கருவூலம்: டோக்கியோ டிஸ்னிலாண்ட்

ஜப்பான் பற்றிப் பல செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவர்கள், புத்திசாலிகள், குள்ளமானவர்கள் (இப்போதைய ஜப்பானியர்கள் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உருவத்திலும் உயரமானவர்களாகி விட்டார்கள்) என்றெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் பல இருக்கும்.
கருவூலம்: டோக்கியோ டிஸ்னிலாண்ட்

ஜப்பான் பற்றிப் பல செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவர்கள், புத்திசாலிகள், குள்ளமானவர்கள் (இப்போதைய ஜப்பானியர்கள் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உருவத்திலும் உயரமானவர்களாகி விட்டார்கள்) என்றெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் பல இருக்கும். ஜப்பான் போனால் அதைப் பார்க்க வேண்டும் இதைப் பார்த்துவிட வேண்டும் என்றெல்லாம் கனவுகளும் இருக்கும். ஜப்பான் போனால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. அதுதான் "டிஸ்னிலாண்ட்'!

இது அமெரிக்காவிலுள்ள டிஸ்னிலாந்து போலவே இருக்கும். அதே போன்ற எல்லாவிதமான மனம் கவரும் நிகழ்வுகள் இங்கேயும் நடந்துகொண்டே இருக்கின்றது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் இந்த டிஸ்னிலாண்ட்!

இது டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. கோடை காலத்தில் ஜப்பானுக்குச் சென்றால், அங்கு மிதமான மெல்லிய மழைச்சாறல் இருக்கும். இந்த சீதோஷ்ண நிலையே உங்கள் மனத்தைக் கவர்ந்து விடும்.

டோக்கியோ ரயில் நிலையத்திலிருந்து 15 நிமிடப் பயண தூரத்தில் இருக்கும் மைஹாமா என்ற ஊரில் டோக்கியோ டிஸ்னி ரிஸர்ட் அமைந்துள்ளது. மைஹாமா ரயில் நிலையத்திலிருந்து டிஸ்னிலாண்ட் செல்வது மிகவும் எளிமையானது. ஏராளமான கைகாட்டும் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்.

ரிஸர்ட் கேட்வே ஸ்டேஷன், டோக்கியோ டிஸ்னிலாண்ட் ஸ்டேஷன், பேஸட் ஸ்டேஷன் (இங்கு நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன), டோக்கியோ டிஸ்னி சீ என்று நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. ஒரு அழகிய மோனோ ரயிலும் இருக்கின்றது. 15 அமெரிக்க டாலர்கள் டிஸ்னிலாண்டைப் பார்ப்பதற்கு அனுமதிக் கட்டணம்.

டோக்கியோ டிஸ்னிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு வெளியே கட்டப்பட்ட முதல் டிஸ்னி பூங்கா. 1983இல் இது பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஏராளமான கேளிக்கை அம்சங்கள் உள்ளன, இவை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது இதன் சிறப்பு. சுமார் 43 கேளிக்கை நிலையங்கள், 52 கடைகள், 54 ஓட்டல்கள் இங்கு உள்ளன.

ஏறக்குறைய அமெரிக்காவிலுள்ள டிஸ்னிலாண்டைப் போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய, பிரம்மாண்ட அம்சம் சிண்ட்ரெல்லா கோட்டை. அப்புறம் உலக பஜார் மற்றும் 1900களில் இருந்த அமெரிக்க நகரம் போலவே பழமை வாய்ந்த சிறிய நகரம் ஒன்றும் அச்சு அசல் போலவே அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கடைகள், வங்கிகள் இருக்கும் பகுதி முழுவதும் கண்ணாடிக் கூரையால் மூடப்பட்டிருப்பதால் மழை பெய்தால் நனையாமல் அத்தனை இடங்களையும் ஜாலியாகப் பார்க்கலாம்.

உலக பஜார் என்று அழைக்கப்படும் இடத்தில் அட்வென்சர்லாண்ட் (கேளிக்கை அம்சங்கள் குடை ராட்டினம் போலப் பலவகைகள்), வெஸ்டர்ன்லாண்ட், கிரிட்டர் கண்ட்ரி, ஃபேன்டஸிலாண்டு (விநோத உலகம்), டூன்டவுன் (கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உலா வரும் இடம்), டுமாரோலாண்ட் (நாளைய உலகம் பற்றிய கற்பனையான இடங்கள்) என்று பார்த்து ரசித்துக் குதூகலிப்பதற்கான முக்கிய காட்சிசாலைகள் உள்ளன.

