

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணம் "ரூபாய்' என்று அழைக்கப்படுகிறது. 16-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர் "ஷேர் ஷா சூரி' தாம் வெளியிட்ட பணத்தை (வெள்ளி நாணயம்) "ருபய்யா' என்று அழைத்தார். அதே பெயரிலேயே இன்றளவும் பணம் அழைக்கப்படுகிறது.
இந்திய ஒரு ரூபாயில் 100 ஒரு பைசாக்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, இருபத்து ஐந்து பைசா, ஐம்பது பைசா என பலவிதமாக சில்லறைகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் புழக்கத்தில் இருந்து தவிர்க்கப்பட்டு தற்பொழுது 50 பைசா காசு மட்டும் மிகக் குறைந்த அளவு சில்லறையாகப் பயன்பட்டு வருகிறது.
1964-ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன்முறையாக அலுமினியத்தால் செய்யப்பட்ட சில்லறைக் காசுகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1968 முதல் நிக்கலால் செய்யப்பட்ட காசுகளும், 1982-ஆம் ஆண்டு முதல் குப்ரோ நிக்கல் காசுகளும், 1988-ஆம் ஆண்டு முதல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன. 1992-ஆம் ஆண்டு முதல் பித்தளையால் செய்யப்பட்ட ஐந்து ரூபாய்க் காசுகள் புழக்கத்தில் உள்ளன.
இந்தியக் காசுகள் மும்பை, அலிப்பூர் (கொல்கத்தா), சைஃபா பாத் (ஹைதராபாத்), செர்லபள்ளி (ஹைதராபாத்), நொய்டா (உ.பி) ஆகிய இடங்களில் உருவாக்கப்படுகின்றன. புதியதாக வெளியிடப்படும் காசுகள் பெரும்பாலும் பழைய காசுகளை அழித்த பிறகே வெளியிடப்படுகின்றன.
இந்திய ரூபாய் நோட்டுக்கள்
சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் பல பகுதிகளில் டேனிஷ் இந்திய ரூபாய்கள், ஃபிரெஞ்சு இந்திய ரூபாய்கள், போர்த்துக்கீசிய இந்திய ரூபாய்கள் எனப் பலவகை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை அனைத்தும் சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவிற்கான பிரத்யேக ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டன. தற்பொழுது 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
8.7.2011 முதல் | என்ற குறியீடு ரூபாயைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. உதயகுமார் தர்மலிங்கம் என்ற தமிழரால் இக்குறியீடு உருவாக்கப்பட்டது. சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் இந்திய ரூபாய்களே புழக்கத்தில் இருந்தன. பாகிஸ்தான் தவிர ஏடன், ஓமன், துபாய், குவைத், பஹ்ரைன், கத்தார் போன்ற நாடுகளும் இந்திய ரூபாய்களை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. பூடான் நாட்டில் இன்றளவும் இந்தியப் பணம் அனுமதிக்கப்படுகிறது. நேபாளம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தவிர பிற ரூபாய் நோட்டுகளைத் தன் நாட்டில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
29.1.2014 முதல் "ஜிம்பாப்வே' நாடு இந்திய ரூபாய்களைத் தன் நாட்டில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் 75-ஆம் ஆண்டு நிறைவு (பிளாட்டினம் ஜுபிலி) கொண்டாட்டங்களுக்காக 75 ரூபாய் நாணயமும், ரவீந்திர நாத் தாகூரின் 150-ஆவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 150 ரூபாய் நாணயமும், தஞ்சை பெரிய கோயிலின் 1000-ஆவது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில் 1000 ரூபாய் நாணயமும் வெளியிடப்பட்டன. இவை யாவும் ஒரே ஆண்டில் அதாவது 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் யாவும் இந்திய ரிசர்வ் வங்கியின் முழு ஒப்புதலோடு மட்டுமே வடிவமைக்கப்படுகின்றன. இவை நாசிக், தேவஸ், கல்போனி, மைசூர் மற்றும் ஹோசங்காபாத்தில் அச்சடிக்கப்படுகின்றன. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் யாவும் 1996-ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் உள்ளன.
