கருவூலம்: நமது பெருமைக்குரிய பழங்குடி மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் குரும்பர், இருளர், காட்டு நாயக்கர், பனியர், தோடர், கோத்தர் முதலிய ஆறு வகையான பழங்குடியினர் வாழ்கிறார்கள்.
கருவூலம்: நமது பெருமைக்குரிய பழங்குடி மக்கள்!
Updated on
3 min read

நீலகிரி மாவட்டத்தில் குரும்பர், இருளர், காட்டு நாயக்கர், பனியர், தோடர், கோத்தர் முதலிய ஆறு வகையான பழங்குடியினர் வாழ்கிறார்கள்.

இதில் தோடர்கள், உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் உட்பட மாவட்டத்தின் 65மந்துகளில்(வசிப்பிடங்கள்) வசிக்கிறார்கள். சுமார் 2000பேர் வரை இப்பகுதிகளில் உள்ளனர்.

இவர்களின் மொழி, உடை, பாவனைகள் வித்தியாசமானவை. பாரம்பரிய உடையணிவது, தனித்துவமான அடையாளத்துடன் கூடிய வாழ்க்கை முறை, கலாசாரம் போன்ற பாரம்பரியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மொழி "தோடா மொழி' எனப்படுகிறது.

விவசாயம், எருமைகள் வளர்ப்பு இவர்களின் முக்கியமான தொழிலாகும். மேலும் இம்மக்களிடம் உருவ வழிபாடு கிடையாது. தீபத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். இயற்கையைப் போற்றி வழிபடுகிறார்கள்.

மொற் பர்த் பண்டிகை!

தோடர்களின் வாழ்வில் எருமை மாடுகள் முக்கிய அங்கமாக இருக்கிறது. தங்களின் இறை வழிபாடுகள், மற்றும் விசேஷங்களில் எருமை மாடுகளுக்கு முதலிடம் அளிக்கின்றனர். இவர்கள் திருமணத்தின் போது பெண்ணுக்கு கல்யாண சீதனமாக ஒரு எருமை மாட்டையும் கொடுக்கின்றனர். அது வளர்ந்து அதன் வம்சம் வருத்தியாகிவிட்டால், அந்த குடும்பத்திற்கு வருமானத்திற்குக் கவலை இல்லாமலிருக்கும் என்பது அவர்களின் கணக்கு!

அத்தகைய எருமைகள் விருத்தி அடையவும், தங்கள் வாழ்வு வளம் பெறவும் மார்கழி மாதத்தில் "மொற் பர்த்' என்னும் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

பண்டிகை நாளில் தலைமையிடமான உதகை "தலைகுந்தா' அருகே முத்தநாடு மந்தில்

தோடர்கள் அனைவரும் கூடுகிறார்கள். இங்குள்ள பழமை வாய்ந்த கூம்பு கோயில் (மூன்போ கோயில்) மற்றும் "ஒடையான்போ' கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.

கோயில் வளாகத்துக்குள் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். பாரம்பரிய உடையணிந்து மண்டியிட்டு வழிபடுவார்கள். பாரம்பரிய உடைகளுடன் நடனமாடுவார்கள். இவ்விழாவில் இளைஞர்கள் இளவட்ட கற்களைத் தூக்கும் நிகழ்வும் நடக்கும்.

விழா முடிவடைந்ததும் தோடரின் பெண்கள் முதியோர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவர். அவர்களும் தங்கள் சமுதாய முறைப்படி வலது காலை பெண்களின் தலை மீது வைத்து ஆசீர்வாதம் செய்வர்.

பூத்துக்குளி சால்வைகள்

இம்மக்கள் தங்களின் உடலின் மீது போர்த்திக்கொள்ளும் சால்வையில் வித விதமான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்திருப்பர். பூத்துக்குளி என்று அழைக்கப்படும் இச்சால்வைகளுடனே எப்போதும் காட்சி அளிப்பார்கள்.

தோடர் இன மக்களின் துணிகளில் செய்யும் எம்பிராய்டரி பூ வேலைப்பாடுகள் சர்வதேசப் புகழ் பெற்றதாகும். பொதுவாக எம்பிராய்டரி வேலைப்பாடு துணிகள் ஒரு புறம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஆனால் இம்மக்களின் வேலைப்பாடு சால்வையின் இருபுறமும் பயன்படுத்தும் வகையில் தனித்தன்மையுடன் சிறப்பாக அமைந்திருக்கும். பிரசித்தி பெற்ற இக்கலையை (தோடரினத்தைச் சேராத) மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் மத்திய அரசு நிறுவனம் (ட்ரிப்பெட்) ஈடுபட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பின் போது

தோடரின மக்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காணிக்காரர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தச்சமலை, தோட்டமலை, மோதிர மலை உள்ளிட்ட பகுதிகளில் 48 குடியிருப்புகளில் காணி இனப் பழங்குடி மக்கள் சுமார் 8 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள்.