டோக்கியோ டிஸ்னிலாண்ட் கோட்டை :

இங்கு நிறைய கதாபாத்திரங்களைச் சந்திக்கலாம். குழந்தைகளுக்கான உலகப் புகழ்பெற்ற நாவல்களில் உள்ள பாத்திரங்களை இங்கே உயிரோடு பார்க்கலாம். ஆலிஸ், ஸ்நோ ஒயிட், சிண்ட்ரெல்லா போன்ற கதாபாத்திரங்கள் பலரும் இங்கே காணப்படுகிறார்கள். அவர்களுடன் நீங்கள் பேசலாம், கைகொடுக்கலாம் உடனிருந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

டம்போ ஹாண்டட் மேன்ஷன்:

இது ஓர் அமானுஷ்யமான இடம். இங்கு பலவகைப் பேய்கள் உலா வருவதைப் பார்த்துப் பயப்படலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம். பார்ப்பதற்கு அவ்வளவு பயங்கரமாக இருந்தாலும் உங்கள் உடலுக்கோ உடைமைகளுக்கோ எந்தவிதப் பிரச்னையும் வராமல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கும் பகுதி இது. சிறுவர்களுக்கு ரொம்பப் பிடித்தமான இடமாக இது இருக்கும். இந்தப் பகுதியில் சிறுவர்களின் சந்தோஷக்கூச்சலையும் அலறலையும் கேட்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இங்குள்ள பேய்கள் ஜோக் அடிக்கும், பாட்டுக்கள் பாடும், உங்களுடன் சேர்ந்து கும்மாளம் போடும். இந்த இடத்தைவிட்டுப் பிரிவதற்கே மனம் வராது.

அட்வென்சர்லாண்ட்:

இந்தப் பகுதி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரம். அமெரிக்காவில் என்னென்ன வகை கேளிக்கைப் பூங்காக்கள் இருக்கின்றனவோ அவ்வளவையும் இங்கே பார்க்கலாம்.

வனப்பகுதி:

இங்கு பைரேட்ஸ் ஆஃப் த கரிபியன் திரைப்படத்தில் வரும் காட்சிகளைத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். திரைப்படக் கதாபாத்திரங்களுடன் நீங்களும் அவர்களின் சாகசங்களில் உற்சாகமாகப் பங்கேற்கும் வகையில் இது இருக்கின்றது. இதுமட்டுமல்லாமல், காடு சம்பந்தமான நிறைய பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த இடத்தில் கண்டு ரசிக்கலாம்.

வெஸ்டர்ன்லாண்ட்:

இங்கு கெüபாய் படங்களில் வரும் நிகழ்வுகள் பலவற்றைக் கண்டு ரசிக்கலாம். மேலும் மேஜிக் கிங்டம் என்ற பகுதியும் சிறுவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மார்க் ட்வெயின் என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதாபாத்திரங்கள் பலரை இங்கே காணலாம், அவர்களுடன் பேசி மகிழலாம். அவர்களுடன் பயணிப்பது புதிய அனுபவமாக இருக்கும்.

கிரிட்டர் கண்ட்ரி:

இது முழுக்க முழுக்க ஸ்பாலாஷ் மெüன்டெயின் என்பதாக அமைந்துள்ளது. நிறைய வனங்கள், சிற்றாறுகள், நீரோடைகள் மற்றும் அலைபுரளும் நீர் நிலைகளை இங்கு காணலாம். இவை தவிர நல்ல உணவகங்களும் இங்கே நிறைய உள்ளன.

ஃபேண்டஸிலாண்ட்:

இங்குதான் சிண்ட்ரெல்லா கோட்டை அமைந்துள்ளது. இந்தக் கோட்டையைக் காணக் கண்கோடி வேண்டும். அவ்வளவு அழகு. இங்கும் நிறையக் கதாநாயகர்கள், கதாநாயகிகள், சித்திரக்குள்ளர்கள், நீண்ட மூக்கு மனிதன் என்று பலரைச் சந்திக்கலாம்.

டூன்டவுன்:

இங்கு திரைப்படங்களில் நீங்கள் பார்த்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பலரைச் சந்திக்கலாம். மிக்கி மவுஸ், ரோஜர் ராபிட், மின்னி, டோனால்ட் டக் போன்றவர்களோடு சேர்ந்து நீங்களும் சேர்ந்து விளையாடலாம், ஆடலாம் பாடலாம். இந்தப் பகுதியை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

டுமாரோலாண்ட்:

இது நாளைய உலகம். எதிர்காலத்தில் என்னென்ன புதிய அம்சங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கற்பனையாக வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு பலவகையான ரோபோக்கள், விண்வெளிப் பயணம், ராக்கெட்டுகள், ஸ்டார் வார்ஸ் திரைப்படக் கதாபாத்திரங்கள் என்று கற்பனைக்கும் எட்டாத பலவற்றை இங்கு பார்த்து ரசிக்கலாம்.

வாணவேடிக்கை:

தினமும் குறிப்பிட்ட கால நேர வித்தியாசத்தில் வாணவேடிக்கைகள் இந்தப் பகுதியில் நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். இரவில்தான் இந்தப் பகுதியை முழுமையாக ரசிக்க முடியும். 5 நிமிடங்களுக்கு நடைபெறும் இந்த வாணவேடிக்கை ஒரு கண்கொள்ளாக் காட்சி. இங்கு பலவகையான வாணவேடிக்கைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

என்ன, படிக்கப் படிக்க உடனே ஜப்பான் கிளம்ப வேண்டும் என்ற ஆசை மனதில் எழுகின்றதா? நேரில் செல்ல முடியாதவர்கள் யூட்யூப் மூலம் இணைய தளத்தில் இவை அத்தனையையும் கண்டு ரசிக்கலாம். இருந்தாலும் நேரில் பார்ப்பது சிறப்பல்லவா? ஆகவே, டோக்கியோ டிஸ்னிலாண்ட்டுக்கு ஒரு ட்ரிப் அடிக்க முடியுமா என்று பாருங்கள்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com