கதைப்பாடல்: சாமிநாதனும் பூமிநாதனும்
நேமிநாதம் என்கின்ற சிற்றூர் ஒன்றில்நற்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளி தன்னில்


நேமிநாதம் என்கின்ற சிற்றூர் ஒன்றில்
நற்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளி தன்னில்
சாமிநாதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று
சிறப்பாகக் கற்பிக்கும் பணியைச் செய்தார்!
சோம்பலினால் கொட்டாவி விட்டோர் எல்லாம்
சுறுசுறுப்பாய்ப் பாடத்தைக் கேட்க லானார்!
பூமிநாதன் என்றவொரு சிறுவன் மட்டும்
படிப்பினிலே படுமக்காய் இருந்து வந்தான்!
பெற்றோர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி
பிள்ளைகளின் நிலைபற்றி எடுத்துச் சொன்னார்!
பெற்றபிள்ளை சிறப்பாகப் படிப்ப தற்குப்
பெற்றோரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றார்!
கற்காத பெற்றோர்கள் என்ற போதும்
கருத்துடனே ஆசிரியர் சொல்லைக் கேட்டு
நற்றவத்தால் பெற்றெடுத்த பிள்ளை தன்னை
நல்லொழுக்க நெறியோடு வளர்க்க லானார்!
வட்டத்தை அழகாக வரைந்து காட்டி
வட்டத்தில் சரிபாதி விட்டம் என்றும்
விட்டத்தில் சரிபாதி ஆரம் என்றும்
விளக்கமுடன் மனத்தினிலே பதிய வைத்தார்!
எட்டிக்காய் கணக்கதனை இனிக்க வைத்தார்
எப்பாடம் என்றாலும் எளிமை யாக்கிச்
சட்டென்றுப் புரியவைக்கும் ஆற்றல் தன்னை
சாமி நாதன் இயல்பாகப் பெற்றிருந்தார்!
விட்டத்தை வேடிக்கை பார்த்த வாறு
விழித்தபடி தூங்குகிற பூமி நாதன்
எட்டாத கனியாக இருந்த கல்வி
இன்றெனக்குக் கிடைத்ததென மகிழ்ச்சி கொண்டான்!
தட்டாது ஆசிரியர் சொல்லைக் கேட்டுத்
தான்முயன்று தேர்வினிலே வெற்றி பெற்றான்!
சட்டத்தைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு
சேர்ந்திட்டான் உயர்கல்விக் கழகம் ஒன்றில்!
பூமிநாதன் சட்டத்தைக் கற்றுத் தேர்ந்து
புகழ்மிக்க நீதிபதி ஆனான் இன்று!
நாமிங்கு வாழ்ந்திருக்கும் நாட்கள் கொஞ்சம்
நற்கல்வி தந்தோரை நிறைக்கும் நெஞ்சம்!
பூமித்தாய் பெற்றெடுத்த புதல்வர் பல்லோர்
புரிகின்ற சாதனைக்குப் பின்னால் இங்கே
சாமிநாதன் போன்றபல ஆசான் உண்டு
சரித்திரத்தில் நிலைத்தவர்கள் வாழ்வ துண்டு!
கல்லாதார் கண்ணிரண்டும் புண்கள் என்று
குறள் கூறும் கருத்தைநாம் மறக்க லாமா?
கல்விதரும் ஆசிரியர் சொல்லைக் கேட்டால்
கற்கண்டாய் நம்வாழ்வு இனிக்கக் காண்போம்!
கல்வியிங்கே இலவசமாய்க் கிடைக்கும் போது
கற்கின்ற வாய்ப்பை நாம் இழக்க லாமா?
எல்லாமும் முடியுமென்று எண்ணி விட்டால்
இமயம்நம் கைக்குள்ளே அடங்கிப் போகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...