மருந்து!

வில்லனூர் என்று ஒரு ஊர். அதில் பாராங்குசம் என்று ஓரு செல்வந்தன் இருந்தான். அவன் மிகவும் கருமி! யாருக்கும் ஒரு பைசா கூட ஈயமாட்டான்.
மருந்து!

வில்லனூர் என்று ஒரு ஊர். அதில் பாராங்குசம் என்று ஓரு செல்வந்தன் இருந்தான். அவன் மிகவும் கருமி! யாருக்கும் ஒரு பைசா கூட ஈயமாட்டான். ஆனால் அவன் மிகச் சிறந்த வியாபாரி. நிறைய லாபம் சம்பாதித்தான். செல்வம் கொழித்தது. ஆனால் அந்த செல்வத்தால் யாருக்கு உபயோகம்? தர்ம சிந்தனையே அவனிடம் இல்லை.

ஆனால் அவனுக்கு வாய்த்த மனைவி மிகவும் நல்லவளாக இருந்தாள். தெய்வ பக்தியும் நற்சிந்தனையும், அற உணர்வும் அவளிடம் நிறைந்திருந்தது. வறியவர்களுக்கு உதவி செய்வதை பெறும் பேறாகக் கருதினாள்.

ஒரு நாள் தன் கணவனிடம் அவள், ""நமக்கு இறைவன் குறைவற்ற செல்வத்தை வாரி வழங்கியிருக்கிறார். தாங்கள் தங்களைத் தேடி வரும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை வறியவர்களுக்குச் செய்வோம். இப்படிச் செய்வதால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். புண்ணியத்தைச் சேர்க்கலாம். இறந்த பிறகு சுவர்க்க லோகம் செல்லலாம் என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள்''

அதற்கு அந்த செல்வந்தன், ""நீ சொல்வது எல்லாம் சரி. ஏற்றுக் கொள்கிறேன். நாம் என்ன இப்போதே இறந்து விடவா போகிறோம்? அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது. இப்போது செல்வத்தைச் சேர்ப்போம். இறக்கும் தருவாயில் தர்ம காரியத்தைப் பற்றி யோசிக்கலாம்'' என்றான்.

அனால் அவன் மனைவி விடவில்லை. தர்ம காரியங்கள் செய்வது பற்றியும், வறியவர்க்கு உதவுவது பற்றியும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தாள்.

எப்படியாவது தன் கணவனை ஈகை உணர்வு உள்ளவனாக மாற்றிவிட வேண்டும் என்று நினைத்தாள்.

செல்வந்தனும், ""இப்பொழுது என்ன அவசரம்? வயசாகட்டும்...,இறக்கும் தருவாயில் தர்ம காரியங்களைச் செய்து கொள்ளலாம்.''என்று வழக்கமான பதிலையே சொல்லிக்கொண்டிருந்தான்.

தன் கணவனை எப்படி நல்வழிக்குக் கொண்டு வருவது என்று அவளுக்குப் புரியவில்லை.

கடவுள் நம்பிக்கை உடைய அவள், ""இறைவா! என் கணவருக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்த ஒரு நல்ல வழியைக் காட்டு'' என்று உள்ளம் உருகி வேண்டிக்கொண்டாள்.

திடீரென்று ஒரு நாள் அவன் நோயில் படுத்தான். அவள் மருத்துவருக்குச் சொல்லி அனுப்பினாள். மருத்துவரும் வந்தார். செல்வந்தனைச் சோதித்தார்.

அவன் மனைவியிடம் நோய்க்கான மருந்துகளையும் தந்தார். மருத்துவர் அவளிடம், ""வேளை தவறாமல் உங்கள் கணவருக்கு மருந்தைக் கொடுங்கள். கவலைப்படவேண்டாம். அவர் விரைவில் குணமடைவார். மருந்துகளை மட்டும் வேளை தவறாமல் தந்து விடுங்கள்''என்று கூறி விட்டுச் சென்றார். இதைச் செல்வந்தனும் கேட்டுக் கொண்டிருந்தான்.

தன் உடல் நிலை சரியாக வேண்டுமானால் வேளை தவறாமல் மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

மருந்து தர வேண்டிய தருணமும் வந்தது!

ஆனால் அவன் மனைவி அவனுக்கு மருந்து எதையும் தரவில்லை. செல்வந்தன் படுத்திருந்த கட்டிலுக்கு அருகே இருந்த மேஜை இழுப்பறையில் மருந்துகளை வைத்துப் பூட்டினாள்.

இதைக் கவனித்த செல்வந்தன் அதிர்ச்சி அடைந்தான்! மனைவியிடம், ""இதென்ன இப்படிச் செய்கிறாய்? எனக்கு முதல் வேளை மருந்தையே நீ தரவில்லையே! ஏன்? மருந்துகளை மேஜை இழுப்பறையில் வேறு வைத்துப் பூட்டிவிட்டாய்! ஏன் இப்படிச் செய்கிறாய்?

""இப்பொழுது என்ன அவசரம்? நான்கைந்து நாட்கள் போகட்டுமே! பிறகு தருகிறேன்.''

""இதென்ன இப்படி இரக்கமில்லாமல் பேசுகிறாய்? நோய்க்கு நேரத்தோடு மருந்து உட்கொள்ள வேண்டாமா? நான் இறந்த பிறகா மருந்தைத் தரப்போகிறாய்? என்ன பேச்சு இது?''

""நீங்கள் உடனே இறந்தா போயிடப் போறீங்க? இறக்கும் தருவாயில் மருந்து சாப்பிட்டால் போயிற்று. அப்பொழுது மருந்து தருகிறேன்.''

""அடிப்பாவி! இப்பொழுதே மருந்தைக் கொடு! காலம் தவறி அளிக்கும் மருந்து பயன்படுமா?''

""அதே போலத்தான்....,இறப்பதற்கு முன் இறை வழிபாடுகளையும், செல்வம் இருக்கும்போதே தான தருமங்களையும் செய்துவிட வேண்டும். ஏழை எளியோர்க்கு உதவி செய்திட வேண்டும்.''

""என்னை மன்னிச்சிடு! நல்லது செய்வதற்குத் தாமதம் செய்யக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்...,இன்றிலிருந்து இறை வழிபாட்டையும், தான தருமங்களையும் செய்ய ஆரம்பித்து விடுகிறேன்.'' என்றான் செல்வந்தன்.

""தாங்கள் திருந்தியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...,தங்களுக்கு மருந்தளிக்காமல் நான் இருப்பேனா? இதோ, தங்களது நோய்க்கு மருந்து'' என்றாள்அவன் மனைவி! இறைவனுக்கும் தன் நன்றியைக் கூறினாள் அவள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com