நவரத்தினங்கள்!

விஜயபுரியை விஜயன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.  அவன் நாட்டில் வாழ்ந்த மக்கள் வறுமை என்பதை அறியாமலே இருந்தார்கள்.
நவரத்தினங்கள்!
Published on
Updated on
3 min read

விஜயபுரியை விஜயன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.  அவன் நாட்டில் வாழ்ந்த மக்கள் வறுமை என்பதை அறியாமலே இருந்தார்கள்.  ஏனெனில் அங்கு மாதம் மும்மாரி பொழிந்தது.  நாட்டைச் சுற்றி காடுகள் அரணாக இருந்தது. நீர்நிலைகள் ஏரி, குளம், குட்டை நிரம்பி வழிந்தது. நெற்களஞ்சியங்கள் வீடுதோறும் இருந்தன.   அந்நாட்டு மக்களை நோய்கள் அண்டுவதில்லை.

ஏனெனில், வீடும் நாடும் சுத்தமாக இருந்தது. இம்மன்னரது அரசவையை வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் எனும் ஒன்பது புலவர்கள் அவ்வப்போது அரசனுக்கு ஆலோசனைகள் கூறி அலங்கரித்தனர். 

அன்று அரசி விஜயராணி மிகவும் சந்தோஷமாகக் காணப்பட்டார்.  அதை கண்ட மன்னன் விஜயன் "என்ன, ராணியாரே என்றைக்கும் இல்லாமல் இன்று மகிழ்ச்சியாக காணப்படுகிறாய்?  பக்கத்து நாட்டு  வேங்கைபுரியின் அரசன் வேங்கையனும், அவரது மனைவி வேங்கைவேணியும், அதான் உன் தந்தையும், தாயும் வந்துள்ளனரா?' என்று வினவினான்.  உடனே அரசி "என்ன மன்னா, என் தாய், தந்தை எதற்கு வந்துள்ளார்கள் என்று தெரியாதது போல வினவுகிறீர்களே, நாளை என்ன நாள் என்பதை மறந்து விட்டீர்களா? நம் மகன் இளவரசன் விஜயகுமாரன் குருகுலத்தில் கல்வியை முடித்து விட்டு, நம் குலகுரு விஜயேஸ்வரர் உடன்  வருகிறான் என்பதை மறந்தீர்களா?' என்று சற்று கோபத்தோடு கேட்டார்  அரசியார்.  

"அப்படியா அரசியாரே வெளியே சற்றுப் பாரும்!' என்று நையாண்டியாக சொன்னான் அரசன் விஜயன். உப்பரிக்கையில் இருந்தப்படி வெளியே எட்டிப்பார்த்த அரசியார் மிகவும் ஆச்சரியப்பட்டார்.  அரண்மனைக்கு எதிரே பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமிருந்தனர்.  அவர்களுக்கு தேவையான உணவும், பழச்சாறுகளும் பரிமாறப்பட்டிருந்தது.  தெருவெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டு,  மேளத்  தாளங்கள் முழங்கிக் கொண்டிருந்தன.  பல்வேறு கலை வல்லுநர்கள் ஆங்காங்கே, ஆடிப் பாடியும், கரகாட்டம், கோலாட்டம், குத்தாட்டம் ஆடியும் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர்.  அரசே “என்னை, மன்னித்து விடுங்கள், தாங்கள் நம் மகன் வருவதற்கு இவ்வளவு தடபுடலாக வரவேற்பிற்கு ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்பதை யான் அறியவில்லை.  மிக்க நன்றி மன்னா!” என்றவாறு தன் தாய், தந்தையாருடன் உரையாடச்  சென்றார் அரசியார்.
அடுத்த நாள் காலை.  "மன்னர் மன்னன் வாழ்க!

நம் யுவராஜா விஜயகுமாரன் வாழ்க!' என்று மக்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.  அரண்மனைக்குள் இளவரசன்  தன்  குலகுரு விஜயேஸ்வரருடன் உள்ளே நுழைந்ததும் மக்கள் கைகொட்டி ஆர்ப்பரித்து, பூ மாரி பொழிந்தனர்.

