கருவூலம்: கிருஷ்ணா நதி!

கிருஷ்ணா நதியே இந்தியாவின் மூன்றாவது பெரிய நதியாகும்! கிருஷ்ணவேணி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுகிறது.
கருவூலம்: கிருஷ்ணா நதி!
Published on
Updated on
5 min read

கிருஷ்ணா நதியே இந்தியாவின் மூன்றாவது பெரிய நதியாகும்! கிருஷ்ணவேணி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுகிறது.

 மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடங்கி மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் வழியாக சுமார் 1300கி.மீ. பயணித்து வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

உற்பத்தி ஸ்தலம்

 மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகிய மஹாபலேஷ்வர் மலைப்பகுதியில், பழமையான மகாதேவர் கோயில் உள்ளது. இங்குள்ள புனிதமான பசுவின் முகத்திலிருந்து கிருஷ்ணா, கோய்னா, வென்னா, சாவித்ரி, காயத்ரி என்ற ஐந்து ஆறுகளும் உற்பத்தி ஆகின்றன. எனவே இங்குள்ள தேவிக்கு பஞ்சகங்கா தேவி என்ற பெயர்! சுமார் 1300 மீ உயரத்தில் கிருஷ்ணா நதி தோன்றுகிறது. இந்த இடம் அரபிக்கடல் பகுதியிலிருந்து சுமார் 64கி.மீ. தூரத்தில் உள்ளது.

 பஞ்ச கங்கா என அழைக்கப்படும் இவ்வைந்து நதிகளில் "சாவித்ரி நதி' மட்டும் மலையின் மேற்குச் சரிவு வழியாக 100கி.மீ தூரம் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. "காயத்ரி நதி' மெல்லிய நீரோட்டத்துடன் மஹாபலேஷ்வரிலேயே கிருஷ்ணாவுடன் சேர்ந்து விடுகிறது. வென்னா நதி கிழக்கு நோக்கி 130கி.மீ. தூரம் பயணம் செய்து சதாரா மாவட்டத்தில் "சங்கம் மஹூலி' என்ற இடத்தில் கிருஷ்ணாவுடன் சேர்கிறது. "கோய்னா நதி' சுமார் 130கி.மீ. தூரம் ஓடி "காரட்' (ஓஅதஅஈ)என்ற இடத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது. "பிரீத்தி சங்கமம்' என்றும் இந்த இடம் வழங்கப்படுகிறது.

செல்லும் பாதை

மலையிலிருந்து கீழிறங்கும் கிருஷ்ணா, மஹாராஷ்டிராவின், வாய்(ரஅஐ), சாங்லி நகர்களை கடந்து, கர்நாடகாவின் எல்லைக்குள் நுழைகிறது. அங்கு கிழக்கு நோக்கித் திரும்பி, வளைந்து, வளைந்து சென்று கர்நாடகாவைக் கடந்து ஆந்திராவை அடைகிறது. இங்கு முதலில் தென்கிழக்காகச் சென்று பின் வடகிழக்காக திரும்பி விஜயவாடா நகரிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையினைக் கடந்து வங்காள விரிகுடாவில் ஹம்சலாதீவி என்னும் இடத்தில் சங்கமமாகிறது.

துணையாறுகள்

இந்நதியின் வலது கரைப் பக்கங்களில்(தென்பகுதி) வென்னா, கோய்னா, வாஸ்னா, பஞ்சகங்கா, தூத்கங்கா, கடப்பிரபா, மலப்பிரபா மற்றும் துங்கபத்திரா நதிகள் இணைகிறது. இந்நதியின் இடப்பக்கங்களில்(வடபகுதி) பீமா, திண்டி, பெட்டவாகு, ஹலியா, முசி, ஏர்லா, முன்னேரு, பலேரு ஆகிய துணை நதிகள் சேர்கின்றன.

