில் நடு இரவைத் தாண்டிய பின்னரும் கணக்கர் விஜயலிங்கம் எண்ணெய் விளக்கின் உதவியோடு அந்த மாதக் கணக்குகளை எல்லாம் சரிபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவருக்கு விஜயலிங்கத்தின் மீது அன்பும் பரிதாபமும் ஏற்பட்டது.

மறுநாள் பொழுது விடிந்ததும் பண்ணையாரைப் பார்த்து, "" நண்பரே! உமது பண்ணையில் வேலை செய்யும் கணக்கருக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

விருந்துக்கு வந்த நண்பர் திடீரென்று இப்படிக் கேட்டது பண்ணையாருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் தன் நெருங்கிய நண்பர் கேட்கும் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்ற எண்ணத்தில், ""நண்பரே! கணக்கருக்கு மாதம் இரண்டாயிரம் தருகிறேன்'' என்றார்.

உடனே நண்பர் தன் சட்டைப் பையிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பண்ணையாரிடம் கொடுத்தார்.

""நண்பரே! உமது பண்ணையில் வேலை செய்யும் கணக்கர் மிகத் திறமைசாலி! அதோடு சிறந்த உழைப்பாளி! நான் வந்து தங்கிய இரண்டு நாட்களிலேயே அவரைப் பற்றி மிக நன்றாகப் புரிந்து கொண்டேன். இந்த இரண்டாயிரம் ரூபாய் நான் அவருக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு! இப்படிப்பட்ட வேலையாளுக்கு மாதம் இரண்டாயிரம் என்ன..., தினமும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாலும் தகும். இதனை நான் அவரிடம் கொடுத்தால் அந்த நேர்மையான மனிதர் என்னிடம் பணம் வாங்கிக் கொள்ள மாட்டார். அதனால் நீரே என் சார்பில் அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்துவிடுங்கள். எனக்கு இப்படியொரு உண்மையான வேலையாள் கிடைக்கவில்லை'' என்று கூறினார்.

அதனைக் கேட்ட பண்ணையார் அதிர்ச்சிக்கு உள்ளானார். "இத்தனை நாட்களாக நான் கணக்கரின் பெருமையை உணராமல், அவருக்குக் குறைந்த சம்பளத்தையே கொடுத்து அவரை கவுரவிக்காமல் விட்டு விட்டேனே'' என்று மனம் வருந்தினார்.

மறுநாளே, நண்பர் கொடுத்த பணத்தோடு பெருந்தொகை ஒன்றினையும் அவருக்குப் பரிசாகக் கொடுத்து, சம்பளத்தையும் மாதம் ஜயாயிரம் ரூபாயாக உயர்த்தி விட்டார்.

கணக்கர் இந்தச் செய்தியை தன் மனைவியிடம் தெரியப்படுத்தினார். உண்மையான உழைப்பிற்கு இறைவன் நிச்சயமாகவே பலன் கொடுத்துவிட்டார் என்பதை எண்ணி மகிழ்ந்தாள் கணக்கரின் மனைவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com