Enable Javscript for better performance
கருவூலம்: விழுப்புரம் மாவட்டம்!- Dinamani

சுடச்சுட

  
  s2

  விழுப்புரம் மாவட்டம்தான் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம். வடதமிழகத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தைச் சுற்றிலும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களும், கிழக்குப் பகுதியில் வங்கக் கடலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமும் அமைந்துள்ளது.
  1993-இல் முந்தைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  6,896 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது இது. நிர்வாக வசதிக்காக விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், விக்கிரவாண்டி என பத்து வட்டங்களாகப் (Taluks) பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 11 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. தமிழகத்திலேயே அதிகமான கிராமப் பஞ்சாயத்துக்கள் (உள்ளாட்சி அமைப்பு) இங்குதான் உள்ளது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) அலுவலகம் அமைந்துள்ள விழுப்புரம் நகராட்சி இம்மாவட்டத்தின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும்.
  வரலாற்றுச் சிறப்பு: கி.மு.3 முதல் கி.பி.4 வரையிலான (700 ஆண்டுகள்) காலம் வரலாற்றில் சங்ககாலம் எனக் குறிப்பிடப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர் "காரி' என அழைக்கப்பட்ட "திருக்கோயிலூர் மலையமான் திருமுடி காரி' ஆவார். சேரநாட்டு குறுநில மன்னராகிய இவர் ஆட்சி செய்த மலையமான் நாடும், அதன் தலைநகரமாக இருந்த திருக்கோயிலூரும் விழுப்புரம் மாவட்டத்தில்தான் உள்ளது.
  மேலும் மற்றொரு வள்ளலான ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் நெடுமான் அஞ்சி தன் ஆட்சிக்காலத்தில் இந்த திருக்கோயிலூர் நாட்டின் மீது படையெடுத்து வெற்றி அடைந்தான் என்பது சங்கப் பாடல் மூலம் தெரிய வருகிறது. 
  அதன்பின் முற்காலச் சோழர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள், இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள், மராத்தர்கள், ஆற்காடு நவாப், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் எனப் பலரும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளார்கள்.
   நீர்வளம்: தென்பெண்ணை, கோமுகி, மணிமுத்தாறு, சங்கராபரணி நதிகள் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கும் நதிகள்.
  1. தென் பெண்ணையாறு: கர்நாடகத்தில் தோன்றி தமிழகத்தின் வழியாக ஓடி வங்கக்  கடலில் கலக்கும் பெண்ணையாற்றில் இம் மாவட்டத்தின் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை (தடுப்பணைகள்) என மூன்று அணைகள் உள்ளது.
  2. மணிமுத்தாறு: விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் கல்வராயன் மலைப்பகுதியில் பொழியும் மழை நீரில் உதயமாகி 111 கி.மீ. தூரம் பயணித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில் வெள்ளாறு என்ற நதியுடன் இணைகிறது. இம்மாவட்டத்தில் மட்டுமே இந்நதிக் கரையில் திருவக்கரை (Thiruvakkarai), திருவாமாத்தூர் (Thiruvaamaathur) உள்ளிட்ட 5 பழமையான கோயில்கள் உள்ளது.
  இந்நதியின் குறுக்கே கள்ளக்குறிச்சிக்கு 10 கி.மீ. தூரத்தில் (20 அடி உயரமும், 737 கனஅடி கொள்ளளவும் கொண்ட) நீர்த்தேக்கத்துடன் கூடிய அணை கட்டப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இவ்வணை குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீர் ஆதாரமாகவும், பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
  கோமுகி நதி: விழுப்புரம் மாவட்டத்திலேயே தோன்றும் இந்நதியும் வெள்ளாற்றின் துணையாறுதான். இந்நதியின் குறுக்காக கள்ளக்குறிச்சிக்கு வடமேற்காக 16 கி.மீ. தூரத்தில் 1965-இல் கட்டப்பட்ட நீர்த்தேக்கத்துடன் கூடிய அணை இருக்கிறது.
  சங்கராபரணி (அ) வராக நதி (அ) செஞ்சி ஆறு:
  செஞ்சி மலைப்பகுதிகளில் சங்கராபரணி நதி தோன்றுகிறது. இங்குள்ள பக்கமலை மற்றும் மேல்மலையனூர் மலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீரானது இரு பிரிவுகளாக கீழிறங்கி தென்பாளை கிராமத்தில் ஒன்று சேர்ந்து சங்கராபரணி நதியாக உதயமாகிறது.