பீமா ஆறு

இவைகளில் "பீமா' நதிதான் கிருஷ்ணாவின் துணையாறுகளில் மிகப் பெரியது. 861கி.மீ நீளமுள்ளது. மஹாராஷ்ட்ராவின் "பீம்சங்கர்' மலையில் தோன்றி கர்நாடகா வழியாக ஆந்திராவிற்குள் வந்து கிருஷ்ணாவுடன் இணைகிறது.

முசி ஆறு

ஹைதராபாத் நகரத்திற்கு நடுவில் இரண்டாகப் பிரிந்து செல்வது இந்நதிதான். "அனந்தகிரி' மலையில் தோன்றி 240கி.மீ தூரம் சென்று கிருஷ்ணாவுடன் சேர்கிறது.

துங்கபத்ரா ஆறு

கிருஷ்ணா நதியின் முக்கியமான துணை ஆறு! "துங்கா'...,"பத்ரா' என்ற இரண்டு துணை ஆறுகளாக தோன்றி பின் இணைந்து துங்கபத்ரா நதியாக கிருஷ்ணாவுடன் இணைகிறது. "துங்கா' நதி "வராக பர்வதம்' மலையில் தோன்றி 147கி.மீ. தூரம் ஓடி "கூடலி' என்னும் இடத்தில் "பத்ரா' நதியுடன் இணைகிறது. கூடலியிலிருந்து துங்கபத்ரா நதியாக 513கி.மீ. தூரம் ஓடி ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தின் சங்கமேஸ்வரத்தில் கிருஷ்ணாவுடன் இணைகிறது. இப்பகுதியில் "பாவநாசி' என்ற ஆறும் சேர்கிறது. பாசன வசதிகள் பெறும் நிலப்பகுதிகள் ஏராளம்!  இந்நதி பாயும் காட்டுப்பகுதியின் கரைப்பகுதிகளில் மிகவும் அழகான சாம்பல் நிற, மற்றும் இளஞ்சிவப்பு நிறப் பாறைகள் நிறைய உள்ளன. இவை இந்நதியின் சிறப்பம்சம்!

  விஜய நகரப் பேரரசின் பெருமைக்கு அடையாளமாய் விளங்கும்..., இன்றும் கம்பீரத்துடன் தோன்றும் "ஹம்பி' இந்நதிக்கரையில்தான் உள்ளது.

பஞ்சகங்கா ஆறு!

இதற்கும் மேற்கூறிய "பஞ்ச கங்கா' ஆறுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

"பஞ்சகங்கா' ஆறு என்பதே ஒரு தனி ஆறு! மஹாராஷ்ட்ராவில் கோலாப்பூர் மாவட்டத்தில் "ப்ரயாக் சங்கமம்' என்ற இடத்தில் பஞ்சகங்கா தோன்றி  80கி.மீ. தூரம் பயணித்து கிருஷ்ணாவுடன் கலக்கிறது. இந்த பிரயாக சங்கமம் (அலகாபாத் அருகில் உள்ள)திரிவேணி சங்கமத்தைப் போன்று மிகவும் புனிதமாகப் போற்றப்படுகிறது. இங்கு நிலத்திற்கு மேலே துளசி, காசரி, கும்பி, போகவதி, நதிகளும், மற்றும் பூமிக்குள் மறைந்து செல்லும் சரஸ்வதி நதியும் ஒன்று சேர்கிறது.

 இந்நதி தன் பாதையில் சிறிது தூரத்திற்கு சமவெளி பகுதியிலிருந்து 40 அடி ஆழத்தில் செல்கிறது. மலை சார்ந்த இப்பகுதி முழுவதும் மிகவும் பசுமையாக இயற்கை வரைந்த அழகு ஓவியமாகத் திகழ்கிறது.

அணைகள்

இந்நதியில் பத்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்ரீசைலம் அணையும், நாகார்ஜுனா சாகர் அணையும் குறிப்பிடத் தக்கவை. துணையாறுகளிலும் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல கால்வாய்களும், சிறுசிறு நீர்த்தேக்கங்களும் அமைக்கப்பட்டு நதியின் இருபுறமும் வளம் பெறுகிறது. சுமார் இரண்டரை லட்சம் ச.கி.மீ. பகுதிகள் மிகச் செழிப்பான பகுதியாக உள்ளன. இந்தியாவின் மொத்த விவசாய நிலத்தில் 8% கிருஷ்ணா நதிக்கரையிலேயே உள்ளது. மேலும் இந்நதியைச் சார்ந்துள்ள விவசாய நிலங்கள் 10.4% ஆகும்! ஆச்சரியமாக உள்ளதல்லவா?