அப்போது அரசன், "எனதருமை மக்களே, நம் நாட்டு இளவரசன் தனது குருகுலத்தில் கல்வியை முடித்து விட்டு நுண்கலைகள் பல பயின்று  இன்று நாடு திரும்பியுள்ளான்.  அவனை அனைவரும் வாழ்த்தியமைக்கு நன்றி.  இப்போது அவனது கல்வி அறிவை சோதிக்க வேண்டும் என்று நவரத்தினங்களான நம் அரசவை புலவர்கள் விரும்புகிறார்கள். எல்லோரும் அமருங்கள்' என்றார்.

அரசவை கூடியது.  மன்னனுடன் அரசியாரும் அவரது தாய், தந்தையாரும், மந்திரிமார்களும் புடை சூழ,  நவரத்தினங்களாக புலவர் பெருமக்களும் அரசவையில் அமர்ந்தனர். 

நடுநாயகமாக இளவரசன் விஜயகுமாரனும், அவன் பக்கத்தில் குலகுருவும் வீற்றிருந்தனர்.  அப்போது "எனதருமை புலவர் பெருமான்களே, நவரத்தினங்களே நீங்கள் ஒவ்வொருவராக எழுந்து என் மகனின் அறிவுத் திறனை  சோதிக்கலாம்' என்றான்.  

உடனே, புலவர் வைரம் எழுந்து, "யுவராஜா, ஒருவனுக்கு முக்கண்கள் எனப்படுபவை எது என்று வினாவினார் ?' உடனே இளவரசன் கால், மேல் போட்டவாறு "இது தெரியாதா,  அறிவு, உழைப்பு, விடாமுயற்சி' என்றான்.

அதைக் கேட்ட அரசர், அரசியாரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். அடுத்து, புலவர் வைடூரியம் எழுந்து அரசரை வணங்கி  "இளைய வேந்தே, வாழ்க்கையின் இரு பக்கங்கள் என்பது எது?' என்று பணிவாகக் கேட்டார்.  இளவரசன் "இன்பமும், துன்பமும்'  என்றான். மக்கள் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

புலவர் முத்து எழுந்து "இளைய பிரபு,  யாரை தெய்வமாகக் கருத வேண்டும், யாருடன் பக்தியுடன் பழக வேண்டும்' என வினவினார்.   உடனே, இளவரசன் அரசனையும், அரசியையும் பார்த்து நகைத்து பின்னர் குலகுருவைப் பார்த்து சிரித்தவாறு, "பெற்றோர், ஆசிரியன்' என்றார்.  குலகுரு அவன் முதுகில் தட்டினார். அடுத்து புலவர் மரகதம் எழுந்து, "இளைய அரசே, எது பொக்கிஷம்' என்று கேட்டார்.  "மழை நீர், மறை நீர்' என்றான் இளவரசன்.  அதைக் கேட்ட மக்கள் வியந்தனர். 

பின்னர்,  புலவர் மாணிக்கம் எழுந்து, "யுவராஜா, போனால் வராதது எது?' என தயங்கியவாறு கேட்டார். உடனே, இளவரசன், "உயிரும், காலமும்' என்றார்.

அதைக் கேட்ட மந்திரிமார்கள் இளவரசனின் அறிவு கூர்மையை எண்ணி வியந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  அடுத்து, புலவர், பவளம் எழுந்து, "இளைய மன்னா,  இது இடறினால் உடம்பில் காயம் மட்டும் ஏற்படும், ஆனால் அது இடறினால் உடல் காயமும், உள்ள காயமும் ஏற்படும், அவை எது' என்று சற்று ஆவேசமாக கேட்டார்.  அதைக் கேட்ட இளவரசன், சற்றும் யோசிக்காமல் "காலும், நாக்கும்' என்றார்.  மக்கள் கலகலவென சிரித்தனர். 

புலவர் புஷ்பராகம் எழுத்து "இளையவேல், எது தனம் பெருக்கும், எது இனிமை பயக்கும்' என்று சிரித்தவாறு கேட்டார்.  அதற்கு இளவரசன் "தானமும், கனிவும்' என்றான்.  பின்னர் புலவர் கோமேதகம் எழுந்து "யுவராஜா எதைக் குறைக்க வேண்டும், எதை பெருக்க வேண்டும்' என்று கேட்டார்.  அதற்கு இளவரசன், பயமும், நம்பிக்கையும் என்றார்.  அரசர் புன்னகைப் பூத்தார்.  

அடுத்து புலவர் நீலம் எழுந்தது "இளைய அரசே, இந்த மை வேண்டும், அந்த மை வேண்டாம், அது எது' என்றார்.  உடனே இளவரசன், "பொறுமை வேண்டும், பொறாமை வேண்டாம்' என்றான்.  மக்கள் எழுந்து நின்று இளவரசனை பார்த்து வாழ்த்துக் கோஷம் எழுப்பினர்.  இளவரசனின் அறிவுத் திறமையை   வியந்து பேசி மகிழ்ந்தனர். 

உடனே சற்றும் எதிர்பாராத வகையில்,  குலகுரு தன் கையிலிருந்த கோலை எடுத்து இளவரசனை நையப்புடைத்தார். இளவரசன் வலியால் துடித்தான். மன்னருக்கு கண்கள் சிவந்து தன் வாளை உருவ எத்தனித்தான்.   அப்போது மந்திரி ஒருவர் எழுந்து,  "மன்னா சற்று பொறுங்கள், நம் குலகுரு காரணக் காரியம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார், அவசரம் படாதேயும்' என்றார்.  

அரசியாரின் கண்களிலிருந்து தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவரது தாயும், தந்தையும் ராணியாரின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தினர்.  அப்போது குலகுரு அரசனை நோக்கி வணங்கி, "அண்ணலே,  என்னை மன்னியும், இவனை என்னின் கண்ணின் இமைப்போல் காத்து, கல்வியையும்,  ஒழுக்கத்தையும் போதித்தேன்.  ஆனால், இவனுக்கு சற்றும் பணிவு என்பதே இல்லை மன்னா,   நவரத்தினங்களான நம் ஆன்றோர்களும், சான்றோர்களும்  எழுந்து இவனறிவை சோதிக்க வினாக்கள் அம்பை எய்த போது, இவன் பணிவின்றி எழுந்து நின்று பதில் கூறாமல், கால் மேல் போட்டவாறு சற்று ஆணவத்துடன், அகங்காரத்துடன் அமர்ந்தவாறே பதிலுரைத்தை என்னால் காண சகிக்க முடியவில்லை, தம்மை விட வயதில் மூத்தோர்களிடமும், பெரிய பதவியில் உள்ளோர்களிடமும் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை மன்னா, அது மட்டுமில்லை மன்னா இவன் குற்றம்  ஏதும் செய்யாதவனுக்கும் தண்டனை கொடுத்தால் அதனால் அவர்கள் படும் வலியையும், அதனால் ஏற்படும் துன்பத்தின் கொடுமையயும்  இவன் உணர வேண்டும், ஆணவம் ஒழிய வேண்டும் என்பதற்காகவும் தான் அடித்தேன். யான் செய்தது பிழை என்றால் என்னை மன்னியும் மன்னா' என்று நெடுஞ்சாணாக மன்னர் காலில் விழச் சென்றார். 

உடனே மன்னர் அவரைத் தடுத்து நிறுத்தி "நல்லது செய்தீர், கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு ஆசிரியருக்கு இரு கண்கள் என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

வாழ்க உம் திறம், வளர்க உம் நுண்ணிய புலமை' என்று வாழ்த்தி அவருக்கு கணையாழி ஒன்றை அணிவித்து, கழுத்தில் பொற் சரங்களை அணிவித்து, பொற்குவியல்களை அள்ளிக் கொடுத்தான்.  பின்னர், இளவரசன் கண்ணீர் ததும்ப குலகுருவை யானை மீது அமர வைத்து வழி அனுப்பி வைத்தான்.  மக்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அங்கிருந்து விடை பெற்று சென்றனர். 

- பா.ராதாகிருஷ்ணன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com