

ஒரு முறை முத்கலர் என்ற தவஞானியின் குடிலுக்கு துர்வாசர் என்ற ரிஷி வந்தார்.
முத்கலர் அன்புடன் துர்வாசரிடம், ""சுவாமி, தாங்கள் உணவருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்.
துர்வாசரோ, ""எனக்கு உணவிட உம்மால் முடியுமோ?'' என்று ஏளனம் செய்தார். துர்வாசரை வற்புறுத்தி முத்கலர் சம்மதிக்க வைத்தார்.
நதிக்கரை சென்று நித்திய ஆன்மிகக் கடமைகளை முடித்து விட்டு வந்த துர்வாசர், முத்கலரின் மனைவி பறிமாறிய உணவை சாப்பிட்டுவிட்டு ஆசி கூட அளிக்காமல் புறப்பட்டார். (ரிஷிகள் உணவருந்திய பிறகு ஆசிகள் கூறுவது வழக்கம்)
இதை முத்கலர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மீண்டும் ஒருநாள் துர்வாசர் வந்தார். இப்போதும், சாப்பிட்டுவிட்டு சொல்லாமலே கிளம்பிப் போனார். இம்முறையும் ஆசி ஏதும் வழங்கவே இல்லை.
இப்படித் தொடர்ந்து ஆறுமுறை நடந்தது.
ஏழாவது முறை துர்வாசர் வந்தார்.
""முத்கலரே, உம்மை சோதிக்கவே ஆறு முறை வந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நானே தோற்றுப்போனேன். உங்களின் சாந்த குணத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் சிரமப்பட்டது போதும். தேவலோகம் சென்று மகிழ்ச்சியாக இருங்கள்'' என அழைத்தார்.
அப்போது குடில் வாசலில் தேவதூதர்கள் இருவர் தங்க ரதம் ஒன்றில் வந்திறங்கினர்.
ஆனால் முத்கலர் அதில் ஏறவில்லை!
""துர்வாசரே! சொர்க்கத்தில் சுகபோகங்களை அனுபவிக்க முடியுமே தவிர, பிறருக்கு சேவை செய்ய முடியாது. ஆனால் கர்ம பூமியான பூலோகத்தில் நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து மகிழ்ச்சியாக வாழ முடியும். சேவை செய்யும் இடம்தான் உண்மையான சொர்க்கம்'' என்றார் முத்கலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.