ஸ்ரீசைலம் அணை

தெலங்கானா மாநிலத்தின் மஹபூப் மாவட்டம் ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் இடையே அமைந்துள்ள இந்த அணை தற்போது இரண்டு மாநிலங்களுக்கும் சொந்தமானது.

 கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே செங்குத்தாக பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ளது.

 253 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட இவ்வணையின் உயரம் சுமார் 980 அடியாகும். 12 பெரிய மதகுகளுடன் 1680 அடி நீளம் கொண்டது. நீர் நிரம்பி இருக்கும்பொழுது பின்னணியில் உள்ள பெரிய மலைகளுடன் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாகத் தெரியும்.

 1960இல் தொடங்கி 1980இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம்தான் தெலுங்கு-கங்கை திட்டத்திற்கு ஆரம்பப் புள்ளி!

நாகார்ஜுன சாகர் அணை

தெலங்கானா மாநிலத்தில் உள்ளது. 1955ஆம் ஆண்டு நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 1967இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைதான் உலகத்தின் மிக உயரமான கல்கட்டு அணையாகும்! 1550மீ. நீளமும், 125மீ. உயரமும், கொண்டது. இவ்வணையின் நீர்த்தேக்கப் பகுதியில் ஆதி புத்த குடியிருப்புகள் நீரில் மூழ்கிவிட்டன!

கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம்

194.81 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இவ்வனப் பகுதிக்குள் குண்டூர் மாவட்டம் கடற்கரையோர மாங்குரோவ் காடுகளும், கடற்கரை சமவெளிப் பகுதிகளும் இணைந்து உள்ளது. தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் அடர்த்தியான அலையாத்திக் காடுகள் உள்ளன. மேலும் உலகின் அழிந்து வரும் இனமாகக் கருதப்படும் "பவுரு பில்லி' எனப்படும் "ஃபிஷிங் கேட்'  (ஊண்ள்ட்ண்ய்ஞ் இஹற்) இவ்வனப் பகுதியில் இருக்கிறது.

ஹம்சலாதீவி

கிருஷ்ணா நதி விஜயவாடாவிற்கு 80கி.மீ. தொலைவில் உள்ள "அவணிகட்டா' நகருக்கு அருகில் உள்ள "புலிகட்டா'வில் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.

 இதில் மேற்கு கிளை மீண்டும் சென்று மூன்று கிளைகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறது. இதில் ஒரு கிளைதான் ஹம்சலாதீவியில் வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.

சென்னைக்கு வந்த கிருஷ்ணா நீர்

பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் மழை நீர் பொய்த்துப் போவது போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. இதற்காக 1968இல் கிருஷ்ணா நதி பாயும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, அன்றைய ஆந்திரபிரதேசம் மாநிலங்களுடன் ஆண்டுதோறும் தலா 5 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை தமிழகத்திற்குத் தருவதற்கு ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு 12ஆண்டுகள் கழித்து ஆந்திரா மற்றும் தமிழக முதல்வர்களாக இருந்த என்.டி.ஆர்...,எம்.ஜி.ஆர். இருவரும் சேர்ந்து செயல் வடிவம் கொடுத்தனர்.

 இத்திட்டத்தின்படி ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நீரை கால்வாய்கள் மூலம் சோமசீலா அணைக்கும் அங்கிருந்து கண்டலாறு அணைக்கும், அதன்பின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டது.

சோமசீலா அணை

இந்த அணை நெல்லூர் மாவட்டத்தில் சோமசீலா என்ற இடத்தில் பென்னாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் அணையிலிருந்து சுமார் 178கி.மீ. தூரத்திற்கு திறந்தவெளி கால்வாயில் கிருஷ்ணா நதிநீர் இந்த அணைக்கு வருகிறது.