  இந்நதியுடன் அன்னமங்கலம் உபரி நீரும், நரியூர் ஓடையும், தொண்டையாறும், பாம்பையாறும் சேர்கிறது. சுமார் 79 கி.மீ. தூரம் ஓடும் இந்நதி 45 கி.மீ. தமிழகத்திலும், 34 கி.மீ. புதுச்சேரி பகுதியிலும் பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது. புதுவையில் இந்நதி சுண்ணாம்பு ஆறு என்று அழைக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வீடுர் நீர்த்தேக்கம் இந்த ஆற்றின் குறுக்கேதான் கட்டப்பட்டுள்ளது.
  மேலும் இங்கு ஒசுடு ஏரி (Ossudu Lake), பனை மலை ஏரி, வளவனூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளும், பல குளங்களும் மழை நீர் சேமிப்பு அமைப்புகளாக உள்ளது.
  கலிவேலி ஏரி:  இந்தியாவின் மிகப்பெரிய Wet land  ஏரிகளில் ஒன்றுதான் கலிவேலி ஏரி. வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த உப்பு நீர் ஏரிக்கு பல பகுதிகளைச் சேர்ந்த பறவைகளும் வலசை வந்து இனப்பெருக்கம் செய்து திரும்புகிறது.
  மலை வளம்: கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகிய கல்வராயன் மலைகளும், செஞ்சி பகுதியில் உள்ள பல குன்றுகளும் விழுப்புரம் மாவட்டத்தின் இயற்கை அழகிற்கும், வளத்திற்கும் அணி சேர்க்கிறது.
  கல்வராயன் மலைகள்: 1095 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட கல்வராயன் மலைகள் சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் எல்லையில் இருக்கிறது. 2,700 அடி உயரம் கொண்ட வடக்குப் பகுதி சின்ன கல்வராயன் என்றும், தெற்குப் பகுதி 4,000 அடி உயரத்துடன் பெரிய கல்வராயன் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற மிருதுவான, மண் அமைப்பு கொண்டது. இதனால் 400 மீ உயரம் வரை புதர்காடுகளும், இலையுதிர் காடுகளும், சில இடங்களில் பசுமை மாறா காடுகளுமாக செழிப்புடன் இருக்கிறது.
  இம்மலை மீதுள்ள 105 கிராமங்களில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். 1947-இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது பல பகுதிகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவாக மாறியது நமக்குத் தெரியும். ஆனால் இம்மலை நாடுகள் 1976-இல் ஜூன் 25-ஆம் தேதிதான் இந்தியாவுடன் இணைந்தது. அதுவரை தனிநாடாக 3 ஜாகீர்தார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
  பெரியார் அருவி: கல்வராயன் மலைப் பகுதியில் கோமுகி அணைக்கு 15 கி.மீ. தூரத்தில் வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் இந்த அருவி உள்ளது. மழைக்காலத்தில் மட்டுமே நீர்வரத்து இருக்கும்.
  மேகம் நீர்வீழ்ச்சி: கள்ளக்குறிச்சி தாலுகாவின் கஞ்சிராயப்பாக்கத்திற்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவியில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் மட்டும் நீர்வரத்து இருக்கும். 500 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் வேகத்துடன் பாய்ந்து இறங்கும் ஒலி பெரும் இரைச்சலாக வெகு தூரத்திற்குக் கேட்பதுதான் இந்த அருவியின் சிறப்பு.
  தொழில் வளம்: செழிப்பான வண்டல் மண் மிகுந்த மாவட்டம் என்பதால் விவசாயமும், அதைச் சார்ந்த தொழில்களுமே பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு, வேர்க்கடலை, பலா, புளி, பருத்தி, காய்கறிகள் முதலியவை முக்கிய விளைபொருள்களாகும். அரிசி ஆலைகள், சர்க்கரை ஆலைகள், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, சிறு தொழில்கள், மீன் பதனிடுதல் போன்றவை பிற குறிப்பிடத்தக்க தொழில்களாகும்.
  சின்ன சேலம் தாலுகாவில் உள்ள 1866 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆட்டுப் பண்ணைதான் ஆசியாவின் முதல் பெரிய ஆட்டுப் பண்ணை எனப் பெயர் பெற்றுள்ளது.