நாம் சென்று பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரங்கள் 100, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வழங்கும். அதற்குக் குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அதன் மூலம் பெற முடியாது. லஞ்சத்தை ஒழிக்கவும், லஞ்சம் வாங்குபவர்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் "0 ரூபாய் நோட்டு' என்ற ஒன்றைத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டது.
இந்தியாவில் 1861-ஆம் ஆண்டில் இருந்துதான் காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் வந்தன. அதற்கு முன் தங்கம், வெள்ளி, செப்புக் காசுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்கு முன்னால் உபயோகத்தில் இருந்த நோட்டுகளில் பிரிட்டிஷ் அரசர்கள் மற்றும் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் சுதந்திரத்திற்குப் பின் வெளியான நோட்டுகளில் அவை யாவும் நீக்கப்பட்டு புதிய வடிவங்கள் சேர்க்கப்பட்டன.
செப்டம்பர் 2009-ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி பாலிமரால் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தது. இவை காகிதத்தால் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களைவிட சுத்தமாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
தற்பொழுது நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் "மகாத்மா காந்தி வரிசை' (MAHATMA GANDHI SERIESந) என்று அழைக்கப்படுகின்றன. காரணம் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் நம் தேசத்தந்தையின் படம் அச்சடிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அதன் மதிப்பு 17 இந்திய மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். மொழிகள் யாவும் அகர வரிசைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
ரூபாய் நோட்டுக்களில் நிழல் உருவம், ரகசியக் கோடுகள், நுண்ணிய எழுத்துகள், பல்வேறு வடிவங்கள் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். இவை போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காண உதவுகின்றன. மேலும் பார்வையற்றோர் எளிதில் அடையாளம் காண ஒவ்வொரு ரூபாய் நோட்டின் நிழல் உருவத்திலும் சில வடிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவை
20 ரூபாயில் நீள் செவ்வகம்
50 ரூபாயில் சதுரம்
100 ரூபாயில் முக்கோணம்
500 ரூபாயில் வட்டம்
1000 ரூபாயில் டைமன்ட் வடிவம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூபாய் நோட்டுகளை புற ஊதாக் கதிர்களுக்கிடையே காட்டினால் அதன் மதிப்பு ஒளிரும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். இவை சிறப்புமிக்க வண்ணம் மாறும் மையினால் தயாரிக்கப்படுகின்றன.
இது தவிர அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் படங்கள் நம் நாட்டின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் இருக்கும். எடுத்துக்காட்டாக
5 ரூபாயில் - விவசாயத்தின் பெருமை
10ரூபாயில் - விலங்குகளின் இன்றியமையாமை (யானை, புலி, காண்டாமிருகம்)
20 ரூபாயில் - கோவளம் கடற்கரையின் அழகு
50 ரூபாயில் - இந்தியப் பாராளுமன்றம்
100 ரூபாயில் - இயற்கை அழகு (இமயமலை)
500 ரூபாயில் -
சுதந்திரத்தின் மாண்பு (தண்டி
யாத்திரை)
1000 ரூபாயில் -
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி
என ஒவ்வொரு விதமாக அச்சிடப்பட்டிருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?
1. தற்பொழுது இருக்கும் ரூபாய் நோட்டுகளிலேயே மிகவும் பழமையானது 1368-ஆம் ஆண்டு கைகளால் தயாரிக்கப்பட்ட சீன ரூபாய் நோட்டு ஆகும். இது மல்பெரி மரத்தின் நடுப்பட்டையை சீவி அதில் தாவர மைகளைக் கொண்டு சீன எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள குறியீடுகளைக் கொண்டு அது "மிங்' வம்சத்தினரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது 13 அங்குல நீளமும், 9 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கிறது.
2. ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை சேகரிப்போர் நியூமிஸ்மாட்டிக்ஸ் (NUMISMATICS) என்று அழைக்கப்படுகிறார்கள்.