கண்டலாறு அணை

இந்த அணை நெல்லூர் மாவட்டம் ராய்ப்பூர் அருகே கண்டலேறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. சோமசீலா அணையின் தென் பகுதியிலிருந்து சுமார் 45கி.மீ பயணித்து கிருஷ்ணா நீர் இங்கு வருகிறது. இவ்வணையிலிருந்து தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் வறண்ட தென் ஆந்திர பகுதிகளுக்கும் நதிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

பூண்டி(சத்தியமூர்த்தி) நீர்த்தேக்கம் 

இந்த நீர்த்தேக்கம் கொற்றலை ஆற்றில் அமைந்துள்ளது. கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டைக் கடந்து 178கி.மீ. தூரம் பயணித்து பூண்டி நீர்த்

தேக்கத்தை அடைகிறது. இத்திட்டத்திற்கு ஆன்மிகப் பெரியவர் சத்ய சாய்பாபா பெரிய அளவில் நன்கொடை அளித்தார். எனவே இக்கால்வாய் "சாய் கங்கா கால்வாய்' என்றும் கூறப்படுகிறது. 

 பின்னர் இங்கிருந்து கால்வாய்கள் மூலம் புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கிருஷ்ணா நீர் செல்கிறது.

 சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்க்கும் "தெலுங்கு கங்கை திட்டம்' நம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு சிறந்த சான்றாகும்.

 இந்தக் கால்வாய்கள் வரும் வழியில் பெரும்பகுதி அடர்ந்த வனப்பகுதிகளாகும். நாகார்ஜுன சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம், நல்லமலை வனப்பகுதி, ஸ்ரீசைலம் வனவிலங்கு சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் இங்குள்ளன.

மாசடையும் நதி

கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள சாங்லி, வாய், விஜயவாடா போன்ற பெரு நகரங்கள் மற்றும் கரைக்கு சற்று தொலைவில் தள்ளி அமைந்துள்ள பூனே, சதாரா, கோலாப்பூர், ஹைதராபாத், கர்நூல் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவரும் பலவகையான கழிவுகள் நதியில் கலப்பதினால் நதிநீர் தற்போது அதிகம் மாசடைந்து வருகிறது.

மழைக்காலத்தில் கிருஷ்ணா

கிருஷ்ணா நதியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மழைக்காலங்களில் வெள்ள நீரானது, சுமார் 75அடி உயரத்திற்குச் சீறிப்பாய்ந்து  அதிவேகத்துடன் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு ஓடும். இது பெரிய அளவில் நில அரிப்பை ஏற்படுத்துகிறது. செழிப்பான மண்ணையும் கடலில் கொண்டு சேர்த்து விடுகிறது. மண் அரிப்பினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.

ஆன்மிகத் தலங்கள்

 கிருஷ்ணா நதிக்கரையெங்கிலும், மற்றும் துணையாறுகள் கலக்கும் இடங்களிலும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. மஹாபலேஷ்வர் கோயில், வாஸ்னா நதி இணையும் சங்கமேஸ்வரர், பஞ்சகங்கா நதி கலக்கும் நர்சோபவாடி, ஜோதிர்லிங்க ஸ்தலமான ஸ்ரீசைலம், துங்கபத்ரா சேரும் சங்கமேஸ்வரம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.  மற்றும் தத்தாத்ரேயர் சிலகாலம் தங்கியிருந்த மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒüடும்பர் என்ற இடமும் மிகவும் புனிதமாக வணங்கப்படுகிறது. 

 விவசாயம், குடிநீர், கால்நடை வளர்ப்பு, நீர்மின்திட்டம், மீன்பிடித்தொழில், பல உயிரினங்களின் வாழ்வாதாரம், காடுகள் போன்ற பல நன்மைகளுக்கு நதி நீர் ஆதாரமாக உள்ளது.

நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!

 தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com