  செஞ்சி கோட்டை: விழுப்புரம் மாவட்டத்தின் பிரதானமான சுற்றுலாத் தலம். தமிழகத்தில் உள்ள கோட்டைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. பலராலும் புகழப்பட்டது. இன்றுவரை பார்ப்பவரை வியக்க வைக்கும் இயற்கையோடு இணைந்த வலுவான கோட்டை. கிருஷ்ணகிரி, சந்திரகிரி, ராஜகிரி என்ற மூன்று மலைகளையும் இரண்டு சிறிய குன்றுகளையும் இணைத்துக் கட்டப்பட்ட சுவர்களையும் உள்ளடக்கியது இக்கோட்டை. உள்ளே சுமார் 7 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இதைச் சுற்றி 13 கி.மீ. நீளமும், 20 மீ அகலமும் கொண்ட சுற்றுச்சுவர் உள்ளது.
  இவ்விடத்தில் முதலில் ஆனந்தகோன் (கி.பி.1190 - 1240) என்ற மன்னர் சிறிய கோட்டையினைக் கட்டினார். அப்பொழுது இது ஆனந்தகிரி கோட்டை என்றும், பின் ராஜகிரி கோட்டை என்றும், தற்போது செஞ்சி கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
  பல போர்களைச் சந்தித்த இந்தக் கோட்டை இப்பகுதியை ஆட்சி செய்த பலருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அனைவருமே உள்ளே பல கட்டடங்களைக் கட்டியதுடன், கோட்டையைப் பலப்படுத்தவும் செய்தார்கள்.
   *மூன்று மலைகளை இணைத்த கோட்டை என்றபோதும், ஒவ்வொரு மலையும் தனித்தனியே பாதுகாப்பு அரண், கொத்தளம் கொண்ட முழுமையான கோட்டையாகக் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோட்டையைச் சுற்றிலும் 24 மீட்டர் அகலமுள்ள ஆழமான அகழியும் உள்ளது. ராஜகிரி கோட்டைக்குள் மரங்களே பயன்படுத்தாமல், மராத்திய முறையில் கட்டப்பட்ட எட்டு அடுக்குகள் (மாடி) கொண்ட கல்யாண மண்டபம் உள்ளது.
  கருங்கல் பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, படைவீரர்களின் பயிற்சிக்கூடம், வெடிமருந்து சாலை, செஞ்சியம்மன் கோயில், சிவன் கோயில், சுனைகள், வீரர்கள் தங்கும் பகுதி, மலை உச்சிக்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல கட்டடங்கள் இருக்கிறது.
  தேசிங்கு ராஜா: செஞ்சி கோட்டை என்றவுடன் நினைவுக்கு வருவது ராஜா தேசிங்குதான். 1690-இல் மொகலாய மன்னர்கள் கோட்டையைக் கைப்பற்றினார்கள். அதைத் தங்களுக்குக் கட்டுப்பட்ட ஆற்காடு நவாப்பிடம் கொடுத்தனர்.
  நவாப் சார்பாக சொரூப்சிங் என்ற ராஜபுத்திர தளபதி கோட்டையை நிர்வாகம் செய்தார். இவருடைய மகன்தான் தேசிங். தந்தையின் காலத்திற்குப் பின் பதவிக்கு வந்த தேசிங் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்தார்.
  அதனால் ஆற்காடு நவாப் சதாத் உல்லாகான் போர் தொடுத்தார். 22 வயதே ஆன தேசிங் நீலவாணி என்ற குதிரையில் அமர்ந்து 350 குதிரை வீரர்கள், 500 சிப்பாய்களுடன் எதிர்த்துப் போரிட்டார். ஆனால் நவாப்பின் படையோ 8,000 குதிரை வீரர்கள் 10,000 சிப்பாய்கள் கொண்டது. அஞ்சாமல் துணிந்து போரிட்ட தேசிங் இப்போரில் கொல்லப்பட்டார். ராஜா தேசிங்கின் வீரமானது அதன் பின்னும் வெகுகாலம் பட்டிதொட்டியெல்லாம் கிராமியக் கலைகளில் ஆடல்பாடலுடன் புகழ்ந்து கூறப்பட்டது.
  கபிலர் குன்று: சங்க காலத்தில் பறம்பு மலைப் பகுதியை (இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது) ஆட்சி செய்த முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி, மூவேந்தர்களுடனான போரில் உயிர் நீத்தார். அவர் பிரிவைத் தாங்க முடியாத அவருடைய நண்பர் கபிலர் திருக்கோவிலூரில் தென்பெண்ணையாற்றுக்கு நடுவில் இருந்த ஒரு தனித்த பாறையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.
