அதிசய சக்தி

கரிசல் காட்டு விலங்குகள் எல்லாம் காட்டுக்குள் புதுவரவாக வந்த அந்த விலங்கை ஆச்சரியத்தோடும், பயத்தோடும் பார்த்தன!
அதிசய சக்தி

கரிசல் காட்டு விலங்குகள் எல்லாம் காட்டுக்குள் புதுவரவாக வந்த அந்த விலங்கை ஆச்சரியத்தோடும், பயத்தோடும் பார்த்தன! முன்னங்கால்கள் இரண்டும் குட்டையாகவும், பின்னங்கால்கள் இரண்டும் நெட்டையாகவும் இருந்தன. பிற விலங்குகளைவிட அது குதித்து குதித்து வேகமாகவும் ஓடியது. தாங்கள் இதுவரை இப்படியோர் விலங்கைக் கண்டதே இல்லை என்றும், இந்த விலங்கு சைவப்பிராணியா? அல்லது அசைவப் பிராணியா? என்றும் இதனால் தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ? எனவும் பயந்தன!

 இதை அறிந்து கொண்ட அந்த விலங்கு தன்னை "கங்காரு' என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆஸ்திரேலியா தீவிலிருந்து வந்திருப்பதாகவும், "நானும் சைவப் பிராணிதான்...,என்னைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்' என்று கூறியது.

 இதைக்கேட்டு பிற விலங்குகள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தன. கங்காருவும் அனைத்து விலங்குகளின் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டது!

 ஆனால் தன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் குட்டியைச் சுமக்கும் பை போன்ற அமைப்பைப் பற்றி பிற விலங்குகளிடம் கூறவில்லை!

 அது தன் குட்டியிடம் ஏதோ ரகசியம் ஒன்றைச் சொன்னது.

 கங்காரு பிற விலங்குகளை அழைத்து, ""என் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிடுங்கள்...,நீங்கள் யாராக இருந்தாலும், என் முன்னால் வந்து எதைச் செய்தாலும், நீங்கள் யார் என்பதையும், என்ன செய்தீர்கள் என்பதையும் மிகவும் சரியாக சொல்லிவிடுவேனே! அந்த அபரிதமான சக்தி எனக்கு மட்டுமே உண்டு...'' என்று சொல்லியது.

 ஆச்சரியப்பட்ட விலங்குகள், உடனே கறுப்புத் துணியைக் கொண்டு வந்தன! கங்காருவின் கண்களை நான்கு ஐந்து சுற்றுகள் நன்றாக இறுக்கிக் கட்டின! அந்த விளையாட்டைக் குதூகலத்துடனும், ஆவலுடனும் எதிர்பார்த்தன!

 முதலில் குரங்கு கங்காருவின் முன் சென்று நின்றது. பின் ஒரு வாழைப்

பழத்தை உரித்துத் தின்றது!

 ""இப்போ என்ன நடக்கிறது?'' என்று விலங்குகள் கோரஸாக கங்காருவிடம் கேட்டன.

 கங்காரு சிரித்துக்கொண்டே அநாயசமாக, ""குரங்கு அண்ணன் வாழைப்பழம் ஒன்றை உரித்துத் தின்னுகிறார்.'' என்று கூறியவுடன் விலங்குகள் வியப்புடன் கை தட்டின!

 பிறகு முயல் ஒன்று காரட் ஒன்றைத் தின்றுகொண்டே நடனம் ஆடியது.

""இப்போது முயலார் காரட்டை ருசித்துக்கொண்டே நடனமும் ஆடுகிறார்'' என்று அதையும் மிகச் சரியாகச் சொல்லிவிட்டது!

 அடுத்து முள்ளம்பன்றி வந்தது. அது கங்காருவைப் பார்த்து "சலாம்' சொன்னது.

 கறுப்புத் துணியால் கண்கள் இறுக்கக் கட்டப்பட்ட கங்காருவும் பதிலுக்கு "சலாம்' செய்தவுடன் விலங்குகளின் பலத்த ஆரவாரம்! கை தட்டல்!

 அதிசயித்த பிற விலங்குகள் ""உங்கள் தனித்திறமையைக் கண்டு நாங்கள் புல்லரித்துப் போனோம்! இது போன்ற ஓர் அதிசயத்தை நாங்கள் இதுவரை கண்டதில்லை! நீங்கள் கடவுளின் அவதாரம்!'' என்று, ஆஹா..! ஓஹோ!...வெனப் புகழ்ந்தன!

 கங்காருவுக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது! அது பிற விலங்குகளிடம், ""நானும் உங்களைப் போலத்தான்..., யாராக இருந்தாலும் கண்களை இறுக்கக் கட்டிவிட்டால் கண் தெரியாது! நான் ஒன்றும் அதிசயப் பிறவி இல்லை!'' என்றது.

 ""பின்னே?....இந்த அதிசயம் எப்படி நடந்தது?'' என்று அனைத்து விலங்குகளும் கேட்டன.

 ""நான் எங்கே சொன்னேன்...? என் வயிற்றுப் பகுதியில் தொட்டில் போன்ற பை இருக்கிறது....பார்த்தீர்களா?''

 ""ஆமாம்...ஆமாம்...,இப்போதுதான் கவனிக்கிறோம். ஆச்சரியமா இருக்கிறதே? பைக்குள் என்ன இருக்கிறது?''

 ""சொல்கிறேன்'' என்று கூறிவிட்டு, ""வெளியே வாடா குட்டிப் பயலே'' என்று தன் குட்டியை அழைத்தது!

 பைக்குள்ளிருந்து அழகிய கங்காருக் குட்டி எட்டிப் பார்த்துச் சிரித்தது!

 எல்லா விலங்குகளும் சந்தோஷத்துடன் கை தட்டி குட்டியை வரவேற்றன!

 ""இந்தக் குட்டிதான் தன் முன்னே நடந்த எல்லாவற்றையும் நைஸாகப் பார்த்து எனக்குச் சொல்லிவிட்டது!'' என்றது கங்காரு!

 ""நாங்க கொஞ்சம் சிந்திச்சுப் பார்த்திருக்கணும்...,எங்க அறிவுக் கண்ணைத் திறந்துட்டீங்க! சபாஷ்!'' என்று கூறிவிட்டு கங்காருவின் குட்டிக்கு திருஷ்டி கழித்தன.

 அந்தச் செல்லக் குட்டிக்கு இப்போது ஏகப்பட்ட நண்பர்கள்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com