நாகர்கோவிலில் இருந்து 55கி.மீ தொலைவில் பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணையில், படகில் சுமார் 30நிமிடங்கள், பயணம் செய்துதான் இந்த குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும்.

கடல் போல் பரந்த நீர்ப்பரப்பு, சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எழில் மிகு தோற்றம் அணை நீரில் இடையிடையே உள்ள குட்டித்தீவுகள், இத்தீவுகளில் உள்ள பசுமையான தோட்டங்கள் என படகுப் பயணம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.

மன்னர் தந்த நிலம்

இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்ட வர்மாவினால் இப்பழங்குடி மக்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னர் ஒரு ஆபத்தான காலத்தில் இக்காட்டுக்குள் தஞ்சம் புகுந்து மறைந்து வாழ்ந்தார். அச்சமயம் இப்பகுதியில் இருந்த மக்கள் மன்னரை பாதுகாத்து சேவகம் செய்தனர். மீண்டும் அரியணை ஏறிய மன்னர், நன்றி மறவாது மலைப்பகுதியில் இருந்த இடத்தை அம்மக்களுக்கு செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். காணி என்றால் நிலம் என்று பொருள். மன்னர் எழுதிக் கொடுத்த நிலத்திற்குச் சொந்தக்காரர் ஆனதால் "காணிக்காரர்' என அழைக்கப்படுகின்றனர்.

விவசாயமே இவர்கள் வாழ்வாதாரமாக உள்ளது. ரப்பர் மரங்களே பிரதான சாகுபடி. ரப்பர் பாலை விரிப்புகளாகத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தென்னையும், வாழையும் அதிகம் பயிர் செய்கிறார்கள். மேலும் சேம்பு, மரவள்ளி, சேனை உள்ளிட்ட பலவகை கிழங்குகளும் பயிரிடுகிறார்கள்.

தமிழும், மலையாளமும் கலந்த மொழியில் பேசுகிறார்கள். "மூட்டுக் காணி'தான் குடியிருப்பின் தலைவர் ஆவார்.

இம்மக்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இம்மலைப் பகுதியிலேயே அரசு தொடக்கப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி இங்கிருந்து சமவெளிப் பகுதி கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவ மாணவியரும் உள்ளனர்.

தற்போது கல்விக்காகவும் பிற தேவைகளுக்காகவும் சமவெளி பகுதிக்கு வந்து செல்வது அதிகமாகிவிட்டதால் இப்பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய அடையாளங்களை சிறிது சிறிதாக இழந்த வண்ணம் உள்ளனர்.

பழங்குடிகள் - சில தகவல்கள்.

  • தொன்றுதொட்டு நீண்ட காலமாக ஒரே நிலப்பகுதியில் பரம்பரை, பரம்பரையாய் வாழ்ந்து வருபவர்களே பழங்குடிகள் எனப்படுகிறார்கள்.

  • இவர்கள் தங்களுக்கென தனி மொழியும் குடும்ப, மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களும் கொண்டுள்ளனர். மேலும் அப்பகுதிகளிலுள்ள செடி, கொடி, மரம், விலங்குகளைச் சார்ந்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

  • இன்றும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜப்பான், பசிபிக் தீவுகள், இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் பழங்குடி மக்கள் உள்ளனர்.

  • உலகிலேயே பழங்குடி மக்களின் எண்ணிக்கையில் ஆப்பிரிக்கா கண்டமே முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகிதத்திற்கும் மேல் பழங்குடிகள் உள்ளனர்.

  • இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் தமிழகத்தில் வாழ்கிறார்கள். தமிழகத்தில் இவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 8 லட்சம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சூழியல் சுற்றுலாத் திட்டம்!

  • தமிழக அரசின் "பல்லுயிர் மேம்பாடு, பசுமைத் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் "சூழியல் சுற்றுலாத் திட்டம்' தொடங்கப்பட உள்ளது.

  • இந்த சுற்றுலாவில் இயற்கை, சுற்றுச் சூழல் வளம் மிக்க வனப்பகுதிகளையும், அங்கு உலவும் விலங்குகளையும் பார்த்து ரசிக்க முடியும். மேலும் "பெருஞ்சாணி' மற்றும் "பேச்சிப்பாறை' அணைகளில் உள்ள தீவுப்பகுதிகளுக்கு பரிசிலில் செல்வதற்கும் வனப்பகுதிகளில் உள்ள உலக்கை அருவி, குற்றியாறு அருவியில் குளித்து மகிழும் வண்ணம் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

  • நாகர்கோவிலிலிருந்து புறப்படும் சுற்றுலா வாகனம் பல பகுதிகளுக்கும் சென்று, இறுதியில் பயணிகளை நாகர்கோவிலிலேயே கொண்டு வந்துவிடும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com