3. போப் எட்டாம் போனிஃபைஸ், ரோமச் சக்கரவர்த்தி மேக்ஸ்மிலியன், பதினான்காம் லூயி, நான்காம் ஹென்றி போன்றவர்கள் நாணயங்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
4. இந்திய ரூபாய் நோட்டுகள் சேகரிப்போர் சங்கம் (NUMISMATIC SOCIETY OF INDIA) 1910-ஆம் ஆண்டு அப்பொழுது ஆட்சி புரிந்த சில ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது.
5. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே நாணயங்களைச் சேகரிக்கும் வழக்கம் தீவிரமடைந்தது.
6. இந்தியாவில் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திலும், மும்பையில் உள்ள ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அருங்காட்சியகத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
7. ஒரு ரூபாய் நோட்டுகள் இந்திய அரசால் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ரிசர்வ் வங்கியால் அல்ல. ஆகவே அதில் இந்திய நிதி அமைச்சகத்தின் செகரட்டரியின் கையெழுத்து மட்டுமே இருக்கும். 1994-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் 6.3.2014 முதல் மீண்டும் அச்சடிக்கப்பட்டன.
8. இந்திய நாணயங்கள் மும்பை, தில்லி, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகிறது. ஆகவே அவை அச்சடிக்கும் இடங்களை அறிந்துகொள்ள அதில் பதிவாகி இருக்கும் ஆண்டின் கீழே சில வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை
மும்பை - டைமன்ட்
டில்லி - புள்ளி
ஹைதராபாத் - நட்சத்திரம்
கொல்கத்தா - எந்த வடிவமும் இல்லை.
9. தற்பொழுது இருக்கும் ரூபாய் நோட்டுக்களிலே மிக அதிக தொகையைக் கொண்டது 1000 ரூபாய் நோட்டாகும். ஆனால் 1954-ஆம் ஆண்டு முதல் 1978-ஆம் ஆண்டு வரை 5000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. ஆனால், தற்பொழுது அவை தடை செய்யப்பட்டு விட்டன.
10. நாணயங்களில் மிக அதிக தொகை 10 ரூபாய் நாணயமாகும். இவை இரண்டு வித உலோகங்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்நாணயத்தின் உள்வட்டம் (மையப்பகுதி) செம்பு மற்றும் நிக்கல் கலவையாலும், வெளிவட்டம் அலுமினியம் மற்றும் பித்தளை கலவையாலும் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் வேறெந்த நாட்டிலும் இத்தகைய வடிவமைப்பு இல்லை. ஒரு 10 ரூபாய் நாணயத்தைத் தயாரிக்க தோராயமாக அரசுக்கு 6 ரூபாய் செலவாகிறதாம்.
11. ரிசர்வ் வங்கியால் முதன்முதலில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டு 5ரூ நோட்டாகும். வெளியிடப்பட்ட ஆண்டு 1938. 5ரூபாய் நாணயங்கள் 1985-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.
12. இந்திய ரூபாய் நோட்டுகள் யாவும் காகிதத்தால் தயாரிக்கப்படுகின்றன என்று நினைத்தால் அது தவறு. இவை யாவும் உயர் ரகப் பருத்தி மற்றும் பருத்திக் கழிவால் தயாரிக்கப்படுகின்றன. தனித்தன்மை கொண்ட சிறப்பு வாய்ந்த மைகளைக் கொண்டு அச்சிடப்படுகின்றன. இதனால் இவை தண்ணீர், வியர்வை, வாசனைத் திரவியங்கள் ஆகியவை படுவதால் அழிந்து விடாது.
13. ரூபாய் நோட்டுகளின் மீது எழுதுவது, படம் வரைவது போன்றவை தேசத் துரோகச் செயலாகும். காரணம் இவை ஒரு தேசத்தை இழிவுபடுத்துவதற்குச் சமமாகும். மேலும் அவற்றின் மீதுள்ள வடிவங்களை மேசை விரிப்புகள், திரைச்சீலைகள், ஆடைகள் போன்றவற்றில் அச்சடிப்பதும் பெரும் குற்றம் ஆகும்.
எல்.எஸ்.பி. மணியன், திருவையாறு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.