  கபிலர் குன்றின் மீது அவர் நினைவாக 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று உள்ளது. தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது. 
  தளவானூர் குடைவரை கோயில்: செஞ்சிக்கு 16 கி.மீ. தூரத்தில் தளவானூர் என்ற இடத்தில் உள்ளது பஞ்சபாண்டவர் மலை. இதன் தென்பகுதியில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் குடையப்பட்ட சத்ரு மல்லீஸ்வரர் கோயில் இருக்கிறது. இதற்கு 10 கி.மீ. தொலைவில் மண்டகப்பட்டு என்ற இடத்திலும் மற்றும் கீழ்மாவிளங்கையிலும் கூட பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. இக்கோயில்கள் தொல்லியல் துறையின் பராமரிப்பில்தான் உள்ளன.
  உளுந்தூர்பேட்டை அன்னை ஸ்ரீசாரதா ஆசிரமம்: இங்கு கல்விப் பணி, ஆதரவற்ற சிறுமியர் மற்றும் முதியோர் இல்லம், மருத்துவப்பணி போன்ற பல சமூகநலப் பணிகள் நடைபெறுகிறது. மேலும் பழமையான நெல்வகைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
  முன்காலத்தில் மருத்துவக் குணம் கொண்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல்வகைகள் நம் நாட்டில் இருந்துள்ளது. இவற்றின் வைக்கோல்கூட நல்ல சத்தானதாக இருந்தது. இதனால் நல்ல மாட்டுத்தீவனமாகவும், இயற்கை உரமாகவும் பயன்பட்டது. இத்தகைய நெல்வகைகள் இப்பொழுது பெரும்பாலும் அழிவு நிலையை அடைந்துவிட்டது.
  இத்தகைய பழமையான நெல் வகைகளைச் சேகரித்து, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக நெல்வகைகளை வழங்கிப் பயிரிட ஊக்குவித்து வருகிறார்கள். இதனால் 120 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  ஆனந்தமங்கலம் மலை - சமணர் பள்ளிகள்: திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஆனந்த மங்கலம் மலைக்குகைகளில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகிறது. இவ்விடத்தில் பல்லவர் காலத்தில் சமண சமயப்பள்ளிகள் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  மேல் சித்தாமூர் ஜைன ஆலயம்: செஞ்சிக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள மேல்சித்தாமூரில் இரண்டு பழமையான ஜைன கோயில்கள் இருக்கின்றன. இதில் ஒன்று தீர்த்தங்கரர் பரசவனதாவிற்கு அமைக்கப்பட்டது. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மற்றொரு ஆலயத்தில் மகாவீரர் பாகுபலி உள்ளிட்டோரின் சிற்பங்கள் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களும் தமிழ்நாட்டில் வாழும் ஜைன மதத்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும்.
  ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சயன கோலத்திலான ரங்கநாதர் சிலை சிங்காவரம் - ரங்கநாதர் கோயிலில் உள்ளது. இந்தக் கிராமம் செஞ்சிக்கு அருகில் உள்ளது.
  தமிழக அரசுக்குச் சொந்தமான எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ளது.
  விழுப்புரம் பேருந்து நிலையம்தான் பரப்பளவில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையம்.
  செஞ்சியிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் பனமலை ஏரிக்கு அருகில் உள்ள குன்றின் மீது பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் இருக்கிறது. இங்கு அழகிய சிற்பங்களுடன், பல்லவர் காலத்தில் வரையப்பட்ட மூலிகை ஓவியங்கள் சிலவும் இருக்கின்றன.
  நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தது இந்த மாவட்டத்தில்தான். இங்குள்ள திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில்தான் அவரைத் திருமண நாளன்று சிவபெருமான் தடுத்து ஆட்கொண்டார்.
  சர்வதேச நகரமாகிய ஆரோவில் இந்த மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்குச் செல்பவர்கள் வலிமையான செஞ்சி கோட்டையுடன், கல்வராயன் மலைப் பகுதியின் இயற்கை எழிலையும், பழமையான சமணத் துறவிகளின் குகைகளையும், சமண ஆலயங்களையும், கோயில்களையும், கடற்கரையையொட்டி அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லையும் பார்த்து ரசிக்கலாம்.

  கே. பார்வதி, திருநெல்வேலி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai